Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>வரவிருக்கும் பண்டிகை> தைப்பூசம்
தைப்பூசம்
தைப்பூசம்

தைப்பூசமென்பது தை மாதத்துப் பூசத்திருநாள் எனப்படும். தை என்பதற்குப் பல பொருள்கள் உள. அவையாவன தைக்கத் தக்கவை.  தையென்னேவல், தாளக்குறிப்பினொன்று, மகர ராசி, பூசநாள் என்பனவாகும். தைப்பூசத் திருநாள் சிறப்புப் பற்றிய பாவலர் பெருமான்,  தைப்பூசம் வியாழக்கிழமையோடு கூடும் சித்தயோக தினம் வர, அன்று மத்தியானத்திலே, ஆயிர முகத்தையுடைய பானு கம்பர்  ஆயிரஞ்சங்கூத, ஆயிரந் தோணுடைய வாணாசுரன் குடாமுழா ஒலிப்பிக்க, பஞ்ச துந்துபி ஒலியும் வேத ஒலியும் கந்தர்வருடைய  கீதஒலியும் மிக்கெழ ஞானசபையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு நின்று ஆனந்த நிருத்தஞ் செய்தருளினார். வியாக்கிரபாத  முனிவர் பதஞ்சலி முனிவர் என்னும் இருவரும், பிரம்மா விஷ்ணு முதலிய தேவர்களும், திருவுடையந்தணர் மூவாயிரவரும், பிறரும்  சிவபெருமானுடைய திருவருளினிலே, ஞானக் கண்ணைப் பெற்று, அவருடைய ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்து, உரோமஞ் சிலிர்ப்ப,  நெஞ்சு நெக்குருக, கண்ணீர் பொழியச் சிவானந்தக் கடலில் மூழ்கினார்கள். பதஞ்சலி முனிவர் எம்பெருமானே, இந்த ஞான சபையிலே  உமாதேவியாரோடு இன்று முதல் எக்காலமும் ஆன்மாக்களுக்கு ஆனந்த நிருத்தத்தைப் புலப்படுத்தி யருளும் என்று வேண்டிக்  கொண்டார். அதற்குச் சிவபெருமான் உடன்பட்டருளினார். சிவபெருமான் பணித்தருளியபடியே தேவர்கள் அந்த நிருத்தஸ்தானத்தை  வளைத்து உயர்ந்த பொன்னினாலே ஒரு மகாசபை செய்தார்கள். சிவபெருமான் அன்று தொடங்கித் தேவர்களும் வியாக்கிரபாத முனிவர்,  பதஞ்சலி முனிவர் முதலாயினோரும் வணங்கச் சிவகாமியம்மையாரோடும் கனகசபையிலே எக்காலமுந் திருநிருத்தத்தைத்  தரிசிப்பித்தருளுவாராயினர்.தைப்பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சூரியனின் மகரவீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த  நிலையாகும். சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. தை மாதத்தில் பவுர்ணமி சேரும் பூசநாள் மிகவும்  விசேஷமானதாகும். இந்நாளின் சிறப்புப் பற்றிப் பூம்பாவைப் பதிகத்தில் ஞானசம்பந்தரும்.

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

எனக் கூறுவதனால் அறியலாகும். தில்லை மூவாயிரவர்களுக்கு மநு மகன் இரணியவர்மனுக்கும் தில்லை நடராசர் தரிசனம் கொடுத்த  தினமும் இத்தினமேயாகும். மேலும், புத்தர் ஞானோதயம் பெற்று, இமயமலைச் சாரலிலே இருந்த நாளில் ஈழநாட்டைப் பற்றி  நினைத்ததும் இத்தினத்திலேதான் என்பர். எனவே இத்தினத்தைச் சிறப்புடன் கொண்டாடி இறைவனருள் பெற்று வாழ்வோமாக.

புதிதுண்ணல்: புதுப்பிரயோசனத்தைச் சுபதினம் பார்த்துண்ணல் புதிதுண்ணல் எனப்படும். புதிருண்ணல் எனவும்படும். நவான்ன போஜனம்  எனவும் கூறுவர். பொங்கலுக்குப் புதிய அரிசியைத்தான் பெரும்பாலும் உபயோகிப்பர். சுபதினத்தில் மங்கல வாத்தியங்களோடு  கிராமமக்கள் சென்று புதிரெடுத்துக் கோயிலிலும், வீடுகளிலும் சேர்ப்பர். அந்நாளில் வீடு மெழுகிக் கோலம் செய்து வைப்பர் பெண்கள்.  கொண்டுவரும் நெற்கட்டைப் பணிவுடன் வணங்குவர். சுவாமிக்குப் புத்தரிசி கொடுத்துத் தாமும் உண்பர். கால உலக மாற்றத்தினாலும்  பிறவாற்றானும் இக்காலத்து இவ்வழக்கு அருகி வருகின்றது. அன்றிச் சுவாமிக்குப் புதிரெடுதலுக்கு முன்னரே தாம் புதிரெடுத்தலையும்  மேற்கொள்ளுகின்றனர். தை பிறந்துவிட்ட்து; வழி பிறந்துவிட்டது; அறுவடையெல்லாம் ஆரம்பித்துவிட்டன. களஞ்சியங்கள் நிறைந்து  விட்டன. அதுபோல உள்ளமும் நிறைந்துவிட்டது. கஷ்டங்கள் மறைந்தன. கவலைகள் நீங்கின. வாழ்வில் பிரகாசம் ஏற்பட்டுவிட்டது  என்று அன்றைத்தினம் முழுவதும் குதூகலிப்பர். சைவ மக்கள் அனைவரும் ஆனந்தக் கூத்தாடும் ஒரு பெருநாளாக இத்திருநாள்  விளங்கும்.

தைப்பூச துளிகள்: முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வயானையை சமாதானம் செய்து முருகப்  பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம். தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான  சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார். ராமலிங்க அடிகளார் ஸ்ரீமுக (1874) ஆண்டு தை மாதம் 19-ம் நாள்  ஒரு தைப்பூச நாளில் அருள் ஜோதியில் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழும். ஒரு  தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார்.  தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, பத்துமலை முருகன்  வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருகிறார்.

Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar