Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நகுலேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு நகுலேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நகுலேஸ்வரர்
  அம்மன்/தாயார்: நகுலாம்பிகை
  தல விருட்சம்: ஜம்பு நாவல் மரம்
  தீர்த்தம்: கண்டகி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவாகம முறைப்படி 6 கால பூஜைகள்
  புராண பெயர்: வீணாபணம்
  ஊர்: யாழ்ப்பாணம்
  மாவட்டம்: இலங்கை
  மாநிலம்: மற்றவை
 
 திருவிழா:
     
  தமிழ்மாத முதல்நாள், வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆவணி மூலம், புரட்டாசி சனி, கார்த்திகை தீபம் மார்கழி திருப்பாவை, திருவெம்பாவை, திருவாதிரை, தைப்பொங்கல், தைப்பூசம் மாசி மகம், பங்குனி உத்திரம் என மாத திருவிழாக்கள்பட்டியல் நீண்டுள்ளது. இந்நாட்களில் சிறப்பு உற்சவங்கள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் சோமவார விழாக்கள் பிரசித்தி பெற்றவையாகும். குறிப்பாக கார்த்திகை மாதத்து நித்திய சோமவார விழாக்கள் சங்காபிஷேகத்துடன் நிறைவுபெறும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று எள் - எண்ணெய் எரித்து வழிபட பெருந்திரளான பக்தர்கள் கூடுவர். நவகிரஹ சாந்தியுடன் சுவாமி உள்வீதி புறப்பாடும் நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  மூலவரின் பின்னால் இருக்கும் திருவாச்சி தமிழக கோயில்களில் இருப்பதைப் போல் அல்லாமல் ராஜகோபுரத்தை ஒத்த வடிவில் இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நகுலேஸ்வரர் திருக்கோயில், கீரிமலை, நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம், இலங்கை.  
   
போன்:
   
  +94217900470 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தோரண வாயிலைக் கடந்தால் 9 நிலைகளுடன் 108 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் கட்டுமான திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருப்பதை காணலாம். நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நெடிதுயர்ந்த கொடிக்கம்பம் செப்புத் தகட்டால் வேயப்பட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. அதற்கு முன்பாக பிச்சாடனர் பஞ்சலோக திருமேனியும், ராஜகோபுர திருப்பணி உண்டியலும் வைத்திருக்கின்றனர். ராஜகோபுர திருப்பணிக்காக பிச்சாடனர் பிச்சை ஏந்தி உங்கள் முன் நிற்கின்றார். என அறங்காவலர் தெரிவிக்கின்றார். உட்பிரகார மண்டப சுவற்றில் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண காட்சி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய ஆலகாலம் உண்டான காட்சி, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் என அழகிய வர்ண ஓவியங்கள் நேர்த்தியாகத் தீட்டப்பட்டுள்ளன.

பிரகாரத்தில் பரிவார தெய்வங்களான பிள்ளையார், சண்முகர், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பஞ்ச் லிங்கங்கள், நவகிரஹம் மற்றும் பைரவர் ஆகியோரது தனிச் சன்னிதிகள் விமானங்களுடன் அமைந்துள்ளன.  தற்போது காணும் கோயில், திருப்பணிகள் முடிந்து 2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்ட கோயில் ஆகும். முந்தைய கோயிலின் நிலைமையும் வரலாறும் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. அநாதியான மலைமீது அமைந்த கோயில் கடல் கொண்டதால் கடலுக்குள் அமிழ்ந்து போனது. அதன்பின் உருவான கோயில் மூன்று பிரகாரங்களையும் ஐந்து கோபுரங்களையும் கொண்டதாக இருந்தது. கி.பி. 1621 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை கைப்பற்றிய போர்த்துகீசியரால் இத்தலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அழிந்தது. பின் ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் 1878 ஆம் ஆண்டு ஆறுமுக நாவலர் எடுத்த பெருமுயற்சியின் காரணமாக எழுந்த கோயில் 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின் போது அக்னிக்கிரையானது.

அதன் பின் வெவ்வேறு காலகட்டத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றநிலையில் தமிழகத்திலிருந்து வரவழைத்த சிவாச்சாரியார்கள் மூலம் 1953 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 1973 ஆண்டில் ஒரு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. சீராக பூஜைகள் விழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கோயிலிற்கு மற்றுமொரு பேரிடி. 1990 ஆண்டு அக்டோபர் 16ம் தேதி கேதார கவுரி விரதவிழா விமர்சையாக நடந்து கொண்டிருந்த தருணம் ஈழ போர் விமானம் ஒன்று கோயில் மீது குண்டு மாரி பொழிந்தது. மூலஸ்தானம் தவிர ஏனைய பகுதிகள் எல்லாம் பெரும் அழிவுக்குள்ளாயின. கூடியிருந்த பக்தர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். விலைமதிப்பற்ற தொன்மையான விக்ரஹங்கள், பூஜைப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டும், களவாடப்பட்டும் போயின. இந்நிலையில் கருவறையும் மூலவிக்ரஹமும் எந்த வித சேதமுமின்றி தப்பியது தெய்வ அருளன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? இந்நிலையில் இருந்த திருத்தலத்தை, தற்போது 90 வயதை கடந்த பரம்பரை அறங்காவலரான நகுலேஸ்வர குருக்களின் இடைவிடாத பெருமுயற்சியின் காரணமாக அரசிடமிருந்து உதவி பெறப்பட்டது. அத்துடன் அடியார்களின் பங்களிப்புடன் கோயில் புணரமைக்கப்பட்டது.

பல்வேறு அழிவுகளை எதிர்கொண்ட கோயில் நிலை கண்டு ஒருபுறம் மனம் வேதனை அடைந்தாலும் தற்போது பிரம்மாண்டமாய் நம்முன் உயர்ந்து நிற்கும் கோõயிலை காணும்போது மனதில் பேரானந்தம் குடிகொள்கிறது. இத்தல தீர்த்தத்தின் மகிமை பற்றிய பல நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறது. தலபுராணம் நளமகாராஜன் வந்து கண்டகி தீர்த்தமாடி கலி நீங்கப் பெற்றான். சோழ நாட்டையாண்ட திசை யுக்கிரசோழன் மகள் மாருதபுரவல்லி குன்ம வியாதியால் உடல் மெலிந்து மிகுந்த துன்பத்திற்கு ஆளானாள். பல வைத்தியர்கள் சிகிச்சை அளித்தும் பலன் டைக்கவில்லை. தீர்த்தயாத்திரை சென்றாலாவது ஏதாவது குணம் கிட்டாதா? என ஒவ்வொரு தலமாகச் சென்றனர். அவ்வாறு சென்ற இடத்தில் ராமலிங்கர் என்ற சன்னியாசியைச் சந்தித்து நோய் பற்றிய விபரங்களைத் தெரிவித்தனர். அதற்கு அவர், உன் வியாதி பண்டிதர்களால் குணமாக்கக்கூடியது அல்ல. நீ தற்போது எடுத்துள்ள முயற்சியே உனக்கு சுகம் தர வல்லது. இலங்கை நாட்டின் வடமுனையில் கீரிமலை என்றொரு மலை உள்ளது.

அது சமுத்திர கரையில் அமைந்ததாகும். அங்கு கண்டகி தீர்த்தம் ஒன்றுண்டு. உலகில் உள்ள தீர்த்தங்களில் முதன்மையானது. அதில் சிலகாலம் நீராடி தங்கி இருந்தால் நீ நோய் நீங்கி சுகமடைவாய் என்றார். மாருதபுரவல்லி தன் பரிவாரங்களுடன் புறப்பட்டு கீரி மலையை அடைந்தாள். அங்கு நகுலமுனிவரை கண்டு தொழுது தன் நோய்பற்றிய விபரங்களைத் தெரிவித்தாள். நகுலமுனி தனக்கு கீரிமுகம் மாறி மனித முகம் அடைந்த நிகழ்வினைக் கூறி பின் அவளை ஆசீர்வதித்து கண்டகி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபடச் சொன்னார். அவ்வாறே சில காலம் செய்ய குன்ம நோய் முற்றிலும் அகன்று தனக்கிருந்த குதிரை முகமும் மாறி சுந்தர வதன அழகியாக மாறினாள். அவளது சொரூபத்தைக் கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். விஜய வருடம் (2014) மீண்டும் 23 ஆண்டுகளுக்குப்பின் 15 நாட்கள் கொண்டாடப்பெறும் மஹோத்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மகாசிவராத்திரியன்று தேர்த்திருவிழாவும், அடுத்த நாள் மாசி அமாவாசையன்று தீர்த்தத் திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றன. இனி இவ்வைபவங்கள் தொடர்ந்து நடைபெறுமென நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
 
     
 
 தலபெருமை:
     
  நிருத்த மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாம யம்மையின் அழகிய செப்புத் திருமேனிகள் தெற்கு நோக்கிய வண்ணம் உள்ளன. இந்த நடராஜர் உருவம் தனித்துவம் வாய்ந்ததாகும். பொதுவாக நடராஜர் நடனம் ஆடும் நிலை, தலைமுடி விரித்த கோலத்தில் காணப்படுவார். இங்குள்ள நடராஜப்பெருமான் தலைமுடியை முடித்து கீரீடம் சூடிய நிலையில் ஆனந்த நடனம் புரிவது அபூர்வ காட்சி என கோயிலில் தெரிவிக்கின்றனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் மற்றும் துர்க்கையம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.  அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் மலர்ந்த முகத்தோடு நகுலாம்பிகை வீற்றிருக்கின்றார். சிவாகம விதிகளுக்கும் சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் உட்பட்டே கோயில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தளமும் பீடமும் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களும் வெள்ளை கற்களால், ஆனவை.

மேற்கண்ட செய்திகள் சுதங்கிதை, மத்ஸ்ய புராணம், தட்சண கைலாய மான்மியம், மகாபாரதம் ஆகிய வடமொழி நூல்களிலும் நகுலகிரி புராணம், யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகிய தமிழ் நூல்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. போர் சூழல் நீங்கி அமைதி திரும்பியதை அடுத்து மக்கள் மீள் குடியமர்ந்து வருகின்றனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் குறிப்பாக தமிழக பக்தர்கள் பெரும் அளவில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். உற்சவ காலங்களில் பெருந்திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோயிலில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காக கோயில் அருகில் தங்கிச் செல்ல வசதியான மடங்களை ஏற்படுத்தி உள்ளனர். ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் கடலில் நீராடவும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடுகின்றனர். இங்கு மூலவருக்கு திருமணமான சிவாச்சாரியர்கள் மட்டுமே பூஜைசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.  பிரதோஷ காலங்களில் முதலில் ரிஷப பூஜை செய்கின்றனர். இப்பூஜையினால் சிவன் பிரத்யக்ஷ்யமாவதாக ஐதீகம். அதற்குப் பின் பிரதோஷ பூஜையும் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  ஈழத்து பஞ்ச ஈஸ்வர ஸ்தலங்களில் மிகத் தொன்மையானதும், வியக்கத்தக்க அற்புதங்களை நிகழ்த்தி சரித்திரம் படைத்ததுமான திருத்தலம் கீரிமலை நகுலேஸ்வரம். இத்தலத்தில் மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று சிறப்பு மிக்க கோயிலுமாக விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் தல யாத்திரைகளுக்கு மிகப் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு உள்ள சமுத்திர தீர்த்தத்தின் காரணமாக சைவப் பெருமக்களின் சமய சடங்குகளான சபிண்டீகரணம் அஸ்திசஞ்ஜயனம் கிரியைகளுக்கு சிறந்த புண்ணிய க்ஷேத்திரமாக விளங்குகின்றது. இலங்கை -யாழ்பாணம் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கடலை ஒட்டிய தற்போது கீரிமலை என அழைக்கப்படும். ஒரு மலை முற்காலத்தில் இருந்தது.

இம் மலைப்பகுதி கடற்கரை ஓரமாக கிழக்கில் இருந்து மேற்குவரை நீண்டிருந்தது. திருதம்பலேசுவரம் எனும் சிவன்கோயில் இம்மலை மீது தான் இருந்திருகின்றது. இறைவி திருதம்பலேஸ்வரி என அழைக்கப்பெற்றார். இதற்கு அருகில் உச்சிபிள்ளையார் கோயிலும் இருந்திருக்கின்றது. தனித்தனிச் சன்னிதிகள் இருந்தன. இவை நகுலமுனிவரால் வழிபட்ட தலங்களாகும். இம்மலை கடல் கொந்தளிப்பால் கடல் கொண்டு, மலை முழுவதும் கடலில் அமிழ்ந்து விட்டது. அப்படி இருந்ததற்கான அறிகுறிகளை இன்றும் கடலில் காணமுடிகிறது. மலைப்பகுதியின் அடித்தள கற்பாறைகள் கிழக்கு திசையில் 1 கி.மீ. தூரம் வரை தொடராக இருந்து வருகின்றது. திருதம்பலேசுரர் கோயில் ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் விஜயராஜன் திருப்பணி செய்த விபரம் தல புராணத்தில் உள்ளது. திரேதா யுகத்தில் ஈசன்  பார்வதி தேவியுடன் எழுந்தருளி இருந்தார். அப்போது பார்வதிதேவி நீராடுவதற்காக கண்டகி தீர்த்தத்தை உண்டாக்கினார். பார்வதி தேவி நீராடிய இத்தீர்த்தத்தில் தேவர்களும், பிறரும் வந்து தீர்த்தமாடி புண்ணியவான்களாகத் திரும்பிச் சென்றனர். அன்றுமுதல் இப்பகுதி புண்ணியபுரம் என வழங்கலாயிற்று.

இலங்கையில் உள்ள தீர்த்தங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த தீர்த்தம் இதுவாகும். கீரிமலையில் உள்ள சாகர சங்கமம் கண்டகி தீர்த்தமாகும். தெற்கில் ஊறுகின்ற தூய நீரும் வடக்கில் ஊறுகிற உப்பு நீரும் கலந்து, சிவரூபமும் சக்தி ரூபமுமாய் இணைந்து சங்கமமாவதால் மனநோய் மட்டுமல்லாது உடல் நோய்களையும் நீக்கும் ஆற்றல் பெற்றது. முற்காலத்தில் நகுலமுனி எனும் கீரிமுகம் கொண்ட முனிவர் ஒருவர் மலைச்சாரலில் தங்கி தீர்த்த மாடி வந்தார். தொடர்ந்து நீராடி ஈசனைத் துதித்து வந்ததால், தன் முகத்தில் இருந்த அங்கவீனமான கீரிமுகம் நீங்கி மனித முகத்தைப் பெற்றான். இத்தல சிறப்பையும் தீர்த்த மகிமையையும் குறித்து வியப்புற்று, இவ்விடமே தனக்கு தவம்செய்ய ஏற்ற இடம் எனக் கருதி இம்மலையில் உள்ள குகையில் வாசம் செய்து வந்தார். இம்முனிவருக்கு கீரி முகம் மாறியதால் கீரிமலை என பெயர் பெற்றது. கோயிலில் வழிபாடு செய்தமையால் இறைவனை நகுலேசர் எனவும் இறைவியை நகுலாம்பிகை எனவும் கோயிலை நகுலேஸ்வரம் என அழைக்கலாயினர். நகுலம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். நகுலம் என்றால் தமிழில் கீரி எனப்பொருள்படும்.

கைலாச புராணத்தில் கீரி மலையின் தலச் சிறப்பினை விளக்கும் கதை ஒன்று இடம் பெற்றுள்ளது. இராவணனின் யாழ் ஓசையினால் பெரிதும் கவரப்பட்டவன் சுசங்கீதன். இவன் ராவணனின் யாழைக் கவர்ந்து செல்ல தக்க தருணம் பார்த்திருந்தான். இராவணனை ராமபாணம் தாக்கியபோது அவன் கையில் இருந்த யாழ் நழுவி கீழே விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு கீரிமலை வந்து சேர்ந்தான் சுசங்கீதன். ஈசன்முன் மனமுருகி யாழை வாசித்துத் தொழுதான். யாழிசையில் லயித்து மகிழ்ந்த ஈசன் பார்வதி சமேதராய் காட்சி கொடுத்தார். காடுகளை அழித்து நாடாக்கி, நகர் அமைத்து, குடிகளை அமர்த்தி வீணாபணம் என்னும் பெயரோடு ஆட்சி புரிவாயாக என அருளாசி வழங்கினார். நாளடைவில் அப்பெயர் மருவி யாழ்ப்பாணம் ஆனது. அப்பெயரே நிலைபெற்றுவிட்டது. கருவறையில் ஈசன் நகுலேஸ்வரர் என்னும் திருநாமத்தில் லிங்க வடிவில் அருள்புரிகின்றார்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவரின் பின்னால் இருக்கும் திருவாச்சி தமிழக கோயில்களில் இருப்பதைப் போல் அல்லாமல் ராஜகோபுரத்தை ஒத்த வடிவில் இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar