Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஓம்காரேஷ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஓம்காரேஷ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஓம்காரேஷ்வரர்
  அம்மன்/தாயார்: அமலேஸ்வரி
  தீர்த்தம்: கோடி தீர்த்தம், கபில தீர்த்தம், நர்மதை நதி
  ஊர்: மேற்கு நிமாட்
  மாவட்டம்: மாந்தாதா
  மாநிலம்: மத்திய பிரதேசம்
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, மூன்று கால பூஜை.  
     
 தல சிறப்பு:
     
  12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. கர்ப்பகிரகம் ஓங்கார வடிவில் அமைந்து அதன் நடுவில் சிவலிங்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. சுயம்புலிங்கம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் மாந்தாதா, மேற்கு நிமாட் மத்தியபிரதேசம்.  
   
போன்:
   
  +91 450554 07280 271228 
    
 பொது தகவல்:
     
  இங்கு மகாகாளர், அமலேசுவரர், பஞ்சமுக கணபதி, சித்தீசுவரர், லட்சுமி நாராயணர் போன்ற பரிவார மூர்த்திகள் உள்ளனர். மழைக்காலம், அதிக வெயில்காலம் தவிர்த்து இத்தலத்திற்கு ஆண்டு முழுதும் யாத்திரை மேற்கொள்ளலாம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் யாத்திரைக்கு உகந்த காலம்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள ஓங்காரேஸ்வரரை வழிபட்டால் செல்வம் பெருகும், மோட்சம் கிடைக்கும், பிறவிப் பிணி நீங்கும், நர்மதையில் நீராடினால் பாவம் தீர்ந்து புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு வில்வ இலை மற்றும் பூவால் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  இங்கு ஜோதிர்லிங்கம் தோன்றக் காரணமான விந்திய மலை, முதலில் ஓம்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து, அதில் சிவலிங்கம் வைத்துப் பூஜித்ததால் இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது என்பர். மற்றும் ஒரு காரணம் கூறுகின்றனர். நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று கூடி, ஓங்காரத்தின் வரிவடிவம் போலக் காட்சி தருவதால், இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது எனவும் கூறுகின்றனர். கோயில் மூன்று அடுக்குகளாக உள்ளது. கீழ் தட்டில் ஓங்காரீசுவரரும், நடுத்தட்டில் மகாகாளரும், மூன்றாம் தட்டில் சித்தீசுவரரும் உள்ளனர். மூலஸ்தானத்தில் உள்ள ஓங்காரீசுவரர் மீது, கீழே இருபனைமர ஆழத்திலுள்ள நர்மதை ஆற்று நீர் மேலே வந்து தானே அபிஷேகம் ஆகிறது.

சிவபெருமானை மாந்தாதா வழிபட்ட தலம் ஓம்காரேஷ்வர்! யாக வேள்விகளுடன் முக்கடவுள்களையும் மகிழ்வித்த மாந்தாதா பதிலுக்குப் பெற்றது சிவபெருமானின் இந்த ஓம்கார லிங்கத்துடன் தானும் வாசம் செய்யவேண்டும் என்பது மட்டுமே! ஓம்கார மாந்தாதா என்றே இந்தச் சிறு குன்று இன்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் குன்றை சிரத்தையுடன் பக்தர்கள் வலம் வருகின்றனர். பரிக்கிரமா என்ற கிரிப்பிரதட்சண வழியில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல அமைந்துள்ளன. ஓம்காரேஷ்வர் நர்மதையின் போக்கில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் அதிக புனிதமும் முக்கியத்துவம் பெற்றது ஓம்காரேஷ்வரர் தீர்த்தம். முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் உறைந்திருக்கும் தலம் இது என புராணங்கள் குறிப்பிடுகின்றன. நூற்றியெட்டு சிவலிங்கங்களைப் பெற்ற புண்ணியத் தலம். சிவபுரி, விஷ்ணுபுரி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது ஓம்காரேஷ்வர். சிவபுரியில் ஓம்காரேஷ்வர் எனவும், விஷ்ணுபுரியில் அமரேஸ்வர் (அல்லது மமல்லேஷ்வர்) எனவும் இறைவர் எழுந்தருளியுள்ளார். ஓம்காரேஷ்வர், மாந்தாதா என்ற திருநாமத்தாலேயே பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறார். நர்மதையும் காவேரி எனப்படும் அதன் துணை நதியும் சங்கமமாகும் இடம் ஓம்காரேஷ்வர். இரண்டு நதிகளும் அவற்றின் போக்கில் ஓம்காரா மாந்தாதா என்ற குன்றுள்ள தீவை ஏற்படுத்தி உள்ளன. குன்றும் இரு பாகங்களாகப் பிரிந்திருப்பதால் மேற்புறத்திலிருந்து நோக்கும்போது இத்தீவு ஓம் என்ற எழுத்தைப் பிரதிபலிக்கிறது. விந்திய மலை தன் வளர்ச்சிக்காக ஓம்காரேஷ்வரை வேண்டியது. தேவர்கள் பின்னர் வேண்டியதற்கு இணங்க இறைவர் ஓம்காரேஷ்வர், அமரேஸ்வர் இரண்டு லிங்கங்களாகப் பிரிகிறார்.

ஒரு முறை நாரதமுனி விந்திய மலைப் பகுதியில் சஞ்சரித்து விந்தியராஜனைக் காண்கின்றார். அவரைத் தொழுது வணங்கிய கிரிராஜன் சகல வளங்களுடன் மேன்மையையும் கீர்த்தியும் உடைய விந்திய பர்வதம் தாங்கள் வருகையால் மேலும் மேன்மை பெறுகிறது என கர்வமும் பெருமையும் பொங்க உரைக்கிறான். கிரிராஜனுக்கு ஆசி வழங்கிய நாரதர் பதிலுக்கு ஒரு பெருமூச்சை மட்டும் எழுப்புகிறார். துணுக்குற்ற விந்தியராஜன், என்ன நாரதரே... பெருமூச்சு விடுகிறீர்கள்? விந்திய பர்வதத்துக்கு என்ன குறை? என்று வினவுகிறான். அப்போது மேரு மலையின் சிகரங்கள் எப்படி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்திருக்கின்றன என்பதை நாரதர் விந்தியராஜனுக்கு விளக்குகிறார். எனவே, மேரு மலையின் உச்சத்தை விஞ்ச எண்ணிய விந்தியராஜன் ஓம்காரேஷ்வர் தலத்துக்கு வந்து மண் வடிவில் சிவலிங்கத்தை எழுப்பி கடுந்தவம் புரியலானான். ஆறு மாத காலம் இம்மியளவும் அசையாமல் கடும் தவம் இருந்த விந்தியராஜனின் பக்தியை மெச்சிய ஈஸ்வரன், கிரிராஜனுக்கு வேண்டிய வரத்தையும் அளிக்கிறார் (பின்னர் விந்திய மலையின் வளர்ச்சியை நிறுத்த அகஸ்தியர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்துவிட்டுத் தெற்கிலேயே தங்கிவிடுகிறார்). விந்தியராஜனுக்கு வரமளிக்கத் தோன்றிய இறைவனை தேவர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் ஓம்காரேஷ்வரிலேயே நிலையாகத் தங்கும்படி இறைஞ்சுகின்றனர். அதுவரை பிரவண சொரூபமாய் ஒன்றாக இருந்த ஓம்கார் லிங்கம் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பாதி சதாசிவமாக ஓம்காரேஷ்வர் ஆகிறது. மறுபாதி மண் லிங்கத்துடன் ஜோதியாய்க் கலந்து அமரேஸ்வர் அல்லது மமலேஷ்வர் ஆகிறது. இவ்விரண்டும் ஓம்காரேஷ்வர் தீர்த்தத்தின் இருகரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. காவேரி என்கின்ற சிறிய நதி ஓம்காரேஷ்வர் அருகில் நர்மதையுடன் இணைகிறது. விசித்திரம் என்னவென்றால் அது நர்மதையை இரண்டு முறை சந்திக்கிறது. முதல் முறை அது நர்மதை நதியுடன் கலக்காமல் கடந்து செல்வதாக நம்பப்படுகிறது! மாந்தாதா குன்றை வலம் வந்த பின் காவேரி நர்மதையுடன் இணைகிறது எனக் கருதுவோரும் உண்டு! பின்னர் சுமார் இரண்டரை கி.மீ.க்கு அப்பால் நர்மதையை மீண்டும் சந்தித்து இணைகிறது. இதை காவேரி-நர்மதையின் இரண்டாவது சங்கமம் என்று குறிப்பிடுவோரும் உண்டு. இரண்டு சங்கமங்களுக்கு நடுவே உள்ளது மாந்தாதா குன்று. ஓம் என்ற எழுத்தை ஒத்த வடிவாதலால் இவ்விடம் ஓம்காரேஷ்வர் எனப் பெயர் பெற்றது. ஒரு தீவாக உள்ள இந்த புண்ணிய இடத்தில் ஓம்காரேஷ்வர் குடிகொண்டிருக்கிறார்.

நர்மதை-காவேரி சங்கம இடத்தில் குபேர் பண்டாரி தீர்த்தம் உள்ளது. குபேரன் இங்கு முதலில் வாரம் ஒருமுறை மட்டுமே ஆகாரம் ஏற்று பின்னர் மாதம் ஒரு முறை மட்டுமே கனிகளைப் புசித்து நூறு வருடங்கள் தவமிருந்தான். யக்ஷர்களுக்கு ராஜாவாக இருக்க பகவான் சங்கரரிடமிருந்து வரம் பெற்றான். இந்த சங்கம இடம், சுவர்க்கத்தின் வாசல் என்று சொல்லப்படுகிறது. இங்கு ஸ்நானம் முடித்து எள், நீருடன் பித்ருக்களுக்கு கர்மா செய்வது மிகவும் உகந்தது. ஓம்காரேஷ்வர் சன்னதியை அடையும் முன் முதன்முதலில் நாம் தரிசிப்பது பஞ்சமுகி கணேஷ் என்கிற ஐந்துமுக விநாயகர். மாந்தாதா அரசனின் பிதா யுவனாஸ்வா யாகம் நடத்திய இடம் இது. கணபதி பூஜையின்போது பிள்ளையார் அவனுக்கு ஐந்து முகங்களுடன் காட்சி அளித்தார். வேதங்களின் மாதா காயத்ரியும் ஐந்து திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஓம்காரேஷ்வர் சன்னதிமுன் சுக்தேவ்ஜி பிரதிமை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் இரவும் சிவபெருமான் பார்வதியுடன் இங்கு விளையாட வருவதாக ஐதீகம். பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் அந்த நம்பிக்கையை சோதனை செய்ய ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஒரு ஆங்கிலேய அதிகாரி முயன்றிருக்கிறார். இரவு சுக்தேவ் சிலையின் பின்புறம் ஒளிந்தபடி இருந்த அவரின் உயிரற்ற உடல் மட்டுமே மறுநாள் கிடைத்ததாம். இத்தலத்தின் ஒரு மூலையில் மாந்தாதா தவமிருந்ததாகச் சொல்லப்படுகிறது. முன்னேறிச் சென்றால் பிரணவ சொரூபமாய் ஓம்காரேஷ்வர் தரிசனம் கிடைக்கிறது. அவ்வளவு உயரத்திலும் லிங்கத்தின் கீழ் எப்போதும் தென்படும் நர்மதையின் நீர் வியப்பையும் புல்லரிப்பயும் தருகிறது ! லிங்கத்தின் மேற்புறம் தேவி பார்வதியின் பிரதிமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஐந்து தளங்களாக உள்ள இந்தக் கோயிலில் மற்ற தளங்களில் முறையே மஹாகாளேஷ்வர், சித்தநாத், கேதாரேஷ்வர், குப்தேஷ்வர் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

சன்னதியின் பிரதட்சண மார்க்கத்தில் பகவான் துவாரகாதீரா சிலையும் காணப்படுகிறது. சுமார் எட்டடி உயரமுள்ள இந்தச் சிலை கறும் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. முகவாய் அருகே வைக்கப்பட்டுள்ள வைரக்கல் பார்வையைக் கவருகிறது. சிவபெருமானின் ஏனைய அவதார வடிவங்களான ராமேஷ்வர், ஜுவாலேஷ்வர், அந்தகேஷ்வர், நவக்கிரஹணேஷ்வர், ஜூமகேஷ்வர் என அனைத்துக் கடவுள்களும் ஆலயத்தை அலங்கரிக்கின்றனர். சந்தோஷி மாதா, நர்மதை ஆகிய தேவிகளின் கோயில்களும் உட்புறம் அமைக்கப்பட்டிருக்கின்றன. தென்கரையில் உள்ள மமலேஷ்வரைத் தரிசனம் செய்யாமல் ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் தரிசனம் பூர்த்தியாவதில்லை. மமலேஷ்வர் சன்னதியில் தினந்தோறும் சுமார் ஒன்றேகால் லட்சம் மண் லிங்கங்கள் பிடிக்கப்பட்டு லிங்கார்ச்சனை செய்யப்படுகிறது. நர்மதாஷ்டகம் உதயமான இடமே இதுதான். நர்மதையின் நீர்மட்டத்திலிருந்து சுமார் நூற்றைம்பது அடி உயரத்தில் காளிகா கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலுக்கு அருகே ஒரு குகையும் உள்ளது. அந்தக் குகையில்தான் குரு கோவிந்த பாதாச்சாரியர் அரிய தவத்தை மேற்கொண்டார். அந்த மேன்மை வாய்ந்த குகையில்தான் ஆதி சங்கராச்சார்யரும் தனது குருவிடமிருந்து ராஜ யோகத்துக்கான சிட்சை பெற்றதாகத் தெரிகிறது. இரண்டரை ஆண்டு காலம் தன் குருவுடன் இந்தக் குகையில் தங்கி ஆதி சங்கராச்சார்யர் ஞானம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு நாள் குரு கோவிந்த பாதாச்சார்யர், குகையில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அது மழைக்காலம்...திடீரென மழை அசுர வேகத்தில் பெருகி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. நீர்மட்டம் உயர்ந்து குகையின் அருகிலும் வரத் துவங்கியது. நதியின் பிரவாக ஆற்றலை உணர்ந்த சங்கரர் குருவின் நிஷ்டையைக் கலைக்க மனமில்லாமல் ஒரு கமண்டலத்தை குகை வாயிலில் வைத்து நர்மதையைத் துதிக்கலானார். அந்தத் துதி குகையின் அனைத்துப் புறங்களிலிருந்தும் எதிரொலிக்கத் தொடங்கியது. நர்மதையின் பிரவாகம் குகையில் நுழையாமல் கமண்டலத்தில் அடைக்கலம் புகுந்தது. சங்கரர் அங்கு எழுப்பிய துதியே நர்மதாஷ்டகம் என்று வழங்கப்படுகிறது. ஓம்காரேஷ்வர் கோயிலிலிருந்து கிழக்குப் புறம் சுமார் நான்கு கி.மீ. தொலைவில் கோட்கேடா என்ற இடத்தில் நர்மதைக் கரையில் ஸாத் மாத்ரா என்றழைக்கப்படும் சக்தி பீடம் அமைந்துள்ளது. ஸப்த மாத்ருகா என்று முதலில் வழங்கப்பட்ட தலம் இது. இந்த புனித தீர்த்த தலத்தில் ஏழு தேவிகளின் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை முறையே பிராஹ்மி, மஹேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசி(ன்)ஹி, ஏந்திரி (ஏந்திரி தேவியை இந்திராசனி அல்லது இஜாசனி என்று அழைப்பதும் உண்டு) ஆகியன. நர்மதையைச் சுற்றி வாழும் குடும்பங்கள் ஒவ்வொரு தேவியையும் குடும்ப வழக்கத்துக்கேற்ப குலதேவியாகக் கருதுகிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  இஷ்வாகு வம்சத்து அரசன் யுவனாஸ்வா. யுவனாஸ்வா அரசனுக்கு நூறு மனைவிகள். கவலையுற்ற அரசன் நீண்ட யோசனைக்குப் பின் வனம் சென்று முனிவர்களை தரிசித்து அவர்களுடன் தெய்வீக காரியங்களில் ஈடுபட முடிவு செய்தான். அதிக ரிஷி முனிவர்கள் நிறைந்த யாகசாலைக்கு ஒரு முறை அவன் செல்ல நேர்ந்தது. வாடிப் போயிருந்த மன்னனின் முகம் அந்த தவ முனிவர்களுக்கு அவனது மனநிலையை எடுத்துக் காட்டியது. தன் மனதை அரிக்கும் கவலையை முனிவர்களிடம் பகிர்ந்துகொண்டான் அரசன். அரசனைத் தேற்றிய முனிவர்கள், இந்திர தெய்வதா என்ற யாகத்தை நடத்தி முடித்தனர். அந்த யாகத்தின் பிரசாதமாக மந்திரங்களின் சக்தி ஏற்றப்பட்ட நீர் அரசனுக்கு முனிவர்களால் வழங்கப்பட்டது. அரசனின் மனைவிகள் சக்தி நிறைந்த அந்த நீரைப் பருகினால் கர்ப்பமாவது உறுதி என்றும் முனிவர்கள் உரைக்கின்றனர்.

யாகம் முடிந்த வேளையிலேயே மன்னனது மனக் கவலை ஓரளவு தீர்ந்தது. அன்றிரவு நிம்மதியாக உறங்கத் தொடங்குகிறான். இடையில் நா வறட்சி ஏற்படுகிறது. எழுந்தவனுக்கு முனி ஸ்ரேஷ்டர்களுக்கு இடையூறு தர வேண்டாம் என்ற நல்லெண்ணம் தோன்றுகிறது. யாகம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த மண் பாண்டத்திலிருந்த நீரைப் பருகுகிறான். அதிகாலையில் எழுந்த முனிவர்கள் மண்பாண்டத்தில் அந்த சக்தி நீர் இல்லாதது கண்டு திகைப்புறுகின்றனர். ஒவ்வொருவரையும் விசாரணை செய்கின்றனர். அரசன் யுவனாஸ்வா நள்ளிரவில் தான் அதைப் பருகியதைக் குற்ற உணர்வுடன் அவர்களுக்குத் தெரிவிக்கிறான். விதியை மாற்ற இயலாது என்று சொல்லி முனிவர்களும் அரசனை வழியனுப்பி வைக்கின்றனர். நாளடைவில் அரசன் கர்ப்பமுறுகிறான். மந்திரிகள் தந்த அறிவுரைக்கேற்ப சிசு பிறந்ததும் காட்டில் விடப்படுகிறது. வனத்தில் தேவர்கள் அந்த குழந்தையைப் பராமரிக்கின்றனர். இந்திரனின் விரல் மூலமே அந்தச் சிசு அமிர்தம் பருகி வளர்ந்ததாக ஸ்கந்த புராணம், தேவி பாகவதம் ஆகியவற்றில் சொல்லப்படுகிறது. மாம் தாதா என்ற சொல்லுக்கு என்னிடமிருந்து (என்னைப்) பருகும் என்று இந்திரனே கூறியதாகப் பொருள். எனவே, அந்த சிசு மாந்தாதா என்ற பெயரைப் பெறுகிறது. பிறந்த குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் இங்கு முளைத்ததாக ஒரு நம்பிக்கை! யுவனாஸ்வா உயிர் துறந்ததும் பெரும் பராக்கிரமசாலியான மாந்தாதா முடிசூடப்படுகிறான். சீலமும் குடிமக்களின் நல்வாழ்வுமே அவனது குறிக்கோளாக இருந்தன. ஒரு முறை நாட்டில் மழையின்றி வறட்சி ஏற்பட்டிருந்தது. பண்டிதர்கள் ஏகாதசி விரதத்தின் பலனை அரசனான மாந்தாதாவுக்குத் தெரிவிக்கின்றனர். அதுவும் அமாவாசைக்குப் பின் வரும் பாத்ரபாதா மாதத்தின் (பத்மனாபா) ஏகாதசியில் தொடங்கினால் மழை பெய்வதில் துவங்கி, நாட்டில் வேறு என்னென்ன நற்பயன்கள் விளையும் என்பதையும் அவர்கள் அரசனுக்கு எடுத்துரைக்கின்றனர். தானே ஒரு எடுத்துக்காட்டாக நின்று ஏகாதசி விரதத்தைத் தொடங்குகிறான் மாந்தாதா. நாட்டின் வறட்சியும் மறைகிறது. பூவுலகையே ஒருகுடை கீழ் தர்ம சீலத்துடன் ஆண்ட மாந்தாதாவின் கீர்த்தி புராணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

யாவத்ஸூர்ய உதேதிஸ்ம யாவச்சப்ரதிஷ்டதி !
ஸர்வ தத்யௌவநாஷ்வஸ்யஹ மாந்தாதுஹ ÷க்ஷத்ர முச்யதே !!
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. கர்ப்பகிரகம் ஓங்கார வடிவில் அமைந்து அதன் நடுவில் சிவலிங்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar