Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மோரேஷ்வர்(அஷ்ட கணபதி-1) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மோரேஷ்வர்(அஷ்ட கணபதி-1) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மோரேஷ்வர்
  அம்மன்/தாயார்: சித்தி புத்தி
  ஊர்: பாலி
  மாவட்டம்: புனே
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி  
     
 தல சிறப்பு:
     
  மோரேஷ்வர் இடஞ்சுழிப் பிள்ளையராக அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மோரேஷ்வர் திருக்கோயில் பாலி, புனே, மகாராஷ்டிரா  
   
    
 பொது தகவல்:
     
  கோட்டை போன்ற வடிவம் கொண்ட ஆலயத்தின் முன்புறம் பெரிய தீப்மாலா (எண்ணெய் விளக்குகளுடன் கூடிய கல்தூண்) வைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகத்தை நோக்கியபடி மூஞ்சூறும், நந்தியும் அமைந்துள்ளன. கோயிலுக்கு நான்கு பிரதான வாயில்கள் உள்ளன. கிழக்கில் லட்சுமி நாராயணரும், தெற்கில் பார்வதி, சங்கரும்; மேற்கில் ரதி மன்மதனும், வடக்கில் மஹிவராஹரும் உள்ளனர். ஆலயத்தின் எட்டு மூலைகளில் ஏகதந்தர், மஹோதரர், கஜானனன், லம்போதரர், விகடர், விக்னராஜர், தும்ராவர்னர், வக்ரதுண்டர் ஆகிய எட்டு விநாயகர்களின் மூர்த்தங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆலயத்தில் கற்பகவிருட்சமும் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் கிடைக்க, வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வேண்டிச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள பைரவருக்கு வெல்லமும் தேங்காயும் நைவேத்தியத்திமாக படைக்கப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
 

விநாயகரின் சக்திப் பீடங்களாகப் கருதப்படுகின்றன மகாராஷ்டிராவில் புனேயைச் சுற்றி அமைந்துள்ள எட்டு ஆலயங்கள். அந்த ஆலயங்களில் அருள்பாலிக்கும் அஷ்ட விநாயகர்களையும் தரிசிப்பது எண்ணற்ற பலன் தரும் என்பது ஐதிகம். அஷ்ட விநாயகர் யாத்திரையில் மோரேஷ்வருக்குத் தனிப்பெருமை அளிக்கப்படுகிறது. முதலிலும் முடிவிலும் இக்கோயிலை தரிசிப்பது உத்தமம். மோர் என்ற சொல் மயில் என்ற பொருள் கொண்டது. ஒரு காலகட்டத்தில் இங்கு மயில்கள் நிறைந்து இருந்தனவாம். கிராமமும் தோகை விரித்த மயில் வடிவிலேயே அமைந்துள்ளது.

மோரேஷ்வர் இடஞ்சுழிப் பிள்ளையார் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கண்களிலும் தொந்தியிலும் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. காவிச் சாந்து பூசப்பட்டிருக்கிறது. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின்போது விக்ரகத்தை வழிபட்டு பாதுகாப்பிற்காக தகடுகளால் மூடிவிட்டுச் சென்றனராம். ரித்தி சித்தி இருவரும் கர்ப்பகிரகத்தில் மோரேஷ்வரின் இரு பக்கங்களிலும் உள்ளனர். நதி கர்ஹா, கர்ஹாகங்கா என அழைக்கப்படுகிறது. பிரம்மன் ஒருமுறை தேவி சரஸ்வதியை அவமதித்து விடுகிறார். தனது செயலுக்கு வருந்தி பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறார். பிரபஞ்சத்தின் அனைத்துப் புண்ணிய தலங்களிலும் நீராடிவிட்டு தனது கமண்டலத்தில் அத்தீர்த்தங்களின் புனித நீரை நிரப்புகிறார். மனம் அமைதி அடையாததால் மோரேஷ்வர் ஆலயத்திற்கு வந்து மயூரேஷ்வருக்கு பூஜை, அபிஷேகங்களை புரிகிறார். ஆலயத்தை வலம் வருகையில் கமண்டலம் கால் இடறிக் கீழே விழுகிறது. கமண்டலத்திலிருந்த நீர் பிராவாகமாக ஓடுகிறது. மறுபடியும் அதைக் கமண்டலத்தில் நிரப்ப பிரம்மன் முயலுகிறார். பிரம்மன் முன் தோன்றிய மோரேஷ்வர் அவரைத் தடுத்தாட்கொள்கிறார். அந்த நீர்ப் பிராவாகம் பிரம்ம கமண்டல கங்கா (கர்ஹகங்கா) நதியாக உருவெடுக்கும். அனைத்துப் பாவங்களுக்கும் விமோசனம் தரும் தீர்த்தமாக அமையும் என விநாயகர் அருளுகிறார். இன்றும் அந்நதியைச் சுற்றி ஸ்ரீகணேச தீர்த்தம், பீம தீர்த்தம், கபில தீர்த்தம், வியாச தீர்த்தம், ரிஷி தீர்த்தம், சர்வபுண்ய தீர்த்தம், ஸ்ரீகணேஷ்கயா தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. முனி ஜடபரதர் தங்கியிருந்த ஆசிரமம் மோர் கிராமம் அருகே இருந்தது என அறிகிறோம். தற்காலத்தில் அங்கு ஒரு குன்றில் ஐந்து லிங்கங்கள் அமைந்துள்ளன. மோர் கிராமத்தின் ÷க்ஷத்திர காவலராக நக்னபைரவர் உறைகிறார். அவர் மோரேஷ்வர் சன்னதியிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளார். நக்னபைரவர் தரிசனம் இல்லாமல் யாத்திரை பூர்த்தி அடைந்ததாகக் கருதப்படுவதில்லை.

 
     
  தல வரலாறு:
     
 

புராண காலத்தில் மிதிலா தேசத்தை கண்டகி என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு சக்ரபாணி என்ற அரசன் ஆண்டுவந்தான். மகாபிரதாபி! தர்மவான்! அவனது தர்மபத்தினி உக்ரா பதிவிரதை. இவர்களுக்கு நீண்ட நாட்களாகியும் குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. ஒருமுறை ஷெளனக் என்ற முனிவர் அவரது அரசவைக்கு வர நேர்ந்தது. அரசனின் முகவாட்டத்தின் மூலம் காரணத்தை உணர்ந்துகொண்ட முனிவர், தம்பதிகளை சூரிய உபாசனை மேற்கொள்ளுமாறு பணிக்கிறார். சிரத்தையுடன் அவர்கள் சூரியனை இடைவிடாமல் பூஜிக்க, ஆதித்யன் அருளால் ராணி உக்ரா கர்ப்பம் தரிக்கிறாள். கதிரவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்த சிசுவின் தேஜஸ் சில மாதங்களில் ராணியைத் தகிக்கத் தொடங்குகிறது. தாங்க இயலாத ராணி சமுத்திர ராஜனை வேண்டிக் கொண்டு அதை கடலில் விட்டுவிடுகிறான். கடலரசன் கர்ப்பத்தை மகாதேஜசும் பலமும் கூடிய குழந்தையாய் உருவாக்குகிறான். நாளடைவில் சமுத்திர ராஜன் ஓர் அந்தணர் வேடம் பூண்டு குழந்தையுடன் சக்ரபாணியின் தேசத்திற்கு வருகை தந்து அதனை அரசனுக்குச் சமர்பிக்கிறான். கடல் மூலம் வந்த குழந்தை என்பதை மனதில் கொண்டு சக்ரபாணி அந்த பாலகனுக்கு சிந்து எனப் பெயரிட்டு வளர்க்கிறான். நாளடைவில் இளைஞன் சிந்துவிற்கு இளவரசப் பட்டம் சூட்டப்படுகிறது. அரக்கர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சிந்துவிடம் சூரிய வழிபாட்டை நடத்த ஆலோசனை கூறுகிறார். அதன்படி இரண்டாயிரம் வருடங்கள் சிந்து இடைவிடாமல் சூரிய வழிபாடு நடத்தியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிந்துவின் சிரத்தையால் மனம் நெகிழ்ந்து சூரிய பகவான் பிரசன்னமாகிறான். அமரத்துவ நிலை எய்த சிந்து ஆதித்யனிடம் வேண்டுகிறான். அமிர்தத்தை அவனுக்கு அளித்த சூரியன், அமிர்தம் சிந்துவின் வயிற்றில் எவ்வளவு காலம் தங்கியிருக்குமோ அவ்வளவு காலம் சிந்துவிற்கு முடிவு இல்லை என்று வரம் அளித்து மறைகிறான். சிந்துவின் புத்திக் கூர்மையையும் வலிமையையும் சக்ரபாணி அறிந்ததுதான். சூரியனின் அருளும் கிடைத்து மைந்தன் அமரத்துவம் பெற்றதும் நிம்மதிஅடைந்த சக்ரபாணி, ராஜ்யத்தை சிந்துவிடம் ஒப்புவித்துவிட்டு கானகம் சென்று துறவறம் மேற்கொள்கிறான். அரச பதவி ஏற்றதும் சிந்து திக்விஜயம் தொடங்குகிறான். வெற்றிமேல் வெற்றி கிட்டி பூவுலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவருகிறான். ஒரு காலகட்டத்தில் செருக்கு தலைக்கேற தேவர் உலகத்தின் மீதும் படை செலுத்தி இந்திரனை வெல்லுகிறான். தேவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். விஷ்ணுவும் சிந்துவை வெல்ல முடியாமல் அவன் ஆஞ்ஞைப்படி கண்டகி நகரிலேயே தங்கி உறையச் சம்மதிக்கிறார். அனைத்து உலகையும் வென்றதும் சிந்துவின் பார்வை கைலாசத்தின் மேல் விழுகிறது. துணுக்குற்ற தேவகணங்கள் தங்களது அதிபதி கஜமுகனை அணுகுகின்றனர். அவர்களின் பதற்றத்தை உணர்ந்த கணபதி, சிந்துவின் ஆணவத்தைத் தடுக்க யாம் பார்வதியின் வயிற்றில் புத்திரனாக அவதாரம் எடுக்க உள்ளோம்! தர்மத்தை நிலைநாட்ட கிருதயுகத்தில் விநாயகராக, திரேதாயுகத்தில் மயூரேஷ்வராக, த்வாபர் யுகத்தில் கஜானனாக, கலியுகத்தில் தூம்ரகேதுவாக எம் அவதார நாமங்கள் நிலைக்கும்! எனவும் அருளுகிறார். சிந்துவின் அட்டகாசம் தாங்க முடியாமல் சிவபெருமானும் பார்வதி சகிதம் கைலாசத்தை விட்டு விட்டு மந்தார மலைக்குச் சென்று தங்குகிறார். பார்வதி நீண்டகாலம் கணபதியின் ஏகாக்ஷர மந்திரத்தை ஜெபித்து விரதமிருக்கிறாள். தேவியின் முன் தோன்றிய கணபதி, தங்கள் மூலமாகவே நான் மறுபடியும் அவதாரம் எடுப்பேன் ! என உறுதி கூறுகிறார்.

சதுர்த்தி அன்று மண் கலவையில் கஜானனது உருவத்தை தன் கையால் உருவாக்கி, பார்வதி பூஜை செய்கிறாள். பூஜையின் இறுதியில் அம்மன் விக்ரகம் உயிர்பெற்று எழுகிறது. மாதா! ராப் பகலாக எந்த நாமத்தைத் தாங்கள் ஜெபித்து விரதமிருந்தீர்களோ அதே கஜானனன் தங்கள் முன் உருப்பெற்றுள்ளேன்! சிந்துவின் வதத்திற்காகவே தங்கள் மூலமாக அவதாரம் எடுத்திருக்கிறேன் எனக் கூறியபடி பார்வதியை வணங்குகிறான். மண்கலவையில் கையால் பிடித்து பூஜைக்கு விநாயகர் விக்ரகத்தை நிர்மாணிப்பது என்பது இன்றும் சிறப்பாகக் கருதப்படுகிறது. ஈஸ்வரன் அப்பாலகனுக்கு கணேஷ் என்ற நாமத்தை முதலில் இடுகிறார். காரிய சித்தி அடைய கணேசனை முதலில் நினைத்து வணங்கிவிட்டுத் தொடங்கினாலே போதுமானது என்று அந்த நாமத்துடன் ஆசிர்வாதத்தையும் வழங்கிறார். பிரம்மனும் கணேஷனுக்கு பாஷ், அங்குசம், பரசு, கமல் ஆகிய ஆயுதங்களை வழங்குகிறார். கணேஷனுக்கு பத்து வயது நிரம்பியது. சிந்துவின் தொல்லைகள் மந்தார மலை, மேரு பர்வதத்திலும் தொடருகிறது. தக்க தருணம் வரும்வரை காத்திருக்க முடிவு செய்த ஈஸ்வரன் பார்வதி, கணேஷ் சகிதம் பாதுகாப்பான தலம் நோக்கி நகருகிறார். இடையில் கமலாசுரன் என்ற அசுரனை கணேசன் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஈசனின் அனுமதி பெற்று மயில் மீதேறி கணேசன் போரிடச் செல்கிறார். பாலகன் கணேசனின் முதல் யுத்தம்! கோர யுத்தத்தில் கணேசர் அவ்வளவு சுலபத்தில் கமலாசுரனை வீழ்த்த முடியவில்லை. காரணம் அசுரனின் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் அநேக கமலாசுரர்கள் உருவாகிக் கொண்டிருந்தனர். கணேசர் சித்தி புத்தியை அக்கணத்தில் நினைத்து வரவழைக்கிறார். அசுரனின் சிந்திய ரத்தம் கீழே விழுந்து மேலும் அசுரர்கள் வெளிப்படுவதை சித்தி, புத்திகள் தடுக்கின்றனர். அப்போது திரிசூலத்தை செலுத்தி கணேசர் கமலாசுரனை வதம் செய்கிறார். இருகூறாய் கமலாசுரன் விழுந்த இடத்தில் பிரம்மன் ஒரு ஆலயத்தை நிறுவுகிறார். விஸ்வகர்மா அதைச் சுற்றி ஒரு நகரை ஸ்தாபனம் செய்கிறார். அவ்விடமே மோர் கிராமம். கணேசர் தனது பதினைந்தாவது வயதில், ஈசன், பார்வதி ஆசியுடன் கண்டகி நகரை ஆக்ரமிக்கிறார். தேவர்களை விடுவிக்க நியதிப்படி நந்தி தேவர் முதலில் தூதராக அனுப்பப்படுகிறார். சிந்து மறுப்பதுடன் நந்திதேவரை அவமதித்தும் அனுப்புகிறான். யுத்தம் தவிர்க்க இயலாததாகிறது. போரில் விநாயகருக்கு நந்தி, வீரபத்திரர், புஷ்யதந்த், கார்த்திகேயன் ஆகியோர் துணை புரிந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. யுத்தத்தில் சிந்து தோல்வி எய்துகிறான். சிந்துவின் புத்திரர்கள் மாய்கின்றனர். ஆனால், சிந்து நகரைவிட்டு ஓடிவிடுகிறான். சக்ரபாணி புதல்வனைச் சந்தித்து கணேசரிடம் சரணடைய இறைஞ்சுகிறார். புத்திரசோகமோ சிந்துவை வாட்டுகிறது. மறுபடியும் போரிடவே சிந்து துணிகிறான். பிரம்மன் தந்த பரசுவைச் செலுத்தி சிந்துவின் நாபியில் இருந்த அமிர்தத்தை கணேசர் வெளியேற்றுகிறார். பின்னர் சிந்துவை அழிப்பது சுலபமாகிறது. மயில் வாகனத்தில் ஏறி சிந்துவை வதம் செய்ததால் கணேசர் மோரேஷ்வர் என்ற நாமத்தை அடைகிறார்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மோரேஷ்வர் இடஞ்சுழிப் பிள்ளையராக அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar