Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு துல்ஜா பவானி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு துல்ஜா பவானி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: துல்ஜா பவானி அம்மன்
  அம்மன்/தாயார்: துல்ஜா பவானி அம்மன்
  தீர்த்தம்: கல்லோல தீர்த்தம், கோமுக் தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : நான்கு கால பூஜை
  ஊர்: துல்ஜாபூர்
  மாவட்டம்: உஸ்மானாபாத்
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  சாரதா, சாகம்பரி நவராத்திரி நாட்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  51 சக்தி பீடத்தில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு துல்ஜா பவானி அம்மன் திருக்கோயில், துல்ஜாபூர், உஸ்மானாபாத் மாவட்டம், மகாராஷ்டிரா-413601  
   
போன்:
   
  +91 98228 06772 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில், பன்னிரெண்டாவது நூற்றாண்டில், ஹேமத்பந்தி கட்டட அமைப்பில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. உயர்ந்த பிராகாரங்களோடு கல்லால் ஆன இக்கோயில், ஒரு கோட்டை போன்று தோற்றம் அளிக்கிறது. கோயிலின் சிம்ம துவாரம், சர்தார் நிம்பால்கர் துவாரம் என்றழைக்கப்படுகிறது. மற்ற இரண்டு வாயில்களும் சிவாஜி மகாராஜாவின் தாய், தந்தையர் பெயரால், ராஜா சாஹாஜி துவார் மற்றும் ராஜமாதா ஜிஜாபாய் துவார் என்றழைக்கப்படுகின்றன. கோயிலுக்குள் நுழைய, சிம்மத் துவாரத்திலிருந்து பதினைந்து அடி தூரம் வரை கீழிறங்கித்தான் கோயிலின் முதல் பிராகாரத்தை அடைய முடியும். அங்கு பெரிய நீர் குண்டமான, கல்லோல தீர்த்தம் காணப்படுகிறது. இக்கோயிலை நிர்மாணித்த விஸ்வகர்மா விடைபெற்ற பின், இந்த தீர்த்த குண்டத்தில் நீர் நிரம்புவதற்காக பிரம்மதேவர், பூமியின் மேலும் கீழும் பாயும் அனைத்துப் புண்ணிய நதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகளனைத்தும் அவரது அழைப்பை ஏற்று வந்தன. இமயமலை. விந்திய, சஹ்யாத்ரி, திரிகூட மலைகளிலிருந்தும் பல தீர்த்தங்கள் ஒரே சமயத்தில் பெருக்கெடுத்து வந்து இக்குண்டத்தில் பாய, அத்தீர்த்தம் கோலாகல சப்தத்தால் நிரம்பியது. இதனால் பிரம்மதேவர் அந்தக் குண்டத்துக்கு கல்லோல தீர்த்தம் என்று பெயரிட்டார். மிகவும் பவித்ரமான இக்கிணற்று நீர் ஸ்நானம் பாவங்களைப் போக்கும் மாசி மாதத்தில் இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வது மிகவும் உயர்ந்ததாக துல்ஜா மாகாத்மியம் தெரிவிக்கிறது. இது ஒரு செல்வகக் கிணறு. நாற்பதுக்கு இருபது அடி அளவில் காணப்படும் இத்தீர்த்தம், 14-ம் நூற்றாண்டுக் கட்டடமாகக் கருதப்படுகிறது. இடதுபுறம் உள்ள சித்தி விநாயகர் சன்னிதியின் பெரிய அகல் விளக்கில் பக்தர்கள் எண்ணெய் சமர்ப்பிக்கின்றனர். இங்கிருந்து கீழிறங்கிச் சென்றால் கோயிலின் அடுத்த பிராகாரத்தை அடையலாம். இங்கு பல சன்னிதிகளும் தீர்த்த குண்டங்களும் காணப்படுகின்றன. அடுத்து கோமுக் தீர்த்தம், ஆறடி உயர கோமுக் எனப்படும். கல் பசுவின் முகத்திலிருந்து நீர் வழிகிறது. படிகளில் இறங்கி பக்தர்கள் இந்த குண்டத்திலிருந்து நீரை தலையில் தெளித்துக்கொண்டு அடுத்துள்ள சிவ லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்த தீர்த்தத்துக்கும் கரீப்நாத் பாபாவுக்கும் தொடர்புடைய கதை ஒன்று வழக்கில் உள்ளது. நாதசம்பிரதாயத்தைச் சேர்ந்த சாதுவான கரீப்நாத், கோமுக் தீர்த்தம் கங்கையே என்ற துல்ஜாபூர் மக்களின் நம்பிக்கையை ஏற்காமல், நிஜ கங்கையில் ஸ்நானம் செய்ய பயணம் மேற்கொண்டார். தேவியும் அவர் முன் தோன்றி அதையே உரைக்க, அவர் அதை நம்பவில்லை. இறுதியில், தேவியின் அறிவுரைப்படி ஒரு கம்பும் எலுமிச்சம் பழமும் எடுத்துச் சென்று கங்கையில் விட்டு வர ஒப்புக்கொண்டார். நீண்ட காலம் நடந்து சென்று கங்கையில் நீராடி சடங்குகளைச் செய்து முடித்து பின், தேவியின் ஆஞ்ஞைப்படி ஒரு கம்பையும் பழத்தையும் கங்கையில் வீசி எறிந்து விட்டு நம்பிக்கையின்றியே துல்ஜாபூர் திரும்பினார். வழக்கப்படி கோமுக் தீர்த்தத்தில் குளிக்க இறங்கியபோது, அதில் நாம் கங்கையில் எறிந்த கம்பும் எலுமிச்சம் பழமும் வந்து விழுவதைக் கண்டு வியந்தார். இந்த நிகழ்வின் மூலம் அவருக்கு அத்தீர்த்தம் கங்கையே என்ற நம்பிக்கை பிறந்தது. இவ்வாறு ஒருவருக்குத் தமது வார்த்தையை நிரூபிக்க வேண்டியது அவசியமா? என்று தேவி வெகுண்டாள். அவர் எவ்வளவோ மன்றாடியும் அவருக்கு கோயில் பிரவேசம் மறுக்கப்பட்டது. ஆனால், அவரின் தீவிர வேண்டுதலின்படி, ஆண்டில் ஒருநாள் மட்டுமே கோயிலுக்குள் வந்து தம்மை தரிசிக்கலாம் என்று அனுமதியளித்தாள் பவானி. இன்றளவும் கரீப்நாத் பாபா மடத்தின் மூத்த தலைவர் ஏழாம் மாதமான அஸ்வின மாதத்தின் இறுதி நாளான ஒரே ஒரு நாள் மட்டுமே அம்மனை தரிசித்துச் செல்கிறார். உள்ளே சென்றவுடன், முதலில் தரிசிப்பது பவானி சங்கரர்.
 
     
 
பிரார்த்தனை
    
  பெண்கள் தங்கள் கோரிக்கை எதுவானாலும் அம்மனிடம் முறையிடுகிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரசித்தி பெற்ற மஞ்சள் புள்ளியிட்ட பச்சை நிற வளையல்களைப் பெண்கள் விரும்பி வாங்கி அம்மனுக்குச் சமர்ப்பிக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயில் வெளிப்பிராகாரத்தில் ஆதிமாதா மாதங்கிதேவி, ஸ்ரீதத்த மந்திர், மார்கண்டேய ரிஷி, சிந்தாமணி கணேஷ், அன்னபூர்ணா தேவி ஆகியோருக்கு சன்னிதிகள் உண்டு. சிந்தாமணி கணேஷ் சன்னிதியில் ஒரு உருண்டையான கல் உள்ளது. இது கோரிக்கைகளைத் தீர்க்கும் சிந்தாமணிக் கல் என்று கூறப்படுகிறது. மனதில் ஒரு விருப்பத்தை எண்ணி இக்கல்லின் மீது கை வைத்தால், அது வலப்புறம் திரும்பினால் விருப்பம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. அம்பாளின் அருகில் மார்கண்டேய ரிஷி துர்கா சப்தசதி ஸ்லோகங்களைப் படிக்கிறார். அநுபூதி தேவி அம்மனின் இடதுபுறம் தலை கீழாக நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாளின் எதிரில் வெள்ளை பளிங்கினால் ஆன சிம்ம வாகனம் காணப்படுகிறது. மூலவர் விக்ரஹம் ஒரு சலமூர்த்தி.

இது ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே கருவறையை விட்டு நகர்த்தப்பட்டு அம்மனின் நீண்ட உறக்க காலங்களில் சன்னிதியை அடுத்துள்ள பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கருவறைக்கு வலப்புறம் அம்மனின் பள்ளியறை உள்ளது. மற்ற கோயில்களை போலில்லாமல் துல்ஜா பவானி ஆண்டின் சில நாட்கள் மட்டுமே உறக்கத்தில் சயனித்திருக்கிறாள். இந்த சந்தர்ப்பங்கள் நீண்டவையோ அல்லது அடிக்கடி நிகழ்பவையோ அல்ல. கோயிலில் உற்சவ விக்ரகங்கள் கிடையாது. மூலவர் விக்ரகமே பள்ளியறையில் துயில் கொள்ளச் செய்யப்படுகிறது. முதல்முறை துயில் கொள்வது ஏழு நாட்களுக்கு. பாத்ரபத (புரட்டாசி) மாதத்தில், இரண்டாவது பட்சத்தின் எட்டாம் நாள் முதல், அம்மாத இறுதிவரை, அடுத்ததாக, அஸ்வின (ஐப்பசி) மாதத்தின் முதல் பட்சத்தில் பதினோராவது நாள் முதல், அம்மாத பவுர்ணமி வரை நான்கு நாட்கள் மட்டுமே. மூன்றாவது முறை புஷ்ய (தை) மாதத்தின் முதல் நாள் முதல், எட்டாம் நாள் முடிய ஏழு நாட்கள் அம்பாள் துயில் கொள்கிறாள். இந்த பதினெட்டு நாட்கள் தேவி தொடர்ந்து நீண்ட சயனத்தில் ஆழ்கிறாள். மற்ற நாட்களில் இரவும் பகலும் உறக்கமில்லாத நீண்ட விழிப்பில் இருக்கிறாள். அலங்கரிக்கப்பட்ட அழகிய மஞ்சத்தின் மீது அம்மன் ஓய்வு பெற சாய்வாக துயில் கொள்ள வைக்கப்படுகிறாள்.

அந்தக் குறிப்பிட்ட காலங்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் நிராகரிக்கப்படுவதில்லை. எப்போதும் போல் பள்ளியறையிலேயே தரிசனமளிக்கிறாள். அதற்குக் காரணம் துல்ஜா பவானி கோயில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் சில மடாதிபதிகளுள் ரணச்சோட பாபாவும் ஒருவர். இவர் சிவனின் அம்சமாகவே கருதப்பட்டவர். இன்றைக்கும் தேவி இவருடைய மடத்துக்குச் சென்று இவருடன் தாயம் விளையாடுவதாகவும் பூஜை சமயத்தில் மட்டுமே கோயிலுக்குத் திரும்புவதாகவும் ஐதீகம். பூஜை சமயத்தை அம்மனுக்கு நினைவூட்டுவதற்காக கோயில் அறிவிப்பாளர் ஒருவர் மடத்தின் திசையை நோக்கி, அர்ச்சகர் வந்து விட்டதாகவும் விரைந்து பூஜைக்கு வரும்படியும் தேவியை உத்தேசித்து உரக்க அழைப்பது சம்பிரதாயமாக தினமும் நிகழும் சடங்கு. இது எதற்காக ஏற்படுத்தப்பட்டதென்றால். ஒரு முறைதேவி இரண்டு நாட்களாகியும் மடத்தில் பாபாவோடு தாயம் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். கோயில் பூஜைக்கோ நைவேத்யம் ஏற்கவோ வராமலே இருந்து விட்டாள். அது குறித்து, தேவியிடம் வினவியபோது, அர்ச்சகர் தம்மை பூஜை நேரத்துக்கு அழைக்காதது அவர் தவறு என்று கூறினாள். ஆகவே, பூஜை நேரத்துக்கு தினமும் தம்மை அழைக்கும்படி அறிவுறுத்தினாளாம். ஆனால், பூஜைகள் நிகழ்த்தப்படுவதில்லை. சாரதா, சாகம்பரி நவராத்திரி நாட்களில் இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி துல்ஜாபூர் பவானியை அடிக்கடி தரிசிப்பது வழக்கம். பவானி வாள் எனப்படும் வெற்றி வாளை பவானி அம்மன் சிவாஜிக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது. ஸ்காந்த புராணத்தில் துல்ஜா பவானியின் அவதாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. கிருத யுகத்தில் கர்தம முனிவரின் மனைவி அநுபூதி, கணவனை இழந்தபோது தானும் உடன் மரணமடைய முயலுகையில், சிறு குழந்தையை தவிக்கவிட்டு மரணத்தைத் தழுவ வேண்டாம் என்றுரைத்த அசரீரி வார்த்தையை செவிமடுத்தாள். தமது குழந்தையைக் காக்கும்படி பவானி அம்மனை வேண்டிய அநுபூதி, பாலகூட்மலைத்தொடரில் யமுனாச்சல மலைப் பிரதேசத்தில் முக்தியை வேண்டி, தலைகீழாக நின்று கடும் தவத்தில் ஈடுபட்டாள். குகுர் என்னும் அரக்கன் அநுபூதியின் தவத்தைக் கலைத்து அவளை அவமானப்படுத்த முயன்றான்.

அநுபூதி, பகவதி தேவியை பிரார்த்திக்க, அம்மன் பிரத்யக்ஷமானாள். அசுரன் மகிஷமாக மாறி அம்பாளை எதிர்த்தான். பவானி அம்மன் பல்வேறு ஆயுதங்கள் கொண்டு குகுர் அரக்கனை அழித்தாள். அத்தலத்திலேயே நிலைபெற்று அருள்புரியும்படி வேண்டிய அநுபூதியின் பிரார்த்தனையை ஏற்று, துல்ஜாபூரில் கோயில் கொண்டாள் பவானி அம்மன். பக்தர்களின் கோரிக்கைகளை துரித கதியில் நிறைவேற்றுபவள் ஆதலால், துரித, த்வரித, துலஜா, துல்ஜா என்ற பெயர்களால் அம்பாள் அழைக்கப்படுகிறாள். கருவறையில் துல்ஜா பவானி அம்மன் சாந்த மூர்த்தியாக தரிசனமளிக்கிறாள். கருப்பு நிற கண்டகி கல்லாலான சுயம்பு வடிவம் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்டு, எட்டு திருக்கரங்களிலும் பல வேறு ஆயுதங்கள் தரித்து கொலுவீற்றிருக்கிறாள். அம்மனின் வலது கீழ் திருக்கரம் பற்றிய திரிசூலம் அசுரனின் மார்பைத் துளைத்துள்ளது. அடுத்தடுத்த கரங்களில், வாள், அம்பு, சக்கரம், சங்கு, வில் ஆகியவை தாங்கி காட்சியளிக்கிறாள்.

இடது மூன்றாவது திருக்கரம் அசுரனின் வெட்டுண்ட தலையைப் பிடித்திருக்க, அம்மனின் வலது பாதம் அசுரனின் உடல் மேல் அழுந்த, இடதுபாதம் பூமி வைத்து, சிம்ம வாகனத்தில் பவானி அம்மன் காட்சி தருகிறாள். அம்பாளின் சிரசை அலங்கரிக்கும் கீரிடத்தில் சிவ லிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது. வலப்புறம் சந்திரன், இடப்புறம் சூரியன் விளங்க, காது தோடுகள், குண்டலங்கள், கழுத்து ஆபரணங்கள் என அம்மனின் சிலை கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. துல்ஜா பவானி என அழைக்கப்படும் அம்மன், மகாராஷ்டிர அரச வம்சத்தினருக்கும், பல குடும்பங்களுக்கும் குலதெய்வமாக விளங்கி வருகிறாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 51 சக்தி பீடத்தில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar