Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சஹஸ்ராக்ஷி ராஜ ராஜேஸ்வரி தேவி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சஹஸ்ராக்ஷி ராஜ ராஜேஸ்வரி தேவி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சஹஸ்ராக்ஷி ராஜ ராஜேஸ்வரி தேவி
  உற்சவர்: சஹஸ்ராக்ஷி ராஜ ராஜேஸ்வரி தேவி
  அம்மன்/தாயார்: ராஜ ராஜேஸ்வரி தேவி
  ஆகமம்/பூஜை : சாக்தம்
  ஊர்: அனகபள்ளி
  மாவட்டம்: விசாகப்பட்டினம்
  மாநிலம்: ஆந்திர பிரதேசம்
 
பாடியவர்கள்:
     
  காலை 06:30 - இரவு 07.00
 
     
 திருவிழா:
     
  நவராத்திரிகள் - லலிதாம்பிகா, ஷ்யாமா, வாராஹி, கணாபதி, தசரா. ஆண்டில் 4 தடவை ஒன்பது நாள் விழா பின்வருமாறு நடைபெறும்: மாக மாதத்தில் ஷ்யாமா தேவி சித்திரை மாதத்தில் லலிதாம்பிகா ஆஷாட மாதத்தில் ஸ்ரீ வாராஹி தேவி பாத்ரபட மாதத்தில் ஸ்ரீ காரிய சித்த கணபதி அஷ்வியுஜ மாதத்தில் 15 நாள் (பிரதமையிலிருந்து பௌர்ணமி வரை) தசரா பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம்: இந்த மாதத்தின் 4 திங்கட் கிழமைகள் மற்றும் பௌர்ணமியில், தக்ஷவாடியின் தனித்துவம் மிக்க சிவ க்ஷேத்திரம் மற்றும் சிவாலயத்தில் அபிஷேகங்களும் ஹோமங்களும் நிகழும். அடியார்கள் தங்கள் கரங்களினாலேயே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய முடியும் என்பதே, இதன் சிறப்பம்சமாகும். மஹாசிவராத்திரி: ஏகாதச ருத்ர ஹோமம், ருத்ராபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம்  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 06:30 - இரவு 7.00 மணி வரை 
   
முகவரி:
   
  ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பீடம், தேவிபுரம், அம்முலபலெம் (B.P.O) வழியாக, அனகபள்ளி - 531001  
   
போன்:
   
  +91 94408 45333, 95532 55583 
    
 பொது தகவல்:
     
  ஸ்ரீ வித்யை கற்கைநெறி

ஸ்ரீ வித்யை என்றால் புனிதமான கற்றல் என்பது பொருள். ஸ்ரீ வித்யையை ஒவ்வொரு நபருக்கும் பெறக்கூடியதாக ஆக்க வேண்டுமென பூஜ்ய குருஜி ஸ்ரீ அமிர்தானந்த நாத சரஸ்வதி தீர்மானித்தார். ஜாதி, பால்நிலை, தேசம், சமய நம்பிக்கைகள் ஆகியவற்றைப் புறந்தள்ளி, 1977 - 78 ஆண்டிலிருந்து குருஜி ஸ்ரீ வித்யையின் ஞானத்தை, அனைவருக்கும் வழங்க ஆரம்பித்தார்.

இந்த கற்கைச் செயன்முறைகள் ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் தேவிபுரத்தில் வதிவிடக் கற்கை நெறிகள் நடத்தப்படுகின்றன. ஓர் ஒழுங்குடன் முன்னெடுக்கப்படும் இவை, ஒவ்வொரு படிநிலைகளைக் கொண்டுள்ளன.
 
அடிப்படைக் கற்கைநெறியானது ஸ்ரீ வித்யையின் அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியது. நியாசம், உபசாரம்,  ஷட் சக்கர தியானம், கலாவாகனம், கணபதி தர்ப்பணம் மற்றும் கணபதி யந்திர பூஜை ஆகியன இந்த அடிப்படைக் கற்கைநெறியில் அடங்குகின்றன.

நடுத்தர நிலைக் கற்கை நெறியில், ஷ்யாமா மற்றும் வாராஹி ஆகிய தேவியர்களின் யந்திர பூஜைகள், மற்றும் லலிதா நவாவர/ன ப்பூஜையின் அடிப்படை அறிமுகம் ஆகியன உள்ளடங்குகின்றன. லகு ஹோம விதி மற்றும் ஸ்ரீ யந்திரத்தை வரையும் முறை ஆகியனவும் கற்பிக்கப்படுகின்றன. பௌர்ணமியன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ  சஹஸ்ராக்ஷி ராஜ ராஜேஸ்வரி தேவிக்கு புரியப்படும் சக்தி மிக்க பஞ்சாமிர்த அபிஷேகத்தை தரிசிப்பதும் அதில் பங்கு கொள்வதும் ஒரு தனிச்சிறப்புடைய அனுபவமாகும். இந்த அனுபவத்தை இந்த கற்கைநெறியின் மாணவர்கள் பெற வேண்டியே, இந்தக் கற்கைநெறியானது பௌர்ணமியை ஒட்டி, ஒழுங்கு செய்யப்படுகின்றது.

மாணவர்களின் பின்புலத்தின் அடிப்படையில், அவர்களுக்கானது அடிப்படைக் கற்கை நெறி மட்டும் எனவோ அல்லது, அடிப்படைக் கற்கைநெறியுடன்  இணைந்த நடுத்தர கற்கைநெறி எனவோ தீர்மானிக்கப்படும்.

உயர்நிலைக் கற்கைநெறிகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். கற்கைநெறியின் அடிப்படை மற்றும் நடுத்தர மட்ட நிலைகளுக்கான சாதனா பாகத்தை பூர்த்தி செய்த சாதகர்களுக்கு மட்டுமே அந்த உயர்நிலைக் கற்கைநெறிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

கலாவாகனம்:

கலா என்றால் இயற்கையின் பகுதி; ஆவாகனம் என்றால் அழைப்பு. இது ஒரு புனிதம் மிக்க சடங்காகும். தொடுகை மூலம் அல்லது விழிப்புணர்வு மூலம் அன்னையாம் இயற்கையின் சக்திகளை ஒருவர் தமக்குள் இறக்கிக் கொள்ளும் வல்லமையை அது தருகின்றது. பல நூற்றாண்டுகளாக இரகசியமாக பேணப்பட்டு வந்த ஸ்ரீ சக்கர பூஜையின் சக்திமிக்க நன்மைகளை இந்த கலாவாகனம் மூலம் பெறலாம்.

கலாவாகனம் புரிவதன் ஊடாக, உடற்பாகங்களை மந்திர உச்சரிப்புடன் தொடுவதனூடாக தெய்வீகச் சக்திகளை உடலுக்குள் பதிக்க முடியும். மனித உடலில் உள்ள 51 சக்தி கேந்திரங்களையும், தெவீகச் சக்தி பெறுவதற்காய் செயற்பட வைக்கின்றது கலாவாகனம். இதனைத் தொடர்ந்து புனித நீராடல் மற்றும் சாதகரை இறைசக்தியாக கண்டு தொழுது புரியப்படும் பூஜை ஆகியன நிகழும்.

அள்ள அள்ளக் குறையாத இயற்கையின் சக்தியுடன் தனி மனிதர் ஒருவரின் சக்தியை கலாவாகனம் இணைக்கின்றது. இந்தச் செயற்பாடு பொதுவாக தனி மனிதர் ஒருவருக்கு சாத்தியமற்றதாக கருதப்பட்ட போதும், உலகத்தின் ஆதரவுடன் கலாவாகனம் அதனைச் சாத்தியமாக்குகின்றது. இந்த உலகமானது ஆறு பண்புகளினால் ஆனது: திண்மம், திரவம், பிளாஸ்மா, காற்று, வெளி மற்றும் காலம் ஆகியனவே அந்த ஆறு பண்புகளுமாகும். அவை அடங்காத மூர்க்கமான சக்திகளைக் கொண்டவை. அவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் போது அருள்கின்ற தன்மை உடையனவாகின்றன. யோகத்தில் அறியப்பட்டவாறு, அவை மனித உடலில் ஆறு சக்கரங்களில் அமைந்திருக்கின்றன. அன்னை இயற்கையின் அனைத்துச் சக்திகளையும் உள் அழைத்த பின்னர், சாதகரானவர் அன்னையின் சின்னமாகவே வழிபடப்படுவார். இந்த நிலையில் சடங்கு முற்றுப் பெறுகின்றது.

கலாவாகனம் ஒரு வலுவூட்டற் சடங்கு ஆகும். உலகத்தாயிடமிருந்து ஞானத்தைப் பெற்ற குருஜி ஸ்ரீ அமிர்தானந்த நாத சரஸ்வதியினால், கற்பிக்கப்பட்ட வண்ணமே, இந்தச் சடங்கு நடத்தப்படுகின்றமை முக்கியமானதாகும்.
 
     
 
 தலபெருமை:
     
  ஸ்ரீ ஜோதி:

ஸ்ரீ ஜோதியினை ஒரு வலுவூட்டற் சடங்காக குருஜி வடிவமைத்தார். ஸ்ரீ ஜோதி என்றால் ஒளியின் செல்வம் என்று பொருள். இது சாதகர்கள் ஒரு குழுவாக இணைந்து, ஸ்ரீ சக்கரத்தை நோக்கிச் செய்யப்படும் ஒரு சடங்காகும். இதனைப் புரிவோருக்கு அளவற்ற நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த வழிபாட்டினைப் புரிவதன் மூலம் ஒருவர் தனது வாழ்வினை ஆடல், பாடலுடன் மகிழ்வாக அனுபவித்து வாழ்வதற்கான இயலுமையை பெறுகின்றார்.

பின்வருவன ஸ்ரீ ஜோதி குறித்த குருஜியின் வார்த்தைகள்:

“தனிநிலையான “நான்” என்பதிலிருந்து, கூட்டுநிலையான “நாம்” என்பதற்கு நாம் நகர வேண்டும்.

ஒரு பொது இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஓர் அணியாக இணைந்து தொழிற்பட வேண்டும். அந்த பொது இலக்கானது எம்மில் ஒவ்வொருவரையும் வலுப்படுத்துவதோடு அணியையும் வலுப்படுத்தும். இந்த இலக்கினை அடைவதற்காக, எமது சொந்த வீடுகளுக்கு அருகில் ஓர் எளிமையான அணி திரட்டும் நட்பான நிகழ்வினை நடத்த முடியும்.

நம் ஒவ்வொருவருக்குமிடையிலான தேவையற்ற இடைவெளிகளை குறைப்பதன் மூலம், அன்பு மற்றும் ஒளி ஆகியவற்றின் வானவில் நிறங்களாக நாம் ஒளிர முடியும். காலத்தின் பரீட்சையாக நின்றதும் ஸ்ரீ வித்யை என்று அழைக்கப்பட்டதுமான ஒரு தொல்பழங்கால ஞானத்திலிருந்து நான் எளிமைப்படுத்தப்பட்ட வழிபாட்டு முறையை ஆக்கினேன். எமக்கு நாமே கொடுத்துக் கொள்ளக் கூடிய மிகச்சிறந்த பரிசாக அது திகழ்கின்றது.  ஒரு ஸ்ரீ சக்கரத்தை வரைவதற்கு ஒரு மணிநேரமே ஆகும்.  அதனை அலங்கரிப்பதற்கு ஒரு மணிநேரமே ஆகும். அந்த வழிபாட்டினை நிகழ்த்துவதற்கு ஒரு மணிநேரமே ஆகும். ஒரு மணி நேரமே அந்தக் கொண்டாட்டத்திற்கு போதுமானது. இது ஒரு நாள் பொழுதிலேயே கற்றுக் கொள்ளக்கூடியது”
பொதுவான தகவல்கள்:

தத்தாத்ரேயர் சந்நிதி:

ஸ்ரீ வித்யை சம்பிரதாயத்தின் குரு ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆவார்.

தேவிபுரம் ஆலயத்தின் உள்ளே நுழையும் போதே, ஸ்ரீ குரு தத்தாத்ரேயரின் அருள் நிறை மூர்த்தத்தினை தரிசிக்க முடியும். அங்கு நுழையும் அனைவரையும் அவர் ஆசீர்வதிக்கின்றார்.

மும்மூர்த்திகளான  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய தெய்வங்களின் ஒன்றிணைந்த வடிவமே ஸ்ரீ குரு தத்தாத்ரேயர் ஆவார். அவர் தனது மாணாக்கர்களுக்கு வழிகாட்டினார். ஸ்ரீ குரு தத்தாத்ரேயரின் மாணாக்கரும் மகா விஷ்ணுவின் அவதாரமுமான பரசுராமர் தத்தாத்ரேயரின் வழிகாட்டல்களை “கல்ப சூத்ரம்” ஆக தொகுத்தளித்தார். ஸ்ரீ வித்யா உபாசனையை பரசுராம கல்ப சூத்ரம் 5 பாகங்களாக பகுத்துள்ளது. அவை தேவிபுரம் ஆலயத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

சிவாலயம்:
தேவிபுர வளாகத்தில், குன்று ஒன்றின் மீது சிவாலயம் அமையப்பெற்றுள்ளது. அங்கே க்ஷேத்ர பாலகராக காத்து அருள் புரியும் ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரரிடமும் ஆனந்த பைரவ லிங்கத்திடமும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

இந்த சிவாலயம் குறித்து குருஜி தனது அனுபவங்களை எழுத்தில் பதித்துள்ளார். அவை இங்கு நினைவு கூரத் தக்கன:

”கேள்” என்று காமாக்யா சொன்னாள். “இங்கு நான் ஆனந்த பைரவருடன் உறைகின்றேன். நான் எந்த ஆனந்தத்துடன் இங்கு உள்ளேனோ, அதே ஆனந்தத்தினை, பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்வேன். இந்த ஸ்தலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாகங்களுடன், கொண்டாட்டங்களும் ஆனந்தப் பொழிவும் நிகழ்ந்தன. வேத கோஷங்களுடன் யாகங்களில் பலவித ஆகுதிகள் வழங்கப்பட்டன. ”

இந்த சிவாலயத்தில் பக்தர்கள் தம் சொந்தக் கரங்களினாலேயே அபிஷேகங்களைச் செய்ய முடியும்.

தக்ஷாவதி
தக்ஷாவதி என்பது 1365 சிவலிங்கங்களுடன் கூடிய தனித்துவம் மிக்க கட்டமைப்பாகும். இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் தங்கள் கைகளால் சிவபெருமானை வழிபட முடியும். சதுரக் கட்டமைப்பில் உள்ள ஆயிரம் சிவலிங்கங்களின் மத்தியில் 365 ஸ்படிக சிவலிங்கங்களை தரிசிப்பது அளப்பரிய பயன் அளிக்கும்.

இங்குள்ள மத்திய பாகத்தில் பஞ்சபூத லிங்கேஸ்வர ஸ்வாமி எழுந்தருளியுள்ளார். இவரது லிங்கத் திருமேனியில் 364 ஸ்படிக லிங்கங்கள் உள்ளதுடன் உச்சியிலும் ஒரு ஸ்படிக லிங்கம் உள்ளது. பஞ்சபூத லிங்கேஸ்வர ஸ்வாமிக்கு ஒரு தடவை செய்யும் ருத்ராபிஷேகமானது ஓராண்டின் 365 நாட்களும் அபிஷேகம் செய்வதற்கு ஈடானது.

ஸ்ரீ கார்ய சித்தி கணபதி
கணபதியே ஜேஷ்டராஜர் - அதாவது முதல் வணக்கத்தைப் பெறுபவர். அவரே தடைகளை ஆக்குபவரும் அவற்றை பக்தர்களுக்காக அழிப்பவரும் ஆவார். கணபதியே வளர்ச்சியை அளிப்பவர்.

கார்ய சித்தி என்றால் திட்டங்கள் அல்லது செயல்களை முழுமையாக்கித் தருதல் என்று பொருள். தேவிபுரத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் கார்ய சித்தி கணபதி தன்னைத் தொழும் அடியவரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பவர்.

பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகிய ஐந்து பதார்த்தங்கங்களுடன் பழச்சாறு கலந்து கார்ய சித்தி கணபதிக்கு செய்யப்படும் பஞ்சாமிர்த அபிஷேகம் ஒவ்வொரு சதுர்த்தி திதியிலும் இடம்பெறும். இதன் போது மஹா கணபதி மந்திரமும் கணபதி அதர்வ சீர்ஷமும் உச்சாடனம் செய்யப்படும். தேவிபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கணேஷ நவராத்திரி கொண்டாடப்பட்டு வருவது தனிச்சிறப்பு மிக்க அம்சமாகும்.
 
காமாக்ய குரு பீடம்
அன்னை பராசக்தி யோனி வடிவில் வெளிப்பட்டுத் திகழும் ரூபமே ஸ்ரீ காமாக்யா தேவி. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா பீடத்தைப் போன்ற வடிவமே, இங்கு சுயம்பு நிலையில் காணப்படுகின்றது. 1983 ஆம் ஆண்டில் இந்த இடத்திலேயே குருஜி அமிர்தானந்தநாத சரஸ்வதியின் முன்னே ஸ்ரீ காமாக்யா தேவி தரிசனமளித்து, பல்வேறு தொல் வழிபாட்டுச் சடங்குகளூடாக அவருக்கு தீக்ஷை அளித்தாள்.

குருஜி பயிற்றுவித்தபடியும் அவருடைய விருப்பத்தின்படியும், தம்பதியினருக்கும் தனி நபர்களுக்கும் கலாவாகன வலுவூட்டற் சடங்குகள் இங்கு நடைபெறுகின்றன. உடலிலுள்ள சக்கரங்களை இந்த கலாவாகனம் முடுக்கி விடுகின்றது. அத்துடன், கலாவாகனத்திற்கு உள்ளாகுபவர் இறைநிலையில் அன்னையாகவே எண்ணி வழிபடப்படும் போது, ஒப்பற்ற ஓர் அனுபவத்தினை பெறுகின்றார்.

ஸ்ரீ மேரு நிலையம்:
தேவிபுரத்தினுடைய முதன்மை நிலையை ஸ்ரீ மேரு நிலையம் பெறுகின்றது. ஸ்ரீ சக்கரம் என்று அறியப்படுகின்றதான புனித இந்து யந்திரத்தின் முப்பரிமாண வெளிப்பாடாக அது அமைந்திருக்கின்றது. தொன்மை மிக்கதும் சிக்கல் தன்மை வாய்ந்ததுமான தாந்திரிக சாக்த வழிபாடான ஸ்ரீ வித்யை உபாசனையின் மையமாக ஸ்ரீ சக்கரம் விளங்குகின்றது.

108 அடியை நீள அகலங்களாகவும் 54 அடியை உயரமாகவும் கொண்டு அமைந்திருக்கும் இந்த ஸ்ரீ மேரு நிலையம், உலகில் நடந்து உட்செல்லக்கூடிய ஒரேயொரு ஸ்ரீ யந்திரமாகத் திகழ்கின்றது. இது, மூலவராக இருந்து அருள் பொழியும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சஹஸ்ராக்ஷி ராஜ ராஜேஸ்வரி தேவியின் உறைவிடமாக திகழ்கின்றது.

இந்த ஆலயத்தைக் கட்டுவதற்காக அவளே குருஜி ஸ்ரீ அமிர்தானந்த நாத சரஸ்வதியை தேர்ந்தெடுத்தாள். கட்கமாலா ஸ்தோத்ரத்தில் வழிபடப்படும் அனைத்து கட்கமாலா தேவிகளையும் பிரத்யட்ச ரூபமாக இந்த உலகில் காணக்கூடிய ஒரே இடமாக ஸ்ரீ மேரு நிலையம் காணப்படுகின்றது. அந்தத் தேவிகளை நெருங்கி வழிபடும் வழிபாட்டு முறையையே ஸ்ரீ சக்கர பூஜை அல்லது நவாவரண பூஜையும் காண்பிக்கின்றது.

தெய்வத் தாயின் விருப்பத்திற்கு அமையவே தேவிபுரம் அமையப்பெற்றது. அவளுடைய வழிபாட்டு இரகசியங்கள் குருஜிக்கு அவளாலேயே நேரடியாக வெளிப்படுத்தப்பட்டன. அவை எளிமைப்படுத்தப்பட்ட வடிவத்திலும், ஜாதி, சமய நிலைகள், பால்நிலை மற்றும் நம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் புறந்தள்ளியதாய் அனைவருக்குமானதாகவும் விளங்குகின்றன.
பிரார்த்தனைகள்

கார்ய சித்தி கணபதி
தேவிபுரத்தில் அமைந்துள்ள கார்ய சித்தி கணபதி சந்நிதியில் அடியவர்கள் ஒரு தேங்காயை உடைத்த பின்னர், 28 தடவை வலம் வருகின்றனர். இவ்வாறு சுற்றி வலம் வருகின்ற போது கணபதி மந்திரத்தை பக்தியுடன் உச்சரிக்கின்றனர். அதன் பின்னர் தங்களது விருப்பங்கள் நிறைவேற வேண்டும் எனக் கோரி பிரார்த்திக்கின்றனர். கேட்ட வரத்தை அளித்தருளும் தேவிபுரம் கணபதியை தரிசிக்க அவர்கள் மீண்டும் வரும் போது, முன்னர் வைத்த வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் தம் நன்றியை 108 தேங்காய்களுடனும் 108 வலம் வருகைகளுடனும் தெரிவிக்கின்றனர்.

அஷ்ட மாதர்கள்:
ஸ்ரீ யந்திரத்தின் நான்கு வாயில்களிலும் நான்கு மூலைகளிலும் எண்மராகிய அஷ்ட மாதர்கள் உறைகின்றனர். அவர்களுக்குச் செய்யப்படும் பூஜை மற்றும் அபிஷேகங்கள் அனைத்தும் பராசக்தியின் அருளைப் பெற்றுத் தரும்.

பிரம்மாவின் ஆத்ம சக்தியான ப்ராம்ஹியே சரஸ்வதியாவாள். அறிவிலும் இசையிலும் மற்றும் அனைத்து அம்சங்களிலும் அவளே ஆக்கத்திறனை வெளிப்படுத்துபவள். இதன்படி ஒருவரது வாழ்வினை மேம்படுத்தும் அனைத்து அம்சங்களிலும், எடுத்துக்காட்டாக கல்வி, கற்றல் மற்றும் ஆக்கத்திறன் போன்றவற்றில், ப்ராம்ஹியை வழிபடல் நன்மை பயக்கும்.

மாகேஸ்வரி தேவி, சிவபெருமானின் சக்தியாவாள். மகத் தத்துவத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவளும் அவளே. யாதொன்றும் உருவாகாத தன்மையில் அனைத்தும் உறைந்து சூக்ஷ்மமாய் இருக்கின்ற ஆதித்தன்மையின் முதல் மாற்ற நிலையே மஹத் ஆகும். வாணிபம், தொழில் முனைவு உள்ளிட்ட எந்த வழியினாலும் மேன்மையை வேண்டித் தொழுவோருக்கு அதனை அருள வல்லவள் இந்தத் தாய்.

கௌமாரி தேவி, முருகனின் ஆத்ம சக்தியாவாள். பிள்ளைப் பேற்றை வேண்டும் தம்பதியினருக்கு கௌமாரி வழிபாடு கை மேல் பலன் தரும். கௌமாரியை வழிபடுவதனூடாக கருவுறுதலுக்கு துணைசெய்யும் வகையில் உடல்நிலை உருவாகி, கருத்தரித்தலுக்கு உகந்த நிலைமைகள் ஏற்படும்.

வைஷ்ணவி தேவியே மஹா விஷ்ணுவின் ஆத்மசக்தியாக இருக்கின்றாள். அவளே மாயை ஆகவும் திகழ்கின்றாள். மாயை என்றால் ஹ்ரீம்காரா; இந்த உலகத்துடன் அது பிணைத்து வைக்கும். வாழ்வில் உறவுகளை மேம்படுத்த அவள் உதவுகின்றாள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலும் நண்பர்களுக்கு இடையிலும் அனைத்து வகையான தனிப்பட்ட உறவுகளுக்கு இடையிலும் வைஷ்ணவித் தாய் அருளினால் உறவு நெருக்கமாகும்.

அன்னை வாராஹி தேவியே, லலிதையின் அனைத்துப் படைகளுக்கும் சேனாதிபதியாக வீற்றிருக்கின்றாள். வாராஹி மனித உடலில் ஆக்ஞா சக்கரத்தில் உறைகின்றாள். வாராஹியின் சக்திகளை நன்மையான முறையில் பயன்படுத்தினால் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்த முடியும். அத்துடன், ஒரு மனிதரின் மனத்துள்ளே எழும் உள்ளக எதிரிகளான காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சர்யம் ஆகியவற்றை வாராஹி தனது கட்டுக்குள் கொண்டுவர வல்லவள். வினைத்திறனுடன் நோய்களைக் கட்டுப்படுத்தவும் ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வாராஹி வழிபாடு துணைசெய்யும்.

மாஹேந்த்ரி தேவியானவள் இந்திரனுடைய ஆத்ம சக்தியாவாள். இந்திரனே மழைக்கு அதிபதி. அவன் தனது மின்னலான வஜ்ரயுதத்தினால்  மேகங்களைச் சூல்கொள்ளச் செய்து, பூமியை வளமாக்கும் மழையை பொழிவிக்கின்றான். பயிர்களின் நலம், வெள்ளத்திலிருந்தும் இன்னபிற இயற்கைச்சீற்றங்களிலிருந்தும் காப்பு, மண் வளமாக வேண்டுமென வேண்டுதலும் நீர், மழை குறித்த வேண்டுதலும் மாஹேந்திரி வழிபாட்டின் வழியாக பலிக்கும்.

சாமுண்டா போர்த்தெய்வமாவாள். அவள் சண்டியின் மற்றுமொரு வடிவம்; “சாமுண்டா ஷவ வாஹன” எனப்படுவதற்கு அமைய, மயானங்களில் உறைபவளாகவும் பிணத்தையே வாகனமாக கொண்டவளாகவும் அவள் இருக்கின்றாள். உங்களுக்கு இழைக்கப்பட்ட எந்தவித கெட்ட நிலைகளை முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரவும், அந்த கெட்ட நிலைகளை வெளியகற்றவும் சாமுண்டா வழிபாடு உதவும்.

மஹாலக்ஷ்மித் தாயானவள் ஸ்ரீ நாராயணனின் செல்வமாவாள். அவளே பிரபஞ்ச விழிப்புணர்வு ஆவாள். அவள் இறையின் முடிவற்ற செல்வத்தின் பிரதிநிதியாவாள். அத்துடன் அனைத்து வகையான வறுமையையும் நீக்கியருள்வாள். இறையின் ஆன்மீகச் செல்வத்தை பெற்று உய்வதற்கு மஹாலக்ஷ்மியின் வழிபாடு இன்றியமையாதது.
 
     
  தல வரலாறு:
     
  “தந்தையே! எனக்காக வீடொன்றை அமையுங்கள்”

இந்த வார்த்தையை அன்னை ஆதி சக்தியானவள், பாலா திரிபுரசுந்தரி வடிவில் வந்து குருஜி அமிர்தானந்த நாத சரஸ்வதியிடம் கூறினாள்.

மும்பையில், TIFRல் அணு விஞ்ஞானியாக பணியாற்றிக் கொண்டிருந்த ஸ்ரீ அமிர்தானந்த சரஸ்வதி தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்து, ஸ்ரீ பாலாவின் சொற்படி இந்தக் கோயிலை அமைத்தார்.

தேவிபுரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலே ஸ்ரீ மேரு நிலையம் ஆகும்.

1983 ஆம் ஆண்டு குருஜியால் 16 நாட்களுக்கு தேவி யக்ஞம் நடத்தப்பட்டது. அதன் இறுதியில் புட்ரேவு குடும்பத்தின் சகோதரர்கள் குருஜியை அணுகி 3 ஏக்கர் பரப்புடைய காணியினை தமது நன்கொடையாக ஏற்குமாறு கோரினார்கள். அதனை ஏற்ற பின்னர், கோயிலை நிர்மாணப்பணியை ஆரம்பிப்பதற்கான அனுமதிக்குரிய குறிகாட்டலை, தெய்வீக வழிகாட்டலை எதிர்பார்த்து குருஜி காத்திருந்தார்.

கொடையளிக்கப்பட்ட காணிக்கு அருகில்,  குன்றம் ஒன்று இருந்தது. அங்கே தான் குருஜி தியானத்தில் ஈடுபட்டு வந்தார். அந்தக் குன்றின் ஒரு சரிவில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா பீடத்தினை ஒத்த உருவத்தை அவர் அவதானித்தார்.

ஒரு நாள் குருஜி அங்கு தியானத்திலிருக்கும் போது, ஓர் அனுபவத்தைப் பெற்றார். அவர் ஒரு பீடத்தில் படுத்திருப்பதாகவும் அவருடைய உடலிலிருந்து எழும் சுவாலைகளில் நான்கு பேர் ஹோமம் செய்வதாகவும் அவர் உணர்ந்தார். ஹோமத்தின் இறுதிக்கட்டமான பூர்ணாகுதியின் போது, அவருடைய இதயத்தின் பாரமான பொருளொன்று வைக்கபட்டதாக உணர்ந்தார். அதை எடுத்துப் பார்த்த போது, அது பஞ்சலோகத்தினாலான ஒரு ஸ்ரீ சக்கர மஹா மேரு என்பதைக் கண்டுகொண்டார். அந்தப் பகுதியில் பிரம்மாண்டமான யாகமொன்று ஏறத்தாழ 250 ஆண்டுகளின் முன்னர் நடத்தப்பட்டிருந்தது பின்னர் அறியப்பட்டது.

அன்னை பராசக்தியை குருஜி 16 வயதுப் பெண் குழைந்தை வடிவத்தில் பல காட்சிகளாக கண்டார். அவளுடைய ஆசிகளினைக் கொண்டு, 1984 ஆம் ஆண்டில் அவர் அந்தக் குன்றத்தில் காமாக்யா பீடத்தினையும் உச்சிப்பகுதியில் சிவாலயத்தினையும் அமைத்தார்.

ஸ்ரீ மேரு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. 108 சதுர அடி பரப்பைக் கொண்டதாகவும் மூன்று தளங்களைக் கொண்டதாகவும் 54 அடி உயரமுடையதாகவும் அது அமைந்தது. கட்கமாலா ஸ்தோத்ரத்தில் குறிப்பிடப்படும் அனைத்து தேவியர்களையும் கொண்ட இந்தக்கோயிலின் கட்டுமானப் பணிகள் 1994 ஆம் ஆண்டு முடிவடைந்ததுடன், மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்தக் கோயிலினைக் கட்டி முடிப்பதற்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டன (1983 - 1994).  1977 ஆம் ஆண்டிலிருந்து குருஜி, தொன்மையான ஸ்ரீ வித்யை நூல்களையும்  பூஜைச்செயற்பாடுகளையும் ஆராய்ந்து, அவற்றை பயன்படுத்தக்கூடிய முறையில் வெளிக்கொணர்ந்தார். தேவி வழிபாட்டினை கற்று அவளை வழிபட விரும்பிய எவரும் பயன்படுத்தும் வண்ணம் அவர் அதனை தயார்படுத்தி வைத்தார்.

இதன் காரணமாகவே, தேவிபுரம், “கற்கும் கோயில்” என்று அழைக்கப்படலாயிற்று.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சமயக் கோட்பாடுகளோ ஜாதியோ பார்க்கப்படாது, அடியார்கள் அனைவரும் தேவிக்கு தாமே பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்படுவது இந்தக் கோயிலின் சிறப்பாகும். இது தேவியால் இடப்பட்ட உத்தரவு! கோயிலின் மூலவராய் வீற்றிருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சஹஸ்ராக்ஷி ராரராஜேஸ்வரி தேவிக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அமாவாசையன்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் இடம்பெறும். பக்தர்கள் தங்களுடைய கரங்களாலேயே தேவிக்கு இந்த அபிஷேகத்தினை செய்ய முடியும். அதே போல், தக்ஷாவதியில் உறையும் பஞ்சபூத லிங்கேஸ்வர ஸ்வாமிக்கும் சிவாலயத்தில் உள்ள ஆனந்த பைரவருக்கும் க்ஷேத்ரபாலக ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரருக்கும் பக்தர்கள் ருத்ராபிஷேகத்தை தங்கள் கரங்களினாலேயே செய்ய முடியும். தேவிபுரம் பெண்களால் நடத்தப்படுகின்றது. பயிற்றுவிக்கப்பட்ட பெண் பூஜாரிகளே அங்கு கோயிலின் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இத்தகைய மகிமை பொருந்திய தேவிபுரம் குருஜியின் கொள்கைகள் வகுத்த பாதை மீது தேவி பராசக்தியின் கட்டளைகளுக்கு அமைவாக, இயங்கி வருகின்றது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar