Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வைஷ்ணவிதேவி, (சிரோ பாலி)
  தீர்த்தம்: கங்கா நதி
  ஊர்: கட்ரா
  மாவட்டம்: கட்ரா
  மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்
 
 திருவிழா:
     
  வருடந்தோறும் நவராத்திரி நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. அந்நாட்களில் திரிகுதா என்ற இம்மலை அலங்கரிக்கப்பட்டு வெகு விமரிசையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கும் பொருட்டு சிறப்பாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணவி சக்தி பீடம் ஆகும். இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.( துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.)  
     
திறக்கும் நேரம்:
    
 திரிகுதா என்ற பெயருடைய இமயமலையின் குகைகோயில் (பவன்) ஜனவரி, பிப்ரவரி மாதம் தவிர இதர மாதங்களில் யாத்ரா மேற்கொள்ளலாம். நாள்தோறும் 24 மணி நேரமும் வைஷ்ணோதேவி இலவச தரிசனம். 
   
முகவரி:
   
  அருள்மிகு வைஷ்ணவி தேவி திருக்கோயில், கட்ரா-182 301, ஜம்மு காஷ்மீர்.  
   
போன்:
   
  +91-1991-232 125 
    
 பொது தகவல்:
     
  ஸ்ரீவைஷ்ணோதேவியை தரிசிப்பதற்கும், தங்குவதற்கும் முன்னதாகவே வெப்சைட் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம்.

யாத்ரா
வைஷ்ணோதேவி ஸ்தலமான இந்த குகை கோயிலுக்கு வர நாம் முதலில் ஜம்முவை வந்தடையவேண்டும். ஜம்முவிற்கு தினமும் ரயில் மூலம் வரும் பயணிகளில் 75 சதவீத மக்கள் ஸ்ரீ வைஷ்ணோதேவியை தரிசிக்கவே வருகின்றனர். வைஷ்ணோதேவி மலையை சென்றடைய நம் முதலில் கட்ரா என்ற சிறிய நகருக்குள் நுழையவேண்டும். இவ்வூர் ஜம்முவிலிருந்து 50 கி.மீ. ஜம்முவில் இளைப்பாற சரஸ்வதி தாம் மற்றும் வைஷ்ணோதேவி தாம் என்ற இரு தங்கும் விடுதியை பக்தர்களுக்காக வைஷ்ணோதேவி போர்டு உருவாக்கியுள்ளது. ஜம்முவிலிருந்து 50 கி.மீ. பிரயாணம் செய்ய ஜம்மு ரயில் நிலையத்திலிருந்தே அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் ரயிலிலிருந்து வரும் பக்தர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

2003ல் ஜம்மு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் இந்திய ராணுவம் முழு பாதுகாப்புடன் நம்மை கட்ரா நகருக்கு அனுப்பி வைக்கிறது. கட்ரா பஸ் நிலையத்தை அடைந்தவுடன் பக்தர்கள் அனைவரும் வைஷ்ணோ தேவியை தரிசிக்க முதலில் தங்களை பதிவு (ரெஜிஸ்ட்ரேசன்) செய்துகொள்ள வேண்டும். பஸ்ஸ்டாண்டிலேயே வைஷ்ணோதேவி போர்டு - பதிவு நிலையத்தை 24 மணி நேரமும் திறந்துவைத்துள்ளனர். நமது பெயர், எந்த ஊர், மாநிலம் போன்ற விவரத்துடன் ஒவ்வொரு குரூப் அல்லது பக்தருக்கு ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இலவசமாக தரப்படுகிறது. இந்த ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி உண்டு. இல்லையேல் மலையிலிருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள். கட்ரா பஸ் நிலையத்தில் நாம் பதிவுசெய்தவுடன் 1 கி.மீ தொலைவில் உள்ள திரிகுதா என்ற மலைமுகப்பில் உள்ள இராணுவ செக்போஸ்ட்டில் நாம் கொண்டுசெல்லும் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

ஒரு முக்கிய வேண்டுகோள் : மலைக்கு செல்லும்போது முடிந்தவரை உடைகள், உடமைகளை குறைத்துச் சென்றால் மலை ஏறும்போது அதிக சிரமம் இருக்காது.

வைஷ்ணோதேவி ஆலயம் (பவன்) :
மலை பிரயாணத்திற்காக மட்ட குதிரையில் அமர்ந்து பயணித்தல் மற்றும் டோலி (4பேர் அமரும் இருக்கையுடன் தூக்கிச்செல்லுதல்) போன்றவைகள் மூலமாகவும் செல்லலாம். வடநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் 5 வயது முதல் 80 வயது வரை உள்ள ஆண் / பெண் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்தே ஜெய் மாதா தி என்ற கோஷத்துடன், மனஉறுதியுடன், பக்தியுடன் நடந்தே வருகின்றனர்.

நடந்து செல்பவர்கள் களைப்பை போக்க ஒரு கி. மீட்டருக்கு ஒரு "ரெப்பிரஸ் மென்ட்' ஷாப்பிங் உண்டு. அங்கு காபி, ஜூஸ் முதல் அனைத்தும் கிடைக்கும். அதே போல், இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு மெடிக்கல் சென்டர் இருக்கும், ஏறி வருபவர்க ளுக்கு உடல் நிலை பாதித்தால் இலவசமாக முதலுதவி செய்யப்படும்.

வசதி படைத்த, நடக்க இயலாத பக்தர்கள் ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப் கட்ராவில் பெற்றவுடன் பஸ்நிலைய வாசலில் டெக்கான் ஏர்வேஸ் (போன் நம்பர். 01991-234378,234379) அலுவலகத்தை தொடர்புகொண்டால் ஹெலிகாப்டர் மூலம் மலைமீது உள்ள வைஷ்ணோதேவியை எளிதில் அடையலாம். ஹெலிகாப்டர் மூலம் செல்ல கட்டணம் ரூபாய். 2,000/- (ஒருவழி பயணம் மட்டும்).

மலைமீது நடக்க அனைத்து பரிசோதனைக்கு பின் நாம் முதலில் நீராட வேண்டிய நதி பாண்கங்கா. ஸ்ரீவைஷ்ணோதேவி தொடுத்த பாணத்தால் ஊற்றெடுத்து உருவான நதி பாண்கங்கா. எனவே பக்தர்கள் இந்த புனித நதியில் நீராடியபின் ஜெய் மாதா தி என்ற சரண கோஷத்துடன் மலைஏற துவங்கலாம். மும்பை தொழிலதிபர் காலஞ்சென்ற திரு.குல்சன்குமார் அவர்கள் பெயரில் மிகப் பெரிய அளவில் பாண்கங்காவில் அன்னதானம் (24 மணி நேரமும்) நடைபெறுகிறது.

அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் வைஷ்ணோதேவி இளைப்பாறிய சரண் பாதுகாவை அடையலாம். மலைப்பாதையில் ஸ்ரைன் போர்டு சார்பில் போஜனாலயா என்ற பெயரில் சலுகை விலையில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அர்த்த குமாரியை அடையலாம். நாம் மலையில் நடக்க வேண்டிய மொத்த தூரம் 12 கி.மீ. இம்மலைப் பகுதியில் சுமார் 10 கி.மீ. அதிக ஏற்றத்துடன் ஏறினாலும் கடைசியில் 2 கி.மீ தூரம் நாம் மலையின் இறக்கத்திலேயே சென்று நுழைவுவாயிலை அடையலாம்.

மலைமீதுள்ள இத்தலத்தின் நுழைவு வாயிலிலேயே நமது செல்போன், பேனா, பென்சில், மணிபர்ஸ், பெல்ட் போன்றவைகளை இலவச லாக்கரில் வைத்து விட்டுத்தான் பவன் என்றும் ஸ்ரீவைஷ்ணோதேவி குகைக்கோவிலுக்கு செல்ல முடியும். இந்திய ராணுவத்தின் சி.ஆர். பி. எஃப் கட்டுப்பாட்டில் பவன் உள்ளது. எனவே நுழைவு வாயிலில் பக்தர்கள் கடுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர். கேட் 1*2 மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கேட் 3. மூலம் ராணுவத்தினர் மற்றும் இராணுவ அனுமதி பெற்றவர் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் மலையில் தங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளது. தங்கும் விடுதிகள், தனி நபர் டால்மெண்ட்ரிகள், இலவச பெட்ஷீட்கள் (ரூ. 100/- டெபாசிட் செய்தவுடன்) போன்றவைகள் உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள அம்மனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும் பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் "ஜெய் மாதா தி' கோஷத்துடன் பல்வேறு இன, மாநில மக்கள் நடந்து செல் வதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சிதான். 7 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் வைஷ்ணவ தேவியின் தரிசனம் ஒன்றே குறிக்கோளாக பரவசமாக செல்வர்.

நடை பயணத்தில் நாம் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு. வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா தேவி பக்தர் களை பின் தொடர்ந்து அரக்கன் வரு கின்றானா என்று கண்காணித்து பாது காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது.அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு நாம் செல்லும் பாதையில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர், பயணத்தை தொடர வேண்டும்.

அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது. இங்கு தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களை யும் வாங்கிக் கொள்ள வேண்டும். தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூஜாரி பக்தர்களுக்கு நாணயங்களை பிரசாதமாக வழங்கு வார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற தைரியம் ஏற்படும். க்யூவில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்த படி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.

குகைக்கோயிலை நாம் அடைந்தவுடன் பிண்டி எனப்படும் கர்ப்பகிரஹம் உள்ளது. சுயம்புவான மூர்த்த உருவில் மூன்று உருவங்களாக தேவியை மிக கவனத்துடன் தரிசிக்கவும். இடதுபுறம் மஹா சரஸ்வதியாகவும், வலதுபுறம் துர்கை என்ற மஹாகாளியாகவும், நடுவில் மஹாலெட்சுமியாகவும் ஆக மூன்று தேவியரின் முழு உருவாக வைஷ்ணோதேவி அருட்காட்சி அளிக்கிறாள். தேவியை தரிசித்துவிட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு சர்க்கரைபாகு கலந்த பொரி, அன்னையின் வடிவம் பொறித்த வெள்ளி டாலர் ஒவ்வொரு பக்தருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

வைஷ்ணோதேவியை வருடந்தோறும், இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து செல்வதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் பஞ்சாப், உத்திரபிரதேசம், உத்தராஞ்சல், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்களின் குல தெய்வமாக வைஷ்ணோதேவி விளங்குவதோடு அவர்களது குடும்பங்களை காத்து வருவதாக கூறப்படுகிறது. திருமணம் ஆன தம்பதியினர் ஒரு வருடத்திற்குள் இத்தலத்திற்கு தம்பதிகளாக வந்துசெல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இந்த வைஷ்ணோதேவி குகைக்கோயில் (பவன்) கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் உள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.

திரு. ஜஸ்துமல் என்ற தேவி உபாசகருக்கு திருமகளாக வைஷ்ணோ தேவி பிறக்கிறாள். அழகு மங்கையாக வளரும் பருவத்தில் தேவியை கவர்ந்து செல்ல எண்ணி பைரவன் என்ற அரக்கன் துரத்துகிறான். பைரவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள குகையில் ஒளிந்துகொள்கிறாள் தேவி. அங்கே அவளுடைய சுயசொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, வெளியே வந்து குகை வாயிலிலேயே அவனை சம்ஹாரம் செய்கிறாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி என்ற அருகில் உள்ள மலையில் போய் விழுகிறது. தேவி, மடியும் தருவாயில் மன்னிப்பு கேட்கும் பைரவனுக்கு வரம் தருகிறாள். தனது குகைக்கோவிலை (பவன்) நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு அவன் முக்தி அடைவான் என்ற வரம் அருளுகிறாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பி செல்லும்போது பைரவ காடிக்கு போய், அவனை வழிபட்டு செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணோ தேவி ஒளிந்திருந்த குகை இன்று வைஷ்ணோதேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் அரூபமாக (சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar