பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4ம் பாதம்; மனவலிமையும், செயல் திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். இதுவரை இருந்த நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர் ஆதரவு, ஒத்துழைப்பு கிடைக்கும். ஆலய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கின்ற முயற்சி அனைத்தும் வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகி ஆரோக்கியமாக நடமாடத் தொடங்குவீர். வியாபாரத்தில், தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும். வழக்களில் சாதகமான நிலை ஏற்படும். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேறக்கூடிய நிலையும் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அதே நேரத்தில் மறுபக்கம் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அலச்சலும், வேலை பளுவும் இருக்கும். இருந்தாலும் அவற்றின் வழியாக லாபம் காணக் கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும். ஜன.19 முதல் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும்.
புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர் நிலை உயரும். விவசாயத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 28.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 18, 23, 27. பிப். 5, 9.
பரிகாரம்: அனுமனை வழிபட சங்கடம் விலகும்.
திருவாதிரை: கால நேரம் அறிந்து செயல்பட்டு வாழ்வில் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் லாபம் அடையும். உங்களிடம் பணி புரிபவர்களின் மனநிலை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். ஜன. 28 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பார்த்த பணம் வரும். ஜன. 19 முதல் புதன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். சனி பகவானின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுயமாக தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்கள் உடல் நிலையிலும் ஏதேனும் சின்னச் சின்ன பாதிப்பு தோன்றி மறையும். ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால் எதுவும் வந்தவழி தெரியாமல் ஓடிவிடும். உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து வாங்கும் நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். நினைத்ததை சாதித்திடும் மாதமாக இந்த மாதம் இருக்கும். சிறிய வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கனவுகள் நனவாகும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குழந்தைகள் பற்றிய பயம் நீங்கும். அவர்களால் பெருமை அடையக்கூடிய நிலையும் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 29
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 22, 23, 31. பிப். 4, 5.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்; நினைத்ததை சாதித்திடக்கூடிய திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதமாகும் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் பிப். 11 வரை வக்ரமாக சஞ்சரிப்பதால் செலவு கட்டுப்படும். நினைத்த வேலைகளை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். என்றாலும், கையில் எடுக்கும் வேலைகளில் நிதானம் தேவை. எந்த முயற்சியாக இருந்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசிநாதன் ஜன. 19 தொடங்கி பிப். 4 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்த்த வரவு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். அரசு வழி முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. அஷ்டம சூரியன் அலைக்கழிப்பை உண்டாக்குவார். பாக்ய சனியால் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள்.
சுக்கிரனும் ஜன. 28 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு இருக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். வியாபாரம் விருத்தியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 30.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 21, 23. பிப். 3, 5, 12.
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.