பதிவு செய்த நாள்
11
ஜன
2025
05:01
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம்; குருவருள் பெற்று பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் நீங்கும். அலுவலகப் பணியில் நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்து வருவதால் மறு பக்கம் செலவும் அதிகரிக்கும். புதிய வாகனம், புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதால் மகிழ்ச்சி நிலைக்கும். பிப். 5 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் நட்புகளின் போக்கு உங்களை சங்கடப்படுத்தும். சில நண்பர்கள் உங்களைத் தவறான பாதைக்கும் அழைக்கலாம் என்பதால், பின்விளைவுகள், குடும்பம், உங்கள் சுய கௌரவம் போன்றவற்றை யோசித்து கவனமாக செயல்படுவது நன்மையாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். இருந்தாலும், ஆசிரியர்களின் ஆலோசனை நன்மைகளை உண்டாக்கும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கலைஞர்கள் கனவு நனவாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். வயதானவர்கள் உடல்நிலையில் கவனம் கொள்வது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 21.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 30. பிப். 3, 12.
பரிகாரம்: குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரட்டாதி: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதனும், உங்கள் ராசிக்கு லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனிபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய 7ம் பார்வை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் பதிவதால் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். ஆரோக்யமாக செயல்படத் தொடங்குவீர்கள். வியபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள், பிரச்சனைகள், தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இருந்தாலும், குடும்ப ஸ்தானத்திற்கும் சனி பகவானின் பார்வை உண்டாவதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நன்மையாக இருக்கும். 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, நட்புகள் வழியே உங்கள் கௌரவத்திற்கு பாதகத்தை உண்டாக்கலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம். யாரையும் நம்பி எந்தவொரு செயலிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். அது உங்களுக்கு எதிர்மறையாக மாறும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரித்து வருவதால் ஆசைகள் அதிகரிக்கலாம் என்றாலும், அதைக் கட்டுப்படுத்துவதன் வழியாக எதிர்காலம் உங்களுக்கு யோகமானதாக, நிம்மதியானதாக இருக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சந்தோஷமாக இருந்திடக்கூடிய சூழல் அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். ஒரு சிலர் இருக்கும் வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றம் செய்வீர்கள். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு யோகமான பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உழைப்பாளர் நிலை உயரும். உண்டாகும் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வயதானவர்களுக்கு மருத்துவச்செலவு ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 21, 22.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 26, 30. பிப். 3, 8, 12.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை உண்டாகும்.
ரேவதி: புத்தி சாதுரியத்துடன் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு அரசின் அனுமதி கிடைக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அத்யாவசிய செலவுகளுக்காக கையிருப்பு கரையும். புதிய இடம், வாகனம் என்று வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்து வந்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும். அதன் காரணமாக தவறான வழியிலும் செல்லக்கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். அதனால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக செயல்படுவதும், தவறான நண்பர்களை விட்டு விலகுவதும் உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதால் வீண் பிரச்சனைகளுக்கு இடமில்லாமல் போகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பணியாளர்கள் நிலை உயரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 22, 23.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 21, 30. பிப். 3, 5, 12.
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.