பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்.. அசாத்திய துணிச்சலுடன் எடுத்த வேலையை முடித்திடும் உங்களுக்கு சித்திரை மாதம் யோகமான மாதமாகும். சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில், தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷனில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நிலுவை வைத்திருந்த பாக்கி தொகையை செலுத்தும் கட்டாயம் ஏற்படும். சிலர் மற்றவர்கள் கைவிட்ட தொழில், வியாபாரங்களை எடுத்து அதில் லாபம் அடைவர். மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதுடன் ஏப்.30 வரை புதனும் அங்கு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை உண்டாகும். அந்நியர்களால் அவமானங்களை சந்திக்க வேண்டி வரலாம். கணவன், மனைவிக்குள் இடைவெளி ஏற்படலாம். எனவே நட்பு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. ஏப்.30 முதல் புதன் 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மறைந்த புதன் நிறைந்த செல்வத்தைத் தருவார் என்பதற்கு ஏற்ப சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். தாமதமான ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில் முன்னேற்றம் அடையும். அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், உணவகம், மருத்துவம் போன்றவை லாபம் தரும். 6ம்இட சனி அனைத்து சங்கடங்களில் இருந்தும் பாதுகாப்பார். எதிரியையும் நண்பராக்குவார்.
சந்திராஷ்டமம்: ஏப்.27
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,19,23,28,மே1,5,10,14
பரிகாரம்: அர்த்த நாரீஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.
அஸ்தம்: திட்டமிட்டு செயலாற்றும் உங்களுக்கு, சித்திரை மாதம் முன்னேற்றமான மாதம். மே 11 வரை குரு பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன் அவரது பார்வை ராசிக்கும், 3, 5 ம் இடங்களுக்கும் கிடைப்பதால் எடுத்த வேலை யாவும் வெற்றியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். பண வரவில் தடைகள் விலகும். பொருளாதாரம் உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும், சகோதர சகோதரிகளுடன் இணக்கமான நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னை தீரும். மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி உண்டாகும். உயர்கல்விக் கனவு நனவாகும். குழந்தை பேறுக்காக ஏங்குவோருக்கு நல்ல தகவல் கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் நிலை உயரும். சிலருக்கு எதிர்பாலினரால் நெருக்கடி ஏற்படும். அதன் காரணமாக கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்படலாம் கவனம். லாப ஸ்தானத்திற்கு வரும் செவ்வாய் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியை நிறைவேற்றுவார். முடங்கிய தொழில்களில் மீண்டும் முன்னேற்றம் தரும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். ஜென்ம ராசியில் சஞ்சரித்த கேது ஏப்.26 முதல் 12ம் இடத்திற்கு செல்வதால் குழப்பம் விலகி மனதில் தெளிவு ஏற்படும். பணியிடத்தில் இருந்த பிரச்னை மறையும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: ஏப்.28.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,20,23,மே1,5,10,14
பரிகாரம்: பராசக்தி வழிபாடு சங்கடம் போக்கும்.
சித்திரை 1, 2 ம் பாதம்: செயல்களில் வேகமாக இருக்கும் உங்களுக்கு, சித்திரை மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உயர்வு தருவார். பண வரவை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வியாபாரம், தொழிலை முன்னேற்றம் பெறும். பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். ஏப். 26ல் நடைபெறும் ராகு, கேது பெயர்ச்சியும் முன்னேற்றத்தை உண்டாக்கும். நெருக்கடிகள் விலகும். 6ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியுடன் ராகுவும் இணைவதால் ணறஆற்றல் அதிகரிக்கும். எதிரிகளும் உங்களிடம் சரணடைவர். உடல்பாதிப்பு விலகும். ஏப். 30 முதல் புதனின் சஞ்சார நிலையும், மே 11 வரை குருவின் சஞ்சாரம், பார்வைகள் சாதகமாக இருப்பதால் வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். நீண்ட நாள் திட்டம் முடிவிற்கு வரும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். மாதம் முழுவதும் 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன், ஏப்.24 வரை ராகு, ஏப்.30 வரை புதன் என்றிருக்கும் இந்த காலத்தில் தடுமாற்றங்களை ஏற்படுத்துவர். மனதில் ஆசைகளை உண்டாக்குவார்கள். அதன் காரணமாக குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் கவனம் செலுத்த முடியாத நிலை, கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரிப்பதும், வியாபாரம், தொழிலில் அக்கறை கொள்வதும் நல்லது. இக்காலம் உங்களுக்கு எல்லா வகையிலும் யோக காலமாக அமையும்.
சந்திராஷ்டமம்: ஏப்.29
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,18,23,27, மே 5,9,14.
பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை நடக்கும்.