பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
துலாம்: சித்திரை 3, 4ம் பாதம்.. வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். தொழில் நடக்குமா நடக்காதா என்ற அச்சமும் சிலருக்கு வரலாம். ஆனாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் நிலையை ஏப்.24 வரை 6ம் இடத்தில் சஞ்சரித்து வரும் ராகு உருவாக்குவார். முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வார். எதிரிகளை நண்பராக்குவார். குரு பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். விரய செலவு ஏற்பட்டாலும் அது அவசியமானதாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதத்தின் முற்பகுதியில் சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள். மாணவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் கல்வி, வேலை, திருமணம் என செலவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் உண்டான சங்கடம் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். தொழில்புரிவோர் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஏப்.29
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,18,24,27, மே6,9
பரிகாரம்: அனுமனை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.
சுவாதி: தனக்கென தனிப்பாதை அமைத்து முன்னேறும் உங்களுக்கு சித்திரை கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப்.26 வரை ராகு உங்களைப் பாதுகாப்பார். நிலைமைகளை சமாளிக்கும் அளவிற்கு துணிச்சலுடன் செயல்பட வைப்பார். இழுபறியாக இருந்த வேலைகளை முடித்து தருவார். வழக்கில் வெற்றி அளிப்பார். அதன் பின் ராகு 5ம் இடத்திற்கு செல்வதால் அவர் வழங்கிய யோகப்பலன் மாறும். அதே நாளில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வீண் செலவு, அலைச்சல், உடல் பாதிப்பு, மனச்சோர்வை வழங்கி வந்த கேது லாப ஸ்தானத்திற்கு செல்வதால் செலவு கட்டுப்படும். செல்வாக்கு உயரும். வரவு அதிகரிக்கும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். தைரியமாக செயல்படும் சூழல் அமையும். சித்திரை மாதம் முழுவதும் 7ல் சஞ்சரிக்கும் சூரியனால் குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்னைகள் வந்து போகும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த வெளியூரில் முகாமிடுவீர்கள். சிலர் வெளியூர் சென்று வசிக்கும் நிலையும் உண்டாகும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியுடன் ஏப்.26 முதல் ராகுவும் இணைவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வதும் அவசியம். பூர்வீகச் சொத்தில் பிரச்னை தோன்றும். சிலருக்கு எதிர்மறை பலன் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானம் அவசியம். தொழிலில் கூடுதல் கவனம் தேவை. பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்த லாபம் தரும். கலைஞர்கள், கல்வியாளர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் விடாமுயற்சியால் உயர்கல்வியை எட்டுவர். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி ஏற்படலாம்.
சந்திராஷ்டமம்: ஏப்.30
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 22, 24, மே 4, 6, 13.
பரிகாரம்: பிரத்தியங்கிரா வழிபாடு பிரச்னையை போக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்: அர்த்தம் தெரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, சித்திரை மாதம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய மாதம். குரு பகவான் 8ல் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் இருக்கும் அவருடைய பார்வை 12, 2, 4ம் இடங்களுக்கு உண்டாவதால் விரய செலவும் ஆதாயம் தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த பணம் வரும். மனம் விரும்புவதை நடத்திக் கொள்ள முடியும். இந்த நேரத்தில் சூரியன் 7ல் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உடல் நிலையில் சங்கடங்கள் தோன்றும். குடும்பத்தில் வீண் பிரச்னை உண்டாகலாம் கவனம். ஏப். 30 வரை புதனின் சாதகத்தால் கலைஞர்கள் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விரும்பிய இடத்தை வாங்க முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். ஏப். 26 முதல் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். செலவு கட்டுப்படும். மே 11 முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும். நினைத்ததை நடத்த முடியும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். வியாபாரிகள் செயலில் ஈடுபடும் முன் விளைவு பற்றி யோசிப்பது அவசியம். அரசு பணியாளர்கள் அதிகார வரம்பை மீறுவதை தவிருங்கள். எதிர்பாராத இடம், பணி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.
சந்திராஷ்டமம்: ஏப். 30, மே 1
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15, 21, 24, மே 3, 6, 12
பரிகாரம் நவகிரக குருபகவானை வழிபட வளம் உண்டாகும்.