பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்.. எடுத்த முயற்சியில் எல்லாம் வெற்றி என்ற நிலையோடு வாழும் உங்களுக்கு சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உடல் ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடி அதிகரிக்கும். இதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த வேலைகளில் தடை, தாமதம் ஏற்படும். ஏப்.26 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு வரவினை அதிகரிப்பார். எந்தப் பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சரி செய்து கொள்ள முடியும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. உங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வரவு இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். அதே நேரத்தில் குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதுடன் ஏப்.26 முதல் ராகுவும் சேர்வதால் குடும்பத்தில் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. பணப்புழக்கம் குறையும். கொடுக்கல், வாங்கலில் நெருக்கடி ஏற்படும் என்பதால் வரவு செலவில் மிகுந்த கவனம் தேவை. வார்த்தைகள் வழியாக எதிர்ப்பு உண்டாக வாய்ப்பிருப்பதால் பேச்சில் கவனம் வேண்டும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் நெருக்கடிக்கு ஆளாக்குவார். வீண்விஷயங்களில் தலையிட்டு அதனால் பிரச்னைக்கு ஆளாகலாம் கவனம். ஐந்தாமிட குருவால் மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். விவசாயிகள் இக்காலத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: மே 5, 6.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,19,26,28,மே1,8,10
பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட நன்மை உண்டாகும்.
திருவோணம்: முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மே11 வரை குரு பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து 9,11 ம் இடங்களையும் ராசியையும் பார்ப்பதால் வருகின்ற சங்கடங்கள் வந்தவழி தெரியாமல் போகும், பெரிய மனிதர்களின் உதவி, பணப்புழக்கம், சந்தோஷம், செல்வாக்கு இருக்கும். 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் கர்மக்காரகனும், ஏப்.26 முதல் அங்கு சஞ்சரிக்க உள்ள ராகுவும், அதே நாளில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவும் உங்கள் நிலையை அப்படியே புரட்டிப் போடுவார்கள். பல வகையிலும் உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவர். உடல் உபாதை ஏற்படும். சிலர் வாகன விபத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் துணிச்சலாக செயல்படுவீர்கள். இடம், நிலம் வகையில் சில பிரச்னைகள் தலையெடுக்கும். தொழிலில் முன்னேற்றம் இருந்தாலும் மறுபக்கம் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகம் போன்றவற்றில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகும். பணியாளர்கள் இந்த மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டாம். எந்தவித சிபாரிசுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். அதனால் சங்கடத்திற்கு ஆளாவது நீங்களாகத்தான் இருப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். அவர்களின் கல்வி, எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதற்காக செலவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். சிலருக்கு புதிய வீட்டில் குடியேறக்கூடிய பாக்கியம் உண்டாகும். இக்காலத்தில் மனம் அலை பாயாமல் இருப்பது மிக அவசியம். குடும்பத்தினரை அனுசரிப்பதும், தம்பதிக்குள் ஒற்றுமையாக இருப்பதும் நெருக்கடிகளை சமாளிக்கும் வழியாகும்.
சந்திராஷ்டமம்: மே 6, 7.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 20, 26, 29. மே 2, 8, 11.
பரிகாரம்: ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்: எந்த நிலையிலும் எடுத்த வேலையை முடித்திட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு சித்திரை மாதம் ஒரு பக்கம் நெருக்கடியும் மறுபக்கம் ஆதாயமும் கலந்த மாதமாக இருக்கும். செவ்வாய் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்னைகள் தலையெடுக்கும். உங்கள் உடல் நிலையிலும் ஏதேனும் பாதிப்பு உருவாகும். அவசர அவசரமாக சில வேலைகளில் இறங்கி அதனால் சட்ட சிக்கலுக்கு ஆளாவீர்கள். வம்பு வழக்கு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும். இந்த நேரத்தில் மே11 வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு கவசமாக இருப்பார். என்ன வந்தாலும் அதை சமாளித்திடக் கூடிய சக்தி உண்டாகும். என்றாலும் ஏப்.26 முதல் தன குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நெருக்கடி ஏற்படும். வரவில் தடை உண்டாகும். உடல்நிலையில் பாதிப்பு தோன்றும். இல்லையெனில் உங்கள் செல்வாக்கு அந்தஸ்தில் இறங்குமுகம் உண்டாகும். ஏப்.30 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதுடன், லாப ஸ்தானத்திற்கு குரு பார்வையும் இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கடினமான நிலையையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். இக்காலத்தில் பணியாளர்கள் தங்கள் வேலையில் நேர்மை, கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு உடல் நிலையில் கூடுதல் அக்கறை தேவை. குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களைப் பாதுகாக்கும். சுக்கிரன் மாதம் முழுவதும் மூன்றாம் இடத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். மாணவர்களுக்கு மேற்கல்விக்குரிய முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 8
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,18,26, 27, மே 9
பரிகாரம்: திருவாலங்காடு காளியை வழிபட சங்கடங்கள் நீங்கும்.