பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
03:04
உத்திரம்.. முன்னேற்றம் உண்டாகும்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
பிறக்கும் விசுவாவசு ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் போராட்டம், நெருக்கடிகளை சந்தித்து அதன்பின் நன்மை அடையும் நிலை உண்டாகும். 2, 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். எண்ணியது நடந்தேறும். செல்வாக்கு உயரும். வாழ்வில் புதிய பாதை தெரியும். வழக்கு, நோய் இல்லாமல் போகும்.
சனி சஞ்சாரம்:
2026 மார்ச் 6 வரை உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உடல் பாதிப்பு, சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் விரிசல் வரலாம். நண்பருடன் கருத்து வேறுபாடு, பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவார். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்கிரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு இல்லாமல் போகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாக நன்மைகளை அதிகரிப்பார். முன்னேற்றம் தருவார். செல்வாக்கை ஏற்படுத்துவார். எதிரியை பலம் இழக்க வைப்பார். உடல் நிலை, மன நிலையில் தெளிவை உண்டாக்குவார்.
ராகு, கேது சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப்.26 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நெருக்கடி, போராட்டம் இருக்கும். சோதனை அதிகரிக்கும். வீண் குழப்பமும், பயமும் உண்டாகும். தவறான நபர்களின் நட்பால் அந்தஸ்துக்கு பாதகம் ஏற்படும். பொருளாதார இழப்பு உண்டாகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ராகு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வாட்டி வதைத்த பிரச்னை எல்லாம் விலகும். பணிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். உங்களை விமர்சித்தவரும் வியக்கும் விதத்தில் முன்னேற்றம் இருக்கும்.
குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிப்பவர், மே11 அன்றே மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் வக்ரம் அடையும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். அனைத்திலும் போராட்டம் இருக்கும். மே 11 முதல் இந்த நிலை மாறி அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை பாக்கிய குருவாக சஞ்சரிப்பதுடன் தன் பார்வைகளாலும் ஆதாயம் அளிப்பார். காதலில் வெற்றியையும், குழந்தை பாக்கியத்தையும் வழங்குவார். அதன்பின் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பணியிடத்தில் நெருக்கடி அதிகமாகும். வியாபாரத்தில் தடை குறுக்கிடும். வருமானம் குறையும்.
சூரிய சஞ்சாரம்: உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூலை 16, அக். 18 – நவ. 16, 2026 ஜன.15 – பிப்.12 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 15 – ஆக.16, நவ. 17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நெருக்கடி விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.
செவ்வாய் சஞ்சாரம்: உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செப். 14 – அக். 27, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன் 8, அக்.27 – டிச. 6, 2026பிப். 22 – ஏப். 1 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியடையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். உடல் பாதிப்பு விலகும்.
பொதுப்பலன்:
உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், சொத்து, வாகனம் என கனவு எல்லாம் நனவாகும். பொன், பொருள் சேரும்.
தொழில்:
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பங்கு வர்த்தகம், ஷேர் மார்க்கெட், ஏற்றுமதி, இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், வாகனம் தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமை வெளிப்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பதவி உயர்வும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்:
எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவு தீரும். அந்தஸ்து உயரும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும்.
கல்வி
மாணவர்களுக்கு பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த படிப்பு மீது விருப்பம் கொண்டவர்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை:
நீண்ட நாளாக அனுபவித்த சங்கடம் விலகும். உடலில் உள்ள நோய் பற்றி தெளிவாக புரியாமல் விரக்தி அடைந்தவர்களின் நிலை சீராகும். உடலில் உள்ள நோயை அறிந்து சிகிச்சை பெற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
குடும்பம்: தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்காலம், பிள்ளைகள் நலன் என சேமிப்பில் அக்கறை கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்கள் தீர்வு காண்பர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்: சூரியனார் கோவில் சூரிய நாராயணரை வழிபட சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
அஸ்தம்: வெற்றி மீது வெற்றி
வித்யாகாரகனும், மனக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, பிறக்கும் விசுவாவசு யோகமான ஆண்டாகும். சத்ரு ஜெய ஸ்தானம் பலம் பெறுவதும், ராசிக்குள் சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்கிய கேது இடம் பெயர்வதும் முன்னேற்றத்தை உண்டாக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். வெற்றி மீது வெற்றி சேரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
சனி சஞ்சாரம்:
மார்ச் 6, 2026 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனிபகவான் நன்மையை அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்களை பலமிழக்க வைப்பார். உடல் பாதிப்பு விலகி சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். இழுபறி வழக்குகளில் வெற்றி தருவார். செல்வாக்கை உயர்த்துவார்.
ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு உங்கள் ராசிக்கு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு இரட்டிப்பு யோகம் உண்டாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து குழப்பம், நிம்மதியற்ற நிலையை கடந்த ஒன்றரை ஆண்டாக உண்டாக்கிய கேது இடம் மாறி சஞ்சரிப்பதும், ராகு 6ல் சஞ்சரிப்பதும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை வாட்டி வதைத்த பிரச்னை மறையும். உங்கள் வேலைகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
குரு சஞ்சாரம்:
மே 11 மதியம் வரை ரிஷபத்தில் பாக்கிய குருவாக சஞ்சரிப்பவர், மே 11ல் பத்தாமிடமான மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக உங்களுக்கு லாப ஸ்தானமான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு பகவான் வக்ரமடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தருவார் என்பதால் கடகத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் மே11 வரை ஸ்தான பலத்தாலும், பார்வைகளாலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல முடிவை உண்டாக்குவார். குழந்தை பாக்கியமும் வழங்குவார். அதன்பின் 10ல் சஞ்சரிக்கும் குரு உத்தியோகத்தில் நெருக்கடியை அதிகமாக்குவார். வியாபாரத்தில் தடை, வருமானக் குறைவை ஏற்படுத்துவார். ஆனால் அவரது பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தாய்வழி உறவினரால் ஆதாயம் கூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும்.
சூரிய சஞ்சாரம்:
ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச் 14 காலங்களில் 10, 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் உத்தியோகம், தொழிலில் நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உடல் பாதிப்பு நீங்கும். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
செவ்வாய் சஞ்சாரம்:ஏப்.14 – ஜூன்8, அக்.27 – டிச.6, 2026 பிப்.22 – ஏப்.1 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலை தடையின்றி நடக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணும். அரசியல்வாதிகள் செல்வாக்கு கூடும். பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். உடல்பாதிப்பு விலகும். புதிய சொத்து சேரும்.
பொதுப்பலன்: விசுவாவசு உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டமான ஆண்டாகும். இதுவரை இருந்த தடை, பிரச்னை, போராட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். முயற்சி யாவும் வெற்றியாகும். பட்டம், பதவி, வேலை, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் என இந்த ஆண்டு உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும். பணவரவு அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில் என கனவுகள் நனவாகும்.
தொழில்:
தொழில் முன்னேற்றமடையும். போட்டியாளர்கள் விலகுவர். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கல்வி, நிதி நிறுவனம், பங்குச்சந்தை, ஒப்பந்த பணி, ஏற்றுமதி, இறக்குமதி, டிரான்ஸ்போர்ட், ஜவுளி, குடிநீர், விவசாயம், பப்ளிகேஷன்ஸ் துறைகளில் லாபம் அதிகரிக்கும். வழக்கறிஞர்கள், பத்திரம் எழுதுவோர் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு புகழ் சேரும்.
பணியாளர்கள்:
அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அலுவலகப் பணியில் ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணியில் ஏற்பட்ட பயம் போகும். எதிர்பார்த்த ஊதியம், சலுகை கிடைக்கும்.
பெண்கள்:
விசுவாவசு யோகமான ஆண்டாகும். படிப்பு, வேலை, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், கணவரின் பாசம் என எதிர்பார்த்த யாவும் கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் போராட்டங்கள் மறையும். வீடு, வாகனம், பொன், பொருள் சேரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கல்வி
மே 11 வரை குருவின் பார்வை ராசிக்கும் ஐந்தாம் இடத்திற்கும் இருப்பதால் பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை:
ஆயுள்காரகன் சனியும், சனியின் வீட்டில் சஞ்சரித்து, சனியின் காரகம் பெறும் ராகுவும் ருண ரோக ஸ்தானமான 6ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாளாக இருந்த, கேஸ்ட்ரிக், அல்சர், குடல், வயிறு, கிட்னி பாதிப்பு விலகும். நோய் பற்றி சரியாக தெரிந்து சிகிச்சை எடுப்பீர்கள்.
குடும்பம்:
சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு ஆச்சரியப்படுவர். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கிரகபிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், சீமந்தம் என சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
பரிகாரம்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரரை வழிபட சவுபாக்கியம் உண்டாகும்.
சித்திரை; உழைப்பால் உயர்வீர்கள்.. தைரிய, வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1, 2ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3, 4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர்.
விசுவாவசு ஆண்டில் 1, 2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நீண்டநாள் கனவு நனவாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உழைப்பை நம்பி வாழ்வு உயர்வு காண்பீர்கள். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப கேதுவால் வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றாலும், ஐந்தாமிட சனி, ராகுவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் தோன்றும்.
சனி சஞ்சாரம்:
மார்ச் 6, 2026 வரை சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு சம்ஹார சனியாக, முன்னேற்றத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில்நெருக்கடிகளை நீக்குவார். போட்டியாளர்களை பலமிழக்க வைப்பார். உடல் பாதிப்புகளை இல்லாமல் செய்வார். வழக்கில் வெற்றி தருவார். 3, 4 ம் பாதத்தினருக்கு பஞ்சமாதிபதியாக, குடும்பத்தில் சச்சரவுகளை அதிகரிப்பார். கணவன் மனைவிக்குள் இடைவெளியை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் மன உளைச்சல் வரலாம். பூர்வீக சொத்துகளில் பிரச்னை வரலாம். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி வக்ரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, 2025 ஏப். 26 முதல் ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலைகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். 3, 4ம் பாதத்தினருக்கு ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், கேது லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வீண் செலவு, அலைச்சல் குறையும். வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் லாபமடையும், வெளிநாட்டு முயற்சி சாதகமாகும் என்றாலும் பிள்ளைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அவர்களைப் பற்றிய கவலை அதிகரிக்கும். சிலர் காதலில் சிக்கி குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்தலாம்.
குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு வக்ரமடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2 ம் பாதத்தினருக்கு மே 11 வரை முன்னேற்றம் தருவார். செல்வாக்கு உயரும். புதிய வீட்டில் குடியேற வைப்பார். பூர்வீக சொத்தை அடையும் நிலையை உண்டாக்குவார். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகளை நனவாக்குவார். அதன்பின் வேலையில் நெருக்கடிகளை அதிகமாக்குவார் என்றாலும் அவரது பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கூடும். மகிழ்ச்சி கூடும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். 3, 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் 12, 2, 4ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதியான உறக்கம் இருக்கும். அதன் பின் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும், 3, 5 ம் இடங்களையும் பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சி நடக்கும். சனி, ராகுவால் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
சூரிய சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக. 16, நவ. 17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 3, 4ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப். 16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் சூரியன் அதீதமான நன்மைகளையும் யோகப்பலன்களையும் வழங்கி வாழ்வில் முன்னேற்றம் தருவார். உத்தியோகம், தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்: சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு ஏப். 14 – ஜூன் 8, அக். 27 – டிச. 6, 2026 பிப். 22 – ஏப். 1 காலங்களிலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – ஏப். 13 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலைகளை முடித்திடும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். எதிர்ப்பு விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு கூடும்.
பொதுப்பலன்: நினைத்த வேலைகளை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். வழக்குகள் முடிவிற்கு வரும். உங்களுக்கிருந்த பிரச்னைகள், போராட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எடுத்த முயற்சி வெற்றியாகும். பட்டம், பதவி, வேலை, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம், திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில் என்ற கனவுகள் நனவாகும்.
தொழில்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடிநீர், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ் தொழில்கள் லாபமடையும்.
பணியாளர்கள்:
வேலையில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகை கிடைக்கும்.
பெண்கள்:
திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தைக்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். வேலையில் முன்னேற்றமும், தொழிலில் ஆதாயமும் உண்டாகும். கணவரால் உங்கள் கனவு நனவாகும். வீடு, வாகனம், பொன், பொருள் சேரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
கல்வி
குருவின் சஞ்சார நிலைகளும் பார்வைகளும் மாணவர்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை:
நீண்ட நாளாக உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொற்று நோய் குணமாகும். பரம்பரை நோய்க்கு இயற்கை மருத்துவம் கைகொடுக்கும். உடல்நிலை சீராகும்.
குடும்பம்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம், பொன் பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறை அனைத்தும் தீரும்.