பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
03:04
அவிட்டம்.. குறை தீர்ப்பார் குரு; தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1, 2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3, 4ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசிநாதனாக உள்ளார் என்றாலும் கோச்சார கிரகங்களின் நிலைக்கேற்ப உங்களுக்கு பலன்கள் மாறுபடும்.
விசுவாவசு ஆண்டில் செயல்களில் சங்கடம், முயற்சிகளில் இழுபறி, வருமானத்தில் தடை, குடும்பத்தில் நிம்மதியின்மை, தம்பதிக்குள் கருத்து வேறுபாடு என எதிர்மறை பலன்கள் உண்டானாலும், குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் குறைகளை போக்கும். அனைத்திலும் நன்மை உண்டாகும்.
சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாதச்சனியாக, குடும்பத்தில் குழப்பம், ஆரோக்கியத்தில் பின்னடைவு, வருமானத்தில் தடைகளை ஏற்படுத்துவார். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலை, கூட்டுத் தொழிலில் தடை, தொழில், வேலையில் சோதனையை ஏற்படுத்துவார் என்றாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரம் அடைவதால் பாதிப்பு குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் ராகு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் சங்கடம், வருமானத்தில் தடை, மனதில் குழப்பம், தேவையற்ற பிரச்னை தலையெடுக்கும், உடல் பாதிப்பு, கவுரவத்திற்கு இழுக்கு, மறைமுகத் தொல்லை, சிலருக்கு அவமானம் உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசிக்குள் ராகு, 7ல் கேது சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும். மனம் புதியனவற்றின் மீது நாட்டம்கொள்ளும். சிலரை சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை, வாழ்க்கைத்துணையின் உடல் பாதிப்பு ஏற்படலாம். நட்பில் விரிசல் உண்டாகும்.
குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் வக்ரம் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும், கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த தொழில் என கனவுகள் நனவாகும். அதன்பின் தொழில் முன்னேற்றமடையும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவில் ஏற்பட்ட தடை விலகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் மறைமுகத் தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். தொழில், பணியில் ஆதாயம் அதிகரிக்கும். அதன்பின், குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். பெரிய மனிதர்கள் சகவாசம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும், புதிய இடம், வீடு என விருப்பம் பூர்த்தியாகும்.
சூரிய சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – மே 14, ஜூலை 17 – ஆக. 16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களிலும் அவருடைய சஞ்சார நிலை யோகத்தை உண்டாக்கும். தடைபட்ட வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். வம்பு, போட்டி, பிரச்னைகள் என்ற சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். தொழிலை லாபமாக்கும், புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக். 27 – டிச. 12, 2026 ஏப். 1 – 13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன.14 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செயல்களை லாபமாக்கும், துணிச்சல், தைரியம், வருமானம், வசதி வாயப்பை அதிகரிக்கும்.
பொதுப்பலன்: விசுவாவசு உங்களை யோசிக்க வைக்கும் ஆண்டாக இருக்கும். ஒரு பக்கம் சனி, ராகு, கேது பாதகம் உண்டாக்க மறுபக்கம் குரு பகவான் உங்களைப் பாதுகாக்கிறார். தக்க சமயத்தில் சூரியனும் செவ்வாயும் முன்னேற்றத்திற்கு வழியமைப்பர். திருமணம், குழந்தை, புதிய தொழில், வேலையில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும் என்றாலும் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.
தொழில்: குரு பகவானின் பார்வை தொழில் காரகனுக்கு உண்டாவதால் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், நாட்டு மருந்து, இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், பங்குவர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் தொழில்கள் லாபமடையும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
பணியாளர்கள்: ஜீவன ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டானாலும் குரு பகவான் மே 11 வரை ஜீவன ஸ்தானத்தையும், அதன்பின் கும்ப சனியையும் பார்ப்பதால் எல்லா நெருக்கடிகளும் விலகும். பிரச்னை நீங்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் இருந்த பயம் போகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் இக்காலத்தில் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.
பெண்கள்: வருடம் முழுவதும் குரு சாதகமாக இருப்பதால் கல்வி, வேலை, திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும்.
கல்வி : குருபகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நெருக்கடிகளுக்கு இடையிலும் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் சங்கடத்தை உண்டாக்கும் வகையில் இருப்பதால் விபத்து, தொற்று, பரம்பரை, ரகசிய நோய்கள் என ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மருத்துவ செலவு ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை.
குடும்பம்: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகளை குரு தீர்த்து வைப்பார். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க நினைத்திருந்த கனவு நனவாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.
பரிகாரம்:அமிர்தகடேஸ்வரரை வழிபட அச்சம் நீங்கும். நன்மை நடக்கும்.
சதயம்: எச்சரிக்கை தேவை.. யோகக்காரகனும், கர்மகாரகனும் இணைந்து வழிநடத்தும் உங்களுக்கு, விசுவாவசு ஆண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாகும். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயமும் முன்னேற்றமும் உண்டாகும். ராசிக்குள் ராகு, சனி, ஏழாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானம் தேவை. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். நண்பர்களுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும். உங்கள் மனம்போன போக்கில் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர் என்றாலும் குருபகவான் கவசம் போல் இருந்து உங்களைப் பாதுகாப்பார். எந்தவிதமான பிரச்னைகள் வந்தாலும் அவற்றை எதிர்த்து வெற்றி கொள்வீர்கள்.
சனி சஞ்சாரம்:
மார்ச் 6, 2026 வரை ராசிக்குள் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார். பணத்தட்டுப்பாட்டை அதிகரிப்பார். நன்றாகப் பழகி வந்தவர்களையும் உங்களை விட்டு விலக வைப்பார். இனம் புரியாத பயத்தை உண்டாக்குவார்.
வாழ்க்கைத்துணையின் உடல் பாதிப்பையும், உறவில் சங்கடத்தையும் ஏற்படுத்துவார்.
என்றாலும் ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் அவரால் உண்டாகும் பாதகம் குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: ராசிக்குள் சனி சஞ்சரிக்கும் நிலையில் ஏப்.26 முதல் ஜென்ம ராசிக்குள் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற ஆசைகள் தோன்றும். தவறானவர்களின் சகவாசத்தால் பாதை மாறும் நிலை உண்டாகும். வருமான நோக்கில் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் செல்ல வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னையை உண்டாக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் பாதிப்பை ஏற்படுத்தும். நட்புகளிடம் விரிசல், பகையை உண்டாக்கும்.
குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், மே 11 வரை குரு 4ல் சஞ்சரித்து பாதகமான பலன்களை ஏற்படுத்தினாலும், அவரது பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் மறைமுகத் தொல்லை, எதிர்ப்புகள் விலகும். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமும் ஆதாயம் அதிகரிக்கும். அதன்பின், 5ம் இட குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால், ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். நினைத்தது நடந்தேறும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் அமையும். வாழ்க்கைத்துணையை பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும், புதிய இடம், வீடு என விருப்பம் பூர்த்தியாகும். வாழ்வில் புதிய பாதை தெரியும்.
சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரிய பகவான் ஏப்.14 – மே14, ஜூலை 17 – ஆக.16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களில் அவருடைய சஞ்சார நிலைகளால் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்கு, போட்டி, பிரச்னைகளில் உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவார். உடல்பாதிப்பை அகற்றுவார். தொழிலில் லாபம் காண வைப்பார். புதிய தொழில் தொடங்க வைப்பார். அரசுவழி முயற்சிகளை வெற்றியாக்குவார்.
செவ்வாய் சஞ்சாரம்: ஏப். 14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களில் செவ்வாயின் சஞ்சார நிலைகள் சாதக பலனை ஏற்படுத்தும். பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். வரவை அதிகரிக்கும். புதிய வாயப்பை வழங்கும். துணிச்சலுடன் செயல்பட வைக்கும்.
பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டில் ஒரு பக்கம் சனி, ராகு, கேது உங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினாலும், வருட தொடக்கத்தில் அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களைப் பார்த்தும், மே 11 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து, பாக்கிய, லாப ஸ்தானங்களையும், ராசியையும் பார்த்து குரு உங்களை உயர்த்துவார். சூரியன் 120 நாட்களும், செவ்வாய் 84 நாட்களும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், வேலை, வீடு, நிலம், வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழில்:
தொழில் முன்னேற்றமடையும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் தொடங்கும் முயற்சியும், அதை விரிவுபடுத்தும் பணி வெற்றியாகும். கட்டுமானம், ரசாயனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் அடையும்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்கும், வேலைக்கும் உரிய மரியாதை ஏற்படும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். ராசிக்குள் ராகு, சனி சஞ்சரிப்பதால் குறுக்கு வழியில் வருமானம் காண நினைத்து பிரச்னைக்கு ஆளாக வாய்ப்புண்டு. நேர்மையாக செயல்படுவது நல்லது.
பெண்கள்:
ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். 7 ல் சஞ்சரிக்கும் கேது கணவருடன் மோதலை ஏற்படுத்துவார் என்பதால் குடும்ப கவுரவம், எதிர்காலம், பிள்ளைகள் நிலையை நினைத்து அனுசரித்துச் செல்வது நல்லது. மே 11 முதல் ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் பிரச்னை மறையும். கல்வி, வேலை, திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும்.
கல்வி
பெரும் பிரச்னைகளுக்கு இடையிலும் தேர்வில் கவனமாக இருந்திருப்பீர்கள்.
குருபகவானின் சஞ்சாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தேர்வு முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். உயர் கல்வி பெறும் கனவு நனவாகும்.
உடல்நிலை:
சனி, ராகு, கேது சஞ்சாரத்தால் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும். வயிறு, இதயம், மூட்டுவலி, கால்கள், கணுக்கால், காது, செரிமானக்கோளாறு, தொற்றுநோய், சிலருக்கு விபத்து என மருத்துவச் செலவு ஏற்படும்.
குடும்பம்:
குருவின் நிலை சாதகமாக இருப்பதால் தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பொன் பொருள் சேரும்.
பரிகாரம்: குச்சனுார் சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும், நன்மைகள் நடக்கும்.
பூரட்டாதி.. உழைப்பால் உயர்வீர்கள்: தன புத்திர காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1, 2, 3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருபகவானே ராசிநாதனாகவும் உள்ளனர்.
விசுவாவசு ஆண்டில் முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஏற்ற லாபம் உண்டாகும். சிலருக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவர். தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குருவின் பார்வையால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.
சனி சஞ்சாரம்: 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை ஜென்ம சனியாக பாதிப்பை ஏற்படுத்துவார். எதிர்பாராத சங்கடங்களை உண்டாக்குவார். தம்பதிக்குள் இடைவெளியை தோற்றுவிப்பார். மனதில் குழப்பத்தையும், ஆரோக்கியத்தில் பின்னடைவையும் உண்டாக்குவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரயச் சனியாக செலவை அதிகரிப்பார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட வைப்பார். தவறானவர்களின் நட்பை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தந்தையின் உடல்நிலையில் சங்கடம் ஏற்படலாம். ஆனால் ஜூலை 23 – நவ.18 காலத்தில் வக்ரம் அடைவதால் கெடுபலன் குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் ஜென்ம ராசிக்குள்ளும், கேது சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும், தவறானவர்களின் தொடர்பால் வாழ்க்கையின் பாதை மாறும். ஆசையின் காரணமாக சிலர் குறுக்கு வழியில் சம்பாதிக்கவும் முயற்சிப்பர். சட்ட சிக்கல்களுக்கும் ஆளாவீர்கள். தம்பதிக்குள் பிரச்னை உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், நெருக்கடி விலகும். செலவு அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல் பாதிப்புகள் விலகும். வியாபாரம், தொழிலில் இருந்த போட்டியாளர்கள் பலமிழப்பர்.
குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல்நிலை சீராகும், மறைமுகத்தொல்லை விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். விரயச்செலவு கட்டுப்படும். அதன்பின் 7ல் சஞ்சரித்து ஜென்ம ராசியையும், 9, 11ம் இடங்களையும் பார்க்கும் குருவால் சங்கடங்கள் நீங்கும். புதிய இடம், வீடு வாங்குவீர்கள். வருமானம் பல வழியிலும் வரும். சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். நீண்டநாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் அமையும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை 7, 9, 11 ம் இடங்களைக் குரு பார்ப்பதால் திருமணத்தடை விலகும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய இடம், வீடு சொந்தமாகும். வரவு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். அதன்பின் 8, 10, 12 ம் இடங்களுக்கு குரு பார்வை உண்டாவதால் அச்சம் குழப்பம் விலகும், மறைமுகத் தொல்லை நீங்கும். உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் இருந்த பிரச்னை தீரும். விரயச்செலவு கட்டுப்படும்.
சூரிய சஞ்சாரம்: பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 – மே 14, ஜூலை 17 – ஆக. 16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூன் 14, ஆக. 17– செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களிலும் சூரியனால் யோகம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். , போட்டி, பிரச்னைகள் என்ற நிலை மாறும். செல்வாக்கை உயர்த்துவார். தொழில், பணியில் முன்னேற்றம் தருவார்.
செவ்வாய் சஞ்சாரம்: பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 8 – ஜூலை 30, ஜன. 14 – 2026 பிப். 21 காலங்களிலும் செவ்வாயால் வாழ்வில் புதிய பாதை தெரியும். செல்வாக்கு உயரும். முயற்சிகள் வெற்றியாகும்.
பொதுப்பலன்: உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறும் ஆண்டாக இருக்கும். சனி, ராகு, கேது என பாப கிரகங்கள் பாதகத்தை ஏற்படுத்தினாலும், குருவின் பார்வைகள் பாதுகாப்பு தரும். சூரியனும், தைரியக்காரகன் செவ்வாயும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில், வேலை, உத்தியோகத்தில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழில்:
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ஆட்டோமொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், கெமிக்கல், மருந்தகம், பெட்ரோலியம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபமடையும்.
பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். வேலையில் இருந்த பயம் போகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம். பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். இளம் பெண்களுக்கு கல்வி, வேலை, திருமணம் குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
கல்வி : படிப்பின் மீது ஆர்வம் கூடும். மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லாமல் இருப்பதால் மருத்துவச்செலவு அதிகரிக்கும். மூட்டுவலி, கால்வலி, இதயக்கோளாறு, தொற்றுநோய், விபத்து என பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து குணம் பெறுவீர்கள்.
குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பொன் பொருள் சேரும்.
பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை அதிகரிக்கும்.