பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
10:04
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் பகையானவர்கள் இல்லை என்றாலும், கோச்சார சஞ்சாரத்தின் போது அவர்கள் இருவரும் தாங்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகிறார்கள். புனர்பூசம் 1, 2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்திலும், கேது மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். 4ம் பாதத்தினருக்கு ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கப் போகின்றனர்.
இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, தந்தையின் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். உங்கள் உடல் நிலையிலும் சங்கடங்களை அதிகரிப்பார். தொழிலில் தடை, நெருக்கடிகளை ஏற்படுத்துவார். மேலதிகாரிகளால் சங்கடம், நெருக்கடிகளை ஏற்படுத்துவார்.
இந்த நேரத்தில் கேது 3 ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு யோகமாகும். ராகுவால் ஒரு பக்கம் நெருக்கடி என்றால் கேதுவால் மறுபக்கம் ஆதாயம் உண்டாகும். இதுவரை ஏற்பட்ட துன்பம், வறுமை, நோய்களில் இருந்து விலகுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வருமானத்தை விட உபரி வருமானம் அதிகளவில் ஏற்படும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும்.
4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ராகு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கப் போவதால் செயல்களில் போராட்டம், தாமதம் ஏற்படும். தொழிலில் பாதிப்பு, வேலையில் நெருக்கடி, வருமானத்தில் தடை, வாகன விபத்து, நோய் நொடி, குடும்பத்தில் போராட்டம் என்ற நிலை உண்டாகும். இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் கேது, குடும்பத்தில் குழப்பம், சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவார். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடும், ஒரு சிலருக்கு பிரிவும் ஏற்படும். எதிர்பார்க்கும் வேலைகள் இழுபறியாகும். கடன் வாங்கிய பணத்தை அடைக்க முடியாத நிலை ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். அங்கிருந்து மார்ச் 6, 2026 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை நினைப்பது நடந்தேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அந்தஸ்து உயரும். வீடு, வாகனம், சொத்து என வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகள் சேரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். தடைபட்ட வருமானம் வரும். மார்ச் 6 முதல் இந்நிலையில் மாற்றம் உண்டாகும். வேலையில் எதிர்பாராத நெருக்கடி, வீண் பிரச்னை, வருவாயில் தடை, குடும்பத்தில் சிக்கல் என நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரம் மந்தமாகும். வேலைப்பளு அதிகரிக்கும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை நெருக்கடியும், அவதியும், போராட்டமும், உடல்நலக்குறைவும், நிம்மதியற்ற நிலையும் இருக்கும். சிலருக்கு விபத்தும் ஏற்படும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும், வழக்கு சாதகமாகும். வீடு, வாகனம், சொத்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நிலை சீராகும்.
குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ. 18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 11 வரை வீண் செலவுகள், அலைச்சல் ஏற்பட்டாலும் குடும்பத்தில் நிம்மதி, புதிய வீடு வாகனம், வழக்கில் வெற்றி, செல்வாக்கில் உயர்வு ஏற்படும். அதன்பின், திருமணம், குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து, வீடு, வாசல் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை குடும்பத்தில் நிம்மதி இருக்கும். திருமணம், குழந்தை பாக்யம், உயர் கல்வி, வேலை என்ற அடிப்படைகள் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். அதன்பின் விரயச்செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.
பொதுப்பலன்: புனர்பூசம் 1, 2, 3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாக்ய சனியும், மூன்றாமிட கேதுவும் குருபார்வைகளும் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். படிப்பு, வேலை, திருமணம், சொத்து சுகம் என்ற தேவைகள் நிறைவேறும். தடைபட்ட பணிகள் நடந்தேறும். 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை குருவின் சஞ்சாரமும், அதன்பின் பார்வைகளும், 2026 மார்ச் 6 முதல் பாக்ய சனியும் ஆதாயத்தை ஏற்படுத்துவர். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தொழில்: முயற்சியும் அக்கறையும் உங்களை உயர்த்தும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். ஏற்றுமதி, இறக்குமதி, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், பைனான்ஸ், மருத்துவம், கல்வி, பேக்டரி, கம்பெனி, ஹார்ட்வேர்ஸ், மெஷினரி, குடிநீர், குளிர்பானம், நகை தொழில்களில் ஆதாயம் கூடும்.
பணியாளர்கள்: அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாறுதல் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு கூடும் என்றாலும் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உடன் பணிபுரிவோரின் ஆதரவு உண்டாகும்.
பெண்கள்: உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நீண்டநாள் கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். கணவரின் ஆதரவால் எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர்கல்வி, வேலை என்ற கனவு நனவாகும்.
கல்வி: குருவின் பார்வைகளால் படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: உடல் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவத்தால் குணமாகும். என்றாலும், உடல்நிலையில் எப்போதும் கவனமாக இருப்பது அவசியம். சிலர் விபத்தை சந்திக்க வாய்ப்பிருப்பதால் வாகனப் பயணத்தில் விழிப்புடன் செயல்படவும்.
குடும்பம்: திட்டமிட்டு செயல்படுவதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பொன், பொருள் சேரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூசம்: உடல்நலனில் கவனம்
உங்கள் ராசிக்கு 9 ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து தடைகளையும், முன்னேற்றங்களையும் வழங்கி வந்த ராகு, ஏப்.26ல் 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்திலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது 2ம் இடமான தன, குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
அஷ்டம ஸ்தானம் என்னும் 8ல் சஞ்சரிக்கும் ராகு, உடல் நிலையில் சங்கடங்களுக்கு மேல் சங்கடங்களை ஏற்படுத்துவார். என்ன நோய் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நோயின் தன்மை இருக்கும். மருந்துக்கும் கட்டுப்படாமல் நோய் வாட்டி வதைக்கும். வேலைகளிலும் நெருக்கடி உண்டாகும். திடசிந்தனை இல்லாமல் குழப்பம் ஏற்படும். தொழிலில் பிரச்னைகளை சந்திக்க நேரும். தொழில் புரிவோருக்கு எதிர்பாராத நஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் தடை ஏற்பட்டு வருமானத்தில் பாதிப்பு ஏற்படும். பணியாளர்கள் அதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாக நேரும். எவ்வளவுதான் உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது.
கேதுவின் 2ம் இட சஞ்சாரத்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்திலும் நிம்மதி குறையும். குழப்பமும் பூசலும் அதிகரிக்கும். ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். உடல்நலத்தை பாதிக்கும் அளவிற்கு சங்கடம் வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்களில் தடை, பொருளாதார நெருக்கடி, வீண் செலவு, தொழிலில் முடக்கம், வருமானக் குறைவு, அதனால் சங்கடங்கள் என போராட்டமாகவே இருக்கும்.
சனி சஞ்சாரம்:
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், ராசிக்கு 8 ம் இடமான கும்பத்தில் அஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். அங்கிருந்து மார்ச் 6, 2026ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மார்ச் 6 வரை ஒன்று போய் ஒன்று என்று ஏதாகிலும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். உங்கள் கவுரவத்திற்கும் அந்தஸ்துக்கும் பின்னடைவு உண்டாகும். உடல்பாதிப்பும், தொழிலில் அவதியும், வாழ்வில் போராட்டமும், நிம்மதியற்ற நிலையும் இருக்கும். சிலருக்கு விபத்தும் ஏற்படும். மார்ச் 6 முதல் பாக்ய சனியால் இந்நிலை மாறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். வழக்கு சாதகமாகும். எதிர்ப்பு விலகும். வருமானம் அதிகரிக்கும்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், மே 11 வரை லாப குருவால் பண வரவு இருக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர் கல்வி, வேலை என்ற கனவுகள் நனவாகும். அதன் பின் விரய, ஜென்ம குருவால் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பம், தொழில், பணியில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள், வழக்குகள் முடிவிற்கு வரும்.
பொதுப்பலன்: மே 11 வரை லாப குருவும், அதன்பின் அவருடைய பார்வைகளும், 2026 மார்ச் 6 முதல் பாக்ய சனியும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். உடல்நிலை சீராகும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
தொழில்: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். நஷ்டத்தில் இயங்கி வந்த நிலை மாறும். நகை உற்பத்தி, விற்பனை, நிதிநிறுவனம், கமிஷன் ஏஜன்சி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி, இறக்குமதி, உணவகம், மருந்து, விவசாயம், கெமிக்கல் போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். ஆசிரியர், வழக்கறிஞர், காவல்துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும்.
பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் திறமைக்கு மதிப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த மாறுதலும் உயர்வும் கிடைக்கும்.
பெண்கள்: நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொன், பொருள் சேரும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். கணவருடன் இணக்கம் உண்டாகும். அக்கறை கூடும்.
கல்வி: படிப்பில் இருந்த தடைகள் விலகும். குடும்ப சூழ்நிலையும், சமூக சூழலும் உயர் கல்வியை நோக்கி நடை போட வைக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் சேருவீர்கள்.
உடல்நிலை: அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். என்ன நோய் என்பதை அறிய முடியாத அளவிற்கு சிலருக்கு பாதிப்பு இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலர் விபத்திற்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
குடும்பம்: நீண்ட நாட்களாக இருந்த நெருக்கடி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடத்தை வாங்குவீர்கள். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.
பரிகாரம்: பைரவரை வழிபட நன்மை உண்டாகும்.
ஆயில்யம்.. குடும்பத்தில் குழப்பம்: ஏப். 26 முதல் ராகு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்திலும், கேது 2ம் இடமான தன, குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் இதுவரை ராகு கேது வழங்கிய நற்பலன்களில் மாற்றம் ஏற்படும். 8ம் இட ராகுவால் எடுக்கும் காரியங்கள் இழுபறியாகும். நெருக்கமாக இருந்த உறவினர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். நெருங்கிய உறவினருக்கு கண்டமும் ஏற்படும். இருந்த இடத்தை விட்டு, வசிக்கும் ஊரை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை உண்டாகும். தொழிலில் நெருக்கடி, பாதிப்பு தோன்றும். வேலையில் பிரச்னைகள் அதிகரிக்கும். சிலர் வேலையை விட்டு வெளியேறும் சூழலும் உருவாகும். விவசாயத்தில் வளர்ச்சியற்ற நிலை இருக்கும். வருமானத்தில் தடை உண்டாகும். வாகனப் பயணத்தில் விபத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எட்டில் பாப கிரகங்கள் இருந்தால் தொட்டவை அனைத்திலும் கேடு உண்டாகும் என்பது விதி. அதனால் சுபவிஷயம் குறித்த முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தெய்வ நம்பிக்கை கொள்வதும் பக்தியில் மனதை செலுத்துவதும் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வைக்கும்.
2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், குடும்பத்தில் போராட்டம் மிகுந்திருக்கும். வீண் பிரச்னைகள் அதிகரிக்கும். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடும் சிலருக்கு பிரிவும் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். எதிர்பார்க்கும் ஒவ்வொன்றும் இழுபறியாகும். எதிலும் ஏமாற்றம் என்ற நிலை ஏற்படும். பணவரவிலும் தடைகள் உண்டாகும். அவசர செலவிற்காக கடன் வாங்கும் நிலை ஏற்படும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் நெருக்கடிக்கும் ஆளாவீர்கள். குடும்பம், தொழில், வாழ்க்கை என அனைத்திலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நண்பர்களால் பிரச்னை, வெளிநாட்டு வேலை வாய்ப்பை நம்பிய நிலையில் அதில் தோல்வி என பலவித சங்கடம் உண்டாகும்.
சனி சஞ்சாரம்:
உங்கள் ராசிக்கு 8ல் ராகு, 2ல் கேது சஞ்சரிக்கும் காலத்தில் சனி பகவானும் 2026 மார்ச் 6 வரை 8 ம் இடத்தில் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், சனி பகவானும் சங்கடத்தை ஏற்படுத்துவார் குடும்பத்தில் நெருக்கடி உண்டாக்குவார் தொழிலில் போட்டியை ஏற்படுத்துவார் முயற்சியில் தடையை உண்டாக்குவார். உடல் நிலையில் பாதிப்பை அதிகரிப்பார். சிலரை ஊரை விட்டு செல்லும் நிலையை ஏற்படுத்துவார். விபத்துகளை ஏற்படுத்தி சோதனையை அளிப்பார். தொடர்ந்து மார்ச் 6 முதல் மீன ராசியில் பாக்ய சனியாக சஞ்சரிப்பவரால் நன்மை உண்டாகும். பிரச்னை, பாதிப்பு, நெருக்கடிகள் விலகும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21 அன்று மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், மே11 வரை அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நெருக்கடிகள் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர் கல்வி, வேலை என்ற கனவுகள் நனவாகும். மே 11 க்கு பிறகு வீண் செலவுகள் தோன்றும். கையிருப்பு கரையும். புதிய இடம், வீடு, வாகனம் என உங்கள் கவுரவத்தை உயர்த்திக் கொள்வீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும்.
பொதுப்பலன்:
2 ல் கேது 8 ல் ராகு சஞ்சரிக்கும் நிலையில், குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், 2026 மார்ச் 6 முதல் பாக்கிய சனியும், சூரியன், செவ்வாய், புதனும் வாழ்க்கையை வளமாக்குவர். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
தொழில்:
தொழில் வளர்ச்சி பெறும். போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். இன்டஸ்ட்ரீஸ், ரியல் எஸ்டேட், ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், மினரல் வாட்டர், பைனான்ஸ், எக்ஸ்போர்ட், விவசாயம், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், லாபம் தரும். கலைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
பணியாளர்கள்:
வேலைப் பார்க்கும் இடத்தில் பொறுப்புடனும் கவனமாகவும் செயல்படுவது அவசியம். உடன் பணிபுரிபவர்களால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். மறைமுக எதிரிகளால் நிர்வாகத்திற்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். உங்களிடம் நல்லவர் போல் பேசிக் கொண்டே எதிராக சதி செய்வார்கள் என்பதால் யாரிடமும் ரகசியங்களை சொல்ல வேண்டாம். நிர்வாகம் பற்றி பேசவும் வேண்டாம். உங்கள் திறமைக்குரிய முன்னேற்றம், மதிப்பு உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாறுதலும் உயர்வும் கிடைக்கும்.
பெண்கள்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உயர்கல்வி, வேலை என்ற கனவு நனவாகும். கணவரின் ஆதரவு முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும் என்றாலும் இக்காலத்தில் கணவரின் உடல்நிலையில் கவனம் தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கல்வி:
வித்யா காரகனின் அருள் பெற்ற உங்களுக்கு இயல்பாகவே படிப்பின் மீது அக்கறை இருக்கும். குருவருளும் மே11 வரை உங்களுக்கு இருப்பதால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும்.
உடல்நிலை:
அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும், மருத்துவச் செலவு அதிகரிக்கும் என்றாலும் ஆயுளுக்கு பாதிப்பு இல்லை. நரம்புக் கோளாறு, மூச்சுத் திணறல், ஹார்ட் அட்டாக் போன்ற பாதிப்புகள் சிலருக்கு ஏற்படும். சிலர் விபத்தில் சிக்க வாய்ப்புண்டு கவனம்.
குடும்பம்: குடும்ப ஸ்தானத்தில் கேது, சனியின் பார்வை என்ற நிலை இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது, வார்த்தைகளில் கவனமாக இருப்பது இக்காலத்தில் அவசியம். நீண்டநாள் கனவு நனவாகும். புதிய வீடு, வாகனம் என உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட பிரச்னை விலகி நிம்மதி சேரும்.