பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
11:04
விசாகம்.. முயற்சி வெற்றி பெறும்; ஏப். 26, 2025 முதல் 1, 2, 3 ம் பாதத்தினருக்கு 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, உறவினரால் சங்கடம், எதிர்பார்ப்பில் இழுபறி, எதிர்பாலினரால் வீண் பிரச்னை, பிள்ளைகளால் அவமானம், மனதில் குழப்பத்தை உண்டாக்குவார். 4 ம் பாதத்தினருக்கு தாயாரின் நிலையில் பாதிப்பு, தாய்வழி உறவுகளால் சங்கடம், குடும்பத்தில் நிம்மதியின்மை, ஆரோக்கியத்தில் பாதிப்பு, விபத்து, தவறான நட்பால் பொருள் இழப்பு, கடன் தொல்லை, பொருளை விற்று நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துவார்.
இந்த நேரத்தில் 1, 2, 3 ம் பாதத்தினருக்கு கேதுவின் 11 ம் இட சஞ்சாரம் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகளை வெற்றியாக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். செலவிற்கு மேல் செலவாகி கையிருப்பு கரைந்த நிலை மாறி வரவிற்கு மேல் வரவு வந்து சேமிப்பை உயர வைக்கும். இழந்த செல்வாக்கு, அந்தஸ்தை மீண்டும் அடைய வைக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு மறையும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் நிலை உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது தொழிலில் தேக்கத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தில் தடைகளை அதிகரிப்பார். வேலையில் பிரச்னையை உண்டாக்குவார். வெளி வட்டாரத்தில் செல்வாக்கோடு வாழ்ந்த நிலையை மாற்றுவார்.
சனி சஞ்சாரம்:
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை செயலில் தடை, தாமதம் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். பிள்ளைகளால் வேதனையும், வாழ்க்கைத் துணையுடன் பிரச்னையும் ஏற்படும். மார்ச் 6 முதல் சனி 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்நிலை மாறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்குகள் வெற்றியாகும். 4 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை வேலைப்பளு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதகத்தை ஏற்படுத்துவார். ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்குவார். மனதில் சலிப்பை ஏற்படுத்துவார். மார்ச் 6 முதல் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பிள்ளைகள் நிலையில் சங்கடத்தை உண்டாக்குவார். அதனால் மனம் குழப்பமடையும். செயலில் தடுமாற்றம் ஏற்படும்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், 1, 2, 3 ம் பாதத்தினருக்கு மே 11 வரை எதிலும் முன்னேற்றம் காண முடியாத நிலை உண்டாகும். எதிரிகள் கை ஓங்கும். செல்வாக்கு குறையும். யோசிக்காமல் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மே 11 முதல் இந்நிலை மாறும். பாக்ய ஸ்தானத்திற்கு செல்லும் குருவால் செயல்கள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினர் மாலை சூடுவர். 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை சப்தம குரு யோகப்பலன் வழங்குவார். வருமானம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நெருக்கடி விலகும். மே 11 முதல் 8 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் யோசிக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வருமானத்தில் தடையுண்டாகும். செலவு அதிகரிக்கும்.
பொதுப்பலன்:
விசாகம் 1, 2, 3 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான கேதுவும், 2026 மார்ச் 6 முதல், 6 ம் இட சனியும், மே 11 க்கு பிறகு பாக்ய குருவும், முன்னேற்றத்தை உண்டாக்குவர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை சப்தம குருவும் அதன்பின் அவருடைய பார்வைகளும் உயர்வுக்கு வழிவகுக்கும். வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.
தொழில்:
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பணியாளர் ஒத்துழைப்பு உண்டாகும். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், ஜூவல்லரி, கமிஷன் ஏஜன்சி, பில்டர்ஸ், ரியல் எஸ்டேட், விவசாயம், பிரிக்ஸ், குடிநீர், ஆயத்த ஆடை, ஒப்பந்தத் தொழில், பேன்சி, எக்ஸ்போர்ட் தொழில்களில் வருமானம் உயரும்.
பணியாளர்கள்:
வேலையில் அதிகபட்ச கவனம் தேவைப்படும். உடன் பணிபுரிபவர்களிடம் பேச்சில் கவனம் தேவை. 1, 2, 3 ம் பாதத்தினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். 4 ம் பாதத்தினர் இக்காலத்தில் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பெண்கள் உலகைப் புரிந்து செயல்படக்கூடிய நிலை உண்டாகும். கல்வி, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். கணவருடன் இனக்கமான நிலை ஏற்படும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொழில், வியாபாரத்தில் டாப்பாக வருவீர்கள்.
கல்வி:
தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். உயர்கல்விக்குரிய ஆலோசனைகளை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதால் சிறந்த கல்லுாரியை தேர்வு செய்ய முடியும்.
உடல்நிலை:
1, 2, 3 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் பாதிப்பு தோன்றாது. பரம்பரை நோய், தொற்று நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். உடல்நிலை சீராகும். 4 ம் பாதத்தினர் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.
குடும்பம்:
இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். தம்பதிக்குள் புரிதல் உண்டாகும். வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி கனவை நனவாக்குவீர்கள்.
பரிகாரம்: திருக்கடையூர் அபிராமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அனுஷம்.. விடாமுயற்சி தேவை
உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து, மனதளவில் சங்கடம், பிள்ளைகளால் நெருக்கடியை ஏற்படுத்திய ராகு, ஏப்.26ல் 4 ம் இடமான மாதுர் மற்றும் சுக ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களைப் பாதுகாத்து வந்த கேது 10ம் இடமான ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
4ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உடல் பாதிப்பு, தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தவறான பழக்கங்களுக்கு ஆட்படும் சூழல், தாயாருக்கு பாதிப்பு, தாய்வழி உறவினரால் சிரமம், கடன் தொல்லை, எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் இழுபறி, தொழில், பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்துவார்.
கேதுவின் 10 ம் இட சஞ்சாரத்தால், முயற்சிக்கேற்ற லாபத்தை வழங்குவார். சாதாரணமாக முடிக்க வேண்டிய வேலைக்கும் விடாமுயற்சி தேவைப்படும். ஒரு பக்கம் நெருக்கடி மறு பக்கம் ஆதாயத்தை உண்டாக்குவார். உடலில் எதிர்பாராத பாதிப்பு, தொழில்மீது அக்கறை, வேலைக்காக வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சியை வெற்றியாக்குவார். மற்ற இனம், மதத்தினரால் நன்மைகளை உண்டாக்குவார்.
சனி சஞ்சாரம்:
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் 2026 மார்ச் 6 வரை எளிதாக முடிய வேண்டிய வேலையும் இழுபறியாகும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு உண்டாகும். தாயாரின் உடல்நிலை பாதிக்கலாம். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். தவறான நட்பால் தடுமாற்றம் தோன்றும். செய்து வரும் தொழில், வேலையில் அக்கறை இல்லாமல் போகும். 2026 மார்ச் 6 முதல், உங்கள் முன்னேற்றத்தில் தடை உண்டாகும். அனுபவித்து வரும் சொத்தில் பிரச்னை, வழக்கு உண்டாகும். குடும்பத்திலும் குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நிலையால் சங்கடம் உண்டாகும். மனம் குழப்பம் அடையும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். சிலருக்கு காதலால் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிவரும்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்திலும், அதன் பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால் மே 11 வரை ஏழாமிட குரு உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். வருமானமும் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பட்டம், பதவி கிடைக்கும். நெருக்கடி விலகும். மே 11 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மனம் சோர்வடையும். எடுக்கும் வேலைகளில் தடை, தாமதம் ஏற்படும். எந்த ஒன்றையும் யோசிக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வருமானத்தில் தடையுண்டாகும். செலவு அதிகரிக்கும் என்றாலும் குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு குருவின் பார்வை இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் நெருக்கடி விலகும்.
பொதுப்பலன்:
மே 11 வரை சப்தம குருவும், அதன்பின் அவருடைய பார்வைகளும் சாதகமாக இருப்பதால் உங்களின் நிலை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.
தொழில்: தொழில் மீது அதிக அக்கறை தேவைப்படும். பணியாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட், ஆன்லைன் வியாபாரம், விவசாயம், பத்திரிகை, பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் வியாபாரம், நிதி நிறுவனம், தங்கம், வெள்ளி நகை வியாபாரம், உணவகம், மருந்தகம், ரசாயனம், இயந்திரத் தொழிற்சாலை, விவசாயப் பொருட்கள், சிறு தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்: செய்து வரும் வேலையில் அதிகபட்ச கவனம் தேவைப்படும். சிலர் பார்த்து வரும் வேலையை இழக்கும் நிலையும் ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு மெமோ, எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இக்காலத்தில் நேர்மை, உண்மையாக செயல்படுவது அவசியம். தங்கள் அதிகாரத்தை வைத்து தவறு செய்வோருக்கு சங்கடம் அதிகரிக்கும்.
பெண்கள்:
சுக ஸ்தானத்தில் பாப கிரகம் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஒன்றுவிட்டு ஒன்று என சங்கடங்கள் தோன்றும். சிலருக்கு எதிர்பாலினரால் ஏமாற்றம், அவமானம் ஏற்படலாம். பிறரின் விமர்சனத்திற்கும் ஆளாக நேரிடும். இக்காலத்தில் கணவரின் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம். இளம் பெண்களுக்கு கல்வி, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும்.
கல்வி:
தேர்வில் வெற்றி பெற்றாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போகும். உயர் கல்விக்காக நிறைய முயற்சிகள் தேவைப்படும். பணமும் அதிகளவில் செலவாகும். சிலர் மேற்படிப்பிற்காக வெளிமாநிலம், வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு.
உடல்நிலை:
சுக ஸ்தானத்தில் ராகு, சனி சஞ்சரிப்பதால் பரம்பரை நோய், ரகசிய நோய், விபத்து என அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டியிருக்கும். செலவு அதிகரிக்கும். மனதில் நிம்மதி இல்லாமல் போகும். இக்காலத்தில் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.
குடும்பம்:
குரு பகவானின் சஞ்சாரம் பார்வை சாதகமாக இருப்பதால் எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டால் தடை அனைத்தும் விலகும்.
கேட்டை.. விடாமுயற்சியால் வெற்றி
ஏப். 26 முதல் ராகு 4ம் இடமான மாதுர், சுக ஸ்தானத்திலும், கேது 10ம் இடமான ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் இதுவரை ராகு கேது வழங்கி வந்த நற்பலன்களில் மாற்றம் ஏற்படும். 4ம் இட ராகுவால், உடலில் ஏதேனும் ஒரு பிரச்னை உண்டாகிக் கொண்டே இருக்கும். அதன் காரணமாக மனநிலையும் பாதிக்கும். மனைவி, சகோதரிகளால் செலவு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காமல் போகும். எப்படியாவது சேமிக்க நினைத்தாலும் அது முடியாமல் போகும். உழைப்பின் மீது எண்ணம் போகாமல் தவறான பாதையில் மனம் செல்லும் என்பதால், வருமானத்தைப் பற்றிய சிந்தனைகளில் கவனம் இல்லாமல் போகும். உங்கள் சந்தோஷத்திற்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள். சிலர் தவறான பழக்க வழக்கங்களால் உடல் நிலையைக் கெடுத்துக் கொள்வர். சிலருக்கு ரகசிய நோயால் அவஸ்தை உண்டாகும். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். புதிய நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் உண்டாகும். உறவினர்கள் கருத்து வேறுபாட்டால் விலகிச் செல்வர். தாயாரின் உடலில் பாதிப்பு உண்டாகும். அவருக்காக மருத்துவச் செலவு அதிகரிக்கும். வீடு வாகனத்தால் சிரமம் ஏற்படும். சிலர் சட்டத்திற்கு புறம்பான வழியில் செயல்பட்டு சிக்கலுக்கு ஆளாகலாம்.
10ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், முன்னேற்றத்திற்குரிய வழிகள் உண்டாகும். தொட்டது துலங்கும். எதிர்பார்த்த செயல்கள் வெற்றிகரமாக முடியும். பிரபலங்களின் ஆதரவு, உதவி இக்காலத்தில் கிடைக்கும். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் விடாமுயற்சி தேவைப்படும். உழைப்புக்கேற்ற வகையில் லாபம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் வகையில் உதவி கிடைக்கும். பொன், பொருள் சேமிப்பு அதிகரிக்கும். முதலாளி அல்லது மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணத்தில் இருந்த தடைகள் அகலும். பிற இனம், மதத்தினரின் உதவி கிடைக்கும். குறுக்கு வழியில் சிலர் லாபம் அடைவர். சிலர் தீய பழக்க வழக்கத்திற்கு அடிமையாகலாம் கவனம். இவை எல்லாம் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் உண்டாகப் போகும் பலன்களாகும்.
சனி சஞ்சாரம்:
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 2026 மார்ச் 6 வரை, ஒவ்வொரு வேலையையும் சிரமப்பட்டே முடிக்க வேண்டியதாக இருக்கும். வேலையில் நெருக்கடி இருக்கும். செய்யும் தொழிலில் தடைகள் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு உண்டாகும். 2026 மார்ச் 6 முதல் 5ம் இட சனியால், குடும்பத்தில் பிரச்னைகள், தம்பதியரிடையே கருத்து வேறுபாடு, தொழிலில் முன்னேற்றமின்மை, பிள்ளைகளால் அவமானம், சங்கடம் ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் உண்டாகும்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், மே 11 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கும் குருவால் குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். நெருக்கடிகள் விலகும். மே11 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொதுப்பலன்:
சுக ஸ்தானத்தில் ராகு, சனி சஞ்சரித்தாலும் மே11 முதல் அங்கு குருபார்வை உண்டாவதால் இந்த ஒன்றரை ஆண்டு காலமும் முன்னேற்றமான ஆண்டாகவே இருக்கும். 3,6,11 ல் செவ்வாய், 3,6,10,11 ல் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களில் நினைத்த வேலைகள் எல்லாம் நடந்தேறும். தடைபட்ட முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்.
தொழில்:
குருவின் பார்வைகளும், ஜீவன ஸ்தான கேதுவும் செய்யும் தொழில் மீது அதிக அக்கறையை அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். ஷேர் மார்க்கெட், பைனான்ஸ், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், கம்ப்யூட்டர், ஹார்ட்வேர், இன்பர்மேஷன், கெமிக்கல், மருந்தகம், கல்வி நிறுவனம், நோட்டுப்புத்தக தயாரிப்பு, பப்ளிகேஷன்ஸ், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்:
உழைப்பிற்கும், திறமைக்கும் உரிய மரியாதை கிடைக்கும். நேர்மையாக செயல்பட்டு வருபவர்கள் உயர்வு பெறுவர். நிர்வாகத்தின் ஆலோசனையைப் பின்பற்றுவதால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு வெளிநாட்டுப் பணிக்கு செல்வர். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
பெண்கள்:
குருபார்வை மே 11 வரை ராசிக்கும், அதன் பிறகு 2, 4 ம் இடங்களுக்கும் கிடைப்பதால், படிப்பு, வேலை, திருமணம் என்ற நிலையை எட்டுவீர்கள். பணியாளர்களுக்கு விரும்பிய இட மாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 2026 மார்ச் 6க்கு பிறகு குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் உண்டாகும். கணவரின் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும்.
கல்வி: படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்விலும் வெற்றி உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்படிப்பிற்காக வெளிமாநிலம், வெளிநாடு செல்வர்.
உடல்நிலை: 4 ம் இடத்தில் பாப கிரகங்கள் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சின்னச்சின்ன சங்கடங்கள் தோன்றும். மே11 முதல் சுக ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆனாலும் தொற்று நோய்க்கு இடம் தராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
குடும்பம்: உங்கள் ராசிக்கும், தொடர்ந்து குடும்ப ஸ்தானத்திற்கும் குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொன், பொருள் சேரும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.
பரிகாரம்: மதுரை மீனாட்சியம்மனை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.