கடகம் : புனர்பூசம் 4 ம் பாதம்..: தெளிவான சிந்தனையும், பிறருக்கு வழிகாட்டும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, மார்கழி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வந்த குரு வக்கிரம் அடைந்துள்ள நிலையில், உங்கள் செயல்களில் சின்னச் சின்ன தடுமாற்றம் வரலாம். யோசிக்காமல் ஒரு வேலையில் ஈடுபட்டு அதனால் சங்கடப்பட நேரலாம். உங்கள் தன குடும்பாதிபதி சூரியன், பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ளக் கூடிய வலிமை உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்குகள் என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம் சமாதானம் பேசக் கூடிய அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடியான நிலை மாறும். சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலை மேலும் விரிவு செய்யக் கூடிய அளவிற்கு வசதி அதிகரிக்கும். தேவையான பணம் வரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூசம்
பொறுமையாக செயல்பட்டு சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சனி, அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல், மனநிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். வீண் பிரச்னைகள் உங்களைத் தேடிவரும். வேலை பார்க்கும் இடத்தில் மறைமுகத் தொல்லை உண்டாகும். வியாபாரம், தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பெண்களுக்கு 8 ம் இடம் என்பது மாங்கல்ய ஸ்தானம் என்பதால் கணவரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். யோகக்காரகன் ராகுவும் 8ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய ரகசியம், மறைமுக செயல்பாடுகள் வெளியில் தெரிய வரும். உங்களைச் சுற்றி இருப்பவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் சங்கடம், அந்நியரால் வீண் பிரச்னை என்ற நிலை ஏற்படும். தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளால் சங்கடத்தை சந்திக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும் என்றாலும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்வரும் சங்கடம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். பிரச்னை, நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கக் கூடிய சக்தி உண்டாகும். யாமிருக்க பயமேன் எனச் சொல்லும் முருகன் போல ஆறாம் இடத்து செவ்வாய் உங்களைப் பாதுகாப்பார். தலை நிமிர்ந்து நடை போட வைப்பார். உங்கள் குடும்பாதிபதி சூரியனும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். புதிய தொழில் தொடங்கவும் வெளிநாடு செல்லவும் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். டிச. 21 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்க முடியும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 25
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 20, 26, 29. ஜன. 2, 8, 11
பரிகாரம் தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
ஆயில்யம்
சக மனிதர்களின் மன நிலை தெரிந்து அதற்கேற்ப செயல்படும் உங்களுக்கு, மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். டிச. 21 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் பொன் பொருள் சேர்க்கைக்கு வழி காட்டுவார். புதிய இடம் வீடு, வாகனம் வாங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கணவன், மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிப்பார். உங்கள் நட்சத்திர நாதன் புதன் டிச. 25 முதல் தடைபட்ட வேலைகளை முடித்துக் கொடுப்பார். எதிர்பார்த்த பணம் இந்த நேரத்தில் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சுமூக நிலை ஏற்படும். வியாபாரம் வளர்ச்சி பெறும். இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். சட்ட ரீதியாக ஏற்பட்ட சங்கடம் விலகும். அஷ்டம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சனி ஆட்சியாக சஞ்சரித்தாலும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், செவ்வாய், டிச. 25 முதல் புதன் உங்கள் வேலைகளை வெற்றியாக்குவர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்குவர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.