SS தெய்வ மணிமாலை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தெய்வ மணிமாலை
தெய்வ மணிமாலை
தெய்வ மணிமாலை

திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் அருளியது

1. திருவோங்கு புண்ணியச் செயலோங்கி, அன்பருள்
திறலோங்கு செல்வம் ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பந்
திகழ்ந்தோங்க அருள் கொடுத்து
மருவோங்கு செங்கமல மலரோங்கு வணம் ஓங்க
வளர்கருணை மயமோங்கி, ஓர்
வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி, ஆனந்த
வடிவாகி யோங்கி ஞான
உருவோங்கும் உணர்வினிறை யொளியோங்கி, ஓங்குமயில்
ஊர்ந்தோங்கி, எவ்வுயிர்க்கும்
உறவோங்கி நின்பதமென் உளமோங்கி வளமோங்க
உய்கின்ற நாள் எந்தநாள் ?
தருவோங்கு செனையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

2. வள்ளலுனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
மதித்திடுவ தன்றி, மற்றை
வானவரை மதியென்னில், நானவரை யொருகனவின்
மாட்டினும் மறந்தும் மதியேன்
கள்ளமறும் உள்ளமுறுப்பதின் பதமலால்,வேறு
கடவுளர் பதத்தை அவரென்
கண்ணெதிர் அடுத்(து) ஐய நண்ணென அளிப்பினும்
கடுவென வெறுத்து நிற்பேன்
எள்ளளவும் இம்மொழி யிலேசுமொழி அன்(று),உண்மை,
என்னையாண் டருள் புரிகுவாய்
என் தந்தையே யெனதுதாயே யென்இன்பமே
என்றன் அறிவே யென் அன்பே
தள்ளரிய சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
சண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

3. ஆதிபூசை முதல்நல் கிரியையால், மனமெனும்
பாவனை யறச் சுத்த பாவனையில் நிற்கும்; மெய்ப்
பதியோக நிலைமை யதனால்,
மதிபாசம் அற்(று),அதின் அடங்கிடும்; அடக்கவே
மலைவின் மெய்ஞ்ஞான மயமாய்
வரவு போக்கற்ற நிலை கூடுமென, எனதுளே
வந்துணர்வு தந்த குருவே
துதிவாய்மை பெறுசாந்த பதமேவு மதியமே
துரிசறு சுயஞ் சோதியே
தோகை வாகன மீ(து) இலங்கவரு தோன்றலே
சொல்லரிய நல்ல துணையே
கதிபெறுஞ் சென்னையிற்  கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

4. காமவுள் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனும் துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமமறு மாச்சரிய விழலனும் கொலையென்று
இயம்பு பாதகனுமாய் இவ்
எழுவரும், இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றிடாமல் அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பத
சிந்தையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ
தேசிக சிகா ரத்னமே
தாமமொளிர்  சென்னையிற் கந்தகோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

5. ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு  சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

6. ஈயென்று நானொருவர் இடம்நின்று கேளாத
இயல்பும், என்னிடம் ஒருவர் ஈது
இடுவென்ற போதவர்க்கு இலையென்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்,இறையாம்
நீயென்றும் எனைவிடா நிலையும், நான் என்றும் உன்
நினைவுவிடா நெறியும் அயலார்
நிதியொன்றும் நயவாத மனமும்,மெய்ந் நிலையென்றும்
நெகிழாத திடமும், உலகிற்
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
தீங்குசொல்லாத தெளிவும்
திரமொன்று வாய்மையும் தூய்மையுந் தந்துநின்
திருவடிக்(கு) ஆளாக்குவாய்
தாயொன்று சென்னையிற்  கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

7. பார்கொண்ட நடையில் பசிகொண்டு வந்து இரப்
பார்முகம் பார்த்திரங்கும்
பண்பும் ; நின் திருவடிக்கன்பும், நிறை ஆயுளும்
பதியும் நன்னதியும் உணர்வும்
சீர்கொண்ட நிறையும் உள்பொறையும் மெய்ப்புகழும் நோய்த்
தீமை ஒரு சற்றும் அணுகாத்
திறமும் மெய்ந்திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ்
செப்புகின்றோர் அடைவர் காண்
கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும் ஒரு
கோழியங் கொடியும் விண்ணோர்
கோமான்றன் மகளும் ஒரு மாமான்றன் மகளும் மால்
கொண்ட நின் கோலம் மறவேன்
தார்கொண்ட சென்னையிற்  கந்தகோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

8. உப்புற்ற பாண்டமென ஒன்பது துவாரத்துள்
உற்(று) அசும்(பு) ஒழுகும் உடலை
உயர்கின்ற வானிடை யெறிந்தகல் என்றும் மலை
உற்றிழியும் அருவி யென்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகமுறு
மின்னென்றும் வீசு காற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேட மென்றும்
கப்புற்ற பறவைக் குடம்பை யென்றும் பொய்த்த
கனவென்றும் நீரில் எழுதும்
கையெழுத்(து) என்றும் உள் கண்டுகொண்டு அதிலாசை
கைவிடேன் என் செய்குவேன்
தப்பற்ற சென்னையிற்  கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

9. எந்தை நினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர்தலை
இகழ் விற(கு) எடுக்கும் தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்த அழுகண்
கடவுள் நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்(து) இழவுகேட்கும் செவி
பந்தமற நினைஎணாப் பாவிகள்தம் நெஞ்சம்
பகீரென நடுங்கும் நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
பலியேற்க நீள் கொடுங்கை
சந்தமிகு சென்னையிற்  கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

10. ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதென்
அமுதுண்டு உவந்த திருவாய்
அப்ப நின் திருவடி வணங்கினோர் தலை முடி
அணிந்தோங்கி வாழும் தலை
மெய்யநின் திருமேனி கண்ட புண்ணியர் கண்கள்
மிக்க ஒளி மேவு கண்கள்
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
விழாச்சுபம் கேட்கும் செவி
துய்யநின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய்
சுகரூபமான நெஞ்சம்
தோன்றல் உன் திருமுன் குவித்த பெரிபோர் கைகள்
சுவர்ணம் இடுகின்ற கைகள்
சையமுயர் சென்னையிற்  கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

11. மனமான ஒரு சிறுவன் மதியான் குருவையும்
மதித்திடான் நின் அடிச்சீர்
மகிழ் கல்வி கற்றிடான், சும்மா இரான், காம
மடுவினிடை வீழ்ந்து சுழல்வான்
சினமான வெஞ்சுரத்து உழலுவன், உலோபமாம்
சிறுகுகையினூடு புகுவான்
செறுமோக இருளிடைச் செல்குவான், மதமெனும்
செங்குன்றில் ஏறி விழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
இறங்குவான் சிறிதும், அந்தோ
என்சொல் கேளான்; எனது கைப்படான், மற்றிதற்கு
ஏழையேன் என்செய்குவேன்
தனநீடு சென்னையிற்  கந்தகோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

12. வாய்கொண்டு உரைத்தலரிது என்செய்கேன் என்செய்கேன்
வள்ளல் உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனது மனது,
பேய்கொண்டு கள்ளுண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்டவன் குரங்கோ
பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ
பேதை விளையாடு பந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங்கோ பெருங்
காற்றினால் சுழல் கறங்கோ
கால வடிவோ இந்த்ர ஜால வடிவோ எனது
கர்ம வடிவோ அறிகிலேன்
தாய்கொண்ட சென்னையிற்  கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

13. கற்ற மேலவரோடும் கூடிநில்லேன் கல்வி
கற்கும் நெறி நேர்ந்து கல்லேன்
கனிவு கொண்டு உனது திருவடியை ஒரு கனவிலும்
கருதிலேன் நல்ல னல்லேன்
குற்றமே செய்வதென குணமாகும், அப்பெருங்
குற்றம் எல்லாம் குணமெனக்
கொள்ளுவது நின் அருட் குணமாகும் என்னில், என்
குறைதவிர்த்து அருள் புரிகுவாய்
பெற்றமேல் வரும் ஒரு பெருந்தகையின் அருளுருப்
பெற்றெழுந்(து) ஓங்கு சுடரே
பிரண வாகார சின்மய விமல சொரூபமே
பேதமில் பரப்பிரமமே
தற்றகைய சென்னையிற்  கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

14. பாய்ப்பட்ட புலியன்ன நாய்ப்பட்ட கயவர் தம்
பாழ்ப்பட்ட மனையில், நெடுநாள்
பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
பட்டபா டாகும்; அன்றிப்
போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடு; நல்
பூண்பட்ட பாடு தவிடும்;
புண்பட்ட உமியும் உயர் பொன்பட்ட பாடு; அவர்கள்
போகம், ஒரு போக மாமோ
ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்னடிக்கு
ஆட்பட்ட பெரு வாழ்விலே
அருள்பட்ட நெறியும், மெய்ப் பொருள்பட்ட நிலையுமுற
அமர் போகமே போகமாம்
தாய்ப்பட்ட சென்னையிற்  கந்தகோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

15. சேவலங் கொடிகொண்ட நினையன்றி வேறு சிறு
தேவரைச் சிந்தை செய்வோர்,
செங்கனியை விட்டு வேப்பங்கனியை யுண்ணும் ஒரு
சிறு கருங் காக்கை நிகர்வார்
நா அலங்காரமற வேறுபுகழ் பேசி, நின்
நற்புகழ் வழுத்தாதபேர்
தாய்ப்பால் விரும்பி ஆன் தூய்ப்பாலை நயவாத
நவையுடைப் பேயர் ஆவார்
வேலந்தர நினது குற்றேவல் புரியாது
நின்று மற்றேவல் புர்வோர்
நெல்லுக்(கு) இறைக்காது புல்லுக்(கு) இறைக்கின்ற
நெடிய வெறு வீணர் ஆவார்
நாவலஞ் சென்னையிற்  கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

16. பிரமன் இனி யென்னைப் பிறப்பிக்க வல்லனோ
பேய்ச்சிறையில் இன்னும் ஒருகால்
பின்பட்டு நிற்குமோ முன்பட்ட குட்டிற்
பெறுந்துயர் மறந்து விடுமோ
இரவு நிறமுடை இயமன் இனியெனைக் கனவிலும்
இறப்பிக்க எண்ண முறுமோ
எண்ணுறான் <உதையுண்டு சிதையுண்ட தன்னுடல்
இருந்தவடு எண்ணு றானோ
கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனையொரு
காசுக்கும் மதியேன்; எலாம்
கற்றவர்கள் பற்றும் நின் திருவருளை யானும்
கலந்திடப் பெற்று நின்றேன்
தரமருவு சென்னையிற்  கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

17. நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற
நிலனுண்டு பலனும் உண்டு
நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதியுண்டு
நெறியுண்டு நிலையும் உண்டு
ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணிவுண்டு
உடையுண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தமுறும்
உளமுண்டு வளமும் உண்டு
தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும் உண்டு
தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானம் உண்டாயில் அரசே !
தாருண்ட சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

18. உளம் எனது வசம் நின்றதில்லை, என் தொல்லைவினை
ஒல்லை விட்டிடவும் இல்லை
உன்பதத்(து) அன்பில்லை என்றனுக்(கு) உற்றதுணை
உனையன்றி வேறும் இல்லை
இளையன் அவனுக்(கு) அருள வேண்டும் என்று உன்பால்
இசைக்கின்ற பேரும் இல்லை
ஏழை அவனுக்(கு) அருள்வதேன் என்று, உன் எதிர் நின்று
இயம்புகின்றோரும் இல்லை
வளமருவும் உனது திருவருள் குறைவ(து) இல்லை,மேல்
மற்றொரு வழக்கும் இல்லை
வந்(து) இரப்போர்களுக்கு இலை யென்பதில்லை, நீ
வன் மனத்தவனும் அல்லை
தளர்விலாச் சென்னையிற்  கந்தகோட் டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

19. எத்திக்கும் என்னுளம் தித்திக்கும் இன்பமே
என்னுயிர்க்கு உயிராகும் ஓர்
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என் பெருஞ் சேல்வமே,நன்
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
மூர்த்தியே,முடிவில்லாத
முருகனே நெடியாமல் மருமகனே சிவபிரான்
முத்தாடும் அருமை மகனே
பத்திக்(கு) உவந்து அருள் பரிந்தருளும் நின்னடிப்
பற்(று) அருளி என்னை இந்தப்
படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவரைப்
பண்ணாமல், ஆண்டருளுவாய்
சத்திக்கும் நீர்ச் சென்னை கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

20. நான்கொண்ட விரதம், நின் அடியலால் பிறர் தம்மை
நாடாமை யாகும்; இந்த
நல்விரத மாங்கனியை, இன்மையெனும் ஒருதுட்ட
நாய்வந்து கவ்வி, அந்தோ
தான்கொண்டு போவ(து) இனி என்செய்வேன் என்செய்வேன்
தளராமை என்னும் ஒருகைத்
தடிகொண்(டு) அடிக்கவோ வலியிலேன்,சிறியனேன்
தன் முகம் பார்த்தருளுவாய்
வான்கொண்ட தெள்ளமுத வாரியே மிகுகருணை
மழையே மழைக் கொண்டலே
வள்ளலே என்னிரு கண்மணியே என் இன்பமே
மயிலேறும் மாணிக்கமே
தான்கொண்ட சென்னையிற்  கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
 
தெய்வமணி மாலை முற்றுப் பெற்றது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar