SS கந்தர் அனுபூதி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கந்தர் அனுபூதி
கந்தர் அனுபூதி
கந்தர் அனுபூதி

காப்பு

விபூதி தியானம்

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

நூல்

1.  மதயானையை வெல்ல

ஆடும் பரிவேல் அணி சேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே.

2. வணங்காரை தண்டிக்க

உல்லாச நிராகுலயோ கவிதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே.

3. கல்வியில் மெச்ச

வானோ புனல் பார்கனன் மாருதமோ
ஞானோதயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனைஆண்ட இடந்
தானோ பொருளாவது சண்முகனே.

4. துறவு பெற

வளைபட்ட கைமாதொடு மக்களெனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

5. மாயை ஒழிக்க

மகமாயை களைந்திட வல்லபிரான்
முகம்ஆ றும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் மாடை மடந்தையர் என் று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

6. மாதரைத் தழுவ

திணியா னமனோ சிலைமீ துஉனதாள்
அணியார் அரவிந் தம்அரும் புமதோ
பணியா எனவள் ளிபதம் பணியும்
தணியா அதிமோ கதயா பரனே.

7. தீராப்பணி தீர

கெடுவாய் மனனே கதிகேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
கடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.

8. குடிகளை தன்வசமாக்க

அமரும் பதிகேள் அகம்ஆம் எனும் இப்
பிமரம் கெடமெய்ப்பொருள் பேசியஆ
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொருதான வநாசகனே.

9. பெண்ணாசை ஒழிக்க

மட்டூர் குழல் மங்கையர்மை யல்வலைப்
பட்டு ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டூடறவேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

10. நமனை விலக்க

கார்மா மிசைக்கா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் துஎதிரப் படுவாய்
தார்மார் ப வலா ரிதலா ரிஎனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

11. தணிகை சேர்க்க

கூகா எனஎன் கிளைகூ டியழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசிய வா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகாசுரலோக சிகாமணியே.

12. களவு வெல்ல

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல் அறஎன்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

13. இருள் வழி நடக்க

முருகன் தனிவேல் முனிநங்குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியுந்தரமோ
<உருஅன்று அருஅன்று உளதுஅன்று இலதுஅன்று
இருள்அன்று ஒளிஅன்று எனநின்றதுவே.

14. பாரி தரிசனம் செய்ய

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவிஆம்
ஐவாய் வழிசெல்லும் அவா வினையே.

15. அஷ்டாவதானம் செய்ய

முருகன் குமரன் குகன்என்று மொழிந்து
உருகுஞ்செய் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குணபஞ்சரனே.

16. பேராசை விலக்க

பேராசை எனும் பிணியிற் பிணிபட்டு
ஓரா வினையேன் <உழலத் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே.

17. தன்னடத்தை மேன்மையாக்க

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே.

18. கற்பழியாதிருக்க

உதியா மரியா வுணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகா வலசூர பயங்கரனே.

19. இல்வாழ்க்கை நீக்க

வடிவுந் தனமும் மனமும் குணமும்
குடியுங் குலமும் குடிபோகிய ஆ
அடிஅந்தம் இலா அயில்வேல் அரசே
மிடியென்றொரு பாவிவெளிப் படினே.

20. அனுக்கிரகம் பெற

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியஆ
விரிதாரண விக்ரமவேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

21. திருவடி வணங்க

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரஎன்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே.

22. தவம் பெற

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியஆ
பாளைக் குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே.

23. சலிகை சொல்ல

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங்குண பூதரனே.

24. மாதர் வலையில் அகப்படாதிருக்க

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொலைத்த நெடும்
போர்வேல புரந்தர பூபதியே.

25. மகாவினை ஒழிக்க

மெய்யே எனவெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே நியசே வகனே.

26. யாருமற்ற பேருக்கு ஆதாரமாக

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒருசற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மனோ
தீதா சுரலோக சிகாமணியே.

27. பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க

மின்னே நிகர்வாழ்வை விரும்பியயான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயில் ஏறியவானவனே.

28. தான் அவனாக

ஆனா அமுதே அயில்வே அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றதுதற் பரமே.

29. கடவுள் முன் கோபம் மாற்ற

இல்லே எனும் மாயையில் இட்டனைநீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரிபன்னிருவா குவில்என்
சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே.

30. வழக்கு பேச

செவ்வான் உருவின் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

31. கடவுள் முன்னிலையில் ஞானம் பெற

பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னைவிதித் தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே.

32. கொலை மறக்க

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரிவேடர் குலப் பிடிதோய்
மலையே மலைகூ றிடுவா கையனே.

33. வியாகூலம் ஒழிக்க

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்றுவிடப் பெறுவேன்
மந்தாகினி தந்தவரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே.

34. பெண்களைத் தாயாக நினைக்க

சிங்கார மடந்தையர் தீ நெறிபோய்
மங்காமல் எனக்குவரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே.

35. சரீர வாஞ்சை ஒழிக்க

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதி காணமலர்க் கழல்என்று அருள்வாய்
மதிவாள் நுதல்வள்ளியை அல்லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே,

36. கடவுளைக் காண

நாதா குமரா நமஎன்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின்பத சேகரனே.

37. தனது அகந்தையை ஒழிக்க

கிரிவாய் விடுவிக்ரமவேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம்மே வலையே
புரிவாய் மனனே பொறைஆம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

38. பிசாசம் ஒழிக்க

ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாளகிரா தகுலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

39. ஜனனம் எட்டாதிருக்க

மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கரதே சிகனே.

40. மாயை தெளிய

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

41. நித்திய தேகம் பெற

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
சாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே.

42. நின்ற நிலை நிற்க

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த் திடலும்
செறிவற்று உலகோடு உரைசிந்தையும்அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

43. ஆசானாகி அனுக்கிரகிக்க

தூசாம் அணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதுஅன்பு அருளால்
ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

44. குரு மந்திரம் பெற

சாடுந் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர்மா முடிவே தமும்வெம்
காடும் புனமும் கமழுங் கழலே.

45. கல்வியிற் சம்பாவிக்க

கரவாகிய கல்வியுளார் கடைசென்று
இரவா வகை மெய்பொருள் ஈ குவையோ
குரவா குமரா குலிசாயுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.

46. மனவருத்தம் தீர

எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ
சிந்தாகும் ஆனவை தீர்த்தெனைஆள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.

47. ஆனந்த நடனம் காண

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறும்ஆறு உளதோ
சீறா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறுஆ உலகம் குளிர்வித்தவனே.

48. தற்சொரூபம் காண

அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறவுஒன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவுஒன்று அறவந்து இருளே சிதைய
வெறிவென்றவரோடு உறும் வேலவனே.

49. தன்னை அறிந்து கொள்ள

தன்னந்தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே.

50. அவா அறுக்க

மதிகெட் டுஅறவாடி மயங்கி அறக்
கதிகெட் டுஅவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞானசுகாதிப அத்
திதிபுத்திரர் வீறு அடு சேவகனே.

51. நினைத்தபடி தரிசனம் கொடுக்க

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

வேலும் மயிலும் துணை!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar