SS திருவெம்பாவை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருவெம்பாவை
திருவெம்பாவை
திருவெம்பாவை

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை

பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பொருள்: வாள் போன்ற நீண்ட கண்
களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.

பாடல் 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

பொருள்: ""அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து, ""தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர்,""கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.

விளக்கம்: தேவலோகத்தில் சிவபவனி கிடையாது. அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா. சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல் 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச ÷வண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், ""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

விளக்கம்: ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இந்தப் பாடல் உணர்த்தும் கருத்து.

பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

பொருள்: ""ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் ÷தவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.

விளக்கம்: இறைவனை அடைய "நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட வேண்டும். அதை விட்டுவிட்டு, "அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே உண்டியலில் லட்சம் ரூபாய் போட்டால் கடவுளை அடைந்து விடலாமா?இவனைப் போல் தியானத்தால் அடைந்து விடலாமா? என்று யோசனை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: ""நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்ன
மாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்"சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை  உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.

விளக்கம்: ""கடவுளா...அவரை எனக்குத் தெரியாதா... அவரைத் தான் தினமும் பார்க்கிறேனே! தினமும் கோயிலுக்குப் போகவேண்டுமென்று கட்டாயமா என்ன! புதிதாகஅவரிடம் என்ன காணப்போகிறோம்! வருஷம் தோறும் வருகிற மார்கழி தானே! கட்டாயம் காலையில் எழ வேண்டுமா என்ன! என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதுபோல் தான் தோழியின் நிலை இருக்கிறது. இந்த அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில், இறைவனின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்கள் சக தோழியர்.

பாடல் 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், "உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

விளக்கம்: இறைவனை தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வணங்க வேண்டும் என்பதை பாடல் அடிகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளை விட செயலே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் இப்பாடல் சொல்கிறது. ஒன்றைச் சொல்லிவிட்டால், அதைச் செய்தே தீர வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி தலைகுனிய நேரிடும் என்பதும் இப்பாடல் உணர்த்தும் தத்துவம்.

பாடல் 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?

விளக்கம்: அதிகாலை வேளையில் தூங்கவே கூடாது. நம் பணிகள் காலை நாலரைக்கெல்லாம் துவங்கி விட வேண்டும். மார்கழியில் பனியடிக்கிறதே என்றெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. எல்லா தட்பவெப்பங்களுக்கும் தகுந்தாற் போல், நம் உடலைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். காலை தூக்கத்தில் இருந்து விடுபடுவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்.

பாடல் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள்: தோழியை எழுப்ப வந்த பெண்கள், ""அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

விளக்கம்: இறைவன் மனிதர்களின் உள்ள இருளைப் போக்குபவர். பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ, அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை சிவபெருமான் ஒளி வெள்ளமாக்குகிறார் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

பொருள்: கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம்என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.

விளக்கம்: "தனக்கு வரும் கணவன், சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், வாகனம் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திப்பர்வர்கள் பெருகி விட்ட காலம் இது! இந்த செல்வம் நிலைத்திருக்குமா! இந்த செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்களா! பக்திமான் ஒருவன் எனக்கு கணவனாக வேண்டும் என்று கேட்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலாவது இன்று இருக்கிறார்களா? அன்றைய பெண்கள் தங்கள் கணவன் பக்திமானாக அமைய வேண்டுமென விரும்பினர். அதை இறைவனிடம் கேட்டனர். செல்வச்சீமான்களால் நிம்மதியைத் தர முடியாது. பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்க்கை அமையலாம். ஆனால், அதில் இருக்கும் மனநிம்மதி யாருக்கு கிடைக்கும்? என்பது இந்தப் பாடலின் உட்கருத்து.

பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

விளக்கம்: சிவனின் பெருமையை உயர்த்திச் சொல்லும் பாடல் இது. "போதார் புனை முடியும் என்ற வரிக்கு "மலர்களை அணிந்தவன் என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா? "உனக்கு மல்லிகையையும், ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்கு பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன்.

பாடல் 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

பொருள்: சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் "முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!

விளக்கம்: உலகத்தில் எல்லா உயிர்களையும் இறைவன் ஆட்கொள்ளத்தான் போகிறான்! யானையும், சிலந்தியும், பறவைகளும் கூட அவனால் ஆட்கொள்ளப்பட்ட தகவல்களை நாம் படிக்கிறோம். ஆனால், மனிதனுக்கு மட்டுமே அவனைப் பாடும் வகையில் வாயைத் தந்திருக்கிறான்.  பேசத்திறனற்றிருந்தாலும் மனதுக்குள் படிக்கும் திறனைத் தந்திருக்கிறான். எனவே கிடைத்தற்கரிய இந்த மானிடப்பிறவியைப் பயன்படுத்தி நீராடும் போதும், உண்ணும் முன்பும், உறங்கும் முன்பும் "நமசிவாய என்று அவன் திருநாமம் சொல்லி பிறப்பற்ற நிலையடைய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பாடல் 12

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, "சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

விளக்கம்: இறைவனே ஆக்கவும், அழிக்கவும், காக்கவும் வல்லவன் என்பது அறிந்த விஷயம். இது நன்றாகத் தெரிந்தும் அவனைப் புரிந்து கொள்ளாமல், "தான் என்ற அகங்காரத்துடன் திரிபவர்களே உலகில் அதிகம். உலகம் என்ற நாடகத்தில் நமக்கு தரப்பட்டுள்ள பாத்திரத்திற்குரிய இந்த நடிப்பை கைவிட்டு, அவனை அடைய வழி தேட வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பாடல் 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள்: கரிய நிற குவளை மலர்கள் குளத்தின்  நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் "நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக்
காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

விளக்கம்: கரிய நிறம் கொண்டவள் அம்பிகை. இதனால் தான் அவளை "சியாமளா என்கிறோம். "சியாமளம் என்றால் "கருநீலம். சிவந்த நிறமுடையவர் சிவபெருமான். மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது இனிமையான கருத்து.

பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள்: ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண் களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம் பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங் கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.

விளக்கம்: குளிக்கும் போது உலகியல் சிந்தனைகளே மனதில் இருக் கக்கூடாது. குறிப்பாக குளியலின் போது இன்ப உணர்வுகளுக்கும், பிற கீழ்த் தரமான எண்ணங்களுக்கும் இடம் தரவே கூடாது. இந்த சமயத்தில் "நமசிவாய, சிவாயநம என்ற நாமங்களே நாவில் இருந்து வர வேண்டும். இந்த திருநாமங்களைச் சொல்லிவிட்டு, அன்றையப் பணிகளை திட்டமிட்டு செய்தால் நம்மை வெற்றி தேடி வரும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல் 15

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள்: அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி "எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.

விளக்கம்: மாணிக்கவாசகர் சிவலோகத்துக்கே சென்று விட்டதாகவும், தன்னை நந்தியாகப் பாவித்து, அங்கேயே தங்கியிருந்ததாக கற்பனை செய்து பாடியது இப்பாடல்.

பாடல் 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பொருள்: இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.

விளக்கம்: ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல். நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி குளிர்ந்து மழையாகிறது என்ற அறிவியல் கருத்தை மாணிக்கவாசகர் 1200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். மேலும், இயற்கையை தெய்வமாக வடித்ததன் மூலம், அதற்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை தெளிவாகச் சொல்லிவிட்டார். இன்று இயற்கையை மதிக்காததன் விளைவை கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனியேனும், இயற்கையை மதிப்போமா!

பாடல் 17

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.

விளக்கம்: இறைவனைத் தேடி நாம் கோயிலுக்குச் செல்ல வேண்டியதில்லை. இதோ! அவனே வருகிறான் அழகிய சப்பரத்தில்! இப்போது கூடவா அவனைத் தரிசிக்க தயக்கம்! அவன் வருமுன் நீராடி உடல் சுத்தமாகி, "நமசிவாய எனச் சொல்லி நின்றால், அவன் நமக்கு சேவகன் போல் சேவை செய்வான். வேறெதுவும் அவன் எதிர்பார்ப்பதில்லை என்பது இப்பாடல் சொல்லும் கருத்து.

பாடல் 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.

விளக்கம்: ஆண் இனம், பெண்ணினம் நீங்கலாக அலி என்ற இனம் இருக்கிறது. இறைப்படைப்பின் அதிசயம் அது. அதனால் தான் அவர்களை "திருநங்கை என பெயர் சூட்டி அவர்களைக் கவுரவித்துள்ளோம். இறைப் படைப்பில் எதுவுமே கேலிக்குரியதல்ல. எல்லாம் அவன் செயல். இறைவனே அலியாக இருக்கும் போது, மனிதப்படைப்பில் இருந்தாலென்ன! எல்லா உயிர்களையும் பரம்பொருளாகக் காண வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல் 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பொருள்: "உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன் னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள்
அனுமதிப்பவர்களாய்  இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங் களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?

விளக்கம்: அக்காலத்தில், பெண்கள் எத்தகைய மணவாளன் தங்களுக்கு அமைய வேண்டும் என்று கேட்கும் உரிமை இருந்திருக்கிறது. அதனால் தான் ஒரு பக்தன் தங்களுக்கு கணவனாக வேண்டும் என்றார்கள். அது மட்டுமல்ல! நல்ல கணவன் அமைந்து விட்டால், கிரகங்களின் மாற்றம் கூட ஏதும் செய்யாது என்று உறுதியாகச் சொல் கிறார்கள். இறைவனை உறுதியாக நம்புவோருக்கு கிரகங்களின் தாக்கம் இல்லை என்பது இப்பாடல் உணர்த்தும் உட்கருத்து.

பாடல் 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

விளக்கம்: திருவெம்பாவையின் கடைசிப்பாடல் இது. இறைவனை வணங்கினால் போதுமா? மனம் ஓரிடத்திலும், கைகள் மட்டும் வணங்கிய நிலையில் இருப்பதால் என்ன லாபம்? மாணிக்கவாசகர் தன் பார்வையை இறைவனின் முகத்தின் மீது செலுத்தினாரா? அவரது திருவடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். அவனது பாத தரிசனம் கிடைத்தால் போதும்! வாழும் போதும் இன்பம்! மறைவுக்குப் பிறகும் இன்பம் என்கிறார்.நாளை முதல் திருப்பள்ளியெழுச்சி பாடுவார் மாணிக்கவாசகர்.

திருப்பள்ளியெழுச்சி

பாடல் 1


போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக!

விளக்கம்: திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதர் அருள்புரிகிறார். வாழும் காலத்தில் பல இன்பங்களை நாம் அனுபவிக்க வேண்டி இறைவனிடம் நாம் வேண்டுகிறோம். ஆனால், அவையெல்லாம் நம் உடலுக்கு தற்காலிக சுகமே தரும். ஆத்மாவுக்கு சுகம் வேண்டுமே! என்ன செய்வது! ஆத்மநாதராகிய சிவபெருமானைச் சரணடைந்தால் பேரின்பத்தை அடையலாம். மாணிக்கவாசகர் பாண்டியநாட்டின் மந்திரியாகவே இருந்தவர்! அவர் அனுபவிக்காத போகங்களா? ஆனால், இறைவன் அவரை என்ன செய்தான்? போர்ப்படைக்கு குதிரை வாங்கும் சாக்கில் தன் தலத்துக்கு வரவழைத் தான். உண்மையான இன்பம் என்ன என்பதை அறிய வைத்தான். அமிழ்தினும் இனிய திருவாசகத்தை எழுத வைத்தான். அவரை ஆட் கொண்டான். நாமும் அவரது கவியமுதத்தில் மூழ்கி எம்பெருமானின் திருவடிகளை அடைவோமே! இத்தலம் அறந்தாங்கி அருகில் உள்ளது.

பாடல் 2

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
 அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான் (இந்திரனின் திசை கிழக்கு). உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட் டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம்தருபவனே!  அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக.

விளக்கம்: இங்கே தாமரையை சிவனாகவும், அதைத் தேடி தேன் குடிக்க வரும் வண்டுகளை தேவர்களாகவும் உருவகம் செய்கிறார் மாணிக்க
வாசகர். பிரம்மா, சரஸ்வதி, ருத்ரன், அம்பாள் உள்ளிட்ட பல தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனின் தரிசனத்துக்கு காத்து நிற்கிறார்கள். இந்த தேவர்களே வண்டுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். நாமும், பிறப்பற்ற நிலை என்னும் தேன் அருந்த அந்த சிவபெருமானின் திருவடிகளை  வண்டுகளைப் போல் பணிவோம்.

பாடல் 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.

விளக்கம்: அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடு கிடையாது. பேசிக் கொண்டே இறைவனை வணங்குவது, கோயிலுக்குள் உலக விஷயங்களை அலசுவது போன்றவை நிச்சயம் பலன் தராது. அங்கே, இறைவனின் திருநாமம் மட்டுமே கேட்க வேண்டும். மனதை இறைவனின் பக்கம் திருப்பி, அவனுடைய திவ்ய சரித்திரத்தை மனதில் நினைத்து வழிபட்டால் தான் பலனுண்டு என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல் 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தமிழ் தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் ஒருபுறமும் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். "நமசிவாய என்ற நாமத்தை சொல்லியபடி கையில் மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர் களு மாக ஒருபுறம் இருக்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் எனது (மாணிக்கவாசகர்) பக்தி மிகச்சாதாரணம். எனது இறை வனே! அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள, நீ பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.

விளக்கம்: பள்ளியறை என்ற வார்த்தை மிகவும் சிறப்புக்குரியது. இறைவன் கண் மூடினால் நிலைமை என்னாகும்? இருந்தாலும், அன்பின் காரணமாக அவனுக்கும் ஓய்வு கொடுப்பதாக நினைத்து பள்ளியறையில் உறங்க வைக்கிறோம். ஆனால் நிஜத்தில், பள்ளியறை என்றால் விழிப்புக்குரிய இடம். இதனால் தான் மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு "பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்தார்கள். கல்வியில் விழிப்புடன் இருப்பவர்கள் உலகில் சிறப்பிடம் பெறுவார்கள். அதுபோல், பக்தியில் விழிப்பு நிலையில் உள்ளவன் இறைவனின் திருப்பாதத்தை அடைவான்.

பாடல் 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக
.
விளக்கம்: "போக்கிலன் வரவிலன் என்று சிவபெருமான் போற்றப்படுகிறார். அதாவது, இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன் என்று இதற்குப் பொருள். அவன் நிரந்தரமானவன், அவனுடைய மூலத்தை அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் அறிவீனர்களாகவே இருக்க முடியும். எத்தனை நூல்களை ஆய்வு செய்தாலும், இதைக் கண்டு பிடிக்க முடியாது. எனவே, நம் சக்திக்கு மீறிய அந்த பரமனைப் பாடி மகிழ்ந்தாலே அவன் நம் கண்ணுக்குத் தெரிந்து விடுவான் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பாடல் 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: பார்வதிதவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல் கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.

விளக்கம்: சாதாரண மனிதன் எப்படி இறைவனை வணங்குவான்? பூ கொண்டு வருவான், கற்பூர ஆரத்தி செய்வான், தூபத்தைப் போடுவான், நெய் தீபம் ஏற்றுவான்... இதையெல்லாம் செய்து விட்டு, ஒரு கஷ்டம் வந்து விட்டால், "இப்படியெல்லாம் செய்தும் என்னை சோதிக்கிறாயே! இது உனக்கே அடுக்குமா? என்று திட்டுவான். இப்படிப் பட்டவர்களும் கோயிலில் நிற்கிறார்கள். பந்தபாசமே வேண்டாமென்று அவனே கதியென சரணமடைய வந்தவர்களும் நிற்கிறார்கள். எப்படிப் பட்ட பக்தியாக இருந்தாலென்ன! உன்னை நம்பி அவர்கள் வந்து விட்டார்கள்.அந்த இருதரப்புக்கும் பிறப்பற்ற நிலை தந்து பேரானந்தத்தில் திளைக்க வைக்க வேண்டும் என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.  அறிந்தும், அறியாமலும் பக்திசெலுத்தும் இருதரப்பாரும் பாட வேண்டிய முக்கியமான பாடல் இது.

பாடல் 7

அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. ""உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, ""இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.

விளக்கம்: மிக அருமையான கருத்துடைய பாடல் இது. "எது எமைப்பணி கொள்ளும் ஆறு அது கேட்போம் என்ற வரி மிகுந்த சிறப்பைக் கொண்டது. கடவுளிடம் "அதைக் கொடு,. இதைக் கொடு என்று கேட்பதை விட, "எது சரியென்று படுகிறதோ, அதைச் செய் என்று கேட்பது மேலான கோரிக்கையல்லவா? அவனுக்கு தெரியுமே! நமக்கு என்ன தர வேண்டுமென்று! அதனால் நம்மை அவனிடம் ஒப்படைப்போம். அவன் தருவதை ஏற்றுக்கொள்வோம் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பாடல் 8

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள்:என்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக.

விளக்கம்: இறைவன் எளிமையானவன். அவன் பங்களாவாசிகளுக்கு மட்டுமல்ல, ஓலை குடிசைகளை உடமையாகக் கொண்டவர்கள் வீட்டுக்கும் பவனியாக வருவான். அவனை வணங்க எதுவுமே வேண்டாம். நல்ல உள்ளம் இருந்தால் மட்டும் போதும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல் 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே! உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே! உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.

பாடல் 10

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar