SS மகாலட்சுமி மந்திர மாலை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மகாலட்சுமி மந்திர மாலை
மகாலட்சுமி மந்திர மாலை
மகாலட்சுமி மந்திர மாலை

நிஜமான பலன் தரும் நேர்த்தியான ஸ்லோகங்கள், வடமொழியில், சூக்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், திருமகளின் திருவருளைப் பெற உதவும் நிகரற்ற ஸ்லோகமாக தேவி புராணம் சொல்லும் துதி, சூக்தம். வடமொழியில் உள்ள வளம் தரும் ஸ்ரீ சூக்தம் துதி, இங்கே பொருள் மாறாமல் தமிழ்த் துதிகளாகத் தரப்பட்டுள்ளது. பொன்மகளைத் துதிக்கும் இப்பாடல்களைச் சொல்வது, பொருள் சேர்த்து வளம் கூட்டும்.

வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் இவற்றின் வரிசையில் மேலான சூக்தங்களும் உள்ளன என்பதால், சூக்தங்கள் நிச்சயம் பலனளிக்கும் என்பது, நிதர்சனமான உண்மை. ஸ்ரீ தேவியைப் போற்றும் ஸ்ரீசூக்தத்தின் தமிழாக்கமான, இம்மந்திரமாலையை மனம் ஒன்றிச் சொல்லுங்கள், மகத்தான செல்வமளிப்பாள் மலர்மகள்.

ஓம் அக்னிதேவனே! பொன்வெள்ளி மாலையணி
பொன்னிற மேனியாளை பொன்னாய் ஒளிர்பவளை
முழுநிலவு முகத்தவளை பெரும் பாவச்சுமை போக்கும்
புனிதமான இலக்குமியை என்னிடம் எழச்செய்வாய்!

பொன்பொருள் பசுக்கள் குதிரைகள் உறவுகளை
எவளருளால் என்றென்றும் பெற்று மகிழ்வேனோ
அவளந்த மகாலட்சுமி இமைப்பொழுதும் எமைவிட்டு
விலகாது இருக்க அக்னிதேவனே! அருள்வாய்.

குதிரைகள் முன்செல்ல யானைகளின் மணியோசை
திருமகளின் வரவை எடுத்தியம்ப தேரேறி பவனி வரும்
ஸ்ரீ தேவி யுனைவேண்டி அழைக்கின்றேன்.
செல்வமகளே மகிழ்ந்து என்னிடம் உறைவாய்!

கருணைமிகு புன்னகை முகங்கொண்டு பொன்னகர்
தனில்வாழும் பேரொளியே! மகிழ்வுதரும் மகிழ்வடிவே
பொன்தாமரை அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே
திருமகளே நீயிங்கு எழுந்தருள வேண்டுகிறேன்.

குளிர்நிலவே! தன்னொளி மிக்க சுடரொளியே
பத்மினியே தேவர்தொழும் ஈம்பீஜ மந்திரவடிவே
உலகொளியே கருணைவடிவே நின்தாள் சரணம் சரணம்
திருமகளே வறுமையெனை விட்டோட அருள்வாய்

அருணன் நிறத்தவளே நின்தவத்தால் மரங்களின்
தலைவன் வில்வம் தோன்றியவரா தன்கனிகள்
அறியாமை அமங்கலம் அகப்புறத் தடையாவையும்
அழித்து மங்களம் உண்டாக்க வேண்டுகிறேன்.

பொருளரசன் குபேரனும் புகழரசனும் செல்வங்களுடன்
பணியரசன் எனைநாடி வருகவே நினதருள்
நிறைசேர் பூதலம் உதித்த யெனக்கு
நிறைமிகு செல்வம்புகழ் பெருமை தந்தருள்வாய்

கடும்பசி பிணிதாகம் கொண்டிளைத்த மூத்தவளை
மூதேவியை அண்டாமல் அகற்றுகின்றேன்
இளையவளே என்னில்லில் இல்லாமை இயலாமை
இடர்யாவும் இல்லாமல் அகற்றி அருள்வாய்

மணமிகு தூயவளே! வெற்றிகொள்ள முடியாதவளே!
திறமிகு வலிமை தருபவளும் அனைத்தும்
நிறைமிகு கொண்டவளும் எவ்வுயிர்க்கும் தலைவியுமான
பொருள் மிகு பொன்மகளே நீயிங்கு எழுந்தருள்வாய்

அருள்மிகு அநகாவே நான்விரும்பும் விருப்பங்கள்
மனம் மிகு மகிழ்வு வாக்கில் உண்மை
வளம் மிகு தரும் உணவு பால்மிகு தரும்பசு
புகழ்மிகு கீர்த்தியாவும் பெற்றுமகிழ அருள்வாய்.

கர்தமமா முனிவரேயுன் குலப்புதல்வியாம் பத்மமாலினி
அகில உலகை ஆளும் அரசியாய் அள்ள அள்ளிக்
குறையா பெருநிதி தருபவளாய் அனைவரையும்
தாயாய்க் காக்கு மவளால் என்குலமே எழுந்தருளட்டும்.

பொன்மகளின் தண்ணருளால் பூலகில் தண்ணீரால்
உயிர்வளர் தானியங்கள் உற்பத்தி மிகவாகி
என்னில்லை நிரப்பட்டும் உலக அன்னை திருமகளாம்
உதாராங்கா யெம்குலமே ஏகிவாழ அருள்வாய்

அக்னிதேவனே! புனிதநீருரை குங்குமநிற பத்மமாலினியை
உணவூட்டி உலக உயிர் வளர்க்கும் கருணைவடிவை
சந்திரனே அன்னவளை பொன்னிற மேனியாளை
மாதரசியை என்னில்லில் எழுந்தருளச் செய்வாய்

கம்பீரமாய் செங்கோலேந் தியகருணை மனத்தவளை
பொன்னி புண்ட செந்நிறத்தவளை அருணனை
பழித்த ஒளி யுடையாளை பொன்னான ரமாவை
என்னிடம் எழுந்தருளச் செய்வாய் அக்னிதேவனே!

மிடுகனகம் பால்பசுக்கள் பணிப்பெண் அசுவங்கள்,
ஏவல்செய் மானுடமும் பெற்றின் புற்றிருக்க
அருள்செய்யும் அன்னை அலைமகள் இமைப்பொழுதும்
எனைவிட்டு அகலாதிருக்க ஆவன செய் அக்னிதேவனே!

திருமகளின் அருள்வேண்டி தூயவனாய் புலனடக்கம்
உள்ளவனாய் மந்திரங்கள் பதினைந்தும் ஒரு முகமாய்
உருச்செய்தும் நெய்கொண்டு ஹோமம் செய்தும்
உள்ளமுருகி வழிபட அவளருள் சித்திக்குமே!

நற்பலன்கள் யாவையும் நல்கும் மகாலட்சுமி
மந்திரங்களை உலகுக்கு அளித்த முனிவர்கள்
அனந்தர் கர்தமர் சிக்லீதர் யெனும்மூவர்
அதிதேவதையாய்நிலை பெற்றவள் ஸ்ரீதேவியே!

தாமரையன்ன முகமும் கண்ளும் கால்களும்
எழிலாய் பெற்றுச் செந்தாமரையில் தோன்றி யவளே
எவ்வெப் பொருள்களால் வளம்பெற்று வாழ்வேனோ
அவ்வப் பொருள்களை எனக்குத் தந்தருள்வாய்

தனம்தரும் பசுதரும் குதிரைதரும் கோமளமே
தன லட்சுமியே! எனதாசை யாவும் நிறைவேறி
இகபர சுகம்பெற்று இனிதே வாழவழி
செய்யும் பெருநிதிமிகத் தருவாய் உகந் தெனக்கே.

உலகத்தாயே! புத்திர பௌத்திர தனதான்யம்
யானை குதிரை வாகனம்தரும் ஸ்ரீநிதியாய்
விளங்கும் திருமகளே என்னை நீள் ஆயுள்
ஆரோக்கியம் பெருநிதி உள்ளவனாய் உயர்த்துவாய்.

திருமகளே உன்னருளால் அக்னிதேவன் வாயுதேவன்
சூரியதேவன் வசுக்கள் இந்திரன் பிரகஸ்பதி
வருணன் ஏனைய தேவர்களும் சுகந்தரும்
வளங்கள் யாவையும் பெற்றுச்சுவைக்கின்றனர்.

குளிர்நிலவாய் தெய்வங்களின் ஆற்றலாய் விளங்கி
ஆதவனாய் ஒளியூட்டும் தலைவி திருமகளே
சந்திர சூர்யாக்கினி மூவரின் ஆற்றலின்
ஆற்றலான மகா லட்சுமியே உனை ஆராதிக்கிறேன்.

கருடனும் விருத்திராசுரனை வென்ற
இந்திரனும் சோமரசம் இனிமையாய்ப் பருகட்டும்
சோமயாகம் செய்ய விரும்பும் எனக்குத்
திருமகள் செல்வத்தை வாரிவாரி வழங்கட்டும்

புண்ணியம் மேலோங்க திருமகள் தியானமும்
மகாலட்சுமி மந்திரஸ்துதியும் மனமொன்றிச் செய்யும்
அருளாளரை கோபம் லோபம் பொறாமை
கெடுமதி என்னும் தீக்குணங்கள் தீண்டுவதில்லை.

தான்யலட்சுமி கருணையாள் மின்னலுடன் மேகங்கள்
மழையை இரவும் பகலும் பொழியட்டும்
விதைகள் யாவும் நன்கு முளைத்து வளரட்டும்
தெய்வநிந்தனை செய்வோரை விலக்கி ஓட்டுவாய்.

பத்மப்பிரியே! செந்தாமரை கைகொண்ட பத்மினியே
செந்தாமரை மீதமர்ந்த செந்தாமரைக் கண்ணியே
விஷ்ணுப் பிரியே! உலகோர் விரும்பி யேத்துமுன்
திருவடித் தாமரையை யென்மேல் வைத்தருள்வாய்

வெண்பட்டு இடையாளை மேலாடை அணிந்தவளை
செந்தாமரைக் கைகொண்டு மலர்த்தாமரை அமர்ந்தவளை
கம்பீரமிகு நாபிச்சுழி யழகும் பின்னழகும்
தாமரைக் கண்ணழகும் கனமிகு மார்பழகும்

நாணமுடன் குனிந்த தலையழகும் கொண்டவளை
தேவலோக யானைகள் ரத்தின பொற்கலச
நீர்கொண்டு மங்கல நீராட்ட மகிழ்பவளை
மங்களங்கள் நிறைமங்கள நாயகிமகா லட்சுமியை

பாற்கடல் அரசனின் புதல்வியாய்த் தோன்றி
தேவமாதர் யாவரும் செய்யும் பணியேற்று
உலகம் ஏற்றமுற ஒரே தீபமாய் சுடர்விட்டு
ஸ்ரீரங்கம் தனில்வாழும் தலைவியே செந்தாமரை
மீதமர்ந்த நின்கடைக் கண்பார்வை பட்டே
பிரம்மனும் இந்திரனும் சிவனும்பெருமையுற்றனர்
மூவுலகும் தன்னில்லாய்க் கொண்டு வாழும்
முகுந்தனின் அன்பரசியே உனையென்றும் வணங்குகிறேன்
சித்தம் சிந்திப்பதை நிறைவேற்றி யருளும்
சித்தலட்சுமி யாய்வெற்றி தரும்ஜெயலட்சுமியாய்
பெரும்தனம் தரும் தன லட்சுமியாய் வேண்டியது
வேண்டியாங்கு தரும்வர லட்சுமியாய் அறிவுதரும்
சரஸ்வதியாய் முக்திதரும் மோட்ச லட்சுமியாயுள்ள
மகாலட்சுமியே நான்வேண்டும் வரந்தந் தருள்வாய்

பாசம் அங்குசம் இருகை ஏந்த
வரஅபய முத்திரைகளை மற்றிருகை காட்டியருள
செந்தாமரை மீதமர்ந்த ஆதிசக்தி முக்கண்ணியே
கோடியிளம் சூரிய ஒளியினும்மேலாய் ஒளிவீசி
உலகாளும் உத்தமியே உனைநான் ஆரா திக்கிறேன்.

மங்களங்கள் யாவிலும் மங்களமாய் நிறைந்தவளே
வேண்டிய நலமருளும் மங்களமானவளே
சரணடைவதற் கேற்றதேவி முக்கண்ணி நாராயணியே
நாராயணி சரணம்! நாராயணி சரணம் !!

தாமரை கைகொண்டு தூயவெள்ளாடை நறுமண
மாலையணிந்து செந்தாமரை மீதமர்ந்த
பகவதியே பகவனுக்கு வல்லமைதரும் வடிவழகே
வேண்டுவோர் வேண்டியாங்கு வரமளித்து மூவுலகை
வாழவைக்கும் வளர்திருவே என்னையும் வாழவைப்பாய்

மகாவிஷ்ணு மனத்திற்கு உகந்த மாதவி
மாதவன் மனையாள் பூமிதேவி திருமாலின்
திருமார்பில் நிறைந்தவள் அச்சுதன் வல்லமை
யென போற்றப்படும் ஸ்ரீதேவியைச் சரண டைந்தேன்
ஓம் மகாலட்சுமியை என்றும் அறிந்து போற்றுவோம்

எங்கும் நிறை திருமாலின் துணையின் துணை வேண்டி
தியானிப்போம் அந்த லட்சுமி தேவியே
அவள்பாதம் பணிய நல்வழி காட்டட்டும்.

மகாலட்சுமியே! எப்பொழுதும் ஆற்றல் ஆரோக்கியம்
வளமிகு வாழ்வுதந்தவாறே காற்று வீசட்டும்
எனக்கு தனதான்யம் கால்நடை மக்கள் செல்வம்
நூறாண்டு வாழ்வு நீள் ஆயுள்
தந்துஎன் கடன்பசி நோய்வறுமை அகால மரணம் பயம்
கவலை மனத்துன்பம் இவையாவையும் அழிப்பாய்.

ஸ்ரீதேவி சென்றடையும் பாக்கியவான் புவியினில்
செல்வங்களை பெற்று வெற்றி நீள் ஆயுள்
மகிழ்வு புகழுடன் சுகவாழ்வு வாழ்ந்து
மரணமில்லா பெரும்பேற்றை எளிதில் அடைகிறான்.

எல்லாநலன்களும் திருமகளே என்றறிந்து
மந்திரங்கள் வேள்விகள் இடையின்றிச் செய்பவர்
அம்ருதாவை அடைந்து அவளருளால் வாழ்வில்
மக்கள் கால்நடை மிகு செல்வம் சேரவாழ்வர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar