SS நந்தி வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நந்தி வழிபாடு
நந்தி வழிபாடு
நந்தி வழிபாடு

நந்திதேவர் துதி

நந்திஎம் பெருமான்தன்னை  நாள்தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும்  புகழ்கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும்  இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட   அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும்  தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட   நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து   இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம்   நாம் தொழுவோமே!

நலந்தரும் நந்தி

கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்

சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்

சோலையின் வண்ணப்பூவைச் சூடிடும் நந்தி தேவா
நாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்
தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
தஞ்சமாம் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்

நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

நாட்டமுள்ள நந்தி

நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிது
நந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது
செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது
சிந்தையில் நினைப்பவர்க்குச்செல்வம்தரும் நந்தியிது  (நந்தி)

தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது
எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது
ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது
வெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது

பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது
பார்ப்பவர்க்குப்பலன்கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிது
சங்கம் முழங்குவரும் சங்கரனின் நந்தியிது
எங்கும் புகழ்மணக்கும் எழிலான நந்தியிது  (நந்தி)

கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிது
நற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது
நெய்யிலே குளித்துவரும் நேர்மையுள்ள நந்தியிது
ஈஎறும்பு அணுகாமல் இறைவன்வரும் நந்தியிது  (நந்தி)

வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது
காணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது
உலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது
நகரத்தை வளர்த்துவரும் நான் மறையின் நந்தியிது  (நந்தி)

நந்திதேவர் வணக்கம்

(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என்ற மெட்டு)

வழிவிடு நந்தி வழிவிடுவே
வாழ்வில் நாங்கள் வளர்ந்துயர
வழிவிடு நந்தி ! வழிவிடுவே
வையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)

எம்பிரான் சிவனைச் சுமப்பவனே
எல்லா நலனும் தருபவனே
ஏழைகள் வாழ்வில் இருளகல
என்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)

நீரில் என்றும் குளிப்பவனே
நெய்யில் என்றும் மகிழ்பவனே
பொய்யில்லாத வாழ்வு தர
பொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)

உந்தன் கொம்பு இரண்டிடையே
உமையாள் பாகன் காட்சிதர
தேவர் எல்லாம் அருள் பெற்றார்
தேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)

தேடிய பலனைத் தந்திடுவாய்
தேவர் போற்றும் நந்திதேவா !
வாழ்வில் வளமே வந்துயர
வழியே காட்டி அமைந்திடுவாய். (வழிவிடு)

நந்தனார் போற்றும் நந்தி தேவா !
நாலுந் தெரிந்த வல்லவனே
எம்பிரான் அருளை எமக்கருள
என்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)

பிரதோஷம் என்றால் உன் மகிமை
பெரிதும் வெளியில் தெரிந்திடுமே
தேவர்க்குக் காட்சி உன்மூலம்
தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)

நலம்தரும் நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.

கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி
குடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.



 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar