SS உடனடி பலன் தரும் பதிகம் (பகுதி-2) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> உடனடி பலன் தரும் பதிகம் (பகுதி-2)
உடனடி பலன் தரும் பதிகம் (பகுதி-2)
உடனடி பலன் தரும் பதிகம் (பகுதி-2)

20 தாம்பத்திய உறவு முழு நிறைவுடன் நடைபெறுவதற்கும், தம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்

பண் : இந்தளம் (2--16)  ராகம் : நாதநாமக்கிரியை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருமணஞ்சேரி

அயில் ஆரும் அம்பு அதனால் புரம் மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே

விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை நீற் சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாட வல்லார் வினை பாறுமே

எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை
வைப்பான் மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின்றார் வினை வீடுமே

விடையானை மேல் உலகு ஏழும் இப்பார் எல்லாம்
உடையானை ஊழி தோறுஊழி உளதுஆய
படையானை பண்இசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே

எறி ஆர் பூங்கொன்றையினோடும் இளமத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைத்தானை
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்ப வல்லார்க்கு இடர் சேராவே

மொழியானை முன்ஒரு நால்மறை ஆறுஅங்கம்
பழியாமைப் பண்இசை ஆன பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே

எண்ணானை எண் அமர்சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேச நின்றார் பெரியோர்களே

எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள்
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை
மடுத்து ஆர வண்டு இசைபாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார், பெரியோர்களே

சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மாதவர் ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான், கழல் ஏத்துமே

சற்றேயும் தாம்அறிவுஇல் சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர்மேல் வினை பற்றாவே

கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண் ஆரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ஆரப் பாடவல்லார்க்கு இல்லை, பாவமே

திருச்சிற்றம்பலம்

எட்டாம் பாவம்

21 சகல கிரக பீடைகள் நீங்குவதற்கும், ஆயுள் பலம் பெருகுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்

பண் : பியந்தைக் காந்தாரம் (2--85) ராகம் : நவரோசு
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருமறைக்காடு

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல விணை தடவி,
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி
சனி, பாம்பு இரண்டும் உடனே
ஆசுஅறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி, ஏழை உடனே,
பொன்பொதி, மத்த மாலை புனல்சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு, ஆறும்,
உடனாய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்லநல்ல; அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து
உமையோடும், வெள்ளை விடைமேல்,
முருகு அலர்கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்,
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி,
திசை தெய்வம் ஆன பலவும்,
அருநெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

மதி நுதல் மங்கையோடு, வடஆல் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர்
கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும்
விடை ஏறும், நங்கள் பரமன்,
துஞ்சு இருள், வன்னி, கொன்றை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும்  இடியும், மின்னும்
மிகையான பூதம் அவையும்,
அஞ்சிடும், நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

வாள்வரி அதள்அது ஆடைவரி கோவணத்தர்
மடவாள்தனோடும் உடன்ஆய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்,
கோள்அரி, உழுவையோடு, கொலையானை கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள்அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

செப்பு இளமுலை நல்மங்கை ஒருபாகமாக
விடைஏறு செல்வன் அடைவார்
ஒப்புஇள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும் வாதம், மிகையான பித்தும்,
வினையான வந்து நலியா,
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்து அன்று, விடைமேல் இருந்து
மடவாள்தனோடும் உடனாய்,
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர்ஆன வந்து நலியா;
ஆழ்கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

பலபல வேடம் ஆகும்பரன், நாரிபாகன்,
பசு ஏறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்,
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலம் ஆன பலவும்
அலைகடல், மேரு நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்,
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே

தேன் அமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்,
தான்உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசு ஆள்வர், ஆணை நமதே

திருச்சிற்றம்பலம்

22 எட்டாமிடத்துச் சனி (அட்டமச்சனி) ஏழரைச் சனி, கண்டச்சனி (ஏழாம் இடத்துச்சனி), அர்த்தாஷ்டமச்சனி (நாலாம் இடத்துச்சனி) யினால், வாழ்க்கையில் எதிர்பாராத இடர்ப்பாடுகள் ஏற்படாமலிருக்கும் பொருட்டு ஓதவேண்டிய பதிகம்

பண் : பழந்தக்கராகம் (1--49)  ராகம் : கந்தசாவேரி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருநள்ளாறு

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே

தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே

ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே

புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே

ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே

திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே

வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவுஅதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே

சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே

உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே

மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே

தண்புனலம் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே

திருச்சிற்றம்பலம்

23 எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஏதாவது ஒரு தடை வருவதைத் தடுப்பதற்கும், வீண்பழி, அவமானங்களிலிருந்து விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்

பண் : பழந்தக்கராகம் (1--52) ராகம் : சுத்தசாவேரி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: நெடுங்குளம்

மறைஉடையாய், தோல் உடையாய், வார்சடைமேல் வளரும்
பிறைஉடையாய், பிஞ்ஞகனே, என்றுஉனைப் பேசின் அல்லால்
குறைஉடையார் குற்றம் ஓராய்; கொள்கையினால் உயர்ந்த
நிறைஉடையார் இடர்களையாய்; நெடுங்களம் மேயவனே

கனைத்து எழுந்த வெண்திசை சூழ்கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதேவ, நின்னை
மனத்தக்கத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

நின் அடியே வழிபடுவான், நிமலா, நினைக்கருத,
என் அடியான்உயிரை வவ்வேல் என்று அடற்கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின் அடியார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

மலைபுரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா,
தலைபுரிந்த பலி மகிழ்வாய், தலைவநின்தாள் நிழற்கீழ்
நிலை புரிந்தார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

பாங்கின்நல்லார், படிமம்செய்வார், பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு, தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடும், தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்;
அருத்தன் ஆய ஆதிதேவன் அடியினையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாகக் கூட்டிஓர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறு கொண்டாய்; சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழி யால் ஏத்தி, இராப்பகலும்
நின்று நைவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

வேழவெண் கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,
சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடுஇலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

வெஞ்சொல் தம்சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்;
துஞ்சல் இல்லா வாய்மொழியால், தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர்வாழும் மா மறுகின் சிரபுரக் கோன், நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார், பாவம் பறையுமே

திருச்சிற்றம்பலம்

24 இழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்

பண் : நட்டராகம் (7--25)  ராகம் : பந்துவராளி
பாடியவர்: சுந்தரர் தலம்: விருத்தாச்சலம்

பொன்செய்த மேனியினீர், புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;
முன்செய்த மூஎயிலும் எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;
மின்செய்த நுண்இடையாள் பரவை இவள்தன் முகப்பே,
என்செய்தவாறு அடிகேள், அடியேன் இட்டளம் கெடவே

உம்பரும் வானவரும் உடனே நிற்கவே, எனக்குச்
செம்பொனைத் தந்தருளித், திகழும் முதுகுன்று அமர்ந்தீர்
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்;
எம்பெருமான், அருளீர்; அடியேன் இட்டளம் கெடவே

பத்தா, பத்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே,
முத்தா, முக்கணனே, முதுகுன்றம் அமர்ந்தவனே,
மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே,
அத்தா, தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே

மங்கை ஓர்கூறு அமர்ந்தீர்; மறைநான்கும் விரித்து உகந்தீர்;
திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்றமர்ந்தீர்;
கொங்கை நல்லாள் பரவை, குணங்கொண்டிருந்தாள் முகப்பே
அங்கணனே, அருளாய், அடியேன் இட்டளம் கெடவே

மையாரும் மிடற்றாய், மருவார் புரம்மூன்று எரித்த
செய்யார் மேனியனே, திகழும் முதுகுன்று அமர்ந்தாய்;
பைஆரும் அரவுஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்;
ஐயா தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்துஇறைஞ்ச, முதுகுன்றம் அமர்ந்தவனே,
படிஆரும் இயலாள் பரவைஇவள்தன் முகப்பே,
அடிகேள், தந்தருளீர், அடியேன் இட்டளம் கெடவே

கொந்தணவும் பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தணவும் மதிசேர், சடைமாமுது குன்று உடையாய்
பந்தணவும் விரலாள் பரவைஇவள் தன் முகப்பே,
அந்தணனே, அருளாய், அடியேன் இட்டளம் கெடவே

பரசுஆரும் கரவா, பதினெண் கணமும்சூழ
முரசார்வந்து அதிர, முதுகுன்றம் அமர்ந்தவனே,
விரைசேரும் குழலாள், பரவைஇவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே

ஏத்தாது இருந்து அறியேன்; அமையோர்தனி நாயகனே;
மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தாரும் குழலாள் பரவை இவள்தன் முகப்பே,
கூத்தா, தந்தருளாய், கொடியேன் இட்டளம் கெடவே

பிறை ஆரும் சடைஎம்பெருமான், அருளாய் என்று
முறையாய்வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை
மறையார்தம் குரிசில், வயல்நாவல் ஆரூரன், சொன்ன
இறையார் பாடல் வல்லார்க்கு எளிதாம் சிவலோகம் அதே

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் பாவம்

25 தந்தையின் உடல்நலம், மனநலம் சீர்பெறுவதற்கும் தனக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் நழுவாமல் இருப்பதற்கும், புண்ணியப் பயன்களைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்

பண் : வியாழக்குறிஞ்சி (1--128)  ராகம் : சௌராஷ்டிரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: சீர்காழி

ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்து
ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை
ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை

இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர்அயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான் மறி,ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து

இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை

ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து

நான்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி,
வரன்முறை பயின்று, எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர்புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த

தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வரபுரம் ஒன்று உணர்சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்

விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ்இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே

திருச்சிற்றம்பலம்

பத்தாம் பாவம்

26 வேலை இல்லாத தொல்லை நீங்குவதற்கும், பாராட்டுக்குரிய செயல்களைச் செய்து புகழைப் பெறுவதற்கும், தெய்வ வழிபாடு, புண்ணியச் செயல் முதலியவற்றில் ஈடுபாடு கூடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் இது திருப்பாசுரம் எனப்படும்

பண் : கௌசிகம் (3--54)  ராகம் : பயிரவி
பாடியவர்: திருஞான சம்பந்தர் தலம்: மதுரை

வாழ்க அந்தணர், வானவர் ஆன்இனம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;
ஆழ்க தீயது எல்லாம் அரண் நாமமே
சூழ்க; வையகமும் துயர் தீர்கவே

அரிய காட்சியராய்த் தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்
பெரியர்; ஆர் அறிவார் அவர் பெற்றியே?

வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பர்; ஆல்
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ?

ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவுஇல்லை; கிளக்க வேண்டா;
கோட்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்கதக்கார்

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர் விட்டுளன், எங்கள் சோதி;
மாதுக்கம் நீங்கல் உறுவீர்; மனம் பற்றி வாழ்மின்;
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே

ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும், புகழ் அல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீர் ஆகில்
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது நாட்டல் ஆமே?

கடிசேர்ந்த போது மலர் ஆன கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால் கொண்டு, அங்கஆட்டிட தாதைபண்டு
முடி சேர்ந்தகாலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம், அறிவார் சொலக்கேட்டும் அன்றே

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே

பார் ஆழி வட்டம் பகையால் நலிந்து ஆட்ட, ஆடிப்
பேர் ஆழி ஆனது இடர்கண்டு, அருள்செய்தால் பேணி
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சஇடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும், புகழ் உற்றது அன்றே

மால் ஆயவனும் மறைவல்ல நான்முகனும்
பால்ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள்செய்ததாமே

அற்று அன்றி அம்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்
தெற்று என்று தெய்வம் தெளியார், கரைக்குஓலை தெண்நீர்ப்
பற்றுஇன்றிப் பாங்கு எதிர்பின் ஊரவும் பண்புநோக்கில்
பெற்றொன்று உயர்த்தபெருமான் பெருமானும் அன்றே

நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே

திருச்சிற்றம்பலம்

27 தொழில் நிரந்தரம் பெற

பண் : சீகாமரம் (2--47)  ராகம் : நாதநாமக்கிரியை
பாடியவர் : திருஞானசம்பந்தர் தலம்: மயிலாப்பூர்

மட்டுஇட்ட புன்னைஅம் கானல் மடமயிலைக்
கட்டுஇட்டம் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டுஇட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்துஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்

ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றம்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்

மைப்பூசம் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூச நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

மடல்ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடல் ஆட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல் ஆன்ஏறு ஊரும் அடிகள் அடிபரவி
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய்

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்

தண்ணா அரக்கன்தோள் சாய்த்துஉகந்த தாளினான்
கண்ஆர் மயிலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
பண்ஆர் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ஆரக் காணாதே போதியோ பூம்பாவாய்

நல்தா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கபாலீச் சரம்அமர்ந்தான்
பொன்தாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்

உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்
இரும்சாக் கியர்கள் எடுத்துஉரைப்ப நாட்டில்
கரும்சோலை சூழ்ந்த கபாலீச் சரம்அமர்ந்தான்
பெரும்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்

கான்அமர் சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
தேன்அமர் பூம்பாவைப் பாட்டுஆகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும் வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே

திருச்சிற்றம்பலம்

பதினொன்றாம் பாவம்

28 செய்யும் தொழில்கள் லாபம் பெருகுவதற்கும், மூத்த சகோதரர்கள் வளமுடன் வாழ்வதற்கும், எவ்வளவு கடினமான வழக்காக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்

பண் : குறிஞ்சி (1--92)  ராகம் : அரிகாம்போதி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவீழிமிழலை

வாசிதீரவே, காசு நல்குவீர்;
மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்;
கறைகொள் காசினை, முறைமை நல்குமே

செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்;
பைகொள் அரவினீர்;உய்ய நல்குமே
நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்;
கூறு மிழலையீர்;பேறும் அருளுமே

காமன்வேவ, ஓர் தூமக் கண்ணினீர்;
நாம மிழலையீர்; சேமம் நல்குமே
பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே

மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்;
பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே

அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்;
இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே
பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்;
வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே

காழிமா நகர் வாழி சம்பந்தன்,
வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே

திருச்சிற்றம்பலம்

பன்னிரண்டாம் பாவம்

29 நாள்தோறும் உணவும் உறக்கமும் சீராகப் பெறுவதற்கும், வீண் செலவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், மறுபிறப்பைப் தவிர்ப்பதற்கும், இறைவழிபாட்டில் ஈடுபாடு மிகுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்

பண் : கௌசிகம் (3--49)  ராகம் : பயிரவி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருநல்லூர்ப் பெருமணம்

காதல் ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவர்தமை நன்னெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம், நமச்சி வாயவே

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது;
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே

நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி, நினைந்து
அக்கு மாலை கொடு அம்கையில் எண்ணுவார்,
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே

இயமன் தூதரும் அஞ்சுவர்; இன்சொலால்
நயம் வந்து, ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமம்தான் நினைவார்க்கு இனியான், நெற்றி
நயனன், நாமம் நமச்சி வாயவே

கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்;
நல்லார் நாமம் நமச்சி வாயவே

மந்தரம் ஆன பாவங்கள் மேவிய
பந்தனை அவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்,
நந்தி நாமம் நமச்சி வாயவே

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்,
வரதன் நாமம் நமச்சி வாயவே

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய்வகை
நலம்கொள் நாமம் நமச்சி வாயவே

போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்;
யாதும் காண்பரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே

கஞ்சி மண்டையர், கையில்உண் கையர்கள்,
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்,
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுதுசெய்
நஞ்சு உண் கண்டன் நமச்சி வாயவே

நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால், தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே

திருச்சிற்றம்பலம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar