SS சோமாஸ்கந்த வடிவம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சோமாஸ்கந்த வடிவம்!
சோமாஸ்கந்த வடிவம்!
சோமாஸ்கந்த வடிவம்!

சிவாலயங்களில் விளங்கும் மகேஸ்வரத் திருமேனிகளில் மிகச் சிறப்புடையது சோமாஸ்கந்த திருமேனியாகும். இந்தத் திருமேனி பஞ்சமூர்த்திகளில் ஒன்று. மிகப் பழமையான சிவாலயங்களில் கருவறையின் பின்னால் சுவரை ஒட்டினாற்போல் சிலை அல்லது ஓவிய வடிவில் சோமாஸ்கந்த மூர்த்தி காணப்படுகிறது. இத்திருமேனியின் முன் சிவலிங்கம் விளங்கும். தொன்றுதொட்டு சோமாஸ்கந்த திருமேனி தியாகராஜராகப் போற்றி வழிபடப்படுகிறார். சிவன், சக்தி இருவருக்கும் இடையில் கந்தன் அமர்ந்த நிலையில் தோன்றும் வடிவமே சோமாஸ்கந்த வடிவம். சிவன், சக்தி, கந்தன் ஒருங்கிணைந்தருளும் உண்மை அறிவானந்த வடிவான சச்சிதானந்த வடிவே சோமாஸ்கந்த வடிவம். சச்சிதானந்தம் என்பது சத்து. சித்து, ஆனந்தம் ஆகிய மூன்றையும் குறிக்கின்றன.

இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் கந்தன் இருக்கும் சோமாஸ்கந்த வடிவை கோயில் சிலைகளில் மட்டுமின்றி கோயில் அமைப்பு, மலைகளின் அமைப்பு, ஆறுகளின் கூடுதுறை ஆகியவற்றிலும் நம் முன்னோர்கள் உருவகம் செய்து கூறியுள்ளனர். திருவாரூர், திருநள்ளாறு, திருநாகை, திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு ஆகிய சப்தவிடங்கத் தலங்களில் சோமாஸ்கந்தப் பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராஜர் (சோமாஸ்கந்த மூர்த்தி) திருமாலின் இதயத்தாமரையில் வீற்றிருந்து, அவரால் முதலில் பூஜிக்கப்பட்டவர். திருமால் பூஜித்த அந்த மூர்த்தியை இந்திரன் பெற்று பூஜித்து வந்தான். இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை முசுகுந்த சக்ரவர்த்தி தான் பூஜிக்க விரும்புவதாகக் கேட்டபோது, இந்திரன் இந்த மூர்த்தியுடன் மேலும் ஆறு திருமேனிகளையும் கொடுத்தான். அவற்றில் திருமால் பூஜித்த மூர்த்தியை திருவாரூரிலும், மற்றவற்றை பிற ஆறு தலங்களிலும் ஸ்தாபித்ததாக வரலாறு.

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள மலைகள் வெள்ளிமலை, நீலிமலை, மருதமலை ஆகியவை. சிவனுறையும் மலையான வெள்ளி மலை சிவன் உருவாகவும் உமையம்மைக்கு உரியதான நீலிமலை உமை உருவாகவும், முருகன் உறையும் மருதமலை கந்தன் உருவாகவும் அமைந்து வெள்ளிமலை-சோம, நீலிமலை- உமா, மருதமலை-ஸ்கந்தன் என மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் விளங்குவதாக பேரூர்ப் புராணம் கூறுகிறது. மலைகளைப்போல் ஆறுகளும் சோமாஸ்கந்த வடிவ அமைப்பில் உள்ளதாக திருவாரூர் நான்மணிமாலை கூறுகிறது. திரிவேணி, பிரயாகை என்றெல்லாம் அழைக்கப்படும் அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன. இவற்றுள் கங்கை நதி சிவபிரானை ஒத்து செந்நிறமாயும், யமுனை நதி உமையவளை ஒத்ததாய் நீலநிறம் உடையதாயும், சரஸ்வதி நதி கந்தன் நிறத்தினதாய் வெண்மையாகவும் இருப்பதாகக் குறிப்படுகிறது.

ஒரே இருக்கையில் சிவபெருமான், உமையவள் இருவருக்குமிடையே கந்தன் இருக்கும் காட்சி கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகளில் சங்கமமாகிய திரிவேணியை உணர்த்துவதாக அமைந்துள்ளது என குமரகுருபரர் கூறுகிறார். சோமாஸ்கந்த வடிவத்தில் சிறுத்தொண்டருக்கு சிவபெருமான் காட்சி தந்த சிறப்பை

அவர்தம் மலை பயந்த
தையலொடுஞ் சரவணத்துத்தனய
ரோடுந் தாம் அணைவார்

என சேக்கிழார் அடிகள் பாடியுள்ளார். (அவர்தாம்-சிவபெருமான்; மலை பயந்த தையல்- உமாதேவி; சரவணத்துத் தனயர்-கந்தன்) வைத்தீஸ்வரன் கோயில், திருக்கருகாவூர் போன்ற சில தலங்களில் சோமாஸ்கந்த வடிவமைப்பில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்து நலன்களையும் அருளும் சோமாஸ்கந்த பெருமானை இயற்கைத் தோற்றங்களிலும் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைத் தோற்றங்களிலும் கண்டு வழிபட்டு நலம் பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar