SS விநாயகர் சரண மாலை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விநாயகர் சரண மாலை
விநாயகர் சரண மாலை
விநாயகர் சரண மாலை

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

விநாயகர் சரண மாலை

அருளே சரணம்! அன்பே சரணம்!
அன்னை மீனாள் மகனே சரணம்!
இருளைப் போக்கி ஒளியைச் சேர்க்கும்
ஈசன் மகனே சரணம்! சரணம்!
உருகிப் பணியும் அடியார் மனதில்
ஒளிரும் ஞானச் சுடரே சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!

திருவே சரணம்! தெளிவே சரணம்!
திகழும் யோக வடிவே சரணம்!
கருவாய் விளங்கிக் கவிஞர் மனதில்
கவியாய்ச் சுரக்கும் தமிழே சரணம்!
அருவம் உருவம் இவைகள் கடந்த
அருளே உயிரே சரணம்! சரணம்!
அருகப் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!

அழகன் மருகன் முருகன் போற்றும்
ஆனை முகனே சரணம்! சரணம்!
கழல்கள் அதிரக் களித்தே ஆடும்
காளித் தாயின் சுதனே சரணம்!
திருவாம் ஈசன் பாதம் பணியும்
தெய்வக் களிறே சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!

உழலும் மனிதர் நலமாய் வாழ
உன்னத அருளைத் தருவாய் சரணம்!
மழையைப் போல கருணைப் பொழிந்து
மங்களம் அருள்வாய் சரணம்! சரணம்!
தருவாய் உந்தன் அருளை என்றுன்
தாள்கள் பணிந்தேன் சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!

ஊழின் வினையும் உலகத் துயரும்
ஒருங்கே ஒழிய அருள்வாய் சரணம்!
வாழி என்றுன் பதங்கள் பணிந்தோம்!
வந்தே நலங்கள் தருவாய் சரணம்!
தருமி போலத் திரியும் எனக்கும்
தமிழைத் தருவாய் சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம் சரணம்!

மலரே! மணமே! மனதுள் அருளே!
மலையே! மடுவே! மகிமை ஒளியே!
அலையே! கடலே! அடங்காப் புயலே!
அன்பில் தாயே! அருமைச் சேயே!
நிலையாய் விளங்கும் நீதிக் கனலே!
நெகிழும் பக்தர் விழியின் நீரே!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்பே அருளே சரணம்! சரணம்!     

விநாயகர் பாடல்கள்

1. நாயகனைப்பாட நான் என்ன...

நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன்
விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன்
மூவுலகின் முதற்பொருளே முதல் பிள்ளைஒளிவடிவே
முக்கண்ணன் அருட்பொருளே
முக்கனியின் வேதப் பொருளாய் அமர்ந்த விநாயகனே
அரசமரம் சுற்றிவந்து முரசம் பல கொட்டி நின்று
பருப்போடு பாலும் பழரசம் அபிஷேகம் செய்து
அன்பர்க்கு அளித்திடவே
தேங்காய்ப்பூ இளநீரு தீர்த்தம் மணக்கும்
வெள்ளிரத ஊஞ்சல் ஆட
விரும்பி உன் மனம் பாட வினைதீர்க்க அருள் கொடுக்க
பொருள் குவிக்க மனம் இனிக்க
எருக்கம்பூ மாலையிலே இருக்கின்ற நாயகனே
ஓதுகின்ற மனதினிலே
சிரிக்கின்ற சிரிப்பினிலே செல்வமெல்லாம் தருபவனே
தேனமுதை தெளிப்பவனே சிவசக்தி விநாயகனே
சித்தி விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் (நாயகனை)

2. அருள்நிதியே கணபதியே....
பல்லவி

அருள்நிதியே கணபதியே
அடிபணிந்தோம் என்றும் நீ கதியே
அனுதினம் உன்னையே தொழுவோர்க்கே
அறிவோடு செல்வமும் தரும் நிதியே

அனுபல்லவி

1. ஏடு எழுத்தாணி கையில் கொண்டாயே
ஞானம் பெறச் சொல்லி தூண்டுகின்றாய்
கேட்பவர்க்கே கொடுக்கும் உன் அருள்கை
கொடுப்பதற்கே நீளும் உன்துதிக்கை  (அருள்)

சரணம்

2. தாய் தந்தை உலகென்று உணரவைத்தாய்
தாய்போல் கருணை மனம் படைத்தாய்
ஓங்காரம் போலவே வடிவம் கொண்டாய்
இசை ரீங்காரத்தில் வந்து நடம் புரிவாய்  (அருள்)

3. அருகம்புல் கொண்டுன்னை பூஜை செய்தால்
பெருமையுடன் ஏற்கும் ஆண்டவனே
அடியவர் முன்னே எளியவராய் வந்து
அன்பு கொண்டாடும் ஐங்கரனே.   (அருள்)

3. ஓம் எனும் பொருளாய்...

ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
ஓம் பூமனும் பொருள்தொறும் பொலிவாய் போற்றி
ஓம் திங்கட் சடையோன் செல்வ போற்றி
ஓம் எங்கட் கருளும் இறைவா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி
ஓம் மாலுக் கருளிய மதகிரி போற்றி
ஓம் பாலெனக் கடல்நீர் பருகினாய் போற்றி
ஓம் பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி
ஓம் மாரதம் அச்சொடி மதவலி போற்றி
ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
ஓம் நம்பியாண் டார்கருள் நல்லாய் போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியை தந்தாய் போற்றி
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
ஓம் கரிமுகத் தெந்தாய் காப்போய் போற்றி
ஓம் ஐந்துகை யுடைய ஐய போற்றி
ஓம் ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி
ஓம் கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி
ஓம் மயிலறும் இன்ப வாழ்வே போற்றி
ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி
ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
ஓம் காக்கஎங் களையுன் கழலினை போற்றியே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar