SS முருகன் அந்தாதி - முதல்வன் புராண முடிப்பு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> முருகன் அந்தாதி - முதல்வன் புராண முடிப்பு
முருகன் அந்தாதி - முதல்வன் புராண முடிப்பு
முருகன் அந்தாதி - முதல்வன் புராண முடிப்பு

கந்தசஷ்டி மாவிரத பூசையிற் கந்த புராண படனஞ் செய்ய வேண்டுமென்று நியதியுண்டு. அஞ்ஞான்று அது செய்தற்கியலாதார், இத்திருப்பதிகத்தை ஒருமுறை பக்தியோடும் பாடி அப்படன புண்ணியத்தைப் பெறலாம். -பாம்பன் சுவாமிகள்

அந்தாதி
கலிவிருத்தம் (இசை)


1. சந்திர சேகரன் றழற்கண் ணேபொறி
வந்தன வாறவை மாசில் கங்கை சார்ந்
தைந்துட னொன்றணை குழவி யாகியா
றந்தநன் மாதர்க ளமுத முண்டவே.

சிவபெருமானுடைய நெற்றிக்கண்களினின்று ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்போந்தன. அவை குற்றமற்ற சரவணப் பொய்கையென்னும் நீர் நிலையை அடைந்து ஆறு குழந்தைகளாகி (கார்த்திகைப் பெண்களென்னும்) அழகிய நல்ல ஆறு மாதர்களுடைய பாலாகிய அமுதத்தையுண்டன.

2. உண்டவை பலபல வுருவங் காட்டுபு
பண்டுமை யாலொரு படிவ மாயவள்
கண்டென வருத்தமுதுண்டு காமர்செய்
அண்டவொண் கயிலை சென்றாடல் செய்யுமால்.

முன்னாளில் இப்படிப் பாலுண்ட அக்குழந்தைகள் பற்பல திருவுருவங்களைக் காட்டி, உமையம்மை ஒரு சேரச் சேர்த்தெடுத்தலால் ஒரு திருமேனியுடையவாகி, அவள் கற்கண்டென்னும்படி தனது முலைப்பாலை யூட்ட வுண்டு, ஆகாயத்தை யளாவி நின்று அழகைத்தருகின்ற ஒள்ளிய கைலாய மலையையடைந்து பல திருவிளையாடல்கள் புரியா நிற்கும்.

3. ஆடலில் வெஞ்சுட ரசுவ மேறிய
தீடணை யம்புலி யிரத மூர்ந்தது
மூடமி லிந்திரன் முதலினோர்கரி
சேடண வூர்ந்தது செம்பொற் சேயரோ.

அத்திருவிளையாடல்களில், அழகிய சிவந்த திருமேனியையுடைய அக்குழந்தையானது சூரியனுடைய குதிரையின் மீதேறியது. பெருமைவாய்ந்த சந்திரனது தேரிலேறிச் சென்றது. அறிவார்ந்த இந்திரன் முதலான தேவர்களுடைய யானைகளின் மிசை அழகு பொருந்த ஆரோகணித்து அவற்றை நடத்தியது.

4. செங்கரு டன்புலி சீய மோதிமஞ்
சங்குற ழேறுழை சரபம் யாடிவர்ந்
தெங்கணு மேகிய தெழில்கொ ளெந்நில
மங்கைய ரும்விழை மகிமைப் பிள்ளையே.

எவ்வுலகத்து மாதரும் விரும்பும்படியான அழகு வாய்ந்த மகிமை பொருந்திய அப்பிள்ளை, சிவந்த கருடன், புலி, சிங்கம், அன்னம், சங்கு போன்ற நிறத்தையுடைய எருது, கலைமான், சரபம், யாடு என்னுமிவற்றின் மேலேறியெங்கு முலாவியது.

5. பிள்ளையை நீத்தொரு பெருவ யோதிகம்
உள்ளவ னாய்ச்சுர ருலகை நன்குசெய்
உள்ளமொ டங்ஙன முலாவி னான்வன
நள்ளிட னடைந்துகின் னரஞ்செய் தானவன்.

(இறைவன்) இப்பிள்ளை திருக்கோலத்தை விடுத்து, தேவலோகத்தைச் செம்மைப்படுத்துந் திருவுளத்தோடு ஒரு முதியோனாகி யங்குலாவினான் (அன்றியும்) செறிந்த காட்டினடுவே சென்று ஒரு வீணை யுண்டுபண்ணி அதனை வாசித்தான்.

6. செய்யத னோசையிற் சேர்வி லங்குபுள்
மெய்யைம றந்தன வேய்ங்கு ழற்றொனி
ஐயனெழுப்பின கைலுண் மாதர்கள்
மையல் செய் விரகமுள் வருந்த நாளுமே.

அவ்வோசையின் இனிமையால் அங்கே வந்து கூடிய விலங்குகளும், பறவைகளுந் தம்மை மறந்தன. பின்னர் நகரத்தில் வசிக்கும் மங்கையர் மயக்கஞ்செய்யும் விரக நோயால் எப்பொழுதும் வருந்துமாறு வேணுகானத்தை யெழுப்பினான்.

7. மேலட ரண்டமு மேய சேயவன்
மாலுடல் வரையிடை வந்து வானவர்
பாலுறு வலிகளைப் பாறச் செய்துதன்
வாலிருந் தைவத வடிவு காட்டினான்.

இத்திருவிளையாடல் புரிந்த பின்னர் எல்லா அண்டகளிலுஞ் சென்றுலாவிய பாலசுப்ரமணியன் மாமேரு பருவதத்தையடைந்து (தன்னை யெதிர்த்த) தேவர்கள் வலிமையை யழித்து (பின்னர் யான் சிறுவனல்லனென்று) தனது தூய பரமேச்சுவர வடிவத்தை யவர்கட்குக் காட்டினான்.

8. காட்டலுஞ் சதமகன் கடவு ளேயெமை
வாட்டொரு சூரனை மடித்துக் காவெனக்
கேட்டவ னஞ் சன்மின் கிருபை செய்துமென்
றாட்டரன் பாற்படை யரசை வாங்கினான்.

காட்டினவுடன் தேவேந்திரன் எங்கள் கடவுளே! எங்களை நலிவுறுத்துஞ் சூரபதுமனைக் கொன்று எங்களைக் காத்தருள்க என்று குறையிரக்க: அதனைக் கேட்ட இளம்பூரணன் அஞ்சன்மின் அருள்புரிவோம் என்று திருவாய் மலர்ந்தருளி, ஆனந்ததாண்டவனாகிய பரமசிவனிடத்திலேயுள்ள படைக்கல நாயகமாகிய வேலாயுதத்தைப் பெற்றான்.

9. வாங்கிமற் கணத்தொடு மகிவந் தோதியும்
வீங்கு மெயக் கயமுகன் றனையும் வீட்டுபு
பாங்குடைச் சிங்கனும் பானு கோபனும்
தீங்கிடக் கண்டவர் நிருபற் கீண்டனும்.

பெற்று, வலிய பூதகணங்களோடு பூவுலகிற்கு வந்து (கிரௌஞ்ச) கிரியையும் பருத்த வுடம்பையுடைய தாரகா சூரனையும் அழித்து அவரோடுரிமைபூண்ட பானு கோபனுஞ் சிங்கமுகாசூரனும் மடிந்தொழியக் கண்டு அவர்கள் தலைவனாகிய சூரபதுமனை வேலாயுதத்தால் இருகூறாய்ப் பிளந்தான்.

10. கீளவை பரிகொடி யாய்க்கி ளர்ந்தன
ஆளொரு வரையடைந் தருணை யான்புகழ்
வாளன கண்ணியை மணந்து விண்புரந்
தாளெயின் மான்மணந் தான்ச யம்புவே.

பிளக்கப்பட்ட அவை, கந்தக் கடவுளுக்கு (மயில்) வாகனமாகவுங் (கோழிக்) கொடியாகவும் விளங்கின. இப்பால் சுயம்புவாகிய அறுமுகச்சிவன், தன்னாலாளப்படுந்திருப்பரங்கிரியை யடைந்து, அருணகிரிநாத சுவாமிகள் புகழும்படியான வாள் போன்ற கண்ணையுடைய தெய்வயானைப் பிராட்டியைத் திருமணஞ் செய்து கொண்டு இந்திரனுக்கு முடிசூட்டுதலால் விண்ணுலகை யிரக்ஷித்துத் தான் ஆண்டு கொள்ளற்குரிய வேடர் குலமாதாய்த் தோன்றிய வள்ளிபிராட்டியையுந் திருமணங் கொண்டருளினான்.

முதல்வன் புராண முடிப்பு முற்றிற்று.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar