SS கிருஷ்ண பாதம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கிருஷ்ண பாதம்
கிருஷ்ண பாதம்
கிருஷ்ண பாதம்

உலகினை அளந்திட்ட பாதம்!
உயிர்களுள் இழைந்திட்ட பாதம்!
அலர்மேலு அணைத்திட்ட பாதம்!
அணைத்துயிர் பிணைத்திட்ட பாதம்!
புலர்காலை துயில் எழுப்ப
புவியுயிர் மலரிட்ட பாதம்!
மலர் மங்கை ஆண்டா ளுமே
மகிழ்வுடன் மனம் தொட்ட பாதம்!

கற்பகத் தருமலர் பாதம்!
கண்ணனின் சிறுமலர் பாதம்!
வற்றிடா அருள்மலர் பாதம்!
வண்ணனின் வளர்நிறை பாதம்!
பற்றிடும் பதமலர் பாதம்!
பார்த்தனுக் கருளிய பாதம்!
சுற்றிடும் காந்தனின் பாதம்!
சுகம் தரும் சாந்தனின் பாதம்!

தரையினிற் நடந்திட்ட பாதம்!
தமையுடன் கடந்திட்ட பாதம்!
மறையொலி உரைத்திட்டோன் பாதம்!
மனமொழி நிறைத்திட்டோன் பாதம்!
மறைமுனி அழைத்திட்ட பாதம்!
மகிழ்குரு மலைத்திட்ட பாதம்!
உரை சொல்லும் உன்னத பாதம்!
உயர்ந்திட்ட மன்னவ பாதம்!

ஆழிரேகை உயர்த்திட்ட பாதம்!
அகலிகையை உயிர்த்திட்ட பாதம்!
ஆலிலையும் அணைத்திட்ட பாதம்!
ஆயர்குலம் பிணைத்திட்ட பாதம்!
காளிங்க நர்த்தன பாதம்!
காத்தருளும் வித்தக பாதம்!
மாலெனும் உயர்ந்தவன் பாதம்!
மாதுடை கவர்ந்தவன் பாதம்!

கண்ணனாய் ஓடிய பாதம்!
கால்விரல் தேடிய பாதம்!
வண்ணமாய் மாறிய பாதம்!
வனக்குகன் நாடிய பாதம்!
மண்ணினுள் ஆடிய பாதம்!
மணிப் பொன்னும் சூடிய பாதம்!
வெண்ணுறி விரும்பியோன் பாதம்!
வெள்ளத்தை அருந்தியோன் பாதம்!

உலகினைப் படைத்தவன் பாதம்!
உயிர்களைக் காப்பவன் பாதம்!
அழகினிற் கவர்ந்தவன் பாதம்!
அனைத்திற்கும் பகிர்ந்தவன் பாதம்!
துலங்கிடம் துணைவனின் பாதம்!
துணைவரும் இறைவனின் பாதம்!
வழங்கிடும் வள்ளலின் பாதம்!
வாமன வல்லவன் பாதம்!

ஆயருடன் ஆடிய பாதம்!
ஆழ்கடல் தேடிய பாதம்!
மாயனாம் மன்னவன் பாதம்!
மயக்கிடும் என்னவன் பாதம்!
தாயென நிற்பவன் பாதம்!
தரணியின் கற்பக பாதம்!
தூயனாய் ஆள்பவன் பாதம்!
துளசியுள் வாழ்பவன் பாதம்!

அறவழி காட்டிடும் பாதம்!
அருள்நெறி ஊட்டிடும் பாதம்!
உறவென உணர்த்திடும் பாதம்!
உதவிடும் உத்தமன் பாதம்!
சுரங்களின் நாயகன் பாதம்!
சுகம் தரும் தென்றலின் பாதம்!
வரங்களை வழங்குவோன் பாதம்!
வசந்தமாய் துலங்குவோன் பாதம்!

பரமபத பனிமலர் பாதம்!
பக்தர்கள் அணிமலர் பாதம்!
கரம் தரும் கண்ணனின் பாதம்!
கலியுக மன்னனின் பாதம்!
அரசனாய் ஆள்பவன் பாதம்!
அகத்தினுள் வாழ்பவன் பாதம்!
பரம்பொருள் வேந்தனின் பாதம்!
பரவசம் ஈந்தவன் பாதம்!

பொற்கழல் அணிந்தவன் பாதம்!
பொல்கஜன் அழித்தவன் பாதம்!
வற்றிடா செல்வனின் பாதம்!
வழியுரை சொல்பவன் பாதம்!
முற்றிலா முகுந்தனின் பாதம்!
முழுமதி வதனனின் பாதம்!
ஒற்றுமை விமலனின் பாதம்!
ஒளிர்ந்திடும் நிமலனின் பாதம்!

கீதையைப் பகிர்ந்தவன் பாதம்!
கிளிமலர் குழலவன் பாதம்!
பாதையை உரைத்தவன் பாதம்!
பார்த்திப சாரதி பாதம்!
மாதுடை கொடுத்தவன் பாதம்!
மடிதுயர் தடுத்தவன் பாதம்!
பாதுகை வழங்கிய பாதம்!
பரதனும் வணங்கிய பாதம்!

கூடல் அழகரின் சுந்தர பாதம்!
மதுர வல்லியின் மனமகிழ் பாதம்!
ஆடல் மயில் சோலை அழகரின் பாதம்!
அமுத கள்ளழக காந்தனின் பாதம்!
ஈடிலா சீனிவாச வேங்கடன் பாதம்!
வெங்கடாஜலபதியின் பிரஸன்ன பாதம்!
காடு கஜனருள் காளமேக பாதம்!
மோகன வல்லியின் மோகூரான் பாதம்!

கருடவாகன ஸ்ரீ வத்ஸ பாதம்!
கமலக் கண்ணனின் ஸ்ரீஹரி பாதம்!
தருவென வரம் தரும் ஸ்ரீராமர் பாதம்!
தாமோதரனாம் ஸ்ரீதரன் பாதம்!
புரு÷ஷாத்தமனின் புண்ணிய பாதம்!
பீதாம்பரனின் வைகுந்த பாதம்!
பெரு வினை தீர்க்கும் கிருஷ்ணரின் பாதம்!
விதிதனை மாற்றும் விஸ்வரூப பாதம்!

குவலயம் முறித்திட்ட சதுர்புஜ பாதம்!
குவியலாய் வரமிடும் குருவாயூர் பாதம்!
தவமென கிடைத்திட்ட தயாபரன் பாதம்!
தானென துணைவரும் தசாவதாரன் பாதம்!
நவமணி யொளிதரும் நர்த்தன பாதம்!
நம்பினோர்க் கருளிடும் நாரண பாதம்!
உவகையின் மொழியுடை உச்சித பாதம்!
உண்மையின் தத்துவ அச்சுத பாதம்!

பிரளய வெள்ளத்தில் ஆடிய பாதம்!
பிரகலாதன் வாய் சூடிய பாதம்!
இரணியனை வதம் செய்த வீரத்தின் பாதம்!
இலையினிற் இழைந்திட்ட கோகுல பாதம்!
மரணபயம் மாய்த்திடும் மாதவன் பாதம்!
மது சூதனனின் மலரிதழ் பாதம்!
பரமதயாளனின் பத்ம நற் பாதம்!
பாண்டவ தூதனின் பூரண பாதம்!

சங்கு சக்கரனின் சகஸ்ரம பாதம்!
சத்ய நாராயணனின் திவ்ய பொற்பாதம்!
ரங்க நாதனின் சயன பொற்பாதம்!
ராதா கேசவ ராகவ பாதம்!
தங்க நான்மறை மீட்டவன் பாதம்!
மந்தார மத்தினை நிறுத்தியோன் பாதம்!
எங்கும் நிறைந்திட்ட பலராமர் பாதம்!
எண்ணிய தளத்திடும் பரசுராம பாதம்!

அழகிய மணவாளனின் ஆராவதன் பாதம்!
அப்பக் குடத்தானின் அப்பலரெங்க பாதம்!
அழகிய சிங்கரின் குந்த நாயக பாதம்!
ஆதி கேசவ சியாமளமேனியர் பாதம்!
உலகளந்த பெருமானின் திரிவிக்கிரம பாதம்!
உய்யவந்தானின் அபயப்பிரத பாதம்!
நிலாத்திங்கள் துண்டத்தான் அருமாகடற் பாதம்!
காய்சின வேந்தனின் சுந்தரர் ராஜ பாதம்!

மீனாள் உமையாள் அண்ணன் பெருமாள் பாதம்!
சித்திரரத வல்லப பவளகனிவாய் பாதம்!
தேனாய் வரமிடும் ஹரசாப விமோசனர் பாதம்!
மிதிலை வில்முறித்த சீதா மணவாளர் பாதம்!
மானான மாரீசனை வதைத்திட்ட பாதம்!
மாயச் சகடத்தினை உதைத்திட்ட பாதம்!
தேன் துயிலரங்க ரெங்கநாதர் பாதம்!
ஆண்டளக்கும் ஐயன் மணிக்குன்றன் பாதம்!

விஜயராகவ பிரகதவரத பாதம்!
வீரராகவ மரகத மதுர பாதம்!
கஜேந்திர வரத ரமாமணி நயன பாதம்!
சுகந்தவன நாத வீர சயன பாதம்!
வசந்த வல்வில் வாசுதேவ பாதம்!
வையங் காத்திட்ட புஷ்ப பூரண பாதம்!
திசை யெலாம் நிறைந்திட்ட திருநறையாண் பாதம்!
தீபப் பிரகாச யோக நரசிம்மர் பாதம்!

பக்தவச்சலனின் பரமபத பாதம்!
பத்தராவிப் பெருமாள் திவ்யப் பிரகாச பாதம்!
சக்ரதர சந்திர சூடப்பெருமாள் பாதம்!
சௌந்தர்ய ராஜனின் ஜகதீஸ்வர பாதம்!
அக்கரை வண்ண ஆதிவராஹன் பாதம்!
அம்ருத நாராயண கோலப்பிரான் பாதம்!
அகோபில நரசின் அரவிந்த லோசன பாதம்!
அனந்த பத்மநாப ஆதிகேசவ பாதம்!

திருவாழ் மார்பன் ஒப்பிலியப்ப பாதம்!
தேவாதிராஜன் செங்கண்மால் பாதம்!
திருமூழிக் களத்தான் நின்ற நம்பி பாதம்!
காட்கரையப்பன் கமலநாத பாதம்!
திருக்குறளப்பன் தேவப்பிரான் பாதம்!
யதோத்காரி கருணாகர கண்ணபிரான் பாதம்!
உரக மெல்லணையான் சௌமிய நாராயண பாதம்!
இமய வரப்பனாம் மாயப்பிரான் பாதம்!

மகர நெடுங்குழை ராஜகோபால் பாதம்!
வடிவழகி நம்பி ஜகத்ரட்சக பாதம்!
சகல நலந்தரும் சத்யகிரியான் பாதம்!
பத்ரி நாராயண பாலாஜியின் பாதம்!
பகலவ ஒளிதரும் பாம்பணையப்ப பாதம்!
விஜயாசனன சாரங்கபாணி பாதம்!
சுகநலம் அருளிடும் சாரநாதன் பாதம்!
குடமாடு கூத்தனருள் ஆமருவியப்பன் பாதம்!

பவளவண்ணனின் பரிமளரங்க பாதம்!
தோத்தாத்ரி நாதன் கல்யாண நாராயண பாதம்!
தவமென வரம் தரும் வேங்கட கிருஷ்ண பாதம்!
தர்மத்தின் வழி நின்ற தாடாளன் பாதம்!
நவமணி ஒளிதரும் லட்சுமி வராஹ பாதம்!
சயனப் பெருமாள் சாந்த நரசிம்ம பாதம்!
கவலைகள் களைந்திடும் தெய்வநாயகன் பாதம்!
வெண்சுடர்ப் பெருமாள் பேரருளாளன் பாதம்!

சத்திய மூர்த்தியின் ஜகந் நாத பாதம்!
நீலமுகில் வண்ணன் ஆதிப்பிரான் பாதம்!
நித்திரை அழகுடை பாண்டுரெங்க பாதம்!
நீர் வண்ண நாயக கள்வரின் பாதம்!
வைத்த மாநிதி வடபத்ர சாயீ பாதம்!
கோலவில்லிராமன் புண்டரீகாட்சன் பாதம்!
வித்தக பெரிய பெருமாள் சௌரிராஜ பாதம்!
சொன்ன வண்ணம் செய்த நம்பெருமாள் பாதம்!

தாமரைக் கண்ணுடையன் தேவிப் பெருமாள் பாதம்!
தானென துணைவரும் நந்தாவிளக்கு பாதம்!
தாமரையாள் கேள்வன் வேதராஜ பாதம்!
வயலாளி மணவாள கோபாலகிருஷ்ண பாதம்!
ராமஜெனகை நாராயண சலசயனர் பாதம்!
நம்பிக்கை ஒளியூட்டும் நான்மதியர் பாதம்!
வாமனனாய் உருவெடுத்த உலகளந்தோன் பாதம்!
வளங்கள் பெற வரங்கள் தரும் ஸ்ரீ வாரி பாதம்!

கருடாழ்வார் அன்பாய் சுமந்திட்ட பாதம்!
ஹனுமந்தன் நெஞ்சுள் நிறைந்திட்ட பாதம்!
நறுவாழ்வு நலமளிக்கும் நாவாய்குந்தன் பாதம்!
பெண்மையினால் அமுதுகாத்த மோகினியின் பாதம்!
தரணியெலாம் போற்றுகின்ற தாமரைக் கண்ணன் பாதம்!
தசரதனின் செல்வனான ராமசுப பாதம்!
நரசிங்க வல்லியார்க்கு நெகிழ்வு தந்து பாதம்!
நம்பிக்கை நலன் கொடுக்கும் லட்சுமிபதி பாதம்!

வசுதேவர் தேவகிக்கு தரிசனம் தந்த பாதம்!
யசோதா நந்தரிடம் கிருஷ்ணராய் வந்த பாதம்!
சிசுவதை கம்சனவன் ஆணவம் ஒழித்த பாதம்!
பூதகியை தாடகையை புவியினிலே அழித்த பாதம்!
பசுங்கன்று வற்காசுரனை விளாமரத்தில் வதைத்த பாதம்!
அகாசுரன் பகாசுரனின் ஆற்றலெலாம் சிதைத்த பாதம்!
விசுவாச நந்தரையும் இந்திரனிடம் மீட்டோன் பாதம்!
கோவர்த்தனம் பிடித்து கல்மழையில் காத்தோன் பாதம்!

கதிரோனை சக்கரத்தால் மறைத்திட்டோன் பாதம்!
பாண்டவர்க்கு ஆ(ட்)சி தந்து நிறைத்திட்டோன் பாதம்!
துதியாத துரியோதனை சாய்த்திட்டோன் பாதம்!
மதியாத துச்சாதனனை மாய்த்திட்டோன் பாதம்!
பதிவிரதை திரௌபதிக்கு துகில் கொடுத்தோன் பாதம்!
கர்ணனுக்கும் அருள் வழங்கி தாரை ஏற்றோன் பாதம்!
விதுரநீதி தழைத்திடவே விருந்துண்டோன் பாதம்!
விளையாட்டாய் அத்தனையும் ஆட்டுவிப்போன் பாதம்!

விராதனை புவியுள் அமிழ்த்திட்ட பாதம்!
ஜடாயு சபரியன்புள் அமிழ்ந்திட்ட பாதம்!
மராமர மரத்தினையே சிதைத்திட்ட பாதம்!
வாலியை போரினிலே வதைத்திட்ட பாதம்!
இராவண கர்வத்தினை வீழ்த்திட்டோன் பாதம்!
விபீடணர், சுக்ரீவரை வாழ்த்திட்டோன் பாதம்!
பராபரம் தானெனவே உணர்த்திட்ட பாதம்!
பரம்பொருள் கல்கியாக உயர்ந்திட்ட பாதம்!

நாவடி யமர்ந்தோன் நாயக பாதம்!
நலவளம் பகிர்வோன் நற்றுணை பாதம்!
மூவடி யளந்தோன் சேவடி பாதம்!
பாற்கடல் செல்வ விஷ்ணுவின் பாதம்!
கோவடி இசைந்தோன் கோவிந்த பாதம்!
கோசலை மைந்தனின் கோதண்ட பாதம்!
பாவழி நுழைந்தோன் பரந்தாம பாதம்!
திவ்யப் பிரபந்தத் தீபஒளி பாதம்!

முதலாழ்வார் மூவர் பற்றிட்ட பாதம்!
மழிசையர் மங்கையர் சுற்றிட்ட பாதம்!
பதமலர் ஆண்டாள் தொட்டிட்ட பாதம்!
பெரியாழ்வார் நம்மாழ்வார் கற்றிட்ட பாதம்!
மதுரகவி பாணாழ்வார் மகிழ்ந்திட்ட பாதம்!
குலசேகரர் பொடியாழ்வார் நெகிழ்ந்திட்ட பாதம்!
மதிமா முனியிருவர் மயங்கிட்ட பாதம்!
மகிழ்கூரர் ராமானுஜர் வியந்திட்ட பாதம்!

மூவடி யளந்தோனின் பாதத்தைப் பற்றிடுவோம்!
பரமபத வைகுந்த பேரின்பம் பெற்றிடுவோம்!
சேவடி யழகினையே செவிகுளிர உரைத்திடுவோம்!
செவ்விதழழகனையே செந்தமிழில் நனைத்திடுவோம்!
காவலாய் இருக்கும் வேந்தன் காலடியில் கற்றிடுவோம்!
கருணையினால் கவரும் கண்ணன் திருவடியை சுற்றிடுவோம்!
பூவடி நற்பாதத்தை நாவினிக்க நாமுரைக்க
புண்ணியம் கோடிதரும் பூரணன் ஹரியின் பதமே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar