SS நமக்கிங்கு நல்ல துணை! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நமக்கிங்கு நல்ல துணை!
நமக்கிங்கு நல்ல துணை!
நமக்கிங்கு நல்ல துணை!

சர்வலோக பிதாமகரான பிரம்மா முதல், மிக அற்பமான புல், பூண்டு வரையிலான பிராணி வர்க்கங்களும் சுகத்தையே நாடுகின்றன. ஆனால் ஒரு பிராணியாவது சுகத்தை அடைந்துவிட்டது; அதற்குமேல் அடையவேண்டுவது ஒன்றுமில்லை என்ற நிலையை எட்டிவிட்டதா என்றால் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது. மேலும் அந்த சுகம் தேடும் முயற்சி துக்கத்தையே கொடுக்கிறது. சம்பாதிக்கும் சுகம் கையைவிட்டுப் போய்விடுமோ என்ற பயத்தினால் துக்கம் ஏற்படுகிறது. சுகம் துக்கத்துடன் கலந்திருப்பதால் அதை சுகமென்று எப்படிச் சொல்லமுடியும்?

கண்ணபரமாத்மா கீதையில், சாந்தி இல்லாதவனுக்கு சுகம் எங்கிருந்து வரும்? என்கிறார். சாந்தி தான் சுகத்திற்கான சாதனம். காமங்களை விலக்கி, மமதை அற்று அகங்காரமற்று இருந்தால் அவன் சாந்தியை அடைகிறான் என்கிறார்.

கீதையின் ஐந்தாவது அத்தியாயத்தில் சிரத்தையோடு பகவானிடத்தில் மனதை செலுத்தி இந்திரியங்களை அடக்கினால் ஞானத்தை அடைந்து, அதன்மூலம் உத்தமமான சாந்தியை அடையலாம் என்கிறார் கண்ணன். தான் என்ற அகங்காரமும், அதன்மூலம் தன்னைச் சேர்ந்ததாக எண்ணி இதர விஷயங்களில் வைத்திருக்கும் என்னுடையது என்ற மமகாரமும்தான் துக்கத்தைக் கொடுக்கிறது என்று சதச்லோகியில் ஆதிசங்கரர் சொல்கிறார்.

எனவே, துக்கத்திற்கு ஏதுவான அகந்தையையும் மமதையையும் விலக்கினாலன்றி துக்கம் வருவதைத் தடுக்கமுடியாது. துக்கத்தைத் தடுத்தால்தான் சாந்தி கிட்டும்; அந்த சாந்தியினால் சுகம் ஏற்படும். அகந்தை, மமதை என்னும் இரண்டில், அகந்தையினால்தான் மமதை ஏற்படுகிறது. நான் என்ற அகந்தையை போக்கிவிட்டால் மமதையைப் போக்கி விடலாம். மம, மம என்றிருக்கும் மனோபலத்தை மாற்றுவதற்கு நம நம என்பதை தவிர வேறு சாதனம் இல்லை. யக்ஞம் செய்யும்போதும் தானம் செய்யும் போதும் தான் செய்கிறோம் என்ற எண்ணத்தையும், அடையப்போகும் பயன்மீதுள்ள பற்றுதலையும் விட வேண்டுமென்று கீதாச்சாரியன் திரும்பத் திரும்ப வற்புறுத்துகிறார்.

ஒரு பொருளுக்கும் நமக்கும் இறை சம்பந்தம் இருந்தாலன்றி அது நம்முடையது என்று எப்படிச் சொல்ல முடியும்? இதை கவனத்தில்கொண்டு நம் உடலை கவனிப்போமானால், இந்த உடல் ஏற்பட்ட விஷயத்தில் நமக்கு சுதந்திரமே இல்லையென்று தெரியும். இந்த சரீரமானது நாம் கேட்டு வரவில்லை. வேண்டாமென்று தடுத்திருக்கவும் முடியாது. பிறந்த பிறகு வளர்வதிலும் நமக்கு சுதந்திரமில்லை. குழந்தைப் பருவம் இளமை என மாற்றங்கள் நிகழ்வதிலும் நமக்கு சுதந்திரம் இல்லை. அதற்கு முடிவு ஏற்படுவதிலும் கொஞ்சங்கூட சுதந்திரம் இல்லை. அதற்கு ஏற்படும் இன்ப துன்பங்களிலும் சுதந்திரம் இல்லை. உதாரணமாக, நமக்கு விருப்பமான ஒரு பண்டத்தை உட்கொண்டால், அது எப்படி ஜீரணமாகிறது என்பதை நாம் அறியமாட்டோம். மூச்சுவிடுவதிலும் ரத்த ஓட்டத்திலும் நமக்கு சுதந்திரம் இல்லை.

இவ்விதமாக உடல்சார்ந்த பல செயல்களின் இயக்கத்தைக்கூட நமக்குத் தெரியாமலும், நம்மைக் கேட்காமலும் நடத்திவருகிறது ஒரு சக்தி. இந்த உடலுக்கு நாம்தான் எஜமானன் என்று சொல்லமுடியுமா? அபபடி நடக்கும் எல்லா காரியங்களுக்கும் நாமே அதிகாரி என்றிருந்தால் நம்மால் தூங்க முடியுமா? எனவே தான் நம்முடைய கவனத்தை ஈர்க்காமலேயே கிரமப்படி அதன் காரியத்தை நடத்திக் கொண்டுவருகிறது. அதனுடைய உற்பத்தி, அழிவு முதலானவற்றுக்கு வேறு யாரோ எஜமானன் என்று நாம் ஒப்புக் கொண்டே தீர வேண்டும். இந்த விஷயத்தையே, எல்லாருடைய இதயத்திலும் இருந்துகொண்டு, தன் சக்தியினால் ஆட்டிவைக்கும் ஒருவர் இருக்கிறார்; அவர்தான் ஈசுவரன் என்றனர். சகல பிராணிகளுக்குள்ளும் நானே ஈசுவரன் என்பதை கிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். இதை உணர்ந்து, இந்த உடலுக்கு நாம் தலைவனல்ல என்று புரிந்துகொண்டால் ஆணவம் குறைந்தவிடும். அவன் ஆத்மா; அவனுடைய உடல் நாம். நாமென்றால் ஜீவாத்மாக்கள்.

அவன் தலைவன்: நாம் வேலையாட்கள்
அவன் தந்தை: நாம் பிள்ளைகள்
அவன் ஆசாரியன்; நாம் சீடர்கள்
அவன் பதி: நாம் பத்தினி.
அவன் போக்தா : நாம் போக்யம்.
அவன் ரட்சிப்பவன்: நாம் ரட்சிக்கப்படுபவர்கள்.

அவன் சேஷி: நாம் சேஷ பூதர்கள்.

இத்தகைய சம்பந்தம் நமக்கும் இறைவனுக்கும் உள்ளது.

நம என்ற சொல்லுக்கு சரணாகதி மந்திரம் என்றே பெயர். ராமானுஜர் இந்த மந்திரத்தைக் குறித்த, தஸ்யச தச்சரணாகதிரேவ வசீகரணம் என்று குறிப்பிடுகிறார்.

அந்த இறைவனை வசீகரிக்க வேண்டுமானால் நம் பக்கமாக அவனை இழுக்க வேண்டும் என்கிறார். அவன் திருவடியில் சரணாகதி அடைய வேண்டும். எனக்குரியவன் நான் அல்ல. என்னைச் சேர்ந்ததும் என்னை ரட்சிக்காது. மற்றவர்கள் எனக்கு ரட்சகர்கள் அல்ல. நீயே எனக்கு ரட்சகன் என்று சரணடைய வேண்டும். ஆண்டாளும் நாராயணனே நமக்கு பறை தருவான் என்று சொல்கிறாள்.

உண்ணலும் உனதே
உயிர்த்தலும் உனதே
உடல் உயிர் மனம்
எல்லாம் உனதே
எண்ணலும் உனதே
இச்சையும் உனதே
என் செயல் பயன்
எல்லாம் உனதே

என்பார் ஓர் அடியார். இந்த கலியுகத்தில் நமக்கு சுலபமான வழி இறை நாமமே.

ஓம் விஷ்ணுவே நம! என்று ஒரு மலரை எடுத்துப்போட்டாலே போதும்.

யாகம், தவம் போன்றவை செய்த பயனை விஷ்ணு என்ற நாமத்தைச் சொன்னாலே கிடைத்துவிடும்.

உலக விஷயங்களில் மிக அரிதானதும், தன்னைச் சார்ந்தோர்க்கு உயர்வான வாழ்வு தந்து நல்ல துணையாக விளங்கும் இந்து மதத்தில் பிறந்தும், அதன் பெருமையை உணராமல் - அதன் உன்னதமான கருத்துகளைப் பின் பற்றாமல் வாழும் மக்கள் கவலை எனும் குழியில் விழுந்து வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர். இதை பாரதியார்,

அருமையுறு பொருளிளெல்லாம்
மிக அரிதாய் தனைச்சாரும் அன்பர்க்கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
இந்துமதப் பெற்றி தன்னைக்
கருதி அதன் சொற்படியிங் கொழுகாத
மக்களெல்லாம் கவலையென்னும்
ஒரு நரகக் குழியில் வீழ்ந்து
தவிக்கின்றார் ஓய்விலாமே

என்று கூறுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் தவத்தில் சிறந்த முனிவர்களால் தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும்  சிறந்து விளங்கச் செய்யும் மேன்மையான பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளது நமது இந்து மதம். அதனைப் புரிந்துகொண்டு நல்வழியில் ஈடேற முயலவேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar