SS கந்தகுரு கவசம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கந்தகுரு கவசம்
கந்தகுரு கவசம்
கந்தகுரு கவசம்

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே.

ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுஹா சரணம்; குருபரா சரணம்
சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி

அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே
ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்

அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
வேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவே
தேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா
பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய்

அடிமுடியறிய வொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா
திருப்பரங்கிரி குஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடி குமரா ஏவல்பில்லி சூனியத்தை
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா; எண்கண் முருகா நீ
என்னுள்ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா
அறிவொளியாய்வந்த நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானு பூதிதாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்
குன்றக்குடி குமரா குருகுகனாய் வந்திடப்பா

குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணெய் மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்

மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி யாண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
ஏழ்மையகற்றி கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்

பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்

அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ; யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ; யாவர்க்கு மானோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணமையா
அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்

நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென் றறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா; அபயமென்று அலறுகிறேன்
அமைதியை வேண்டி அறுமுகா வா வாவென்றேன்
உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்

உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பா
அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள்ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு
அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்
ஸ்கந்த குருநாதா; ஸ்கந்த குருநாதா

தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச் செய்
அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்

சிவனைப் போலென்னைச் செய்திடுவதுன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்

தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்
என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்

நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக் கிடையே புரு÷ஷாத்தமன் காக்கட்டும்
கண்க ளிரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்
செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங் களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நம்முருகன் நயமுடன் காக்கட்டும்

பற்களைக் கந்தன் பலம் கொண்டு காக்கட்டும்
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்களிரண்டையும் தூயவேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளி மணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன் கைமாத்தடிதான் காக்கட்டும்
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத் திருக்கட்டும்
உதரத்தையெல்லாம் உமை மைந்தன் காக்கட்டும்

நாபிகுஹ்யம் லிங்கம் நவையுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால்விரல்களையும் பொருந்துமுகர் அனைத்தையுமே
உரோமத் துவாரமெல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்ஸமென்பு மேதஸையும்
அறுமுகா காத்திடுவீர்; அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாயிருந்தும்
முருகா வெனைக்காக்க வேல்கொண்டு வந்திடுவீர்

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ; ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸெளம் நம: வென்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நம: வரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத்தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோ டேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தி உந்தன் கையிலுண்டாம்

முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்லவேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலமாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்திரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்குக் கால பயமில்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்பரமண்ய குருநாதன்
தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்

ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முத்தனு மாகிடடா
அக்ஷர லக்ஷம் இதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணியதெலாம் கிட்டும் எமபயம் அகன்றோடும்
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே
வேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளே
வேத சூக்ஷ்மத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்பரஹ்மண்ய குரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்

மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறி வாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றாள்
பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய் நீ
பிரமனுக் கருளியவா பிரணவப் பொருளோனே
பிறவா வரமருளி பிரம்ம மய மாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கிவிட்டாய்

பழமுதிர்ச் சோலையில் பரஞ்சோதி மயமானாய்
சுவாமி மலையிலே சிவசுவாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டாய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே
பிறப்பையும்  இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்

எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
கந்தா சரணம் கந்தா சரணம்
சரண மடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே; சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னிலுன்னைக் காண எனக்கு வரமருள்வாய்
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்

இந்திரிய மடக்கி இருந்து மறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் <உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பெல்லாம் நின்னையே நினைத்திடச் செய்திடுவாய்
திருமுருகா வுன்னைத் திடமுற நினைத்திடவே

திருவருள் தந்திடுவாய் திருவருள் தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வை தானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய்
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தகுரு நாதாகேள்
மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச்செய்

வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடிகொண்டு விரட்டிடுவாய்
துக்கங்களனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே
அரைக்கணத்தில் நீயும் ஆடிவரு வாயப்பா
வந்தென்னைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுகமானவனே
சுப்ரஹ் மண்யனே சோகம் அகற்றிடுவாய்

ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ
ஞான தண்டபாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெலாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்புமயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பைஎன் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்

எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்

அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான்
ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்த குருவானான் காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமந் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்

ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு
எல்லையில்லாத உன் இறை வெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே

நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
பிரம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடியராக்கி மெய் வீட்டில் இருத்தி விடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே

கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா
கருவூரார் போற்றும் காங்கேயா ஸ்கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னி மலைக்குமாரா சித்தர்க் கருள்வோனே
சிவவாக்கிய சித்தருளைச் சிவன்மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர்வாழப் பிரதிஷ்டித்தான்
புலிப்பாணி சித்தர்களால் புடைசூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம்
ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழனிமலை முருகா கேள்
கொங்கு தேசத்திலே குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம் மாநகரத்தில்

கன்னிமார் ஓடையின் மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ்ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே; ஆதிமூலமான குரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே
பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்கப் பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ

சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பா
சிவஞானப் பழமான ஸ்கந்தகுரு நாதா
பழம் நீ என்றதினால் பழனிமலையிருந்தாயோ
திருவாவினன்குடியில் திருமுருகனானாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை
கலியுக வரதனென்று கலசமுனி உனைப் புகழ்ந்தான்

ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமோடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கு அருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா
ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம்
உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்

நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகா வென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்
அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகனின் அருகே உலகமப்பா
அருளெல்லாம் முருகன்; அன்பெலாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கிறேன் சந்தேகமில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ
சந்தேகமில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்தியமான தெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா.

சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம்; சத்தியமே ஸ்கந்தகுரு
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்தமாகி விடு
அழிவற்ற பிரம்மமாய் ஆக்கிவிடுவான் முருகன்
திருமுறைகள் திருமறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதைச் சொந்தமாக்கிக் கொண்டு நீ
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

பிறவிப் பிணியகலும் பிரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர்; யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலையகன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்

கவசம் ஏத்துவீரேல் கலியை ஜயித்திடலாம்
கலியென்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தொன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும்; அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன்; அறுகுபோல் வேறோடிடுவன்
வாழையடி வாழையைப் போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சௌக்யமும் ஸர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திறுத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்ரோதம் கலிதோஷ மகற்றுவிக்கும்
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம்பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உளத்தோடு கந்தகுரு கவசந்தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப்

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு; கவலையில்லை நிச்சயமாய்
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசந்தனை ஓதுவதே தவமெனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான

இகபர சுகமுண்டாம் என்னாளும் துன்பமில்லை
துன்பம் அகன்றுவிடும் தொந்தரவுகள் நீங்கிவிடும்
இன்பம் பெருகிவிடும்; இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப் பிணியகற்றி ப்ரம்மநிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டு நீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால்
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
                                            
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்று முன்நிற்பன்
உள்ளொளி யாயிருந்து உன்னில் அவனாகிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்
ஸ்கந்தஜோதியான கந்தன் கந்தகிரியிலிருந்து

தண்டாயுதம் தாங்கித் தருகிறான் காட்சியுமே
கந்தன் புகழ்பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்துநிதம் கண்டுய்மின் ஜகத்தீரே
கலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம் கொடுக்கும்
ஒருதரம் கவசமோதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏத்துவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்

மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை யோதி தினம் நல்லவரம் பெறுவீரே
ஐந்துமுறை தினமோதி பஞ்சாக்ஷரம் பெற்று
ஆறு முறையோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழுமுறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தின் அட்டமா சித்தி கிட்டும்
ஒன்பது தரமோதின் மரண பயமொழியும்
பத்துத்தர மேத்தி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே

கன்னிமார் ஓடையில் நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையும் கைகூடும்
கன்னிமார் ஓடைநீரை கைகளிலே நீ எடுத்துக்
கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டால் உன்
சித்தமலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்

கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரியேறிடுவீர்
கந்தகிரியேறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar