 |
சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்கள், திரவுபதியுடன் காட்டிற்குப் புறப்பட்டனர். அவர்களுடன் அந்தணர் சிலரும், அவர்களது பத்தினிகளும் உடன் சென்றனர். அன்றிரவு கங்கைக்கரையில் ஆலமரத்தடியில் தங்கினர். அப்போது தர்மர் வேதனையுடன், அந்தணர்களே! செல்வத்தை இழந்த நாங்கள், காட்டில் கிடைக்கும் காய்,கனிவகைகளை சாப்பிட்டு வாழப் போகிறோம். ஆனால், விலங்குகளும், அரக்கர்களும் வாழும் வனப்பகுதியில் உங்களால் வாழ முடியாது. தயவு செய்து நாட்டுக்குத் திரும்புங்கள் என வேண்டிக் கொண்டார். தர்மரே! எங்களுக்காக வருந்த வேண்டாம். உங்களுக்கு பாரமாக இருக்க மாட்டோம். தங்களின் நன்மைக்காக ஜெபம், தவம் செய்வோம். தேவையான உணவை நாங்களே தேடிக் கொள்வோம். மனதிற்கு இனிமை தரும் நல்ல விஷயங்களையும், கதைகளையும் பேசி பொழுதை நல்ல முறையில் உங்களுடனே கழிப்போம், என்றனர். அவர்களின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தார் தர்மபுத்திரர். அவரின் உயர்ந்த குணத்தைக் கண்ட தவுமியர் என்னும் மகரிஷி, சூரியனுக்குரிய ஆதித்ய மந்திரத்தை உபதேசம் செய்தார். கழுத்தளவு நீரில் நின்ற படி சூரியனை நோக்கி தர்மர், அந்த மந்திரத்தை ஜெபிக்க, சூரியன் நேரில் தோன்றினார். தர்மருக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை வழங்கினார். தர்மர் திரவுபதியிடம் அதைக் கொடுத்தார். அதன் மூலம் அவள் அனைவருக்கும் உணவு பரிமாறினாள்.
|
|
|
|