 |
| தேவர்கள், முனிவர்கள் எல்லாரும் ஓரிடத்தில் கூடி, எல்லாம் அறிந்த சகலகலா வல்லவராக விளங்கும் ஒருவருக்கு தாம்பூலம் (வெற்றிலை) வழங்கி பெருமைப்படுத்த முடிவெடுத்தனர். கல்வி, கேள்விகளில் சிறந்த அவ்வையாரிடம் சென்று, அன்னையே! புலமையில் சிறந்த உங்களுக்கு தாம்பூலம் அளிக்க விரும்புகிறோம். ஏற்றுக் கொள்ள வேண்டும், என்று வெற்றிலையை நீட்டினர். அவ்வையார், இதைப் பெறும் தகுதி எனக்கு இல்லை. ஐந்திரம் என்னும் இலக்கணம் எழுதிய இந்திரனிடம் இதைக் கொடுங்கள் என சொல்லி விட்டார்.இந்திரனோ, என்னை விட புலமையில் சிறந்த அகத்தியரே இதைப் பெற பொருத்தமானவர், என்று கூறினான். அகத்தியரும் புன்னகை புரிந்தபடி, நான் தமிழ்முனிவராக இருந்தாலும், சகலகலாவல்லியான கலைமகளே தாம்பூலம் பெற தகுதி படைத்தவள், என்றார்.கலைமகளோ, என் கணவர் நான்முகனே புலமையில் சிறந்தவர். அவரிடம் கொடுங்கள், என மறுத்தாள்.பிரம்மாவும், அம்பிகையான பார்வதியே ஞானத்தில் சிறந்தவள், என அனுப்பி வைத்தார்.பார்வதியும்,ஞானபண்டிதனான முருகனே உங்களின் தாம்பூலத்திற்கு தகுதி படைத்தவன் என்று அருள்புரிந்தாள். அவ்வையார் உள்ளிட்ட அனைவரும் முருகனின் இருப்பிடமான கந்தகிரிக்குச் சென்றனர். ஞானபண்டிதா! நீயே சகலகலா வல்லவன். புலவர்க்கெல்லாம் தலைவரான வேலவனே! நீயே தாம்பூலம் ஏற்கும் முழுதகுதி படைத்தவன், என்று வேண்டினர். அன்புடன் முருகனும் அந்த தாம்பூலத்தை ஏற்றார். |
|
|
|
|