Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஸ்ரீராமாநுஜ விஜயம்!
 
பக்தி கதைகள்
ஸ்ரீராமாநுஜ விஜயம்!

ஏறக்குறைய 940 வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில், கேசவசோமயாஜி- காந்திமதி தம்பதியருக்குத் திருக்குமரனாக அவதரித்தார் ஸ்ரீராமாநுஜர். இந்தத் தெய்விகக் குழந்தையை இளையாழ்வார் என்று நாமகரணம் செய்து அழைத்தனர் பெற்றோர். உரிய காலத்தில் யாதவப் பிரகாசரின் குருகுலத்தில் மாணாக்கனாகச் சேர்ந்த இளையாழ்வார், சிறிது பயிற்சிக்குப் பிறகு தமது குருவே கண்டு வியந்து பொறாமை கொள்ளக் கூடிய விதத்தில் ஞான ஒளி வீசத் தேர்ச்சி பெற்றார். பொறாமைத் தீ பற்றியெரிந்தபோது, யாதவப் பிரகாசருக்கு இளையாழ்வாரை ஒழித்து விடுவதைத் தவிர, வேறு வழி தோன்றவில்லை. நயவஞ்சகமாகக் காசி யாத்திரைக்குத் திட்டம் போட்டு, விந்திய மலைச்சாரலில் இளையாழ்வாரை விண்ணுலகுக்கு அனுப்ப வழிவகைகளையும் வகுத்து விட்டார். ஆனால் இளையாழ்வார் பக்கம் தெய்வானுக்கிரகம் பூரணமாக இருந்தது. பரந்தாமனும் தேவியும் விந்தியமலைச்சாரலுக்கு வேடவ தம்பதியாக வந்து, இளையாழ்வாரை அழைத்துக்கொண்டு போய், காஞ்சிக்கு அருகில் உள்ள ஒரு சோலையில் விட்டுவிட்டு மறைந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னரே இளையாழ்வாரின் காஞ்சிபுர வாசம் ஆரம்பமாகியது. காஞ்சியில் வரதராஜப் பெருமாளின் பரம பக்தனாக இருந்து சேவை செய்து வந்தபோது ஆளவந்தாரைச் சந்திக்கும் பாக்கியம் இளையாழ்வாருக்குக் கிடைத்தது.

இருவரும் நேரில் உரையாடவில்லை. ஆனால் இருவர் மனமும் ஒன்றோடொன்று பினணந்தது. இதற்கு அடையாளமாக, தமது இறுதிக் காலத்தில் ஆளவந்தார் இளையாழ்வார் சிந்தனையிலேயே இருந்து, தமது சீடர்களை அனுப்பி, அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரும்படிப் பணித்தார். இளையாழ்வார் விரைந்து சென்ற சமயம் ஆளவந்தார் பரகதி அடைந்துவிடவே, அவர் மனத்திலிருந்த அபிலாஷைகளை ஊகித்து உணர்ந்து கொண்டு, அவர் விட்டுச் சென்ற புனித காரியங்களை இளையாழ்வார் தாமே மேற்கொண்டார். அப்போது வைஷ்ணவப் பிரசாரம் தமிழகத்தில் தீவிரமாயிருந்தது. ஆழ்வாராதிகளின் திவ்யப் பிரபந்தம் தமிழ் வேதம் எனக் கருதப்பட்டது. பண்டிதர்களும், பரம பக்த சிகாமணிகளும் வைஷ்ணவம் நாட்டில் பரவ வேண்டி அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார்கள். இளையாழ்வாரின் திருவுள்ளத்திலும் அந்தக் காற்று வீசத் தொடங்கியது. மகாபூர்ணா என்ற பெரிய நம்பி இளையாழ்வாருக்குப் பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்து அவரை வைஷ்ணவராக்கினார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இளையாழ்வாரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. கிரஹஸ்தாசிரமத்தைத் துறந்து துறந்து சந்நியாசாச்ரமத்தை மேற்கொண்டு, ஸ்ரீராமாநுஜர் என்ற திவ்ய நாமத்தோடு ஸ்ரீரங்கம் சென்று, ஆளவந்தாரின் கடைசிக் கால விருப்பங்களை நிறைவேற்றுவதில் தமது காலத்தின் பெரும் பாகத்தைச் செலவழித்தார்.

சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞான பண்டிதர்களை ஒன்று திரட்டி, வேத, உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் சம்வாதம் செய்து ஆராய்ச்சிகள் நடத்தினார். தாமே சிலவற்றிற்கு பாஷ்யங்களும் செய்தருளினார். பிருமம் சூத்திரத்திற்கும் கீதைக்கும் அவர் செய்த பாஷ்யங்கள் பிரசித்தமாயுள்ளன. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதி திருவரங்கத்து அமுதனார் என்ற ஒரு சிஷ்யரால் உருவாக்கப்பட்டு, ஸ்ரீராமாநுஜர் முன்னிலையில் அரங்கேற்றப் பெற்று, அவர் ஆக்ஞையையொட்டி நாலாயிரப் பிரபந்தத்தின் முடிவில் சேர்கக்ப்பட்டது. இவ்வாறெல்லாம் விரிவான முறையில் விசிஷ்டாத்வைத பிரசாரத்தைச் செய்து பக்தகோடிகளின் எண்ணிக்கையை பெருக்கி வந்த ஸ்ரீராமாநுஜரின் ஸ்ரீரங்கவாசம் திடீரென்று முற்றுப் பெற்று, மைசூர் மேல் கோட்டையில் ஆரம்பமாகி, அங்கே சுமார் இருபது வருஷ காலம் ஓடியது. திருநாராயணபுரத்தில் கோயில் கொண்ட விக்கிரக வடிவான சம்பத் குமாரன் அந்த சமயம் முஸ்லிம் மன்னன்ஒருவனுடைய அரண்மனையில் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்து எடுத்துவந்து, யதாஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமாநுஜர். மீண்டும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமாநுஜரின் வாழ்க்கை தொடர்ந்தது. நூற்று இருபது வயது வரை வாழ்ந்து, வைஷ்ணவ சம்பிரதாயம் நீடித்து வளர வேண்டியதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்த பிறகு, தமது சிஷ்யன் பராசரரிடம் தமது பொறுப்புக்களைக் கொடுத்துவிட்டு திவ்ய சமாதியடைந்தார். ஸ்ரீராமாநுஜரின் ஜீவிய காலத்திலேயே அவரது விக்கிரகங்களும் சிலைகளும் சிஷ்யர்களால் தயாரிக்கப்பெற்று பல்வேறு இடங்களில் பிரதிஷ்டைசெய்யப்பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம்- தானான திருமேனி, மேல்கோட்டை- தானுகந்த திருமேனி, ஸ்ரீபெரும்புதூர்- தமர் உகந்த திருமேனி ஆகிய மூன்று விக்கிரகங்களையும் ஸ்ரீராமாநுஜரே தழுவி, தமது ஆசிகளோடு அளித்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar