Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தேவி தரிசனம்!
 
பக்தி கதைகள்
தேவி தரிசனம்!

துக்காராமை நினைக்க நினைக்க கமலாபாய்க்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. எல்லோரையும்போல சராசரி மனிதராக அவர் இல்லை என்பதிலே அவளுக்கு ஏகப்பட்ட வருத்தம். துக்காராமைப் பொறுத்தவரை பெரிய படிப்புகளை அவர் படித்ததில்லை. ஆனால் பண்டிதராகத் திகழ்ந்தார். உலக அனுபவங்களையெல்லாம் அடைகிற வயதையும் எட்டியிருக்கவில்லை. ஆனால் பக்குவியாக விளங்கினார்.  கவிதைகள் புனைந்தார். பாடல்கள் இசைத்தார். யாரிடமும் சென்று கற்றுக் கொண்டதில்லை. அவருக்கிருந்த சங்கீத ஞானம் இயற்கையாக வாய்த்தது. அவருடைய சரீரம் அத்துணை அசாத்தியமானது. சரீரத்திலும் குறையொன்றுமில்லை. துக்காராம் பாடுவதற்குத் தொடங்கினால் சூழ்ந்திருக்கும் பகையை மறந்து அவருடைய கானாமிர்தத்தில் சத்ரபதி சிவாஜி மன்னரே மூழ்கிப்போய் விடுவார். சிங்கம் எப்போது குகையிலிருந்து வெளியே வரும்? என்றைக்குச் சிறை செய்யலாம்? என்று காத்திருந்த ஔரங்கசீப்பிடமிருந்து அன்றைக்கு ஒரு நாள் பண்டரிநாதனே சிவாஜியைக் காப்பாற்றியது வேறு கதை.

புல்லாகிப் பூடாகிப் பிறவிகள் செய்து இப்போது தோன்றியவரில்லை துக்காராம். அவர் நாமதேவரின் புனர்ஜன்மம். புதிய முறையில் பாடல்களை இயற்றி, அவற்றையெல்லாம் பாடிப்பாடி பக்திமார்க்கத்தை பாரதவர்ஷத்தில் பரப்பியவர் நாமதேவர். நூறு கோடி பாடல்களால் பகவானைப் பாடுவதற்கு சங்கல்பம் செய்து கொண்டவர் அவர். அப்போது விட்ட குறையை இப்போது துக்காராமின் பெயரிலே தொடர்ந்து கொண்டிருக்கிறார் நாமதேவர். மக்களெல்லோரும் அப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ஆனால் அதை கமலாபாய் நம்பவேண்டுமே? அவர் இயற்றுகிற கவிதையும், மீட்டுகிற இசையும் யாருக்கு வேண்டும்? என்று வினவுகிற வகையைச் சேர்ந்தவள் போலல்லவா நடந்து கொள்கிறாள்? அவளது தேவைகள் பெரிதாக ஒன்றும் இல்லைதான். சோற்றுக்கு வழி செய்யாமல் அவர் பாட்டுக்கு நாமஸ்மரணையில் மூழ்குகிறபோதுதான் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவதில்லை. அதைக்கூட எதிர்பார்க்கக் கூடாதென்றால் எப்படி? அவரும் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்ளாதவரில்லை. கமலாபாயின் துர் அதிர்ஷ்டம், துக்காராமின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

தனது தந்தையார் மேற்கொண்டிருந்த தானிய வியாபாரத்தை சிலகாலம் தொடர்ந்து நடத்தினார். அதிலிருந்து நியாயமான வகையில் பொருளீட்டவும் செய்தார். உடனேயே கமலாபாய் கனவுகளில் மூழ்குவதற்குத் தொடங்கிவிட்டாள். எல்லாம் கொஞ்சநாட்கள்தான். நாட்டிலே பஞ்சம் ஏற்பட்டபோது அவளது வர்த்தகக் கணக்குகள் தவறாகிப்போயின. தானியங்களை வியாபாரத்திற்காகக் கொண்டு சென்ற காலையில் பஞ்சம் செய்த வஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் விநியோகம் செய்து விட்டார் துக்காராம். தோளுக்குமேல் வளர்ந்த இரண்டு மைந்தர்களும் உபதேசம் செய்தனர். தமக்கு மிஞ்சியதே தானம் என்று அவர்கள் சொன்னால், அது சுயநலம் பிடித்தவர்களின் வறட்டுத்தத்துவம் என்று அவர் எடுத்துக்கொள்ளமாட்டாரா என்ன? மைந்தர்களின் வார்த்தைகளை அவர் செவிமடுக்கவில்லை. அவரது தயாளத்தை அவர்களும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தனியாக எங்காவது சென்று பிழைத்துக் கொள்வதே சரியெனப்பட்டது அவர்களுக்கு. துக்ககரமானதொரு பொழுதிலே துக்காராமை விட்டுச் சென்றுவிட்டனர் அவர்கள். ஆனால் கமலாபாய்? வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தம்துணையுடனே இருப்பதைத் தவிர வேற்று வழி புகட்டப்படாத கலாசாரத்திலே பிறந்தவளுக்கு மாற்று வழி எவ்வாறு பிறக்கும்?

வீட்டிலிருந்தவை எல்லாம் வழித்து எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு விட்டன. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள் கமலாபாய். ஆனால் இன்றைக்கு நடந்ததைத்தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வீட்டிலே அடகுவைப்பதற்கு ஒன்றும் இல்லையென்றாலும், மார்வாடி ஒருவரிடம் நூறு வராகன் தொகையைக் கடனாகப் பெற்று வந்தாள். தானிய வியாபாரத்திற்கு அதையே மூலதனமாகக் கொடுத்தாள். நியாயமான லாபத்துடன் திரும்பி வருவதாக அவர் சொன்னார். அந்த லாபத்தை மட்டுமே செலவு செய்துகொள்ள வேண்டும் என்று அவள் சொன்னாள். ஏற்றுக்கொண்டார் துக்காராம். தானியங்களைக் கொள்முதல் செய்தாயிற்று. ஆனால் துக்காராமின் துர்அதிர்ஷ்டம். சில நேரங்களில் பொழியாமல் பயிர்களைக் கெடுத்துவிடுகிற மழை அன்றைக்குப் பார்த்து அவர் திரும்பி வருகிற போது பெரிதாகப் பெய்து எல்லாவற்றையுமே கெடுத்துவிடுகிறது. இயற்கையின் சிலிர்ப்பையோ சீற்றத்தையோ யாரால் தடுத்து நிறுத்த முடியும்?

மழை பெய்ததில் குற்றமில்லைதான். ஆனால் அந்த மழையிலும் மரத்தின் கிளைகளில் அமர்ந்து பகவத் தியானத்தில் ஆழ்ந்து விட்டதுதான் தவறாகிவிட்டது. அதனால்தான் நஷ்டத்தின் வீச்சு இன்னும் ஆழமாகிவிட்டது. கமலாபாய் நொந்துபோய் விட்டாள். அவரிடத்திலே வைத்திருந்த சிறு நம்பிக்கையும் சிதைந்து விட்டது. வீழ்ந்துவிட்ட பொருளாதாரத்தை இனியும் அவர் தூக்கி நிறுத்தி விடுவார் என்று அவள் எதிர்பார்ப்பதாக இல்லை. இனி அடுத்து என்ன என்பதிலே அவள் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. உள்ளம் கொதிக்க கொதிக்க அது கோபம் கோபமாய் பொங்கிப் பொங்கி சீறிக் கொண்டிருந்தது. அதிலே தண்ணீர் ஊற்றி அணைப்பதைப் போல ஓர் அழைப்பு வந்தது துக்காராமுக்கு. அது அவருடைய தகுதிக்குப் பொருத்தமான வேலை இல்லைதான். ஆனால் நஷ்டப்பட்ட இந்த நேரத்தில் அவரது கஷ்டம் குறையட்டும் என்று மிராசுதார் ஒருவர் இஷ்டப்பட்டு கொடுத்த வாய்ப்பு அது. முதலீடு இல்லாத தொழில் என்பதால் கமலாபாய்க்கு ஏராம்ப சந்தோஷம்.

இனி பரணிலே ஏறிநின்று கொண்டு பறவைகளை விரட்ட வேண்டும். ஆலோலம் பாடி ஆகாயத்தில் வட்டமிடும் பட்சிகளைத் துரத்த வேண்டும். துக்காராமுக்கும் மிகவும் பிடித்திருந்தது. அது பறவைகளை விரட்டுவதற்கானதாக அல்ல; பகவான் பண்டரீநாதனைப் பாடிப் பரவசப்படுவதற்கு உகந்த இடமாகப் பட்டதால்! பொழுதெல்லாம் நாமஸ்மரணையில் ஆழ்ந்துவிட்டார். ஆகவே தானியங்களைக் கொத்தித்தின்னும் பறவைகளை அவர் கண்டு கொள்ளவே இல்லை. இனியும் அவர் திருந்தமாட்டார் என்பதால் கமலாபாய் இப்போதெல்லாம் துக்காராமிடம் கோபித்துக் கொள்வதே இல்லை. அவளுடைய ஆத்திரமெல்லாம் இப்போது பண்டரீநாதனிடத்தில்தான். அவள் கறுப்புச்சட்டை போட்டுக்கொண்டு கடவுளை ஏசுகிற கூட்டத்தைச் சேர்ந்தவளில்லை என்றாலும், துக்காராமிடம் காட்ட முடியாத கோபத்தை பண்டரீநாதனிடம் கொட்டுவது எளிதாக இருந்தது. கேட்பதற்கு யாரும் இல்லை. என்பதால் அது வசதியாகவும் இருந்தது. அன்றைக்கு ஏதோ ஓர் அவசியத்தின் நிமித்தம் அவள் வெளியே சென்றிருக்க வேண்டும். மிகவும் கந்தலானதோர் ஆடையைப் பொதிந்து கொண்டு ஏழைப்பெண் ஒருத்தி வாச<லுக்கு வந்து இறைஞ்சினாள். காசு பணமோ, அன்னமோ தேவையில்லை. கந்தலான புடவை ஏதாவது கிடைத்தால் போதும் என்கிற கோரிக்கையையும் இட்டாள்.

அவள் நின்ற தோற்றத்திற்கு அது நியாயமாகவே பட்டது. துக்காராமுக்கு. உலர்த்துவதற்காக விரித்துப் போட்டிருந்த கமலா பாயின் புடவை ஒன்று அவரது கண்களில் விழுந்தது. அடுத்த நிமிடம் அந்த ஏழையின் கைகளுக்கு அது மாறியது. எங்கிருந்து எப்போது அதை உடுத்திக் கொண்டாள் என்பது தெரியவில்லை. தமது ஆடையை அணிந்து கொண்ட ஒருத்தி தூரத்திலே சென்று கொண்டிருப்பதைக் கண்டாள் கமலாபாய். தாம் இல்லத்திலே இல்லாத வேளையில் யாரோ ஒருத்திக்கு இரக்கப்பட்டுவிட்ட துக்காராமின் வேலைதான் இது என்பதைப் புரிந்துகொள்ள அவளுக்கு வெகுநேரம் தேவைப்படவில்லை. இப்போதெல்லாம் துக்காராமிடம்தான் அவள் கோபப்படுவதே இல்லையே. தம்மால் முடிந்தவரை தூக்கிக் கொள்ளும் படியானதொரு கல்லை எடுத்துக்கொண்டாள். இந்தக் கல்லால் அந்தப் பண்டரீநாதனை உடைத்துவிட வேண்டும். அதன் பிறகு துக்காராம் அந்த நாதனுக்காக எவ்வாறெல்லாம் துடிக்கிறார் என்பதைப் பார்த்து விடலாம்- கறுவிக்கொண்டு கோயிலை நோக்கி ஓடினாள் கமலாபாய். ஒருவித ஆவேசத்தில் ஒடியவளின் வேகத்திற்கு துக்காராமால் ஈடுகொடுக்க முடியவில்லை. கோயிலை அடைந்துவிட்டாள். அவளுக்கு முன்பாக பாண்டுரங்கன். கையிலிருக்கும் கல்லை வீசினால்போதும். சிதைந்து விடுவார், எறிவதற்குக் கையைத் தூக்கினாள். பாண்டுரங்கன் பிரம்மச்சாரி அல்லவே... ருக்மணி சமேதன் ஆயிற்றே! அரங்கனைத் தரிசிக்கிற போது ருக்மணியின் காட்சி கிடைக்காமல் போகுமா? பாண்டுரங்கனின் பக்கத்தில் மலர்ந்த முகத்துடன் ருக்மணிதேவி. தேவியின் தரிசனம் கண்டாள் கமலாபாய். அவள் உலர்த்துவதற்காகப் போட்டிருந்த அதே ஆடை இப்போது ருக்மணிதேவியின் இடையில். அப்போது அடைந்த பரவசத்தை அவளாலே உணர முடியவில்லை. கண்கள் சொருகத் தொடங்கின. கையிலிருந்த கல் நழுவி தரையில் விழுந்தது. கதவுகள் மூடின. கதவின் மணிகள் இசைக்கத் தொடங்கின. தூரத்தில் சங்கின் ஒலி. மயங்கினாள் கமலாபாய்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar