Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யார் யோகி?
 
பக்தி கதைகள்
யார் யோகி?

பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் ஞான கர்ம ஸந்நியாஸத்தை உபதேசித்து அருளினார். அறிவென்னும் நெருப்பில் தனது செயல்களை எரித்தவரும், உடைமைப் பொருட்கள் எதன்மீதும் பற்றின்றி, யான், எனது என்ற செருக்கை அறவே நீக்கயவருமான மெய்யறிவாளரை பகவான் புகழ்ந்து பேசினார். அகத்துறவின் பெருமையை எடுத்துக் கூறிய பகவான், அந்த அத்தியாயத்தின் கடைசியில், அர்ஜுனனை செயல்புரியுமாறு தூண்டினார். அர்ஜுனனின் உள்ளத்தில் மீண்டும் குழப்பம் தலை தூக்குகிறது. ஞானமா? கர்மமா? எது சிறந்தது? என்ற கேள்வி அவனது உள்ளத்தில் எழுகிறது. செயலைத் துறப்பது சிறந்ததா? செயலை இறைவழி பாடாகச் செய்யும் கர்மயோகம் சிறந்ததா? என்று கேட்கிறான். பகவான் கிருஷ்ணர் மீண்டும், இல்லறம், துறவறம் என்று இரண்டு வாழ்க்கை முறைகளை உபதேசம் செய்கிறார். இரண்டு வாழ்க்கை முறைகளிலுமே மெய்யறிவைப் பெறலாம். எனினும், மெய்யறிவைப் பெறுவதற்கு முக்கியம் - விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்ட மனநிலையே ஆகும் என்ற கருத்தை மீண்டும் தெளிவுபடுத்துகிறார்.

பொதுவாக, உலகில் இயல்பாக வாழும் சாதாரண மனிதனுக்கு பகவான். இல்லறத்தில் இருந்தபடி கர்மயோகத்தைக் கடைப்பிடிப்பதையே பரிந்துறை செய்கிறார். தகுந்த மனப்பக்குவமின்றி, தனியாகத் துறவு வாழ்க்கை வாழ்வது மிகக் கடினமானது என்று எச்சரிக்கிறார். பகவான் அடுத்து, கர்மயோகத்தை படிப்படியாக உபதேசிக்கிறார். கர்மயோகியானவர், தனது அனைத்து புறச்செயல்களையும் அகச்செயல்பாடுகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து, செயல்களின் பலன்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். கர்மயோகி, இவ்வித மனநிலையின் காரணமாக சிறிது சிறிதாக மனப்பக்குவத்தைப் பெற்று, புலனடக்கம், மனவடக்கம் முதலான தகுதிகளைப் பெற்று குருவின் வாயிலாக மெய்யறிவைப் பெறுகிறார். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் தனது உண்மை இயல்பை உள்ளவாறு உணர்ந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, பகவான் ஞானியின் இயல்பைப் பற்றியும், ஞானத்தைப் பற்றியும் கூறுகிறார். தூய உணர்வாகத் தன்னை உணர்ந்து கொண்டவரது சன்னிதியில், அனைத்து அறிவுக் கருவிகளும், செயற்கருவிகளும் செயலாற்றுகின்றன. அவர் செயல்புரிவதுமில்லை, வேறொருவரைச் செயலாற்றுமாறு தூண்டுவதுமில்லை. தத்தமது இயல்பிற்கேற்ப ஒவ்வொரு கருவியும் செயலாற்றுகிறது. தனது உண்மை இயல்பை உணர்ந்த ஞானி, செயலின் பலன்களுக்கு அப்பாற்பட்டவராக பலன்களைக் கடந்தவராக இருக்கிறார். அவரது செயலின் பலன்கள் அவரைப் பாதிப்பதில்லை.

அறியாமையால் உயிர்கள் அனைத்தும் மயக்கத்தை அடைகின்றன. தன்னைப் பற்றிய மெய்யறிவால், தன்னைப் பற்றிய அறியாமையை நீக்கிக்கொண்ட பிறகு, தனது உண்மை இயல்பான பரம்பொருளாக இருக்கும் தன்மை வெளிப்படுகிறது. கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகிய ஞானயோக ஸாதனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டு, பரம்பொருள் தத்துவத்திலேயே நிலைத்திருக்கின்றனர். அனைத்து மாசுகளிலிருந்து விடுபட்டவர்களாய், மெய்யறிவினால் தமது பாபங்களை அழித்தவர்கள் பிறவாப் பெருநிலையை அடைகின்றனர். கல்வியும் அடக்கமும் நிறைந்த அந்தணரிடத்திலும், பசுவிடத்திலும், யானையினிடத்திலும், நாயிடத்திலும், அவ்வாறே நாயை உண்பவரிடத்திலும் ஞானிகள் சம பார்வையை உடையவர்களாக இருக்கிறார்கள். எவர்களுடைய மனமானது சமமான பரம் பொருளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, அவர்களால் இங்கேயே பிறவியானது வெல்லப்படுகிறது. ஏனெனில், பரம் பொருளானது சமமானதும், குறைகள் அற்றதும் ஆகும். ஆதலால், அவர்கள் பரம்பொருளில் நிலைபெறுகிறார்கள். பரம்பொருளை அறிந்தவர், பரம்பொருள் தத்துவத்தில் நிலைத்தவராக, எவ்வித மோஹமும் அற்றவராக இருக்கிறார். நடவினையின் காரணமாக வாழ்வில் பிரியமானதை அடைந்தால் துள்ளிக் குதிக்காமலும், பிரியமில்லாததை அடைந்தால் வெறுக்காமலும் இருக்கிறார்.

இன்பத்துள் இன்பம் விழையாதவன் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

என்ற திருக்குறளை இங்கு ஒப்பு நோக்கலாம். புற விஷயங்களில் பற்றற்ற மனதை உடையவர். தன்னில் தான் இன்புறுகிறார். அவ்வாறு பரம் பொருளில் நிலைத்த புத்தியை உடையவர். குறையற்ற பேரின்பத்தை உணர்கிறார். பொறிகள் புலன்களோடு பொருந்துவதால் ஏற்படும் புலனின்பங்கள் துன்பத்துக்குக் காரணமானவையாக இருக்கின்றன. அவற்றுக்குத் தோற்றமும் முடிவும் உண்டு. அறிவாளி அவற்றில் களிப்படைவதில்லை. எவனொருவன் உடலை உகுப்பதற்கு முன்பாக இவ்வுலகில் வாழ்ந்திருக்கும்போதே, ஆசை, கோபம், முதலியவற்றால் ஏற்படும் வேகத்தைக் கட்டுப்படுத்த வல்லவனோ, அவனே யோகி, அவனே உலகில் மகிழ்ச்சியான மனிதன். மெய்யறிவாளராகிய அந்த ரிஷி, பாபங்கள் அழியப்பெற்று, ஐயங்கள் நீங்கப்பெற்றவராக, அனைத்து உயிர்களின் நலத்தை விரும்புபவராக, தன்னில் தான் நிலைபெற்று, மோக்ஷத்தை அடைகிறார். அடுத்து, பகவான் கீதையின் ஆறாவது அத்தியாயமான தியான யோகத்துக்கு பின்வருமாறு முகவுரை கொடுக்கிறார். புறப்பொருட்களை வெளியே நிறுத்தி, கண்களை புருவங்களிடையே நிறுத்தி, மூக்கின் வழியாகச் செல்லும் பிராணனையும் அபானனையும் நெறிப்படுத்தி, பொறிகள், மனம், புத்தி ஆகியவற்றை ஒழுங்கு படுத்தியவராய், ஆசை, பயம், கோபம் முதலியவற்றை விலக்கி, மோக்ஷத்தையே மேலான குறிக்கோளாகக் கொண்டவர் யாண்டும் முக்தராக இருக்கிறார். யக்ஞங்கள், தவங்கள் ஆகியவற்றைப் புசிப்பவராகவும், அனைத்து உலகுக்கும் மேலான ஈச்வரனாகவும், அனைத்து உயிர்களுக்கும் நண்பனாகவும் விளங்கும் என்னை அறிந்து அமைதியை அடைகிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar