Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஞானத்தின் மகிமை
 
பக்தி கதைகள்
ஞானத்தின் மகிமை

பகவான் கிருஷ்ணர், ஞானத்தின் மகிமையைப் பின்வருமாறு எடுத்துக் கூறினார். இவ்வுலகில் மெய்யறிவுக்கு நிகராக தூய்மைப்படுத்தும் கருவி வேறு இல்லை. காலப்போக்கில் யோகத்தினால் நன்கு பக்குவமடைந்தவன் அதனை தன்னிடத்தில் தானாகவே அடைகிறான். ஞானத்தை அடைவதற்கு வேதாந்தத்தை பரம பிரமாணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் அடுத்து வரும் சுலோகத்தில் அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் பகவான்.

ஸ்ரத்தாவாந் லபதே ஜ்ஞாநம் தத்பர ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திம் அசிரேணாதிகச்சதி:
(ஸ்ரீமத்பகவத்கீதை 4:39)

பரம்பொருளையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவன். புலனடக்கம் மிகுந்தவன். சிரத்தை உடையவன் மெய்யறிவைப் பெறுகிறான். மெய்யறிவைப் பெற்று மேலான அமைதியை உடனடியாக அடைகிறான். தத் என்ற பதத்துக்கு சொற்பொருள் இறைவன், ஈச்வரன், தத் என்ற பதத்துக்கு குறிப்புப் பொருள் சைதன்யம், ப்ரஹ்மன், தத்பர: என்றால் மோக்ஷபர; ப்ரஹ்மபர என்று பொருள் தனக்கு மோக்ஷம்தான் வேண்டும், அதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணுகிறவனுக்கு, தத்பர: என்று பெயர். வாழ்க்கையில் பரம்பொருளை உணர்வதுதான் குறிக்கோள் என்று எண்ணுபவன், முதல்படியாகப் புலனடக்கம் பயில வேண்டும். கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவற்றை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும். எவனுடைய பொறிகள் நன்கு நெறிப்படுத்தப்பட்டுள்ளனவோ, அவள் ஸம்யதேந்த்ரியன் எனப்படுவான்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து என்றார் திருவள்ளுவர் ஓரைந்தும் காப்பவனாக, பரம்பொருளையே குறிக்கோளாகக் கொண்டவனாக இருக்க வேண்டும். தனக்குவமை இல்லாதவனுடைய தாளையே குறிக்கோளாகக் கொண்டவனாக இருக்க வேண்டும். அதன்பொருட்டு ஓரைந்தையும் காக்க வேண்டும். ஐயுணர்வு எய்த வேண்டும். அடுத்து, சிரத்தை - சாஸ்த்ரத்தை நாம் ஞானத்துக்கு பிரமாணமாக வைத்துக்கொள்ளுதல். நான் பரம்பொருளாக இருக்கிறேன் என்பது ஓர் அறிவு (வ்ருத்தி ஞானம்) அந்த அறிவு குரு சாஸ்திரத்தினால் ஏற்படுகிறது. குருவானவர், சாஸ்த்ரத்தின் துணையோடு அதனைக் கற்றுக் கொடுக்கிறார்.

ச்ரத்தா என்றால் ஈடுபாடு என்றோ, நம்பிக்கை என்றோ பொருளல்ல.
குரு சாஸ்த்ர ப்ராமாண்ய புத்தி: ஸ்ரத்தா!

குருவும் சாஸ்த்ரமும் இணைந்துதான், நானே பரம் பொருள் என்ற ஞானத்தைக் கொடுக்க முடியும் என்ற உறுதியான எண்ணத்துக்கு சிரத்தை என்று பெயர். நிறத்தைப் பற்றிய அறிவைக் கண்கள் வாயிலாகப் பெறுகிறோம். நிறத்தைப் பற்றிய அறிவை. கண்ணைத் தவிர வேறு எதனாலும் தர முடியாது. காது வாயிலாகவோ, மூக்கு வாயிலாகவோ பெற முடியாது. ஒலியைப் பற்றிய அறிவைத் தருவது காது மட்டுமே. சுவையைப் பற்றிய அறிவைத் தருவது நாக்கு மட்டுமே. மணத்தைப் பற்றிய அறிவைத் தருவது மூக்கு மட்டுமே. ஊறு பற்றிய அறிவைத் தருவது தோல் மட்டுமே. அதைப்போன்று நான் பரம்பொருள் என்ற அறிவைத் தருவது குரு சாஸ்த்ரம் மட்டுமே என்ற எண்ணம் சிரத்தை எனப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஸாதந சதுஷ்டய ஸம்பத்தியை உடையவனுக்கு ஞானம் கிடைக்கும் என்பது இந்த சுலோகத்தின் தாத்பர்யம்.

ஸாதநாந் யத்ர சத்வாரி கதிதாநி மணீஷிபி:
யேஷு ஸத்ஸ்வேவ ஸந்நிஷ்டா யதபாவே ந ஸித்த்யதி

ஸாதந சதுஷ்டயம் இருந்தால்தான் ஞானம் வரும் என்பதை ஆதிசங்கரர் விவேக சூடாமணியில் தெளிவாகக் கூறியிருக்கிறார். பெரியோர்கள் ஆத்ம ஞானத்துக்கு நான்கு சாதனங்கள் தேவை என்று கூறினார்கள். அது இருந்தால்தான் ஞானம் நிஷ்டை அடைய முடியும். இல்லையென்றால் ஞானத்தையோ, ஞான நிஷ்டையையோ அடைய முடியாது. கடவுளைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் நிலையானது அல்ல என்று உணர்ந்து கொள்வது விவேகம். நிலையற்றவற்றில் பற்றை விடுதல் வைராக்யம் நிலையான மெய்ப் பொருளை அடைவதற்கு பேராவல் கொள்ளுதல் முமுக்ஷுத்வம். தத்பர: என்ற பதம் முமுக்ஷுத்வம் எனப்படும் முக்தியை விரும்பு இச்சையைக் குறிக்கும். ஸம்யதேந்த்ரிய; என்ற பதம் விவேக வைராக்யத்தைக் குறிக்கும்.

மனவடக்கம், புலனடக்கம், ச்ரத்தா, பொறுமை, இருமைகளை சகித்துக்கொள்ளுதல், சிரத்தை, மன ஒருமுகப்பாடு ஆகிய தகுதிகள் மெய்ப்பொருள் ஆராய்ச்சிக்குத் தேவை. தத்பரன், ஸம்யதேந்த்ரியன், சிரத்தை உடையவனுக்கே ஞானம் கிடைக்கும். தன்னை அறிவதால் ஏற்படும் ஆனந்தத்துக்கு ஈடு இணை இல்லை. பலர் மனதை இதன்கண் திருப்புவதே இல்லை. அதனால் துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஞானியோ, அன்றும் இன்பம், இன்றும் இன்பம், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாடுகிறான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar