Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அக்னி தேவன் சரணாகதி
 
பக்தி கதைகள்
அக்னி தேவன் சரணாகதி

பாரத தேசத்தின் இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் இரு கண்களாகும். இராமாயணமே முதல் நூல். வால்மீகி மகரிஷியால் வடமொழியில் இயற்றப்பட்டது. இராமாயணத்தைக் கம்பர் தமிழ் மொழியிலும், காளிதாசன், துளசிதாசர் போன்றோர் வடமொழியிலும் வழிநூல் செய்தனர். இராமாவதாரம் கூறும் சீறிய கொள்கைகள் பலவற்றிலும் உயர்ந்த கொள்கை தன்னை அடைக்கலம் அடைந்தார்க்கு அருள் செய்வதேயாகும். இராவணன் தம்பி விபீஷணன்; இராவணனுடைய அரச சபையில் பலர் வீற்றிருக்க, வந்திருப்பவன் திருமாலே என்றும், திருமாலின் பெருமைகளை நரசிம்மாவதாரம் மூலமும் எடுத்துக் கூறி, சீதையை விடுத்து நாமும் இராமனிடம் சரணடைந்தால், நம் அரக்கர் குலமும் இலங்கை நன் நகரும் மேன்மை பெரும் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் இராவணன் விபீஷணனின் ஆலோசனையை ஏற்காததுடன் அவனை இழித்துப் பேசுகிறான்.

இராவணனுடைய அரண்மனையில் நாம் தங்கி இருந்தால் நாமும் நம் சுற்றமும் அழிவோம் என்று எண்ணிய விபீஷணன்; புலஸ்தியன் வம்சம் கூண்டோடு அழியும்; அவர்களுக்கு நீர்க்கடன், நெருப்புக்கடன் செய்வதற்காக நாம் உயிருடன் இருக்க வேண்டும். இலங்கை மூதூர் அழிவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னைச் சேர்ந்தவர் சிலருடன் கடல் கடந்து சேதுக் கரையில் இருக்கும் ராமனைச் சரணடைந்தான். சுக்ரீவன் அங்கதன் போன்றோர் தடுத்தும் கூட, அனுமனின் சொல் கேட்ட இராமன், தன் தம்பி இலக்குவணனை நோக்கி, என்னைச் சரணடைந்தார் யாவராயினும் அவர்களைக் காப்பதே எனது எண்ணமாகும். இராவணனே வந்து சரணடைந்தாலும் அவனை மன்னித்து வாழ்வளிப்பேன் என்று கூறுகிறான்.

சரணடைய வந்த விபீஷணனை அழைத்து வரச் செய்து அவனை தன் அருள் பார்வையால் அங்கீகரித்து, அங்கு அப்போதே இலக்குவணனைக் கொண்டு இலங்கை அரசனாக முடி சூட்டி வைக்கிறான். இவையனைத்தும் இராமனுடைய அருள் உள்ளத்தையும் தன்னைச் சரணடைந்தார்களை காக்கும் திறனையும் காட்டுகின்றன. இராம ராவணயுத்தம் முடிந்தது: தன் மகன்களையும், தம்பி கும்பகர்ணனையும் இழந்த இராவணன் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான். இராமன் விபீஷணனை அழைத்து உன் குல தென்புலத்தாற்கு ஆற்ற வேண்டிய கடன்களை முறைப்படி செய்க என்கிறான். தென்புலத்தார் கடன் முடித்த விபீஷணனை நோக்கி உன் தமையன் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பஞ்ச பூதங்களின் தலைவர்களையும், இந்திராதி தேவர்களையும், நவகோள்களையும் விடுதலை செய்க என்கிறான்.

பின்பு தேவியை சீரோடும் தருக என்று கேட்கிறான். விபீஷணன் அனுமனை வேண்டி சீதா தேவியை இராமனிடம் ஒப்படைக்க தயார் செய்க என்று கேட்டுக் கொள்கிறான். அதன்படி அனுமன் திரிசடை உதவியுடன் சீதைக்கு நன்நீராட்டி, பூப்புனைந்து, புத்தாடையுடன், பல்லக்கில் ஏற்றி இராமன் இருக்குமிடம் வருகிறார்கள். அதே சமயம் போர்க்களத்திலே இருக்கும் இராமனிடத்தே விடுதலை பெற்ற தேவர்கள் நன்றி தெரிவித்து வணங்கிச் செல்கிறார்கள். அக்னி தேவன் மட்டும் சற்று தொலைவில் வருத்த முற்ற முகத்துடன் காணப்படுகிறான். அனலன் வருத்த முற்று நிற்பதைக் கண்ட இராமன் அருகில் அழைத்து உன் வருத்தத்திற்கு காரணம் என்ன என்று கேட்கிறான். அக்னி தேவன் இராமனை வணங்கி இராமா நான் இராவணன் அரண்மனையில் மடைப்பள்ளியில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

இராவணனின் ஆணைக்கு அஞ்சி நான் அவன் ஆட்கள் (அரக்கர்கள்) கொண்டு வரும் உணவுப் பொருட்களைப் பக்குவப் படுத்தி சமைத்துக் கொடுப்பேன். அவ்வாறு அவர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களில் ஆடு, மாடு, மற்றும் குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் ரிஷிகளும், முனிவர்களும் அடங்குவர். நான் என் தலைவிதியை நொந்து கொண்டு அவர்களைக் கொன்று சமைத்துக் கொடுப்பேன். அதனால் நான் என் சக்தியெல்லாம் இழந்து விட்டேன். இனி நான் தேவர்களோ, முனிவர்களோ செய்கின்ற யாகத்திற்கு உதவும் தகுதியை இழந்துவிட்டேன். எனவே, நான் இழந்த சக்தியெல்லாம் மீட்டு, மீண்டும் யாக புருஷனாக வலம் வர நீ தான் அருள் செய்ய வேண்டும் என்று சரணடைந்தான். அவனுடைய உள்ளக்கருத்தை உணர்ந்த இராகவன் ஒரு நாடகம் நடத்தி அனலனின் குறையை நீக்க எண்ணுகிறான். அதே சமயம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீதா தேவியை ஜெயகோஷங்களுடன் அழைத்து வந்தனர்.

பல்லக்கில் இருந்து சீதா தேவி இறங்கி இராமன் முன் சென்று வணங்கி நிற்கிறாள். இருவரும் தன் கண்களால் பார்த்து பேசிக் கொள்கின்றனர். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? அக்னி தேவனின் சரணாகதியையும் அவனை சக்தி மிக்கவனாக மாற்ற வேண்டிய கட்டாயத்தையும் தன் கண்களால் நயன பாஷை பேசுகிறான். இராமன் உள்ளக்கருத்தை உணர்ந்த சீதை தன் பங்கிற்கு நடிக்க சம்மதிக்கிறாள். நாடகம் அரங்கேறுகிறது. இராமன்-தேவி நீ இத்தனை நாளும் அரக்கர்களின் அரண்மனையில் இருந்தாய். எனவே நீ உன் கற்புத் தன்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய். எனவே அக்னிப்ரவேசம் செய்து உனது புனிதத் தன்மையை நிலை நாட்டுவாயாக என்று கேட்கிறான். செவி சுடும் சுடு சொல் ஆயினும் தேவி சூழ்நிலை உணர்ந்து இலக்குவணனை அழைத்து அக்னி வளர்க்கச் செய்து இராமநாமத்தை செபித்தபடி அக்னியில் இறங்குகிறாள். அடங்கி இருந்த அக்னி சீதையின் தீண்டுதலுக்குப் பின் கொழுந்து விட்டு எரிந்து, சீதையின் கற்பின் கனல் அக்னி தேவனின் இழந்த சக்தியை மீட்டுக் கொடுத்தது. தனது அபார சக்தியை மீண்டும் பெற்ற அக்னி, தங்கத்தாம்பாளத்தில் அன்னை சீதையை ஏந்தி வந்து இராமனை வணங்கி சீதையை மீண்டும் ஒப்படைத்தான், நாடகம் முடிந்தது. அக்னியின் சரணாகதியும் நிறைவேறியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar