Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அனுமன் மட்டும் உசத்தியா?
 
பக்தி கதைகள்
அனுமன் மட்டும் உசத்தியா?

பல விதமான பக்தி வகைகளில் தாஸ்ய பக்தியும் ஒன்று. இறைவன் அல்லது குருவை எஜமானாகவும் தன்னை ஓர் ஊழியனாகவும் பாவித்து, தாழ்மையுடன் அவருக்கான அனைத்துச் சேவைகளையும் செய்வது இது. தாஸ்ய பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் அனுமன். ஸ்ரீராமபிரான் வனவாசம் முடிந்து, அயோத்திக்குத் திரும்பி, அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ஸ்ரீராமபிரான் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும், அவரது குறிப்பறிந்து அனுமன் செய்து வந்தார். ராமபிரானுடன் நீங்காமல் இருந்த சீதாதேவி, பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். ஒரு நாள் ஸ்ரீராமபிரான், அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும், அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும் ! என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ஸ்ரீராமரிடமும் தெரிவித்தனர். உங்களுக்குரிய சேவைகளை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும், அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும்! என்று கேட்டனர். அதற்கு ஸ்ரீராமரும் அனுமதி வழங்கினார்.

காலையில் ராமர் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு, அவற்றை யார் யார் செய்வது என்றும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ஸ்ரீராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர். ராமபிரான் அவர்களிடம், இதில் அனுமன் பெயரைக் குறிப்பிடவில்லையே? என்றார் ஏமாற்றமாக. நாங்களே அனைத்துச் சேவைகளையும் செய்கிறோம்! என்று கோரஸாக பதிலளித்தனர் அவர்கள். எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா?என்றார் ஸ்ரீராமர். அவர்கள் ஒரே குரலில், ஆம்! என்றனர். ராமர் புன்னகைத்து, இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா ? என்று கேட்டார். அவர்களும், அப்படி ஒரு நிலை வராது! என்றனர். அனுமனுக்கு ராமரின் உத்தரவு தெரிய வந்தது. மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதாதேவியும், ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு வாழ்வில் இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது; மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.

ராமரின் உத்தரவுப்படி அனுமன், அவரது அறை வாசலில் அமர்ந்து, ராம...ராம... என்று ஜபித்துக் கொண்டிருந்தார். ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்றும் கவனித்தார். பகல் பொழுது எந்த சேவையும் குறைவின்றிப் போனது. இரவில் ஸ்ரீராமபிரான் படுக்கப் போனார். தாம்பூலத்துடன் சீதாப்பிராட்டி வந்தார். ராமபிரான் வாய் திறந்தார். அவ்வளவுதான், அவரது திறந்த வாய் மூடவே இல்லை. பேச்சோ அசைவோ இல்லை. ராமபிரானுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதாதேவி பயந்தாள். உடனே பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என்று எல்லோரையும் கூப்பிட்டாள். அவர்கள் ஓடி வந்தனர். அண்ணா, அண்ணா என்று அழைத்தனர். பிறகு ராஜாங்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்துவிட்டு, எந்த நோயும் இல்லை! என்று கிளம்பிவிட்டார். அவர்களுக்கு, அனுமனிடம் கேட்கலாமா? என்று முதலில் தோன்றியது. பிறகு, வசிஷ்டர் குலகுரு ஆயிற்றே. அவரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர். அவரும் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். காதில் சில மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரம் தியானமும் செய்தார். எந்த விதமான பலனும் ஏற்படவில்லை. கடைசியில் வசிஷ்டர், அனுமனால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும்! என்றார். உடனே அனுமன் துள்ளிக் குதித்து வந்து, கை விரலால் ராமபிரானின் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது. ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் தான் சொடக்குப் போடுவார். உங்களுக்கு இது தெரியாது! என்றார். எல்லோரும் வெட்கத்தால் தலைகுனிந்தனர். தாஸ்ய பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள் அனுமனை மனதாரப் பாராட்டினர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar