Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒரு கொடியில் இரு மலர்கள்!
 
பக்தி கதைகள்
ஒரு கொடியில் இரு மலர்கள்!

காட்டிலிருந்த மரத்தில் கிளிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. ஒரு கிளி முட்டைஇட்டிருந்தது. அது வெளியே சென்றுஇருந்த சமயத்தில், ஒரு முட்டைத் தவறி கீழே விழுந்து உடைந்தது! அதிலிருந்து கிளிக்குஞ்சு வெளியே வந்தது. அதை வேடன் ஒருவன் பார்த்து விட்டான். இந்தக் குஞ்சை வேறு பறவைகள் பார்த்தால், எடுத்துச்சென்று சாப்பிட்டுவிடும்! எனவே நாமே எடுத்துச்சென்று வளர்க்கலாமே என்று நினைத்தான். அதை தன் குடிசைக்கு எடுத்துச் சென்றான்.சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் அதே மரத்திலிருந்து அதே கூட்டிலிருந்து, ஒரு முட்டை தவறி கீழே விழுந்தது. அந்த முட்டையிலிருந்தும் ஒரு கிளிக்குஞ்சு வெளியே வந்தது. அப்போது அந்த வழியாக முனிவர் ஒருவர் சென்றார். அவருக்கு குஞ்சின் ஆதரவற்ற நிலை புரிந்தது. அவரும், இந்தக் கிளிக்குஞ்சு இங்கு இப்படியே இருந்தால், மற்ற பறவைகளுக்கு விரைவில் இரையாகிவிடும்! எனவே அதை ஆஸ்ரமத்திற்கு எடுத்துச் சென்று வளர்க்கலாம் என்று முடிவு செய்து துõக்கிச் சென்றார்.இந்த கிளிகள் அதனதன் இடத்தில் வளர்ந்து பெரியவை ஆயின.

ஒரு நாள் அந்தக் காட்டிற்கு, அரசன் ஒருவன் வேட்டையாட வந்தான். கடும் வெயிலாலும், வேலையாலும் சோர்ந்து போனான். அவனுக்கு தாகம் ஏற்பட்டது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா? என்று தேடிச் சென்றான்.துõரத்தில் ஒரு குடிசை தென்பட்டது. அது வேடனின் குடிசை. அரசன் சென்றபோது வேடன் குடிசையில் இல்லை. அவன் வளர்த்த கிளி இருந்தது. கிளி அரசன் வருவதைப் பார்த்ததோ இல்லையோ உடனே, யாரோ திருடன் வருகிறான்! இவனைக் கட்டி வைத்து உதையுங்கள் என்று அநாகரிகமாக பேசியது.அரசன் கிளியின் பண்பாடற்ற சொற்களைக் கேட்டான். இப்படி ஒரு வரவேற்பு உள்ள இடத்திற்கு யார்தான் செல்வார்கள்? நான் வேறு எங்காவது சென்று தண்ணீர் குடிக்கிறேன்! என்று நினைத்து, அரசன் அங்கிருந்து அகன்றான்.துõரத்தில் ஆஸ்ரமம் தென்பட்டது. அங்கு முனிவர் இல்லை. அவர் வளர்த்த கிளி இருந்தது. அது அரசனைப் பார்த்ததோ இல்லையோ... ஐயா! வாருங்கள், வாருங்கள்! தங்களுக்கு நல்வரவு. முனிவர் வெளியில் சென்றிருக்கிறார். அவர் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். உள்ளே வந்து ஆசனத்தில் அமருங்கள். பால், பழங்கள், குளிர்ந்த நீர் இங்கு உள்ளன. நீங்கள் சாப்பிட்டு, ஓய்வெடுங்கள் என்று இன்சொல் கூறியது.
மகிழ்ந்த அரசன் களைப்பு தீர அங்கே தங்கினான்.இந்தக் கதையில் நாம் பார்த்த இரண்டு கிளிகளும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள், ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்கள். ஆனால் இரண்டுக்கும்தான் எவ்வளவு வேறுபாடு! இந்த வேறுபாட்டுக்கு அவை வளர்ந்த சூழ்நிலையும், பயிற்சியும் தான் காரணம்.

முரடனான வேடனிடம் வளர்ந்த கிளி அநாகரிகமாகவும், முனிவர் வளர்த்த கிளி பண்புடனும் பேசின. நாம் உயர்ந்தவர்களுடனும், உயர்ந்த பழக்கங்களுடனும் கொள்ளும் தொடர்பு நம்மையும் உயர்ந்தவர்களாக்கும். தீயவர்களுடனும், தீய பழக்கங்களுடனும் நாம் கொள்ளும் தொடர்பு நம்மையும் தீயவர்களாக்கும்.மழை நீர் நல்ல நீர்தான். அது கருப்புநிற மண் உள்ள இடத்தில் தேங்கினால் கருப்பாக இருக்கும். அதே நீர் சிவப்புநிற மண் உள்ள இடத்தில் தேங்கினால் சிவப்பாக இருக்கும். இந்த வேறுபாடு, மழைநீர் தேங்கும் இடத்தில் உள்ள மண்ணின் நிறம் காரணமாக ஏற்படுகிறது. இது போன்றுதான் நமக்கு அமையும் சூழ்நிலைக்கு ஏற்ப நம் இயல்பும் நல்லதாகவோ, தீயதாகவோ அமைகிறது. அரக்கனாக இருந்தும் விபீஷணன், ராமருடன் கொண்ட தொடர்பால் அழியாத பெருமைபெற்றான். கர்ணன், துரியோதனனுடன் கொண்ட தொடர்பு காரணமாக அழியாத பழிக்கு ஆளானான். நாம் நல்லவர்களாக வாழ விரும்பினால் மட்டும் போதாது. நல்லவர்களோடும் பெரியவர்களோடும் தொடர்பு கொள்ளவும் வேண்டும். அது மட்டுமின்றி தீயவர்களின் தொடர்பையும், தீய பழக்கங்களையும் தவிர்க்கவும் முயற்சி செய்ய வேண்டும்.ஒருமையுடன் நின்திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்கிறார் வடலுõர் வள்ளலார். வள்ளுவப் பேராசான், பெரியாரைத் துணைக் கோடல் என்ற அதிகாரத்தில் பெரியோர்களின் துணை நமக்கு இன்றியமையாதது என்று எடுத்துக்காட்டினார்.அதில் ஒரு குறள் இது: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை (குறள் 444)பொருள்: வல்லமையுள்ள ஒருவன் செய்யும் வலிமையான செயல்களில் தலைசிறந்தது எதுவென்றால், தன்னைவிட சிறந்த தகுதி உடையவர்களைத் தன்னுடையவர்களாக்கி அவர்கள் வழியில் நடப்பதாகும். சிற்றினம் சேராமை அதிகாரத்தில் அவர், சிறியவர்களின் தொடர்பைத் தவிர்த்துவிடுங்கள் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார். சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்துவிடும். (குறள் 451)பொருள்: பெரியவர்கள், சின்னத்தனம் உடையவர்களைப் பார்த்து பயந்து ஒதுங்குவார்கள்; சிறியவர்கள், சின்னத்தனம் உடையவர்களோடு நட்பு வைத்து உறவாடுவார்கள். கூடா நட்பு கேடாய் முடியும், சிற்றினம் தவிர், சேரிடம் அறிந்து சேர் என்று பெரியோர்கள் நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். எனவே நல்லவர்களுடன் மட்டும் நட்பு கொள்ளுங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar