Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கதிர்காமம் முருகன் அருள் பெற்ற வேடன்!
 
பக்தி கதைகள்
கதிர்காமம் முருகன் அருள் பெற்ற வேடன்!

தமிழகத்தில் முருகன் பக்தியைப்  வளர்த்தவர்கள், வளர்த்து வருபவர்கள் ஏராளம். அவர்களை அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர், தாண்டவராய சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.என்றாலும், இவர்களில் முதலாமவர் அருணகிரிநாதர் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இவர் பல முருகன் தலங்களுக்கும் சென்றுள்ளார். அருணகிரிநாதர், வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே என்று திருப்புகழில் (பாடல் 441) கூறியிருக்கிறார். கதிர்காமத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்ட முருகப் பெருமானே!  நீ வேடன் அருளிய பூஜையை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டாய் என்று கூறுகிறார். அருணகிரிநாதர் குறிப்பிடும் அந்த வேடன் வரலாற்றை, இங்கு நாம் பார்க்கப் போகிறோம். இலங்கையில் முக்கியத்துவம் உடைய முருகன் திருத்தலம் கதிர்காமம். சிங்கள மொழியில், கதிர கம்பா என்றால் கருங்காலி மரக் காடு என்று பொருள். அந்நாளில் கதிர்காமம் பகுதியில், கருங்காலி மரங்கள் அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் வாழ்ந்த வேடர்கள் முருகனை வழிபடும் தெய்வமாகக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் ஒரு வேடன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒருமுறை, ஒரு முருகன் கோவில் அவன் கண்ணில் பட்டது. அது அவன் முன்வினை புண்ணியத்தால் நேர்ந்தது. கதிர்காமம் முருகன் வேடனை ஆட்கொண்டான். அதனால் அந்த முருகப் பெருமான்மீது அந்த வேடனுக்கு பக்தி ஊற்றாகப் பெருக்கெடுத்தது. முருக நாமத்தை எப்போதும் மனதில் ஜபம் செய்துகொண்டிருந்தான். முருக பக்தியில் பழுத்த பழமாகி விட்டான்.அவன் தினமும் காட்டில் ஓடும் மாணிக்கக்கங்கை ஆற்றில் நீராடுவான். முருகனைப் பூஜிப்பதற்கு காட்டு மலர்களையும், கனிகளையும் பறிப்பான். அவற்றுடன் மாணிக்கக்கங்கை நீரை, முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்கு எடுத்துச் செல்வான். இப்படி அவன் முருகன் மீது பக்தி செய்யத் தொடங்கி, ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் வந்தது. அன்று அவன் முருகன் கோவிலுக்கு விரைந்து கொண்டிருந்தான்.வழியில் ஓர் ஆண் சிங்கம் எதிர்ப்பட்டது. அவன் சிங்கத்தைப் பார்த்து பயப்படும் இயல்பு உடையவன் அல்ல. வேறு நேரமாக இருந்திருந்தால், அவனே அந்தச் சிங்கத்தைக் குறி வைத்து கொன்றிருப்பான்.

ஆனால், இப்போது அவன் முருகனைப் பூஜிப்பதற்காக அல்லவா விரைந்து கொண்டிருக்கிறான்? அதனால் அவன் சிங்கத்தை விட்டு ஒதுங்கிச் சென்றான். ஆனால், சிங்கம் மனிதனை விடுமா! அவனைக் கொல்லும் நோக்கத்துடன், அவனுடைய இரண்டு தோள்களில் தன் இரண்டு முன்னங்கால்களை வைத்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டது. வேடன் திணறினான். அவன் சிங்கத்திடம், என்னை இப்போது போகவிடு! நான் முருகனைப் பூஜிக்க சென்று கொண்டிருக்கிறேன், என்றான்.அதற்கு சிங்கம், உன்னை நான் விடமாட்டேன்! எங்கள் இனத்தை எத்தனை முறை நீ கொன்றிருக்கிறாய்? உன்னை விட்டுவிடுவேனா, என்ன? என்று உறுமியது.அதனிடம் வேடன், நான் முருக பூஜையை முடித்து விட்டு வந்து விடுகிறேன். நான் திரும்பி வந்ததும், நீ என்னை உன் விருப்பம்போல் கொன்று தின்னலாம். இப்போது என்னை முருகனைப் பூஜிப்பதற்கு செல்ல விடு. இது நான் ஐம்பது ஆண்டுகளாக வணங்கும் முருகன் மீது சத்தியம்... என்று உறுதியளித்தான்.அதைக் கேட்ட சிங்கம், முருகன் மீது சத்தியம் என்று கூறியதால், நான் உனக்கு அனுமதி கொடுக்கிறேன். ஆனால், நீ என்னை ஏமாற்ற நினைத்தால், எங்கிருந்தாலும் உன்னைத் தேடிப் பிடித்துக் கொல்வேன்! சீக்கிரம் திரும்பி வா... என்று கூறி பிடியைத் தளர்த்தியது.வேடன் முருகன் சன்னிதியை அடைந்தான்.

அப்போது பூஜை நேரம். கருணை வள்ளலான முருகா! கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் உன்னைப் பூஜிக்கும் பாக்கியம் அருளியதற்காக நன்றி, என்று மனம் நெகிழ்ந்து வணங்கினான். கண்களை மூடி, அமர்ந்தவன் அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டான். நேரம் போனதே தெரியவில்லை. அப்போதுமங்கள வாத்தியங்கள் முழங்கின. அதன் ஒலி கேட்டு, தியானம் கலைந்த போது தான், சிங்கத்திற்கு தான் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து, சிங்கம் இருந்த இடம் நோக்கி விரைந்தான்.சிங்கத்தை அணுகியதும் அவன், நான் முருகனைப் பூஜித்தபோது என் மனம் முருகனிடம் ஒன்றி லயித்துவிட்டது. எனவே தாமதமாக வந்தேன். அதற்காக என்னை மன்னித்துவிடு! இப்போது நீ உன் விருப்பம்போல் என்னைக் கொன்று தின்னலாம் என்று கூறிவிட்டு தன் கண்கள் மூடி, கைககள் கூப்பி, முருகனை நினைத்து மனதிற்குள், முருகா, முருகா, முருகா! என்று ஜபம் செய்ய ஆரம்பித்தான். தன்மீது எந்த விநாடியும் சிங்கம் பாய்ந்து தன்னைக் கொன்றுவிடும்! என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததுபோல் அங்கு எதுவும் நிகழவில்லை.

சிங்கம் அவன் தோள்களில், தன் முன்னங்கால்கள் இரண்டையும் வைத்தது. அது இதமாகத் தன் கால்களால் வேடனின் தோள்களையும், முகத்தையும் தடவிக் கொடுத்தது! சிங்கத்தின் அந்த ஸ்பரிசம், அவனை ஏதோ ஓர் உன்னத ஆன்மிக நிலைக்கு உயர்த்தியது! ஆதலால், கண்டறியாதன கண்ட ஆன்மிக அனுபவம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் கண்களைத் திறந்து பார்த்தான். ஆஹா! அங்கு சிங்கம் இல்லை! மாறாக, சிங்கம் இருந்த இடத்தில் முருகப் பெருமான் புன்னகையுடன் நின்று வேடனை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார். சிவபெருமான் மீது பக்தி செலுத்தி உயர்ந்த வேடன் கண்ணப்பன், சேக்கிழாரின் பெரியபுராணத்தில் இடம் பெற்றார். நம் கதிர்காமம் வேடனும், முருகன் பக்தியில் உயர்ந்து நிற்கிறான். இதனால் தான், அருணகிரிநாதரின் திருப்புகழில், வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே என்று சிறப்பான இடம் பெற்றிருக்கிறான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar