Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கர்ணனும் கண்ணனே!
 
பக்தி கதைகள்
கர்ணனும் கண்ணனே!

அண்ட சராசரங்களை படைத்து அவற்றினுள்ளும், வெளியேயும் பரவி நிற்கும் பிறப்பு இறப்பற்ற ஆதி பகவான், ஞானக் கடலாக விளங்குகிறான். தன் படைப்புகளின் அதிசய குணவிசேஷங்களில் அவனே மிளிர்கிறான். அர்ஜுனன் கேட்கிறான். “கண்ணா! நீயே உலகில் உள்ள உயிரினங்களாக இருக்கிறாய். அவற்றின் மேலான தன்மையாகவும் இருக்கிறாய். எந்தெந்த குணாதிசயங்களில் நீ உன்னை தீவிரமாக வெளிப்படுத்துகிறாய்? அவைகளை நான் தெரிந்துகொண்டால், உன் அளப்பரிய பெருமையை அனுபவித்துணர்வேன். உன் மகாத்மியங்களைக் கூறுவாய் ” என்றான்.

கண்ணனும் உடனே “அர்ஜுனா! நான் நன்மையில் மிக நன்மையாக, தீமை தருபவற்றில் உச்சகட்ட தீமையாக இருக்கிறேன். தேவர்களில் இந்திரன், அசுரர்களில் குபேரன், பறவைகளில் கருடன், நல்ல மருந்தில் அமிர்தம், தீய விஷத்தில் ஆலகாலம்; அழிப்பவர்களில் சங்கரன், ஆக்குபவரின் விஷ்ணு, வீரத்தில் அர்ஜுனன், தீமை விளையும் ஆட்டத்தில் சூதாட்டம் மற்றும் எவையெல்லாம் இவ்வுலகில் மிக்க நன்மையும், புகழும், செல்வமும் பெற்று சிறந்து விளங்குகின்றனவோ, அவையெல்லாம் என் தோற்றங்களே! என்னை உணர்ந்து, என் பேராற்றலை தியானித்து என்னை அடைபவனே சிறந்து யோகியாவான் ” என்று அர்ஜுனனுக்கு தன் விபூதி யோகத்தை விவரித்துக் கூறினான்.

ஆண்டவனின் தோற்றமாக மிகச் சிறந்த வீரனாக மிளிர்ந்த கர்ணனின் வரலாற்றைக் காண்போமா! குந்தி நாட்டின் இளவரசி, குந்தி அழகிலும், கல்வி கேள்விகளிலும் மிகச் சிறந்து விளங்கினாள். அரச சபைக்கு வரும் புலவர்கள், முனிவர்கள் அனைவரிடமும் மரியாதையுடன் பணிந்து, அவர்கள், உதிர்க்கும் அருளுரைகளையும், உப தேசங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றாள். ஒருநாள் துர்வாசமுனிவர் அவள் சேவையில் அக மகிழ்ந்து அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மந்திரத்தை உபதேசித்துவிட்டு, குழந்தாய்... நீ இதை திருமணமானபின் குழந்தை பெறுவதற்காக மட்டுமே ஒரு தடவை உபயோகிக்கலாம். இதை கண்ட படி கூறலாகாது ” என்று கண்டிப்புடன் கூறி சென்றுவிட்டார். குந்தியும் அவ்வாறே செய்ததாக வாக்களித்தாள்.

பின்னொரு நாள் தன் அரண்மனையை ஒட்டிய ஆற்றங்கரையில் மிக அழகாக தன் பொன்னிற கிரணங்களை வீசிக் கொண்டிருக்கும் சூரிய பகவானை விளையாட்டுத்தனமாக தியானித்து, அந்த மந்திரத்தை சொன்னவுடன் ஒரு பேரொளி தன்னுடலில் மாற்றம் செய்வதை அறிந்த அவள் மயங்கி விழுந்தாள். மயக்கம் நீங்கி விழித்துப் பார்த்தாள். தங்க நிற சுவாலையுடன் கவச குண்டலங்களுடன் ஒரு குழந்தை அவள் மீது கிடப்பதை கண்டு திடுக்குற்றாள். திருமணமாகாத தனக்கு குழந்தை உண்டான செய்தி அவளுக்கும் அவன் ராஜ குடும்பத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் என்று பயந்து குந்தி அந்த குழந்தையை பிரிய மனதில்லாமல் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் மிதக்கவிட்டு ஒன்றுமே அறியாதவன் போல் அரண்மனை சென்றாள். பின் அவளுக்கு பாண்டு ராஜாவுடன் திருமணமாகி பஞ்சபாண்டவர்க்கு தாயுமானாள்.

ஆற்றில் மிதக்கப்பட்ட பெட்டி ஹஸ்தினாபுரத்தை அடைந்தபோது, அதிரதன் என்ற தேரோட்டி அதைக் காப்பாற்றி திறந்து பார்த்த பொழுது அழகான கவச குண்டலங்களுடன் பிறந்த அந்த ஆண்குழந்தையைக் கண்டு, அகமகிழ்ந்து, பின் தன் மனைவியிடம் காண்பித்து, பிள்ளையில்லா தங்கள் குறையை தீர்க்க கடவுளால் அனுப்பப்பட்ட குழந்தை என்று அக மகிழ்ந்து இருவரும் அதை அன்போடு வளர்த்து வந்தனர். தக்க வயதில் கல்வி, கேள்விகளை கற்றுத் தேர்ந்தான். வில், வாள், ஆயுதப்பயிற்சிகளையும் நன்கு கற்றுக் கொண்டான். மேலும் அவைகளை நன்கு கற்றுத் தேற தகுந்த குருவைத் தேடினான்.

ஹஸ்தினாபுரத்தில் அப்பொழுது துரோணர் தன் அரச குடும்ப மாணாக்கர்களிடையே ஒரு போட்டி வைத்தார். வில் வித்தையில் சிறந்தவர் யார் என்றும், அர்ஜுனன் தான் என்று அனைவருக்கும் அறிவுறுத்தும் தன் குறிக்கோளாக வைத்திருந்தார். அப்பொழுது பார்வையாளரிடையே அமர்ந்திருந்த கர்ணன் திடீரென்று, அர்ஜுனனுக்கு சமமாக தன் வில்வித்தையை காண்பித்து, அவனை வீழ்த்தினான். இதை விரும்பாத குரு துரோணர் “கர்ணா.... உன் குலம் இழிகுலம். இது அரசர்களுக்கு மட்டுமான போட்டி இதில் நீ கலந்து கொள்ள முடியாது செல்... ” என்று கட்டளையிட்டார். இப்படி ஒரு மாவீரன், தனக்கு கிடைக்க மாட்டானா.... என்று துரியோதனன், உடனே எழுந்திருந்து, “குருவே, அர்ஜுனனை விட இவன்தான் சிறந்த வில்லாளன். இவனைத் தாங்கள் இழிவுபடுத்தலாகாது” என்று கூறி, “கர்ணா... உன்னை அங்க தேச ராஜாவாக நான் ஆக்குகிறேன் ” என்று கூறி அங்கேயே அவனுக்கு ராஜ மகுடம் சூட்டி அரசனாக்கினான். உணர்ச்சிப் பெருக்கில் நன்றியுடன் கர்ணன் துரியோதனனை வணங்கி, தழுவி, “இன்று முதல் நான் உன் அடிமை... என்னை இவ்வாறு கவுரவித்த நீதான் எனக்கு நண்பன், உன் எதிரி அர்ஜுனன்  எனக்கும் எதிரி” என்று கூறி  அவனுடன் அங்க தேசப் பொறுப்பை ஏற்றான். அன்றிலிருந்து கர்ணன் வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று மேலும் தன் போர்ப்பயிற்சி, வில், வாள் பயிற்சிகளை வளர்த்துக் கொண்டான். துரியோதனனை சக்கரவர்த்தியாக்கினான்.

பல அண்டை தேசங்களை வென்று துரியோதனன் நாட்டுடன் இணைத்தான். வில் வித்தையில் சிறந்த ஆயுதங்களை உடையவரான பரசுராமரிடத்தில் அந்தணன் போல் வேடமணிந்து அவரிடம் பயிற்சி பெற்றபின். ஷத்திரியன் என்று அறிந்த பரசுராமரின் கோபத்துக்கும் ஆளானான். “கடைசி நேரத்தில் உனக்கு முக்கிய பிரம்மாஸ்திரம் உதவாது...” என்ற சாபத்தை வாங்கினான். இருந்தும் விடாமுயற்சியில் அவரது பரிவுக்கு உள்ளாகி, சில முக்கிய ஆயுதப்பயிற்சிகளை அறிந்தான். பல சாபங்களுக்கும், இகழ்ச்சி பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டு தன் திறமைகளை, ராஜ்யத்தை வளர்த்துக் கொண்டு துரியோதனின் உண்மை தோழனாகவும், நாணயமான சிற்றரசனாகவும் வாழ்ந்தான். சிறந்த கொடை வள்ளல் ஆகவும் திகழ்ந்தான். இல்லை என்றவர்க்கு முகம் கோணாமல் தான தருமங்களை செய்தான். துரியோதன், சகுனி இவர்கள் சூழ்ச்சி வலையில் சிக்கி நாடிழந்து, செல்வமிழந்து வனம் புகுந்து பாண்டவர்கள் தங்கள் வனவாசம் முடிந்ததும் தங்களது நாட்டைத் திருப்பித்தராத துரியோதனனுடன் மகாபாரதப் போர் ஆரம்பித்தனர்.

பகவான் கிருஷ்ணர் பாண்டவர் பக்கம் இருந்ததினால் வெற்றிமகள் அவர்களுக்கே... என்று பீஷ்மர் துரோணர் போன்ற வீர அறிவாளிகள் அறிந்தனர். ஆனால், கர்ணன் என்ற மாவீரன் தன் வசம் இருப்பதால் துரியோதனன் வெற்றி நமக்குத்தான் என்று தைரியமாக இருந்தான். அவனது கொடைத்தன்மையின் மகுடமாக இந்திரன் மாறுவேடமணிந்து கர்ணன் சூரிய பூஜை செய்யும் நேரம் வந்து, அவனைக் கொல்ல முடியாத அரணாக விளங்கிய மார்புக் கவசம் மற்றும் காது குண்டலங்களை இறைஞ்சி தானமாகப் பெற்றுக் கொண்டான். பாதுகாப்பற்ற நிலையிலும் கர்ணன் தன் போர்த்திறமையையும், ஆயுத அஸ்திரங்களையும் நம்பி துரியோதனனுக்காக பாரதப் போரில் ஈடுபட்டான். கர்ணனால் பஞ்ச பாண்டவர்களுக்கு ஆபத்து என்று அறிந்த கண்ணன், குந்தியிடம் கர்ணன் அவளது மூத்த மகன் என்ற ரகசியத்தைக் கூறி அவன் பாண்டவர்களை கொல்லக்கூடாது. என்று கர்ணனிடம் வாக்கு கேட்க அனுப்பினான்.

குந்திதேவியின் மூலம் தனது உண்மைப் பிறப்பை தெரிந்து தாயென அவனைப் பணிந்தான் என்றாலும், துரியோதனை விட்டுக் கொடுக்க முடியாது என்றும், அர்ஜுனனைத் தவிர மற்றவர்களை கொல்லமாட்டேன் என்று சத்திய வாக்குறுதியை அவளுக்கு அளித்தான். அத்துடன் முற்றிலும் அழிக்கக்கூடிய நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் அர்ஜுனன் மேல் பயன்படுத்த மாட்டேன் என்று குந்திக்கு வாக்கு தந்தான். நன்றி மறவாமை என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கினான். போரில் பாண்டவப் படையை எளிதில் நொறுக்கினான். தன் மகனைக் கொன்ற அர்ஜுனனைக் கொல்ல அவன் கைகள் துடித்தாலும், பெரிய ஆயுதங்களை அவன் மேல் எய்தாமல், நாகாஸ்திரம் அவன் மேல் எய்யும்போது, பகவான் கிருஷ்ணர் தேர் சக்கரத்தை பூமிக்கு கீழே அழுத்த அர்ஜுனன் உயிர் தப்பினார். ஏனெனில் இரண்டாவது முறை எய்யக்கூடாது. என்ற வாக்குறுதி அவனைத் தடுத்தது. அதேசமயம் கர்ணனது தேர்ச்சக்கரம் அவன் பெற்ற பழைய சாபத்தால் கீழே சகதியில் மாட்டிக் கொள்ள அதை விடுவிக்க, கர்ணன் கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்க, கிருஷ்ணர் சொல்படி அர்ஜுனன் அவனை அம்பெய்தி நெஞ்சல் காயமுறச் செய்தான். அவ்வேளையிலும் அவன் உயிர் பிரியவில்லை. ஏனெனில் தர்மத்தாய் அவனைக் காப்பாற்றி வந்தாள். அவன் செய்த கொடை அவனைக் குடையாய் இருந்து, காப்பாற்றியது.

இதைப் பார்த்த பகவான் கிருஷ்ணர், ஏழை பிராமணர் வேடமணிந்து “கர்ணா... இந்தப் போர் நடக்கும் வேளையிலும் உன்னை விட்டால் எனக்கு தர்மம் வழங்க யார் உள்ளார்?” என்று கண்ணீருடன் கையேந்த, கர்ணன் மூச்சிறைத்துக் கொண்டிருந்த வேளையிலும், “இப்பொழுது என்னிடம் என்ன அப்பா இருக்கிறது கொடுப்பதற்கு” என்று கேட்டான். பிராமண வடிவில் வந்த கண்ணனோ, “கர்ணா.... இதுநாள் வரை நீ செய்த தான தருமங்களின் புண்ணியத்தை உன் குருதிமூலம் எனக்கு தாரை வார்த்துவிடு ” என்று வேண்டினான். கர்ணனும் இன்முகத்தோடே தன் மார்பு அம்பைப் பிய்த்து அந்த ரத்தத்தைத் தன் தரும செயல்களின் புண்ணியமாக பிராமணனுக்கு தானமாக வழங்கிவிட்டான். இப்பொழுது தர்ம தேவதையும் அவனை விட்டுப் போக, அர்ஜுனன் எய்த ஓர் ஆயுதத்தால் வீர மரணம் அடைந்தான். எப்படிப்பட்ட மாவீரன்? கடைசி வரை நன்றிக்கடன் ஆற்றியும், தான தருமங்களில் தலைசிறந்தும், பெற்றோரைப் பணிந்தும், பலதரப்பட்ட ஆயுத போர் முறைகளை திறம்படக் கற்றும், பெரிய அரசனாகவும், தன் கடின உழைப்பினால் பேரொளியாகத் திகழ்ந்த அவன் இறைவனின், அவனது மகத்துவத்தின் பெருந்தோற்றமே என்பது தெளிவாகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar