Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தீபாவளி வெந்நீர் அண்டா!
 
பக்தி கதைகள்
தீபாவளி வெந்நீர் அண்டா!

தீபாவளி பண்டிகைக்காக வீட்டிற்கு வந்திருந்தார் தாத்தா. இரவு பேரன், பேத்திகள் சுற்றிலும் அமர்ந்திருக்க, அந்த காலத்து கதையை அளக்க ஆரம்பித்தார் தாத்தா. “அந்த காலத்தில நாங்க எல்லாம் தீபாவளியை எப்படியெல்லாம் கொண்டாடினோம்ன்னு, உங்களுக்கெல்லாம் தெரியாதே...” என்று அவர் ஆரம்பிக்க, குழந்தைகள் ஆர்வமாக, ‘சொல்லுங்க தாத்தா...’ என்றனர். “இப்போ... தீபாவளிக்குன்னு உங்க சித்தப்பா, அத்தை எல்லாரும் இங்கே வந்திருக்கிற மாதிரி அப்போ, தினமுமே எங்க தாத்தா வீட்டிலே, முப்பது பேர் இருப்பாங்க. பண்டிகைன்னா கேட்கவே வேணாம்... எங்க தாத்தா ரொம்ப ஏழை; பண வசதி இல்லாட்டாலும், பண்டிகைக்கு அத்தனை பேருக்கும் துணிமணி வாங்கிடுவார். இப்போ மாதிரி, தீபாவளி, ‘பர்சேஸ்’ன்னு போயி டிரஸ் வாங்க மாட்டாரு...  “ஒரு ஆளு, தெருவிலே சைக்கிள்லே துணிகளை கொண்டு வருவார். அவர்கிட்ட இருந்து தான் துணிகளை வாங்குவாரு. அவருக்கு மாசாமாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் தந்து கடனை அடைப்பார். அப்பல்லாம், தீபாவளிக்கு மட்டும் தான் புது டிரஸ் வாங்கிக் கொடுப்பாங்க. அதனாலே, கலர் துணியா வாங்காம காக்கி நிக்கர், புளூ பாவாடை,வெள்ளை சட்டைன்னு ஸ்கூல் யூனிபார்ம் தான், எங்களுக்கு தீபாவளி டிரஸ்சா தைப்பாங்க.”

குழந்தைகள் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க, தாத்தா தொடர்ந்தார்... “ஆனா, பண்டிகை கொண்டாடறதிலே, எந்த குறையும் வைக்க மாட்டாரு. கடன் வாங்கித் தான், மளிகை சாமான் வாங்கி, தீபாவளி ஸ்வீட் பலகாரங்களெல்லாம் செய்வாங்க. தீபாவளிக்கு, நாலு நாட்களுக்கு முன்னாடியே வீட்டிலே ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. நாங்க லீவ் போட்டுட்டு எங்க பாட்டி, சித்தி, அத்தைகளோடு கடலை பருப்பு, அரிசி எல்லாம் துாக்கிலே போட்டு மிஷின்ல கொண்டு போயி அரைச்சிட்டு வருவோம். அப்படி மிஷினுக்கு போய் அவங்களுக்கு உதவி செய்தா, வீட்டிலே செய்ற லட்டு, அதிரசம் ஏதாவது ஒண்ணு கூடுதலா கிடைக்கும்,” என்றார். “ஏன் தாத்தா, ஸ்வீட்டெல்லாம் வீட்டிலேயேவா செய்வாங்க... அப்போ ஸ்வீட் ஸ்டாலே இல்லயா?” என்று மூத்த பேரன் கேட்டான். “அப்போ ஓட்டல் ஒண்ணோ, ரெண்டோ தான் ஊர்ல இருக்கும். அவங்க ஸ்வீட் செஞ்சி வித்தா வாங்க ஆளிருக்காது. வீட்டுலயே லட்டு, ஜாங்கிரி, அல்வா, மைசூர் பாகு, மிக்சர், தேன் குழல்ன்னு நிறைய பட்சணங்கள் செய்வாங்க. ஒரு நாளுக்கு ரெண்டு, மூணுன்னு பட்சணம்ன்னு செய்திட்டே இருப்பாங்க. அவங்க செய்ய செய்ய நாங்களும் தின்போம். அப்பறம், பட்சணங்களை எல்லாம் பெரிய பெரிய சம்படத்திலே போட்டு, எங்க பாட்டி அடச்சு வைப்பாங்க.”

“சம்படமா... அது எப்படி இருக்கும் தாத்தா?” என்று கேட்ட பேத்திக்கு, வாயில் எச்சில் ஊறியது. “பாத்ரூமில, குளிக்கிற பிளாஸ்டிக் பக்கெட் இருக்கு பாரு... அது மாதிரியான சைசிலே, மூடி போட்ட பித்தளை பாத்திரம் இருக்கும்; அதுக்கு சம்படம்ன்னு பேரு. மளிகை சாமானெல்லாம் பித்தளை சம்படத்திலே தான் இருக்கும்,” என்றவர், “பித்தளைன்னா என்ன மெட்டல்ன்னு தெரியுமா?” என்று கேட்டார். “தாத்தா... எனக்கு தெரியும்; கோவில்லே தீர்த்தம் கொடுப்பாங்களே... அந்த டம்ளர் தானே பித்தளை...” என்றான் கடைசி பேரன். “எஸ் கரெக்ட்; அது மாதிரி தான், வெந்நீர் அண்டான்னு ஒண்ணு பெரிசா இருக்கும். ரமா இருக்கா இல்லே... அவ உசரத்துக்கு, நம்ப தியாகுவாட்டம், ரெண்டு மடங்கு குண்டா இருக்கும்.” “போ தாத்தா...” என்று சிணுங்கி, பொய் கோபத்தை காண்பித்தான் மகள் வழிப் பேரனான தியாகு. “நீங்க ரெண்டு, மூணு பேரு அதுக்குள்ளே போய் ஒளிஞ்சுக் கிட்டாகூட யாருக்குமே தெரியாது; அவ்வளவு பெரிசா இருக்கும் அந்த அண்டா. அப்போ நாங்க கண்ணா மூச்சின்னு ஒரு விளையாட்டு விளையாடுவோம். அப்படி விளையாடும் போது கொல்லப்பக்கமா இருக்கிற குளியலைறையில இருக்கிற இந்த அண்டாவிலே போய் தான் ஒளிஞ்சுப்போம்,‘ என்றார் தாத்தா. “அது என்ன தாத்தா கொல்லப் பக்கம்...” என்றாள் பேத்தி.

“நான், ஒரு பைத்தியம்டா குழந்தைகளா... உங்களுக்கு புரியறா மாதிரி பேசத் தெரியலே பாரு... இப்போ இந்த பிளாட் இருந்த இடத்திலே, அந்த காலத்திலே எங்க தாத்தாவோட ரெண்டு கட்டு வீடு இருந்தது. ரெண்டு கட்டுன்னா, ரெண்டு பெரிய வீட்ட, ஒண்ணா சேத்தா மாதிரி இருக்கும். வீட்டில திண்ணை, ரேழி, முற்றம், தாழ்வாரம், ரூம்ன்னு எல்லாமே நீளமா, விசாலமா இருக்கும். அதுக்கு அப்புறமா கொல்லைப் புறம்ன்னு, அதுவும் பெரிசா இருக்கும்.  “அங்கே வாழை மரம், பூச்செடி, மரங்கள்ன்னு சிறு தோட்டமும் இருக்கும். அந்த கொல்லைப்புறத்திலே, ஒரு ஓரமா வெந்நீர் ரூம் இருக்கும். அந்த பெரிய வீட்டை மாத்தி தான், இந்த அடுக்குமாடி வீட்டையே கட்டியிருக்காங்க. இப்போ நாம இருக்கிற இந்த பிளாட்டிலே தான் பாத்ரூம் இருந்தது...” “ஹை! அத்தனை பெரிய பாத்ரூமா... எதுக்கு தாத்தா? எல்லாரும் ஒண்ணா சேந்து குளிப்பீங்களா?” என்று கேட்டாள் சின்ன மகனின் மகள். “அந்த காலத்தில எல்லாருடைய மனசும் பெரிசு... அதனாலே எல்லாமே பெரிசு. சரி சரி... எதை எதையோ பேசறேன் பாருங்க, அந்த பாத்ரூமில பெரிய பெரிய மண் அடுப்பும், அதுக்கு பக்கத்தில் விறகும் அடுக்கி இருக்கும்,” என்றார்.

“விறகுன்னா?” “விறகுன்னா அது ஒரு டைப் ஆப் வுட்! மரத்தை வெட்டி அதை சின்ன சின்னதாக்கி பத்த வைச்சி நெருப்பு உண்டாக்குவாங்க. அதுக்குன்னு மண்ணால செய்த அடுப்பு ஒண்ணு இருக்கும். அதுல விறகை வைச்சு எரிப்பாங்க. அதுக்கு மேலேதான் நான் சொன்னேனே... அந்த பெரிய கரி அண்டாவை வச்சி தண்ணிய சூடு செய்வாங்க,” என்றார். “தாத்தா... வெந்நீர் அண்டான்னு சொன்னே... இப்போ கரி அண்டான்னு மாத்தி சொல்றியே...” என்றான் பேரன். “ஹை... செல்லமே கண்டுபிடிச்சுட்டியே வெரிகுட்! இப்போ உங்க அம்மாவெல்லாம் சமையல் செய்றாங்களே... கேஸ் அடுப்பு! அதில சமைச்சா பாத்திரத்திலே கரி பிடிக்காது. ஆனா, விறகு வச்சி செய்யும்போது, பாத்திரத்திலே கரி பிடிக்கும். வாரவாரம் சனிக்கிழமை அன்னக்கி, இந்த அண்டாவிலே தான் வெந்நீர் போட்டு குளிப்போம். அதனால, எப்பவும் கரி பிடிச்சுதான் அந்த அண்டா இருக்கும். விளையாடறபோது அதுக்குள்ளே ஒளிஞ்சிக்கிறவங்களோட சட்டை, நிக்கர் எல்லாம் கரி ஆயிடும்; அதுக்காக உதை வாங்குவோம்,” என்றார். “தாத்தா... நீ என்ன தீபாவளி பத்தி பேசாம, எதை எதையோ சொல்றியே...” என்றான் பேரன்.

“சொல்றேன்டா செல்லம்... தீபாவளி பண்டிகை எப்படி வந்ததுன்னா, நரகாசுரன்னு ஒரு அரக்கனை, கிருஷ்ண பரமாத்மா வதம் செஞ்சார்; அப்போ, அவன், பகவான்கிட்டே, ‘நான் இறக்கிற இந்த நாளை, உலகத்துல இருக்கற மக்கள் எல்லாம் கங்கா ஸ்நானம் செய்து, புதுசு உடுத்தி, பட்டாசு வெடிச்சி, ஸ்வீட் சாப்பிட்டு பண்டிகையா கொண்டாடணும். அன்னிக்கு மட்டும் எல்லாரும் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்கணும். இந்த ஒருநாள் மட்டும் எல்லார் வீட்டு வெந்நீரிலும் கங்கை வரணும்’ன்னு வரம் கேட்டு வாங்கியிருக்கான்.  “அதனாலே, தீபாவளியன்னிக்கு விடியற்காலையிலேயே எல்லாரும் எழுந்து வெந்நீரிலே குளிக்கும்போது, அன்னிக்கு மட்டும் கங்கை ஆறே எல்லார் வீட்டுக்கும் வந்துடுமாம். அதுக்காக, தீபாவளிக்கு ரெண்டு நாட்கள் முன்னாலேயே, அந்த வெந்நீர் அண்டாவை என் பாட்டி, சித்தி, அத்தைன்னு நாலைஞ்சு பேர் புளி, மண், சாம்பல்ன்னு போட்டு தேய்ச்சி பளபளன்னு வைப்பாங்க. “தாத்தா அந்த அண்டாவுக்கு சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம் எல்லாம் பூசி, பூ போட்டு அலங்காரமா அடுப்பு மேல வைப்பார். தீபாவளிக்கு முதல்நாள் ராத்திரி தண்ணீர் நிரப்புர பண்டிகைன்னு கொண்டாடுவோம். அது என்னான்னா... நாங்க எல்லாரும் கிணத்திலிருந்து தண்ணீர் எடுத்து அந்த அண்டாவுல ஊத்துவோம். கிணறுன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டார்.

“ எனக்கு தெரியும் தாத்தா... ‘வெல்!’ வேதாரண்யம் கோவில் போனபோது, அப்பா காட்டினாரு,” என்றாள் பேத்தி. “ஆமா, அதேதான்; இப்படி முதல் நாளோ தண்ணி இழுத்து குடம் குடமா, அந்த வெந்நீர் அண்டாவை நிரப்பி வைச்சுட்டு படுப்போம். காலையிலே மூணு மணிக்கெல்லாம் எழுந்து, தாத்தா விறகு அடுக்க, பாட்டி அடுப்பை பத்த வைப்பாங்க. அப்பத்தான் எல்லாரும் குளிக்கிற மாதிரி வெந்நீர் சுடும். “எங்களை ஒவ்வொருத்தரா எழுப்பி, மனை மேலே உட்கார வச்சு, தலையிலே எண்ணெய் வைச்சு விடுவாரு எங்க தாத்தா. பாட்டி, அம்மா, சித்தி எல்லாம் ஒவ்வொரு பக்கெட்டா அந்த அண்டாவிலே இருந்து கொதிக்கிற வெந்நீரை எடுத்து வந்து எல்லாரையும் குளிப்பாட்டுவாங்க. அப்புறம் லேகியம் சாப்பிட்டு, புது டிரஸ் போட்டு, பட்டாசு வெடிப்போம். அதனால, தீபாவளின்னா கங்கா ஸ்நானம் தான் முக்கியமானது.  “இப்போகூட பக்கத்து வீட்டு ஆன்ட்டி, அங்கிள் எல்லாம் தீபாவளி அன்னைக்கு பாத்தா, ‘என்ன... கங்கா ஸ்நானம் ஆச்சா?’ன்னு கேட்கறாங்க இல்ல... அதனால, தீபாவளி கங்கா ஸ்தானத்திற்கு, இப்போ இருக்கிற கெய்சர் போல, அப்போ இந்த வெந்நீர் அண்டாதான் ரொம்பவும் முக்கியம். அதுக்காக எங்க தாத்தா, அண்டாவை தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலேயே மூட்டுட்டு வந்துடுவாரு,” என்றார்.

“அது என்ன தாத்தா மூட்டுட்டு வரது?” “அதை அடகு வச்சிருப்பாங்க; அந்த இடத்திலிருந்து பணம் கட்டி அண்டாவை எடுத்துட்டு ருவாங்க.” “அடகுன்னா?” “அந்த காலத்தில ரொம்பவும் கஷ்ட ஜீவனம். கூட்டுக் குடும்பத்தை நடத்தி, எல்லாருக்கும் தினமும் சாப்பாட்டு போட்டு பராமரிக்கிறதே ரொம்ப கஷ்டம். அதிலே எதிர்பாராத மெடிக்கல் செலவு, மற்ற செலவு ஏதாவது வந்தா வீட்டிலே இருக்கிற வெள்ளி, பித்தளை பாத்திரத்தையெல்லாம் கொண்டு போய், அடகு கடையிலே கொடுத்து, பணம் வாங்கிட்டு வந்து சமாளிப்பாங்க. கடைக்காரர் அந்த பாத்திரத்தை கியாரண்டியாக வச்சு, கடனாக பணம் கொடுப்பாரு. அதுக்கு பேருதான் அடகு வைக்கிறது!
“அப்புறம், அந்த பணத்த வட்டியோட கடைக்காரர்கிட்டே கொடுத்து அடகு வச்சதை எடுத்துட்டு வருவாங்க. அதுக்கு மீட்டுட்டு, இல்லேன்னா மூட்டுட்டு வர்றதுன்னு பேர். இப்படி ரொம்பவும் பணக்கஷ்டம் வந்த போதெல்லாம், அந்த வெந்நீர் அண்டாவை கொண்டு போய் அடகு வைச்சுட்டு வருவோம். ஆனா, தீபாவளிக்கு தீபாவளி, அதை மூட்டுட்டு வந்து, அன்னிக்கு தேய்ச்சி, பொட்டு, பூவெல்லாம் வச்சி உபயோகப்படுத்திட்டு தீபாவளி முடிஞ்சதும் திரும்பவும் பணமுடை வந்தா, அதைக் கொண்டு போய் வைக்கிறது வழக்கமாக இருக்கும்,” என்றார்.

“அப்போ எங்க அப்பாவுக்கும் பணம் கஷ்டமா தாத்தா?” என்று கேட்டான் பெரிய பேரன். “அதெல்லாம் என்னோட காலத்தோட போச்சு. நானும், என் தாத்தா மாதிரி இல்லேன்னாலும் வாத்தியாராய் இருந்து கஷ்டப்பட்டிருக்கேன். அந்த கஷ்டத்திலேயும் உங்க அப்பா, சித்தப்பா, அத்தைய எல்லாம் படிக்க வைச்சு, எல்லாருமே இப்ப லட்சம் லட்சமா சம்பாதிக்கிறாங்க. உன்னோட அம்மாவும் வேலைக்கு போய் சம்பாதிக்கிறாங்கல. அதனால, உங்க அப்பாவுக்கு பணக்கஷ்டமே இல்ல,” என்றார். “அப்போ ஏன் தாத்தா... வெந்நீர் அண்டா மாதிரி உன்னை எங்கேயோ அடகு வச்சிட்டு, தீபாவளிக்கு மட்டும் மூட்டுட்டு வந்து எங்ககூட இருக்கிற மாதிரி செய்றாரு,” என்று பேரன் கேட்டதும், அவன் பேசியது யார் காதிலாவது விழுந்துவிடக் கூடாதே என்று, ‘வெல வெல’த்துப் போனார் தாத்தா. ஆனாலும், அவர் பயந்தது போலவே, அதை பெரிய மருமகள் கேட்டு விட்டாள். “ஏதோ போனாப் போகுது பண்டிகை ஆச்சே... ஒருநாள் இருந்துட்டு போகட்டும்ன்னு, கிழத்தை ஹோமிலிருந்து கூட்டிட்டு வந்தா... குழந்தைங்ககிட்ட எதை பேசறது, எதை பேசக் கூடாதுன்னு இல்லாம, கண்டதையும் பேசி, அவங்க மனச கெடுக்கறதைப்பாரு... நாளைக்கு கங்கா ஸ்நானம் ஆனதும், முதல் வேலையா ஹோமில கொண்டு போய் விட்டுட்டு வந்து தொலைங்க,” என்று, கிழவர் காதுபடவே கணவரிடம் முறையிட்டாள். தீபாவளி வெந்நீர் அண்டாவாய், முதியவர் மனம் கொதித்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar