Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அருள்வடிவான அன்னை!
 
பக்தி கதைகள்
அருள்வடிவான அன்னை!

லலிதா ஸஹஸ்ரநாமத்தின் 603-வது நாமம் லோக மாதாவை குருமூர்த்தி குருவின் வடிவானவள் என்று போற்றுகிறது. லோகமாதாவின் இதயவாசனான ஸ்ரீராமகிருஷ்ணர், உலகிற்கு அன்னையின் அவதார மகிமையை உணர்த்த ஸ்ரீசாரதாதேவியை ஷோடசியாகப் பூஜை செய்தார். தேவி தானே குருவின் வடிவாக வந்து உபாசகனுக்கு மந்திர தீட்சை அளித்து அவனைக் கரையேற்றுகிறாள். அன்னை, ஸ்ரீராமகிருஷ்ணரின் மகாசமாதிக்குப் பின் அவரது அன்புக் கட்டளையால் குருமூர்த்தியானார். தாய்மை எனும் பூரண நிலையிலிருந்த அன்னை சாதகனின் தரம் பாராது தன் எல்லையற்ற கருணை ஒன்றையே கொண்டு தன்னிடம் வந்தவர்களுக்கெல்லாம் மந்திர கவசம் அளித்தார். அப்படிப்பட்ட எல்லை கடந்த அன்னையின் அன்பு குருநிலையில் வெளிப்பட்டதற்கு உதாரணம் இந்த நிகழ்ச்சி.

1918 செப்டம்பரில் ஒரு நாள். மகாஷ்டமி தினம். அன்னையின் திருப்பாதங்களில் மலரிட்டு வணங்க பக்தர்கள் தொடர்ச்சியாக வந்தனர். சரத் மகராஜ் முதல் சாதாரணப் பெண் வரை அனைவரும் அன்னையை நமஸ்கரித்து ஆசி பெற்று ஆனந்தம் அடைந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த காணிக்கைப் பொருள்களை அதன் உலகாயத மதிப்பு பற்றி பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் அன்னை ஏற்றுக் கொண்டது கண் கொள்ளாக் காட்சி. காவி உடையில் ஒரு பெண் அன்னையை வணங்கினார். அவர் அன்னையின் காலடியில் இரண்டு ரூபாய் சமர்ப்பித்தார். உடனே அன்னை, இதென்ன காவி உடுத்தியிருக்கிறீர்கள். கையில் ருத்ராட்ச மாலை உள்ளது. நீங்கள் ஏன் இப்படி செய்ய வேண்டும்? எங்கே தீட்சை பெற்றீர்கள்? என்று கேட்டார்.

பெண் தீட்சை பெறவில்லை என்று கூறினாள். அன்னை: தீட்சை பெறவில்லையா! உண்மைப் பொருளை உணராமல் இந்த வேஷம் தரித்திருக்கிறீர்கள்! இது சரியல்ல, இப்படிச் செய்யாதீர்கள். முதலில் உண்மைப்பொருளின் அனுபூதி பெறுங்கள். எல்லோரும் உங்கள் கால்களில் தலைவைத்து வணங்குவார்கள். அதை ஏற்றுக்கொள்வதற்கான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். இதைக் கேட்ட அந்தப் பெண், அம்மா நீங்கள்தான் என் குரு. உங்களிடமே நான் தீட்சை பெற விரும்புகிறேன். என்று உருக்கமாகக் கூறினாள். அன்னை அதை ஏற்கவில்லை. அது எப்படி முடியும்? என்று கூறிவிட்டார்.

அந்தப் பெண் மேலும் அன்னையை வேண்டிக் கொண்டாள். கோலாப்மாவும் அவளுக்காகப் பரிந்து பேசினார். கடைசியில் அன்னையும் ஓரளவு இணங்குவதுபோல் தோன்றியது. பிறகு பார்ப்போம் என்றார் அவர். குணமென்னும் குன்றேறி நின்ற அன்னை தன் கோபத்தை மறைத்து அந்தப் பெண்ணுக்கு இரங்கி தீக்ஷை அளிக்க ஒப்புக் கொண்டார். அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி: மாலை 4 மணிக்கு ஒரு வெள்ளைக்காரப் பெண் அன்னையைத் தரிசிக்க நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார் என்று ஒரு பிரம்மசாரி தெரிவித்தார். அவளை அழைத்து வருமாறு கூறினார். அன்னை, அவள் வந்ததும் எங்கு எப்படியோ, அங்கு அப்படி என்னும் கலையில் தேர்ந்தவரான அன்னை அவளுடைய கைகளைப் பற்றினார். இது அன்னை அவளுடன் வெள்ளைக்கார பாணியில் கைகுலுக்குவது போல் இருந்தது. அவளுடைய முகவாயைத் தொட்டு ஆசிர்வதித்தார் அன்னை.

வெள்ளைக்காரப் பெண் மிகுந்த கவலையும் தாபமும் மிகுந்த குரலில், என்னுடைய ஒரே மகள் மிகவும் மோசமாக நோயுற்றிருக்கிறாள். அவள் நல்லவள்; எங்களில் நல்ல பெண்களைக் காண்பதே அரிது. ஆனால் அவள் மிக நல்லவள். அவள் குணமடைய அருள்புரியுங்கள். உங்கள் பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். அவள் குணமாகி வருவாள் என்றார் அன்னை. நீங்கள் சொல்வதால் அவள் கட்டாயம் குணமடைவாள். அது உறுதி, உறுதி, உறுதி என்று ஆறுதல் அடைந்தவளாக அந்தப் பெண் கூறினாள். அன்னையின் திருவாயிலிருந்து உதிர்ந்த சொற்களால் அவளிடத்தில் திட நம்பிக்கை துளிர் விட்டது. அன்னை, கோலாப்மாவை குருதேவருக்கு அர்ச்சித்த தாமரை மலர் ஒன்றை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். அதைக் கையில் வைத்துக் கொண்டு, கண்மூடித் தியானித்தார். பிறகு குருதேவரின் திருவுருவை ஒரு முறை பார்த்துவிட்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். இதைக் கொண்டு உங்கள் மகளின் தலையைத் தொடுங்கள் என்று கூறினார்.

அதன் பிறகு இந்த மலரை என்ன செய்வது? என்று கேட்டாள். கோலாப்மா அதை உலர்ந்ததும் கங்கையில் எறியுமாறு கூறினார். அந்தப் பெண், பகவானுக்குச் சொந்தமான இதை எறிவதா? புதிய துணியில் ஒரு பை தைத்து அதில் வைத்துக் கொள்வேன். ஒவ்வொரு நாளும் அதைக் கொண்டு என் மகளின் உடலை வருடுவேன் என்று சிரத்தையுடன் கூறினாள். நல்லது அப்படியே செய்யுங்கள் என்றார் அன்னை. உங்கள் பொன்னான நேரத்தை நான் வீணாக்கி விட்டேன். என்று மன்னிப்புக் கேட்ட அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தி மீண்டும் செவ்வாய்க்கிழமை வாருங்கள் என்று கூறி அனுப்பினார் அன்னை. அப்பெண்மணியின் மகள் விரைவில் குணமடைந்தாள். பின்னர் ஒரு நாள் அன்னை அந்தப் பெண்ணுக்கு மந்திர தீக்ஷையும் அளித்தார். உண்மையான குரு சீடனின் ஆன்மிக மேம்பாட்டையும் அவர்களின் நலனையும் ஒருங்கே கவனித்துக் கொள்கிறார் என்பது அன்னையின் வாழ்விலிருந்து தெளிவாகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar