Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இதுவும் அழிந்துவிடும்
 
பக்தி கதைகள்
இதுவும் அழிந்துவிடும்

ஒரு அரசனுக்கு அவனது ராஜகுரு ஒரு மோதிரத்தை பரிசாகக் கொடுத்தார். அதில் இதுவும் அழிந்துவிடும் என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதை அரசன் அணிந்து கொண்டான். அவ்வப்போது அந்த எழுத்துக்கள் அரசன் கண்ணில் படும். அப்போதெல்லாம் அவன் மனச்சஞ்சலம் நீங்கி அமைதியும் ஆறுதலும் அடைவான். அவனது கஜானாவில் செல்வம் குவிந்துகொண்டே இருந்தது. ஒரு நாள் தன் கஜானாவைப் பார்வையிட சென்றான். அங்கு பொற்காசுகளும், முத்தும், வைரமும், வைடூரியங்களும் குவிந்திருந்தன. அவற்றை ஆசையுடன் மீண்டும் மீண்டும் அள்ளி எடுத்துப் பார்த்தான். மகிழ்ச்சியால் மனம் பூரித்தான். அவன் உள்ளத்தில் அகங்காரம் எழுந்தது. அந்த நேரத்தில் அவன் அணிந்திருந்த மோதிரத்திலுள்ள எழுத்துக்கள் அவன் கண்ணில் பட்டன. அதைப் பார்த்ததும் இந்தச் செல்வமும் ஒரு நாள் தன்னைவிட்டு போய் விடுமோ என்ற எண்ணம் தோன்றியது. உடனடியாக அகங்காரம் நீங்கி மனம் சமநிலையைப் பெற்றது.

ஒரு நாள் அவன் ஆஸ்தான மண்டபத்தில் பிரபுக்கள் சூழ அமர்ந்திருந்தான். அங்கிருந்தவர்களுக்கு இளம் பெண்கள் மதுவையும், இனிப்பு வகைகளையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். பிரபுக்கள் அரசனை வானளாவப் புகழ்ந்தார்கள். அப்போது மோதிரம் அரசன் கண்ணில் பட்டது. அதனால் அவன், இந்தப் புகழ்மொழிகள் நிரந்தரமானவையல்ல. இவற்றில் நான் மயங்கி என்னை இழந்துவிடக் கூடாது என்று எண்ணினான். அரசனுக்கு அழகான மனைவி இருந்தாள். அரசன் அவளுடன் அவ்வப்போது உரையாடிக்கொண்டிருப்பான். அப்போது அவன் தற்செயலாகத் தன் கையில் அணிந்திருந்த மோதிரத்திலிருந்த எழுத்துக்களைப் பார்த்தான். அதைப் பார்த்ததும் அவனுக்கு இவள் கூட  எனக்கு நிரந்தரமல்ல! என்ற சிந்தனை தோன்றியது. ஒரு நாள் மக்கள் கூடி ஓர் இடத்தில் அரசனுக்குச் சிலை வைத்தார்கள். ஒரு நாள் அங்கு மாறுவேடத்தில் சென்ற மன்னன் அதைப் பார்த்துக்கொண்டே நின்றான். அவன் உள்ளத்தில் ஆணவம் எழுந்தது. அப்போதும் மோதிர எழுத்துக்கள் கண்ணில் படவே ஆணவம் ஓடி ஒளிந்தது. ஒரு நாள் மன்னனுடன் போரிடுவதற்கு, வேற்று நாட்டு அரசன் வந்தான். இருவரும் கடுமையாகப் போரிட்டார்கள். போரில் இந்த மன்னன் மீது ஈட்டி பாய்ந்தது. அவனை வீரர்கள் பாசறைக்குத் துõக்கிச் சென்றனர்.

வலி அவனை மிகவும் வருத்தியது. அந்த நிலையில் அவன் தனது விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்து, இந்த வலியும் ஒருநாள் போகும் என ஆறுதலும் அமைதியும் பெற்றான். முடிவில் போரில் மன்னனுக்குத் தோல்வி ஏற்பட்டது. அவன் குதிரையில் ஏறி தப்பிச் சென்றான். பகைவர்கள் துரத்தினர். குதிரை ஒரு மலையுச்சியை அடைந்தது. அங்கிருந்து பார்த்தால் கீழே பெரிய ஒரு பள்ளம் தெரிந்தது. அதற்கு மேல் குதிரை செல்ல
முடியாது என்ற ஒரு நிலையில் மன்னன் கையில் இருந்த மோதிரம் தற்செயலாக கண்ணில் பட்டது. அதைப் பார்த்த அவன், இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்தத் துன்பம் நிரந்தரமானதல்ல. இது நீடித்திருக்கப் போவதில்லை என்று எண்ணினான். அதைத் தொடர்ந்து  மன அமைதி பிறந்தது. இதற்குள் அரசனைத் துரத்தி வந்த பகைவர்களும் அவனை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிச் சென்றார்கள். மன்னன் ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றான். சில காலத்திற்குப் பிறகு அவன் பெரும் படையைத் திரட்டிபகையரசனுடன் போரிட்டு வென்றான். வெற்றிக்களிப்பில் தலைநகருக்குள் பவனி வந்தான்.

பல இடங்களில் மன்னனை வரவேற்க அலங்காரவளைவுகள் அமைத்திருந்தனர். அரசன் ஆணவத்துடன் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தான். அப்போதும் அவன் கண்ணில் மோதிர எழுத்துக்கள் படவே, உலகில் எதுவும் நிரந்தரமில்லை என புரிந்தது. மன்னன் முதுமையடைந்தான். நோய் காரணமாக அவன் படுத்த படுக்கையாக இருந்து பெரிதும் துன்பப்பட்டான். அந்த நிலையில் அரசன் அணிந்திருந்த மோதிரம் அவன் கண்ணில் பட்டது. அதிலிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும், எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோய் என்ற துன்பமும் நிரந்தரமானதல்ல; இந்த என் நிலையும் மாறும் என்று சொல்லிக் கொண்டான். அதனால் தைரியம் பெற்றான். மரணம் அவனை நெருங்கிக்கொண்டிருந்தது. அதை அறிந்தபோது, இந்த என் உடலும் ஒரு நாள் அழியத்தான் செய்யும்! என்று நினைத்தான். அதனால் மரண பயம் அவனை விட்டு நீங்கியது. இவ்விதம் பல சமயங்களில் மோதிரம் அவன் கண்ணில் பட்டு, அவனை நல்வழிப்படுத்தியது. இன்பம் துன்பம் ஆகிய இரண்டிலும் நாம் சமமான மனநிலையில் இருக்க முடியுமானால், அது மிகப் பெரிய பாக்கியம். இன்பத்தில் மகிழ்ச்சியடைவதும், துன்பத்தில் துவண்டு போவதும் நமது இயல்பாக இருக்கிறது. நாம் வாழ்க்கையில் வரும் இன்ப அனுபவங்களை உயர்வாகவும், துன்ப அனுபவங்களை இழிவாகவும் கருதுகிறோம். இதற்கு மாறாக இரண்டையும் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே ஆன்மிகம் வழங்கும் படிப்பினையாகும். துன்பங்களையும் தோல்விகளையும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். எந்தத் துன்பமும் தாற்காலிகமானது தான் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். சமுதாயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இந்த மாற்றங்களுக்கு இடையில் மாறாத இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்; அவனையே நாம் சார்ந்து வாழ வேண்டும். வாழ்க்கையில் நேரும் துன்பங்கள் நிரந்தரமானதல்ல. பாலத்துக்கு அடியில் ஓடும் தண்ணீரைப்போல் அவை ஓடிவிடும், என்று அன்னை சாரதாதேவியார் கூறியிருக்கிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar