Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சப்பை மூக்கன்!
 
பக்தி கதைகள்
சப்பை மூக்கன்!

வானம்பாடி என்னும் ஊரில் பசுபதி என்றொரு கருமி இருந்தான். பணத்தாசை பிடித்தவன். அவன் மூக்குச் சப்பையாக இருக்கும். இதன் காரணமாக ஊரில் உள்ள சிறுவர்கள் எல்லாம் அவனை, சப்பை மூக்கா, சப்பை மூக்கா! என்று கேலி செய்து வந்தனர். பசுபதி வீட்டிற்கு அடுத்த வீட்டில் புவியரசு என்பவன் வசித்து வந்தான். இவனுக்கு நிறையச் செல்வம் இருந்தது. எல்லாவற்றையும் தானதர்மம் என்று செலவிட்டு விட்டான். கையிலிருந்த பொருளெல்லாம் போய்விட்டது. அவனுடைய மனைவியும் நோய்வாய்ப்பட்டு விட்டாள். வீட்டில் உணவிற்குக் கூட வழியில்லை. இந்த நிலையில், பசுபதியிடம் சென்று, நூறு ரூபாய் கடனாகக் கொடுங்கள்! திரும்பத் தந்து விடுகிறேன், என்றான் புவியரசு. பைத்தியக்காரா, சாப்பாட்டுக்கே உனக்கு வழியில்லை. இந்த நிலையில் வாங்கிய கடனை நீ எங்கே திரும்பத் தரப்போகிறாய்? ஆரம்பத்திலிருந்தே உன்னை நான் கவனித்து வருகிறேன். வருகிற, போகிறவர் களுக்கெல்லாம் வாரியிறைத்தால் ஒருநாள் ஓட்டாண்டியாகப் போய் விடுவாய் என்று நினைத்தேன். அதன் படியே ஆகிவிட்டது. உன்னிடம் வாங்கிச் சாப்பிட்டவர்களில் எவனாவது ஒருவன் இப்போது வந்து உனக்கு உதவி செய்கிறானா? இதுதான் உலகம். இதோ பார், இந்த நிலையில் உனக்கு நான் கடன் எதுவும் தரத் தயாராக இல்லை. வேண்டுமானால் ஒன்று செய். நாளையிலிருந்து என்னுடைய பண்ணையில் வந்து வேலை செய். எல்லாருக்கும் கொடுக்கும் கூலியை உனக்கும் தருகிறேன், என்றான் பசுபதி.

இதுவும் ஒரு வகையில் நல்லதாகவே தோன்றியது புவியரசுக்கு. நூறு ரூபாய் கடன் வாங்கிச் சாப்பிட்டு கடன்காரனாக ஆவதை விட, உழைத்து அதனால் கிடைக்கும் தொகையில் வயிற்றுக்குச் சாப்பிட்டு கடன் இல்லாமல் இருக்கலாம் என்று தோன்றியது. உடனே, சரி என்று ஒப்புக் கொண்டான். பசுபதி, அவனை கடுமையாக வேலை வாங்கினான். புவியரசு வாய் பேசாமல் மாடு மாதிரி உழைத்து பசுபதி கொடுக்கும் கூலியை வாங்கி வந்து அதில் உணவுப் பொருள்கள் வாங்கி அவனும், அவன் மனைவியும் சாப்பிட்டனர். ஒருநாள் புவியரசு உழைத்து விட்டு வீட்டிற்கு வந்தான். தான் கொண்டு வந்த பொருள்களை கொடுத்து மனைவியைச் சமைக்கச் சொன்னான். நோய்வாய்ப் பட்டிருந்த அவன் மனைவியும் தட்டுத் தடுமாறி உணவு சமைத்தாள். இருவரும் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தனர். அப்போது வீட்டுக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. புவியரசு எழுந்து சென்று கதவைத் திறந்தான். வெளியே புதிய மனிதன் ஒருவன் நின்றிருந்தான். ஐயா, நான் வெளியூரைச் சேர்ந்தவன். இன்று இரவு தங்குவதற்குச் சிறிது இடமும், உண்ண உணவும் கொடுத்தால் தங்களுக்கு மிகுந்த புண்ணியமாயிருக்கும், என்றான். புவியரசு அவனை அன்புடன் உள்ளே அழைத்துச் சென்றான். நண்பரே, இங்கு சமைக்கப்பட்டிருக்கும் எளிய உணவில் நீங்களும் பங்கு பெறலாம். உணவு உண்ட பின் இங்கேயே தங்கி விட்டு, நாளைய தினம் காலையில் நீங்கள் செல்லலாம், என்றான் புவியரசு.

சமைத்த உணவில் விருந்தாளிக்கும் ஒரு பங்கு அளித்தனர் புவியரசு தம்பதிகள். விருந்தாளி இரவு அங்கேயே தங்கியிருந்து விட்டுக் காலையில் எழுந்ததும் புவியரசை பார்த்து, ஐயா, நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி. என்னிடம் ஒரு அதிசயக் கண்ணாடி இருக்கிறது. அது நீங்கள் நினைக்கும் மூன்று விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும். ஆனால் ஒன்று, ஒருவருக்கு மூன்றே மூன்று விருப்பங்களைத் தான் இது நிறைவேற்றும், என்று சொல்லி ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை புவியரசுவிடம் கொடுத்துச் சென்றான் விருந்தாளி. விருந்தாளி சென்றபின் புவியரசு அந்தக் கண்ணாடியை சோதனை செய்து பார்க்க விரும்பினார். முதலில் கண்ணை மூடியபடி, என்னுடைய மனைவியின் உடல் நிலை நன்றாக ஆகவேண்டும், என்று நினைத்தான். கண்ணைத் திறந்து பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் மனைவி நோய் நொடி எதுவுமின்றித் திடகாந்திரமானவளாகத் மாறி இருந்தாள். அடுத்தபடியாக புவியரசு கண்களை மூடிய வாறு, அதிசயக் கண்ணாடியே, எனக்கு ஒரு பெரிய மாளிகையை வரவழைத்துக்கொடு, என்றான். என்ன அதிசயம்! அவன் கண்களைத் திறந்து பார்த்தபோது ஒரு பெரிய மாளிகையில் அவன் இருப்பதை உணர்ந்தான். அடுத்தபடியாகக் கண்ணாடியிடம், கண்ணாடியே இழந்து போன என்னுடைய செல்வமனைத்தையும் திரும்பக் கொடு, என்று கேட்டான். மறுகணம் இழந்து போன அவன் செல்வம் அனைத்தும் திரும்ப வந்து சேர்ந்தன.

புவியரசின் நிலைமை மாறிவிட்டதை அறிந்த பசுபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஓர் இரவுக்குள் இவன் இவ்வளவு பெரிய பணக்காரனாக ஆகிவிட்டான் என்று வயிற்றெரிச்சல் பட்டான். திடீரென்று அவன் பணக்காரன் ஆனதின் மர்மத்தை அறிந்து கொள்ள பசுபதி விரும்பினான். புவியரசின் வீட்டுக்கு சென்றான். புவியரசு! நீ என்றைக்காவது ஒருநாள் நல்ல நிலைக்கு வருவாய் என்று எனக்கு அப்போதே தெரியும். நீ செய்துள்ள தான தர்மங்கள் என்ன கொஞ்சமா? நீ செய்த தர்மம் தான் உன்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது, என்று அவனைப் பற்றி உயர்வாகப் பேசினான் பசுபதி. சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த பின், அவன் எப்படித் திடீரென்று பணக்காரனாக ஆனான் என்ற விவரத்தை அவனிடம் கேட்டான் பசுபதி. புவியரசு ஒரு வெகுளி. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக் கூடியவன். பசுபதியிடம் முன் தினம் இரவு நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறி விருந்தாளி கொடுத்துச் சென்ற கண்ணாடியையும் அவனிடம் காட்டினான். புவியரசு நீண்ட நாட்களாக என் மனதில் மூன்று விருப்பங்கள் இருக்கின்றன. அவை இதுவரை நிறைவேறவேயில்லை. உன்னுடைய அதிசயக் கண்ணாடியை ஒரு நாளைக்கு எனக்குக் கொடுத்தால்... என் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு, உனக்குத் திரும்பக் கொடுத்து விடுகிறேன், என்றான் பசுபதி.

உனக்கு ஒரு நாளைக்கு இந்தக் கண்ணாடியைக் கொடுப்பதால் எனக்கு ஒரு விதமான நஷ்டமும் இல்லை. ஆனால், ஒன்று. மூன்றே மூன்று விருப்பங்களைத்தான் இந்தக் கண்ணாடி நிறைவேற்றி வைக்கும், என்றான் புவியரசு. அதுபோதும், அதுபோதும்!" என்று கூறியவாறே அவனிடம் அதிசயக் கண்ணாடியைப் பெற்று வந்தான் பசுபதி. வீட்டிற்கு வந்ததும் அறைக் கதவை தாளிட்டுக் கொண்டான். முதலில் எந்த விருப்பத்தை நினைப்பது? என்று நினைத்த பசுபதி, தன் மூக்கு சப்பையாக இருப்பதையும், இதனால் அவனை எல்லாரும் கேலி செய்வதையும் தவிர்க்க கண்ணாடியைப் பார்த்து, அதிசயக் கண்ணாடியே, என் மூக்கு இன்னும் கொஞ்சம் நீளமாக இருக்க வேண்டும், என்று நினைத்தான். மறுகணம், அவனுடைய மூக்கு ஒன்றரை அடி நீளத்திற்கு கொக்கு மூக்கைப் போல் வளர்ந்துவிட்டது. இதனைக் கண்ணாடியில் பார்த்த பசுபதிக்கு திக்கென்று ஆகிவிட்டது. அட கடவுளே, கொஞ்சம் நீளம் என்றால் இவ்வளவு நீளமா? என்று நினைத்தவனாக மீண்டும் கண்ணாடியிடம், கண்ணாடியே இந்த நீளமான மூக்கு எனக்கு வேண்டாம், என்றான். மறுகணம், சுத்தமாக மூக்கே இல்லாமல் மறைந்து விட்டது. இதைப் பார்த்ததும் பசுபதிக்கு மேலும் தூக்கி வாரிப் போட்டது. அடக் கடவுளே, இதற்குப் பழைய சப்பை மூக்கே பரவாயில்லைபோல் இருக்கிறதே! என்று நினைத்தான். அடுத்த கணம், பழைய சப்பை மூக்குடன் காட்சியளித்தான் பசுபதி. அதற்குப் பிறகு பசுபதி எத்தனையோ தடவை கண்ணாடியிடம், இன்னும் ஒரே ஒரு விருப்பத்தை மட்டும் எனக்கு நிறைவேற்றிக் கொடுத்து விடு என்று கெஞ்சிப் பார்த்து விட்டான். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை! இதுதான், பேராசை பெரும் நஷ்டம் என்பது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar