Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்னபூரணி
 
பக்தி கதைகள்
அன்னபூரணி

அன்னபூரணி என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவை இரண்டு. ஒன்று காசி; மற்றொன்று ஆதிசங்கரர் இயற்றிய அன்னபூர்ணா ஸ்தோத்திரம். ஸ்காந்த மகாபுராணத்தின் ஒரு பகுதியான அருணாச்சல மகாத்மியம்,. மார்க்கண்டேய புராணத்தின் அனுபந்தமான காமாட்சி விலாஸம் ஆகிய நுõல்களில் அன்னபூரணியின் வரலாறு இடம் பெற்றிருக்கிறது. ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் அமர்ந்திருந்தார். அப்போது பார்வதிதேவி சிவபெருமானின் பின்புறம் வந்து விளையாட்டாக அவர் கண்களைப் பொத்தினாள். சிவனின் வலக் கண்ணாகச் சூரியனும், இடக் கண்ணாகச் சந்திரனும், நெற்றிக் கண்ணாக அக்கினியும் விளங்குகிறார்கள். ஆதலால் பார்வதிதேவி இறைவனின் கண்களைப் பொத்தியதும், சூரியனும் சந்திரனும் ஒளியிழந்தனர். எல்லா உலகங்களிலும் நீண்ட நெடுங்காலம் இருள் சூழ்ந்தது. அனைத்து உயிர்களும் மிகுந்த அச்சத்திற்கு ஆளாயினர். இந்த ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பக்தர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தார்கள். சூழ்நிலையை பரமேசுவரன் புரிந்துகொண்டார். எனவே அவர், தமது அக்கினிமயமான நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளி உண்டாக்கி, காரிருளில் ஆழ்ந்திருந்த உயிர்களைக் காப்பாற்றி அருள் புரிந்தார்.

இதைக்கண்ட பார்வதிதேவி பயந்து, தன் கைகளை சிவனின் கண்களிலிருந்து எடுத்து விட்டாள். பரமேஸ்வரன் தேவியிடம் ஒன்றும் சொல்லவில்லை. என்றாலும் தேவி பயந்து நடுங்கிவிட்டாள். பின் சிவன் பார்வதியிடம், தேவி! இது உனக்கு ஒரு விளையாட்டாக இருந்தது; ஆனால் உன் விளையாட்டால் உலகங்கள் முழுவதும் ஒளியிழந்தன. உயிர்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்று நீயே பார்த்தாய் அல்லவா? உன் விளையாட்டு உனக்கு குறுகிய காலமாக தெரிந்தாலும் உலகிற்கு இது மிகவும் நீண்ட காலம் என்று உனக்குத் தெரியாதா? உனக்கு ஏன் இந்தக் குழந்தைத்தனம்? பரமேஸ்வரனின் இந்தச் சினம் கலந்த சொற்களைக் கேட்டு, தேவி தன் பிழையை உணர்ந்தாள். தன் தவறுக்குப் பிராயச்சித்தமாகத் தவம் இயற்ற இறைவனிடம் அனுமதி வேண்டினாள். பரமேஸ்வரன், நீ லோகமாதா, உலக அன்னை. உன்னை எந்த ஒரு பாவமும் ஒருநாளும் அணுகாது, அணுகவும் முடியாது. நீ தவம் செய்ய வேண்டிய அவசியமில்லை, என்று கூறினார். அவ்விதம் சிவன் கூறினாலும், தேவியின் மனம் சமாதானம் அடையவில்லை. அவள், தன் செயல் உலக மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தவம் இயற்ற விரும்பினாள். அதனால் அவள் மீண்டும் கயிலைநாதனிடம் பிரார்த்தனை செய்து தவம் மேற்கொள்ள அனுமதி பெற்றாள்.

அங்கிருந்து புறப்பட்டாள்.  அந்தச் சமயத்தில் காசி திருத்தலத்தில் மழையின்மை காரணமாகப் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். எனவே தேவி, காசி திருத்தலம் வந்து தன் தெய்வீகச் சங்கல்பத்தினால் பெரும் மாளிகையை எழுப்பினாள். அங்கே அவள் அன்னபூரணி என்ற பெயரில் எழுந்தருளினாள். அங்கிருந்தபடியே அவள், ஒருபோதும் காலியாகாத அட்சய பாத்திரம் என்ற அமுதசுரபியிலிருந்து மக்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்தாள். அதனால் பசியால் பெரிதும் வருந்திக் கொண்டிருந்த மக்களின் பசிப்பிணி நீங்கியது. மக்கள் அன்னபூரணியை வாழ்த்தினார்கள். காசி ராஜ்யம் முழுவதும் அவள் புகழ் பரவியது. இந்த விஷயத்தை காசிராஜன் கேள்விப்பட்டு பெரிதும் வியப்படைந்தான். அவன் அன்னபூரணியைச் சோதிக்க நினைத்தான். தன் வீரர்களை அழைத்து, சிறிது தானியத்தை அவளிடமிருந்து கடனாகக் கேட்டு வாங்கி வாருங்கள், என்று சொல்லியனுப்பினான். வீரர்கள் அன்னபூரணியைச் சந்தித்து அரசனின் செய்தியைத் தெரிவித்தார்கள். அவர்களிடம் அன்னபூரணி, நான் தானியங்களை உங்கள் அரசனுக்குக் கடனாகக் கொடுக்க இயலாது. அரசர் வேண்டுமானால் சாப்பிடுவதற்கு இங்கு வரலாம், என்று கூறினாள். தேவி கூறியதை வீரர்கள் அப்படியே காசிராஜாவிடம் சென்று தெரிவித்தார்கள். உடனே அவனும், அவனுடைய அமைச்சரும் மாறுவேடம் அணிந்து, அன்னபூரணி எழுந்தருளியிருக்கும் அன்னசத்திரத்திற்குச் சென்றார்கள்.

மக்கள் உணவு அருந்தும் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டார்கள். அந்த அன்னபூரணியின் மாளிகையில் உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்துகொண்டிருப்பதை அரசன் வியப்புடன் பார்த்தான். அப்போது அரசன், இத்தகைய ஓர் அற்புதத்தை ஒரு சாதாரணப் பெண் செய்ய முடியாது. இங்கு இவ்விதம் அன்னபூரணியாக எழுந்தருளியிருப்பது ஜகன்மாதா தான் என்பது அவனுக்கு புரிந்து விட்டது. அன்னபூரணியின் திருவடிகளைப் பணிந்து, தெய்வீக அன்னையே! என் அரண்மனைக்கு நீங்கள் எழுந்தருளி எங்களுக்கு முக்தி அளிக்க வேண்டும், என்று வேண்டினான். அவனது பக்தியால் மகிழ்ச்சியடைந்த தேவி தன் நிஜ வடிவத்தைக் காட்டி,குழந்தாய்! நான் உன் பக்தியில் ஆனந்தமடைகிறேன். இவ்வளவு காலம் நான் இங்கு தங்கிய காரணத்தால், பஞ்சத்தின் கொடுமையிலிருந்து உன் தேசம் காப்பாற்றப்படும். வருண பகவான் காசி ராஜ்யத்தில் தன் கருணையைப் பொழிவான். நான் இங்கு இன்னும் அதிக காலம் இருப்பதற்கில்லை. தவம் செய்யும் பொருட்டு தென்திசை நோக்கி செல்ல வேண்டும். நீ மகிழ்ச்சியுடன் குடிமக்களை நன்றாகப் பரிபாலனம் செய், என்றாள்.

அன்னபூரணி கூறியதைக் கேட்ட மன்னன், நீங்கள் தென்திசைக்குச் சென்றாலும், நாங்கள் உங்களை வணங்குவதற்கு உங்கள் தெய்வீகச் சாந்நித்தியம் காசியில் எப்போதும் இருக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள், என்று தேவியிடம் பிரார்த்தனை செய்தான். அரசனின் வேண்டுகோளுக்கு அன்னபூரணியும் இணங்கினாள். எனவே அவள் காசி திருத்தலத்தில், தன் ஒப்பற்ற சாந்நித்தியத்தை நிரந்தரமாக ஏற்படுத்தினாள். காசியை விட்டு புறப்படுவதற்கு முன்பு காசிராஜனின் அரண்மனைக்குச் சென்று அவனை ஆசீர்வதித்தாள். அதன் பின் தென்திசை நோக்கிப் புறப்பட்டாள். அன்னபூரணியின் அருளால் காசிராஜன் நல்லாட்சி செய்து மோட்சமும் பெற்றான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar