Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனக்கோட்டை கட்டுதல்
 
பக்தி கதைகள்
மனக்கோட்டை கட்டுதல்

அரசவையில் கூடியிருந்த அனைவரும் ராஜா கிருஷ்ணதேவராயர் எதைப்பற்றியோ சிந்தித்தவண்ணம் இருப்பதைக் கண்டனர். எரிச்சலுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். நண்பனும், நலம்விரும்பியும் சிறந்த சாதுர்யமான மந்திரியுமாகத் திகழ்ந்த தெனாலிராமன், தன் மன்னவரைத் துன்புறுத்துவது எது என்று கண்டறிய விரும்பினார். எப்படி ஒருவன் தலைவலியால் அவதியுறும் போது, எந்த ஒரு செயலையும் சரியாகச் செய்ய முடியாமல் இருக்கிறானோ, அதுபோல மன்னன் தன்னிலை இழந்தால், அது அந்த நாட்டிலுள்ள அனைவரையுமே பாதிக்கும். தெனாலிராமன் மன்னரைப் பணிந்து, தாங்கள் எதைப்பற்றி இவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கிறீர்கள்? என்று கேட்டார். இன்று காலை நான் கண்ட கனவு, என்னை நிலைதடுமாறச் செய்து கொண்டிருக்கிறது என்று மன்னர் சொன்னார். ஏதாவது திகிலூட்டும் கனவா அரசே? தெனாலிராமன் கேட்டார்.

இல்லை, இல்லை, தெனாலி. பிரம்மாண்டமான ஒரு கோட்டையை என் கனவில் கண்டேன். ரத்தினக்கற்கள் பதித்திருக்க, நிலா வெளிச்சத்தில் அற்புதமாக மின்ன, மேகங்களில் மிதப்பது போன்று தோற்றமளித்தது. ஆண்டு முழுவதும் வசந்தம் போல் மணம்வீசும் மலர்வனங்கள் நிறைந்திருந்தன. இப்பேர்ப்பட்ட அரண்மனை இருக்க சாத்தியமில்லை என்று உணர்ந்தாலும், நான்கண்ட அந்தக் காட்சி, என் மனத்தைவிட்டு அகலாது நிற்கிறது. எனது இதயத்தை ஆசையால் துடிக்க வைக்கிறது என்றார், மன்னர். கனவுகள் எப்படித் தோன்றுகின்றன? அவை வெறும் கற்பனைகளே என்று தெனாலி விளக்க ஆரம்பிக்கும் முன்னரே, சதுர்பண்டிதர் குறுக்கிட்டு, அது கனவில்லை மகாராஜா. அது திவ்விய காட்சியாகும். அதன்படி நீங்கள் நடக்க வேண்டியது அவசியமாகும். நம் நாட்டிலுள்ள கட்டடக் கலைஞர்கள், தொழிலாளர்கள், தச்சர்கள், வர்ணம் பூசுபவர்கள் அனைவரையும் உடனடியாக வரவழைத்து இக்காட்சியை செயல்படுத்த வேண்டும். உலகிலேயே மிகச்சிறந்த நாடாகும் இது. இதன் மன்னருக்கு சாத்தியப்படாதது என்று ஒன்று உண்டா என்ன? என்று கூற மன்னர் மிகவும் மகிழ்ந்தார். ஆனால், குறுக்குபுத்தி சதுர்பண்டிதர் ஏற்கெனவே தனக்குள் ஒரு திட்டம் வரைய ஆரம்பித்துவிட்டார். தமக்கு வேண்டியவர்களுக்கு இவ்வேலைகளை வழங்கி, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு செல்வத்தையும் மன்னரின் கஜானாவில் இருந்து வழிபட வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். சதுர்பண்டிதரின் சூழ்ச்சியை தெனாலி தெரிந்து கொண்டாலும் உடனடியாக அதை மறுக்க விரும்பவில்லை. ஏனெனில் மன்னர் இன்னும் தனது கனவிலும் சதுர்பண்டிதரின் புகழ்ச்சியிலும் மயங்கிய நிலையில் இருந்தார்.

மன்னர் மறுநாளே, இத்தகையதொரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்டுவதற்கான திட்டத்தை அறிவித்தார். அதன் முழுப் பொறுப்பும் சதுர்பண்டிதரிடம் அவர் எதிர்பார்த்ததுபோலவே, ஒப்படைக்கப்பட்டது. அவ்வளவுதான் நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, திட்டம் ஆரம்பிக்கப்பட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை. ஆனால் கஜானாவிலிருந்து மட்டும் பணம் செலவான வண்ணமே இருந்தது. திட்டத்தின் நிலை என்ன என்று மன்னர் கேட்டபோதெல்லாம், புதிது புதிதாக ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழித்த வண்ணம் இருந்தார், சதுர்பண்டிதர். இன்னும் மன்னருடைய கனவினைப் பற்றி, நுணுக்கமாகக் கேட்டவண்ணம் இருந்தார், சதுர்பண்டிதர். அவற்றைக் கேட்டு, இப்படி மாற்றிக் கட்ட வேண்டும்; திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று காலம் தாழ்த்தியபடியே இருந்தார் சதுர்பண்டிதர். ஒருநாள் ஒரு முதியவர் மன்னரின் அவைக்கு வந்தார். நைந்த உடையும், கலைந்த நரைமுடியும் உடையவராகக் காணப்பட்டார். நீதி வேண்டும் மன்னா! எனக்கு நீதி வேண்டும்! என்று உரத்த குரலில் கேட்டாவறே அவைக்கு வந்தார்.

நீ கிருஷ்ணதேவராயருடைய அவையில் இருப்பதை நினைவில் கொள்வாயாக! உனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று மன்னர் முழங்கினார். என்னுடைய சோகக் கதையைக் கேளுங்கள் மன்னா ஆனால் அதைக்கேட்ட பிறகு எனக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படாது என்று வாக்குத் தாருங்கள் என்றார், முதியவர். ஆகட்டும் இப்போது சொல் உன் கதையை என்றார், மன்னர். நான், இந்நகரத்தின் எல்லையில் வாழும் ஒரு செல்வந்த வணிகனாவேன். சென்ற வாரம் வரை என் வாழ்க்கை எனது குடும்பத்துடன் மிகச் சந்தோஷமாகத்தான் இருந்துவந்தது. ஐயோ இப்போது என் செல்வம் எல்லாம் கொள்ளை போய், குடும்பத்தினரும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டனர். நான் தன்னந்தனியாக, தனிமரமாக இவ்வுலகில் இப்போது இருக்கிறேன். எனக்கு வேறு போக்கிடமும் கிடையாது. ஓர் சக்தி பொருந்திய மன்னரே! இந்த நலிந்துபோன ஏழையைக் காப்பாற்றியருளுங்கள் என்றார், அந்த முதியவர். அப்படியா? யார் அந்த கொள்ளையர்கள்; கொலைக்காரர்கள்? இப்பெரும் இழப்புக்கு யார் பொறுப்பாளர்கள்! தெரியுமா? என்று மன்னர் கேட்டார்.

தெரியும் பிரபு! ஆனால் அவர்களுக்கெதிராக நான் சக்தியற்றவன் என்றார். அவர்கள் யார் என்று சொல்! உடனே அவர்களுக்குத்தக்க தண்டனை வழங்குகிறேன் என்று மன்னர் சொன்னார். அவர்கள் வேறு யாருமல்ல; தாங்களும், தங்கள் மந்திரி சதுர்பண்டிதரும்தான். எனது வாழ்க்கையை குலைத்துவிட்டீர்கள் என்றார், முதியவர். சிம்மாசனத்திலிருந்து விருட்டென்று எழுந்த மன்னர், என்ன உளறுகிறாய்? நீ ஒரு பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும். உன்னை இதுவரை நான் பார்த்ததேயில்லையே? என்னைப்போய் ஒரு கொள்ளையனென்றும் கொலைகாரனென்றும் சொல்கிறாயே? என்ன தைரியம் உனக்கு உனது மூர்க்கத்தனத்திற்கு கடுமையான தண்டனையளிக்கப்படும் என்று உறுமினார், மன்னர். பிரபு! உங்கள் வாக்கை மறந்துவிட்டீர்களா? நீங்கள் எனக்கு ஏதொரு தண்டனையும் தரமாட்டேன் என்று வாக்குத் தந்துள்ளீர்கள். நான் சொல்வதைச் சற்றே பொறுமையுடன் செவிமடுத்துக் கேளுங்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை நான் ஒரு கனவு கண்டேன். அதில்தான் தாங்களும் தங்கள் மந்திரியும் இப்பேர்ப்பட்ட கொடுமை இழைத்தீர்கள் என்றார்.

ஏ முட்டாளே! எப்படி ஒரு கனவைப்போய் நிஜமென்று நம்புகிறாய்? என்று கோபத்துடன் மன்னர் கேட்டார். நானோ ஓர் ஏழைக் குடிமகன். எங்கள் மன்னரே, தாம் கண்ட கனவை நிஜமென்று நம்பிச் செயலாற்றும் போது, நான் எம்மாத்திரம்? என்று அம்முதியவர் அமைதியாகச் சொன்னார். சுரீரென்று உண்மை உணர்த்திய நிலையில், மன்னர் அம்முதியவரை உற்றுக்கவனித்தார். ஓ! அது மாறுவேடம் பூண்ட தெனாலிராமனே என்று அறிந்து கொண்டார். ஆசை, தன் கண்ணை மறைத்து, தனது கடமைகளையும் மறக்கச்செய்தது. இந்த எளிய உண்மையையும் அறியாத மூடனாய் தான் இருந்ததை உணர்த்தவே தெனாலி இவ்வாறு செய்தார் என்பதை உடனே புரிந்துகொண்டார். எப்படி வீணாக, சதுர்பண்டிதர் வலையில் வீழ்ந்து, அவருடைய கைப்பொம்மையாய் இருந்தோம் என்று எண்ணி வெட்கப்பட்டார். மேலும் ஒரு கணமும் தாமதிக்காமல், தன் கனவு திட்டத்தைக் கலைத்து, அதற்காக ஒதுக்கிய செல்வத்தை மக்கள் நலனுக்காக திட்டங்களுக்காக ஒதுக்கி ஆறுதலடைந்தார். தனக்கு உண்மையை உணர்த்திய தொனலிராமனை வெகுவாகப் பாராட்டி, தம்மைத் தவறாகப் பயன்படுத்த நினைத்த சதுர்பண்டிதருக்கும் தக்க பாடம் கற்பித்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar