Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கிருஷ்ண சபதம்!
 
பக்தி கதைகள்
கிருஷ்ண சபதம்!

மஹாபாரதத்தில் ஓர் அருமையான காட்சியை சித்தரிக்கிறார் வேத வியாஸர். சோகத்தின் உச்ச கட்டம் அது. அதில்தான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னைப் பற்றியும் தன் அரும் குணநலன்களைப் பற்றியும் பேசுகிறார். அதாவது அவருக்குப் பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கிருஷ்ண சரிதத்தைக் கேட்கும் பக்தர்களான நாம் பரவசப்படுகிறோம். பாரத யுத்தம் முடிந்தது. த்வாரகை மீள்கிறார். ஸ்ரீகிருஷ்ணர். உற்சாகமான வரவேற்பு. தந்தை வஸுதேவரையும் அன்னையையும் அடி பணிந்து வணங்குகிறார் கிருஷ்ணர். நடந்ததை உன் வாயாலேயே சொல் என்று கேட்கிறார் வஸுதேவர். விஸ்தாரமாக யுத்தத்தைச் சொன்ன கிருஷ்ணர் ஒரு விஷயத்தை மட்டும் வஸுதேவருக்குச் சொல்லவில்லை. அதுதான், அவரது பேரனான அபிமன்யுவின் மரணம். சோகத்தினால் முதியவர் துக்கப்படக் கூடாது என்பது கிருஷ்ணரின் எண்ணம் ஆனால் சுபத்திரையோ கிருஷ்ணரை நோக்கி, அபிமன்யுவின் வதத்தைச் சொல்லும் என்று கூறி மயக்கமுற்று விழுகிறாள். அதைக் கண்ட வஸுதேவரும் மயக்கமுறுகிறார்.

ஒருவாறு அவர்களைத் தேற்றிய கிருஷ்ணர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு யுதிஷ்டரரிடம் கூற யாக ஏற்பாடுகள் பிரமாதமாக ஆரம்பிக்கப்படுகின்றன. இறந்து பிறந்த குழந்தை: யாகத்திற்காக அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்குக் கிருஷ்ணா வந்த அந்த சமயத்தில்தான் மிக்க சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தரையின் பிரசவ நேரம் அது. குழந்தையும் பிறந்தது. ஆனால் பிரம்மாஸ்திரம் பிரயோகிக்கப்பட்டதால் குழந்தை மரித்து பிறந்தது. குந்தி தேவிக்கும், உத்தரைக்கும் அரண்மனையில் இருந்த இதர அனைவருக்கும் துக்கம் தாளவில்லை. கிருஷ்ணரை எப்படியாவது குழந்தையை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிய குந்தி தேவி கிருஷ்ணருடைய பிரதிக்ஞையை நினைவு படுத்துகிறாள். அஸ்வத்தாமாவினால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்ட காலத்தில் மரித்துப் பிறக்கும் குழந்தையை நான் உயிர்ப்பிக்கிறேன் என்று நீ பிரதிக்ஞை செய்திருக்கிறாய் என்று நினைவு படுத்துகிறாள் குந்தி.

கிருஷ்ணருக்கு துக்கம் தாளவில்லை. அப்படியே ஆகட்டும் என்று உரக்கச் சொல்லி அனைவரையும் சந்தோஷப்படுத்தியவாறே உத்தரையின் பிரசவ அறைக்குள் செல்கிறார். அங்கே உத்தரை கட்டுக் கடங்காத துயரத்துடன் கிருஷ்ணரைப் பார்த்தவுடன் அழுது புலம்பலானாள். குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு, இதோ இங்கே வந்திருக்கும் கிருஷ்ணரை நமஸ்கரிக்காமல் இருக்கிறாயே என்றெல்லாம் கூறிப் புலம்புகிறாள். கிருஷ்ணரே! என் குழந்தையை உயிர்ப்பித்துத் தாரும் என்று கூறி அவள் அழ, கூடவே அங்கு குழுமியிருந்த அனைவரும் அழ அந்தச் சமயத்தில் எழந்தது கிருஷ்ண சபதம்! உத்தரை கிருஷ்ணரை நமஸ்கரித்து எழுந்தாள். உடனே கிருஷ்ணர் ஆசமனம் செய்து பிரம்மாஸ்திரத்தை அதன் விளைவு இல்லாமல் போகச் செய்தார். பின்னர் அந்தக் குழந்தை உயிருடன் எழுவதைப் பற்றி உலகமெல்லாம் அறியும் படி பிரம்மாண்டமான ஒரு சபதத்தைச் செய்தார்.

உத்தரையே! நான் பொய் சொல்லவில்லை. இது உண்மையாகவே ஆகப் போகிறது. எல்லா மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்தக் குழந்தையை உயிருள்ளதாக ஆக்குகிறேன். நான் ஒரு பொழுதும் விளையாட்டுக்களிலும் கூடப் பொய் சொன்னதில்லை. யுத்தத்திலிருந்து புறம் காட்டியது இல்லை. இது உண்மையானால் இந்தக் குழந்தை உயிருடன் வாழட்டும். எனக்கு தர்மத்திலும் அந்தணர்களிடத்திலும் அதிகமான அன்பு இருக்குமானால், இறந்து பிறந்த இந்த அபிமன்யுவின் குழந்தை ஜீவித்திருக்கட்டும். நான் ஒரு பொழுதும் அர்ஜுனனிடத்தில் விரோதத்தை எண்ணாமலிருப்பது உண்மையானால் மரித்த இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும். சத்தியமும் தர்மமும் என்னிடத்தில் எப்பொழுது நிலை பெற்றிருக்குமானால் அபிமன்யுவின் புத்திரனும் இறந்தவனுமாகிய இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும்.

நான் கம்ஸனையும் கேசியையும் தர்மமாகக் கொன்றது உண்மையானால் இப்பொழுது இந்தக் குழந்தை மறுபடியும் பிழைக்கட்டும். இப்படி கிருஷ்ணர் சபதத்தை உலகம் முழுவதும் அறியுமாறு உரக்கக் கூறினார். பின்னர் பிரம்மாவும் ருத்திரமும் பூஜித்த தன் பாதத்தால் குழந்தையின் கால் முதல் தலை வரையில் தடவினார். உடனே அந்தக் குழந்தை மெல்ல மெல்ல தன் பிரக்ஞையை அடைந்தது; பின்னர் அசைந்தது. உயிர் பிழைத்த குழந்தையைக் கண்டு அனைவரும் ஆனந்த மிகுதியால் கிருஷ்ணரைப் புகழ்ந்தனர். பிரம்மாஸ்திரமோ கிருஷ்ணரால் உபசம்ஹாரம் செய்யப்பட்டதால் பிரம்மாவை அடைந்தது. இப்படியாக ஸ்ரீ கிருஷ்ணரின் சபதம் நிறைவேறியது. ஆஸ்வமேதிக பர்வம் அறுபத்தொன்பதாம் அத்தியாயத்தைப் படிப்பவர்களின் மனம் ஆனந்தம் அடைவதோடு கிருஷ்ணரின் மஹிமையை அவர் வாயாலேயே சொல்லக் கேட்ட பெருமையையும் அடையும்.

கிருஷ்ணரின் அரிய பெரிய பெருமைகளை மனம் காலம் எல்லாம் அசை போட்டாலும் முழுவதையும் உணர்ந்ததாகச் சொல்ல முடியுமா? கிருஷ்ணர் தான் வாழ்ந்தது தர்ம வாழ்க்கையையே என ஏன் உரக்கச் சொல்லவேண்டும்? அதற்குக் காரணம் இருக்கிறது - சிசுபாலன் நூறு பொய் நிந்தனைகளைக் கூறும்வரை அவனை வதம் செய்யாமல் விடுகிறேன் என்று அவன் தாய்க்கு வரம் அருளினார் கிருஷ்ணர். கோபம் தலைக்கேற வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிப் பொய்களை அடுக்கிக் கொண்டே போனான் சிசுபாலன். இள எருது போல கொழுத்தவனான கிருஷ்ணன் மாமனான கம்ஸனுடன் போர் செய்து அவனைக் கொன்றிட்டான். தந்திர வகைகளால் எத்தனையோ யுத்தங்களையும் செய்து முடித்தான். தன்னையே ஆதாரமாகக் கொண்டு சார்ந்துள்ள சுற்றத்தார்களில் தான் ஒருவன் மட்டுமே மேம்பட்டு தந்திரமாகத் தனக்கு உரியதாக ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்பவன் ஆனான்.

கம்ஸனைக் கொல்லுதல், சங்கு உருவத்தில் கடலில் வாழ்ந்த பஞ்சஜனன் என்னும் அசுரனைக் கொல்லுதல், பதினெட்டு முறை ஜராசந்தனுடன் போர் செய்து வெற்றி பெறல், காலயவனென்ற மிலேச்ச ராஜனைத் தந்திரத்தால் அழித்தல், ருக்குமியைப் பங்கப் படுத்தல் ஆகிய அனைத்தையும் சுட்டிக் காட்டும் விதத்தில் இவை அனைத்தும் வஞ்சனை அல்லவா என்று வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான் என்று ஆவேசப்பட்டு சிசுபாலன் கத்தினான். ஆனால் அதில் கோபம் இருந்ததே தவிர சத்தியம் இல்லை. சிசுபாலன் போலவே துரியோதனன் உள்ளிட்டோரும் பல பொய்ப் பழிகளை கிருஷ்ணர் மீது சுமத்தியதுண்டு. ஆகவே தன் மீது பொய் நிந்தனை சொல்வோர் சொன்னதெல்லாம் பொய்களே என்று உலகிற்குத் தெரிவிக்கும் வண்ணம் சத்தியப் பிரகடனம் செய்ய வேண்டி, உத்தரையின் சிசுவான பாண்டவரின் ஒரே வாரிசான பரீட்சித்தை உயிர்ப்பிக்க வேண்டிய உச்சகட்டத்தில் கிருஷ்ணர் தன்னைப் பற்றிப் பிரகடனம் செய்யும் இந்த அரிய காட்சி அமைகிறது. எங்கு கிருஷ்ணர் இருக்கிறாரோ அங்கு சத்தியமும், தர்மமும், வெற்றியும் நிச்சயம் அவர் அருளால் இறந்தவரும் எழுவர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar