Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சித்துவேலை!
 
பக்தி கதைகள்
சித்துவேலை!

இலஞ்சி என்ற ஓர் ஊரில் ராஜன் என்றொரு வாலிபன் இருந்தான். அவனுக்கு சாதுக்கள், துறவிகள் முதலியோரிடம் மிகுந்த பற்றுதல். அவர்களுக்குச் சேவை செய்வதைத் தனது பாக்கியமாகக் கருதுவான். ஒருநாள்- துறவி ஒருவர் அவன் ஊருக்கு வந்தார். ராஜன் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்தான். ராஜனின் பணி விடையைக் கண்டு மகிழ்ந்த துறவி, மகனே! உனக்கு வேண்டியதைக் கேள் தருகிறேன், என்றார். சுவாமி, உங்களைப் போல் எனக்கும் சித்து வேலைகள் கற்றுத்தர வேண்டும். மனிதர்களால் செய்ய முடியாத செயல்களை என் சக்தியால் நிறைவேற்ற வேண்டும், என்று துறவியிடம் கேட்டான் ராஜன். மகனே, நாங்கள் பலகாலம் தவமிருந்து இந்த அற்புத சக்திகளைப் பெறுகிறோம். நீ எந்த விதமான துன்பமும் அடையாமல் சித்து வேலைகள் புரிய விரும்புகிறாயே... சரி, உன் விருப்பத்தைக் கெடுக்க விரும்பவில்லை. இதோ, இந்த ஓலைச்சுவடியில் மனிதர்களால் செய்ய முடியாத சில சித்து வேலைகளைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. இவற்றைக் கவனமாகப் படித்து உன் ஆவலை நிறைவேற்றிக் கொள், என்று ராஜனிடம் ஓர் ஓலைச்சுவடியைக் கொடுத்தார் துறவி.
பின்னர், அவனிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டார்.

துறவி சென்ற பிறகு, ராஜன் ஓலைச் சுவடியைப் படிக்க ஆரம்பித்தான். அதில் பல அற்புதமான சித்து வேலைகளைப் பற்றி எழுதப் பட்டிருந்தது. ராஜனும் அந்த ஓலைச் சுவடியில் எழுதியுள்ள விஷயங்களை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தான். ஒவ்வோர் ஏட்டையும் பலமுறை படித்து மனப்பாடம் செய்து கொண்டான். ஒருநாள் ராஜன் பாதி படித்து முடித்த ஓலைச் சுவடியை பரணில் செருகி வைத்துவிட்டு வெளியே சென்றான். திரும்பி வந்து பார்த்த பொழுது அங்கு ஓலைச் சுவடியை காணவில்லை. ராஜனுக்கு திக்கென்று ஆகிவிட்டது. வீடெல்லாம் தேடிப் பார்த்தான். ஓலைச் சுவடியை ஓரிடத்திலும் காணவில்லை. எலிதான் இழுத்து சென்றிருக்க வேண்டும், என்று எண்ணிய ராஜன், ஐயோ அந்த ஓலைச்சுவடியில் இன்னும் எத்தனை அற்புதமான சித்து வேலைகளைப் பற்றி எழுதப்பட்டிருந்தன. பாதியிலேயே காணாமல் போய்விட்டதே! என்று வருந்தினான். சரி, போனது போகட்டும். நமக்குத் தெரிந்த சித்து வேலைகளை மக்களுக்குக் காட்டி அவர்களிடம் புகழ் பெறுவோம் என்ற எண்ணத்துடன் வெளியூர் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினான் ராஜன். ஒரு காட்டு வழியாக ராஜன் வந்து கொண்டிருந்தான். வழியில் நாலைந்து வேட்டைக்காரர்கள் ஒரு சிங்கத்தைக் கூண்டில் அடைத்து, அதை வண்டியில் ஏற்றி தள்ளி வந்தனர். கூண்டிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்த ராஜன், கூண்டிற்குள்ளிருக்கும் பிராணிகளை வெளிக் கொணரும் சித்து வேலையைப் பற்றி ஓலைச்சுவடியில் படித்திருக்கிறோமல்லவா? அது சரியாக நடைபெறுகிறதா என்று சோதித்துப் பார்ப்போம் என்ற எண்ணத்துடன் ஏதோ ஒரு மந்திரத்தைச் சொன்னான்.

அடுத்த கணம் கூண்டிற்குள்ளிருந்த சிங்கம் பயங்கர கர்ஜனையுடன் வெளியே வந்து வேட்டைக்காரர்களில் ஒருவன் மீது பாய்ந்து அவனைக் கொன்று விட்டது.
இதனைக் கண்ட மற்ற வேட்டைக்காரர்கள், மிகுந்த சாமர்த்தியத்துடன் போராடிச் சிங்கத்தைப் பிடித்து மறுபடியும் கூண்டில் அடைத்து விட்டனர்.
இதனைக் கண்ட ராஜன், நான்தான் சிங்கத்தை வெளியே வருமாறு செய்தவன். இதோ, எனது மந்திர சக்தியால் மீண்டும் அதனை வெளியே வரவழைக்கிறேன், என்று வேட்டைக்காரர்களிடம் கூறினான். ராஜன் பேச்சைக் கேட்ட வேட்டைக்காரர்கள் அவன் ஒரு மாயாவியோ என்று பயந்தனர். ஆயினும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், நீ தான் இந்தச் சிங்கத்தைக் கூண்டிலிருந்து வெளியே வரச் செய்தவனா? எங்கள் நண்பர்களில் ஒருவன் இறந்தது உன்னால்தான். உன்னைச் சும்மா விடமாட்டோம், என்று கூறியபடியே ராஜனை நையப் புடைத்தனர். ராஜன் மயக்கமடைந்து விழுந்து விட்டான். இதுதான் சரியான சமயம். பயல் மயக்கமாக இருக்கிறான். இப்போது சிங்க வண்டியை இழுத்துக்கொண்டு போய்விடுவோம். இல்லையெனில், உதைபட்ட ஆவேசத்தில் மீண்டும் இவன் சிங்கத்தை வெளியே வரவழைத்து விட்டால் நாம் அனைவரும் இறக்க நேரிடும், என்று நினைத்த வேட்டைக்காரர்கள் சிங்க வண்டியை வேகமாக இழுத்துச் சென்று விட்டனர்.
வெகு நேரம் சென்றபின் கண் விழித்த ராஜன் தான் நடுக்காட்டில் இருப்பதை உணர்ந்தான். உடம்பெல்லாம் ஒரே வலி.

இங்கேயே இருந்தால் கொடிய மிருகம் ஏதாவது வந்து நம்மை அடித்துப் போட்டுவிடும் என்ற பயத்தில் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் சென்றதும், ஓர் ஊர் அவன் கண்களுக்குத் தென்பட்டது. ஊரின் நடுவே ஒரு பெரிய மலை இருந்தது. அந்த மலை ஊரின் நடுவே இருந்ததால் ஊர் மக்களுக்கு விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. ஊருக்குள் சென்று ராஜன் அங்கிருந்த நிலைமையைப் பார்த்தான். இந்த மலையை நகர்த்தி ஊருக்கு வெளியே வைத்துவிட்டால் இந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர். நமக்குத்தான் மலையை நகர்த்தும் மந்திரம் தெரியுமே! என்று நினைத்தவனாக, ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரிக்கலானான். மறுகணம் மலை நகரத் துவங்கியது. வழியில் உள்ள மரம், செடி கொடி எல்லாவற்றையும் அரைத்துத் துவைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தது. திடீரென்று மலை நகர்ந்து வருவதைக் கண்டு ஊர் மக்கள் பீதியுற்று வீட்டை விட்டு ஓடினர். நகர்ந்து வந்த மலை நடுவழியில் நின்ற எதனையும் விட்டு வைக்கவில்லை. வீடுகளும், ஆடு, மாடுகளும் நாசமாயின.

இதனைப் பார்த்த ராஜன், ஐயோ, இவர்களுக்கு நன்மை செய்ய நினைத்தால்... இப்படி ஆகிவிட்டதே! இதை எப்படி நிறுத்துவது, என்று நினைத்தான். ஆனால், அவனுக்கு அதனை நிறுத்துவதற்குரிய மந்திரம் தெரியாது. இவ்வளவு நாசத்துக்கும் ஊருக்கு வந்த புதியவன் தான் காரணம் என்று நினைத்த ஊர் மக்கள் அவனை நையப் புடைத்தனர். மூர்ச்சை தெளிந்து எழுந்த ராஜன், சிறிது தூரம் நடந்து சென்றான். எதிரே ஓர் ஆசிரமம் தெரிந்தது. அதனுள் ஒரு முனிவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். ராஜன் அவருடைய காலடியில் விழுந்து, ஐயனே, ஒருவராலும் செய்ய முடியாத சித்து வேலைகளை நான் செய்தேன். என்னை ஒருவரும் பாராட்டவில்லை. மாறாக, என்னை அடித்து நொறுக்கி விட்டார்கள்! என்று தன் கதை முழுவதையும் அவரிடம் கூறினான். மகனே, சித்து வேலைகளை செய்து மக்களிடம் பாராட்டுதல்கள் பெற முடியாது. நிலையான பாராட்டுதல்களை மக்களிடமிருந்து பெற வேண்டுமானால், அவர்களுக்குச் சேவை புரியவேண்டும். மேலும், நீ செய்கிற எந்தக் காரியமாயிருந்தாலும் மக்களுக்கு நன்மை விளைவிக்க கூடியதாயிருக்க வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நீ நடந்து கொண்டதனால் தான் உனக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டது. இனியாவது இந்தச் சித்து வேலைகளை விட்டுவிட்டு நல்ல வழியில் நட, என்றார் முனிவர். ராஜனும் தனக்குத் தெரிந்த சித்து வேலைகளை அன்றுடன் மூட்டைகட்டி வைத்து விட்டு, மக்களுக்குச் சேவை புரிவதையே முக்கியக் கடமையாகக் கொண்டான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar