Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மாங்கல்யம் காத்திடுவாள் மகிமை பல புரிந்திடுவாள்!
 
பக்தி கதைகள்
மாங்கல்யம் காத்திடுவாள் மகிமை பல புரிந்திடுவாள்!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அன்று கட்டுக்கடங்காத கூட்டம். முகூர்த்த நாள் வேறு. கோவில் வாசலில் ஒரு ஓரமாய் அமர்ந்து கூடையில் கட்டிய பூவை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் கண்ணாத்தா. பளீரென்ற முகம். நெற்றியில் மூன்று பட்டையாய் விபூதி. நடுவில் ஒரு ரூபாய் சைசில் குங்குமம். வகிட்டின் ஆரம்பத்தில் வைத்திருந்த குங்குமம் முகத்திற்கு தெய்வீகக்களையைத் தந்தது. காலை ஏழு மணிக்கே வந்து விடுவாள் கண்ணாத்தா. முதல் முழப்பூ ஆத்தா மாரியம்மனுக்குத் தான். பிறகு தான் வியாபாரம். கடந்த இருபத்தஞ்சு வருடமாக கோவில் வாசலில் பூ வியாபாரம். ஒரு முழம் பூ வாங்கினாலும் கொஞ்சம் அதிகமாகவே வெட்டி கொடுப்பாள். அவளது வாய் எப்பொழுதும்,அம்மா.. மாரியாத்தா. நீ தாண்டி எல்லாத்துக்கும் எந்த நேரத்துலயும் தொணையா இருக்கணும்.. நீ தாண்டி எல்லாரையும் கைவிடாம காப்பாத்தணும், என்று சொல்லிக் கொண்டே இருக்கும். அந்த ஆயிரம் கண் கொண்ட கலியுக தெய்வம் மாரியம்மனிடம் கண்ணாத்தாளுக்கு அந்தளவுக்கு பக்தி...!

கண்ணாத்தாளின் களையான முகத்தில் அன்று கவலையின் ரேகைகள். மனதைப் பயம் அரித்தது. நிச்சயிக்கப்பட்ட மகளின் திருமணம் நல்லபடியாய் நடந்து முடியுமா என்று ரொம்பவும் கவலையாய் இருந்தது கண்ணாத்தாளுக்கு. கல்யாணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருக்கும் நிலை...! பேசப்பட்ட நகையில் இன்னும் இரண்டு பவுன் வாங்க முடியவில்லை. இரண்டு பவுனுக்கு எப்படியும் நாப்பத்தஞ்சாயிரமாவது வேண்டும். வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி ஓரளவுக்கு மற்ற ஏற்பாடுகளைச் செய்து விட்டாள். ரெண்டு பவுனுக்காக கல்யாணம் நின்று விடுமோ... அப்படி நின்று விட்டால் பெண்ணின் எதிர்காலம் என்னாகும்...அவள் கவலையோடு பூக்கட்டிக் கொண்டிருந்தாள். குடிகாரக் கணவனால் எந்த பிரயோசனமும் கிடையாது. சின்ன நிலம் இருந்ததை விற்று வரும் பணத்தில் ரெண்டு பவுனை வாங்கி விடலாம் என்று இருந்தவளுக்கு, அது நடக்காமல் போகவே என்ன செய்வதென்று புரியவில்லை. அம்மா...மாரியாத்தா..தாயீ..நான் என்ன பண்ணுவேன்..நீதாண்டி..எனக்கு ஒரு வழி காட்டணும்.. இல்லாட்டி நானும் எம்மவளும் சாகிறத தவிர வேற வழியில்லே..என்ன கைவிட்டுடாத ஆத்தா..மனம் உருக வேண்டிக்கொண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கோவில் வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கண்ணாத்தாவின் பக்கத்திலிருந்த பூக்காரப் பெண்ணிடம் ஒரு பெரிய பந்துபூ வாங்கினர். அப்போது ஒரு பெண்ணின் கையிலிருந்த பை ஒன்று, கண்ணாத்தாவின் பூக்கூடைக்கு சற்று உயரத்தில் நின்று பூவை மறைத்தது. சில நிமிடங்கள் இந்த நிலை நீடித்தது. அதனால் என்ன என்று பொறுமையாக இருந்தாள். பூ வாங்கியவர்கள் உள்ளே போய்விட வியாபாரத்தில் மும்முரமானாள். பத்து நிமிடம் ஆகியிருக்கும். கோவிலுக்குள் இருந்து சிலபேர் ஓடி வந்தார்கள். இங்குமங்கும் எதையோ பரபரப்பாய் தேடினார்கள். அவர்களோடு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் தேட ஆரம்பிக்க விஷயம் வெளியே வந்தது. கண்ணாத்தாவின் பக்கத்தில் இருந்த பூக்காரியிடமிருந்து பூ வாங்கிச் சென்றவர்கள், மகளின் கல்யாணத்திற்காக வாங்கியிருந்த நகைகளை அம்மனின் திருவடிகளில் வைத்து பூஜை செய்து வாங்கிச் செல்ல வந்ததாகவும், அதில் 11 பவுன் திருமாங்கல்ய செயினைக் காணவில்லை என்றும் தெரிந்தது. கேள்விப்பட்ட கண்ணாத்தாளுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. அம்மா.. அவங்கள ரொம்ப சோதிக்காதம்மா.. அவங்க மகளோட திருமணம் நல்லபடியா நடக்கணும்.. நகை யாரு கைல கெடச்சுதோ அவங்க நல்ல மனசோட அத திருப்பி கொண்டாந்து கொடுத்துடணும்மா..என்று மனமுருக வேண்டினாள்.

இன்னும் கூடையில் குறைந்த அளவே பூ இருக்க.. ரெண்டு முழம் பூ குடுங்கம்மா..என்று வந்து கேட்டவர்களுக்கு கூடையின் அடியில் இருந்த பூவை எடுத்து முழம் போட முனைந்தாள். கூடைக்குள் பளபளவென ஒரு தாலிச்செயின் மின்னிக் கொண்டிருந்தது. பேரதிர்ச்சி அடைந்த கண்ணத்தாள், அதை கையில் எடுத்துக் கொண்டு, தாயி..தாயி.. மாரியாத்தா...என்று கத்திக்கொண்டே கோவிலின் உள்ளே ஓடினாள். அம்மனின் முன் நின்று அழுது கதறும் அந்த இரண்டு பெண்களையும் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு அடையாளம் தெரிந்து போயிற்று.அம்மா..அம்மா...இத பாருங்க..இந்த தாலி செயின் ஒங்களது தானா? கண்ணாத்தாவின் கையிலிருந்த செயினைப் பார்த்த அவர்கள் இதுதான் இதுதான் நாங்க கொண்டுவந்த தாலிசெயின்... கெடச்சிடுத்து.. மகமாயிதாயே கெடச்சிடுத்து... என்று மகிழ்ச்சியும், பரவசமும் கலந்து சொன்னார்கள். கண்ணாத்தா அந்த பெண்களிடம் செயினை ஒப்படைத்தாள். அவர்கள் கண்ணாத்தாவை வானளாவ பாராட்டினார்கள். அந்தப் பெண்களுடன் வந்திருந்த ஒருவர், கண்ணாத்தாளை தன் கழுத்தில் போட்டிருந்த மூன்று பவுன் செயினைக் கழற்றி, கண்ணாத்தாவிடம் கொடுத்தார். எங்களுக்கு  ஆண்டவன் நெறைய கொடுத்திருக்கான் தாயி! இதை வச்சுக்க! உன்னை மாதிரி நல்ல மனசுள்ளவங்க இருக்கிறதால தான், ஊரிலே மழையே பெய்யுது! என்றார். அது வேண்டாமென்று கண்ணாத்தா பலமுறை மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை. தன் கண்ணெதிரே நடப்பதையெல்லாம் புன் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த சமயபுரத்து நாயகி..அந்த  ஆயிரம் கண்ணுடையாள். கண்ணாத்தாவின் பூக்கூடையில் தாலிச் செயினை விழவைத்து, தன்னையே நம்பியிருக்கும் அவளது தேவையான ரெண்டு பவுனுக்கும் மேலாக, மேலும் ஒரு பவுன் கிடக்கச் செய்தவள் அவள் தானே! அகிலத்தையும் அனைத்து ஜீவராசிகளையும் அரவணைத்துக் காத்து அருள் மழை பொழியும் சமயபுரத்தாளை, கண்ணாத்தாளின் கண்களில் வழிந்த நீர் மறைத்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar