Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமகிருஷ்ணர் அருளிய கதை!
 
பக்தி கதைகள்
ராமகிருஷ்ணர் அருளிய கதை!

சில சிறுவர்கள் புல்வெளியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே கொடிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. பாம்பிடம் உள்ள பயத்தால் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். ஒரு நாள் பிரம்மச்சாரி ஒருவர் அந்தப் புல்வெளி வழியாகச் சென்றார். மாடு மேய்க்கும் பிள்ளைகள் ஓடிச் சென்று, சுவாமி, அந்த வழியாகப் போகாதீர்கள். அந்தப் பக்கம் ஒரு கொடிய விஷப் பாம்பு இருக்கிறது என்று சொன்னார்கள். அதற்கு அந்த பிரம்மச்சாரி, பிள்ளைகளே, அது இருந்துவிட்டுப் போகட்டும், அதனிடம் எனக்குப் பயமில்லை. எனக்கு மந்திரம் தெரியும் என்று சொல்லி விட்டு தொடர்ந்து நடக்கலானார். பயத்தினால், அந்தச் சிறுவர்கள் யாரும் அவருடன் செல்லவில்லை. யாரோ வருவதைக் கண்ட பாம்பு படமெடுத்தபடி சீறிக்கொண்டு வேகமாக ஓடி வந்தது. பிரம்மச்சாரியை நெருங்கியதும் அவர் ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.

அவ்வளவுதான், சீறிவந்த பாம்பு மண்புழுவைப் போல் அவரது காலடியில் வீழ்ந்தது. பிரம்மச்சாரி அதைப் பார்த்து, நீ ஏன் இப்படி மனிதர்களைத் துன்புறுத்திக்கொண்டு திரிகிறாய்? வா, உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன். இந்த மந்திரத்தை நீ ஜபம் செய்தால் பகவானிடம் உனக்கு பக்தி ஏற்படும். நீ அவரைப் பெறுவாய், பிறருக்குத் தீங்கு செய்யும் இந்தத் தன்மை போய்விடும் என்று சொல்லி அந்தப் பாம்பிற்கு மந்திரத்தை உபதேசம் செய்தார். மந்திர உபதேசம் பெற்ற பாம்பு குருவை வணங்கி, குருநாதா, நான் எவ்வாறு சாதனை செய்ய வேண்டும்? என்று கேட்டது. அதற்கு குரு, இந்த மந்திரத்தை ஜபம் செய். யாருக்கும் தீங்கு செய்யாதே என்று சொன்னார். பிறகு புறப்படும் போது, நான் மறுபடியும் வந்து உன்னைப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

சில நாட்கள் கழிந்தன. அந்தப் பாம்பு யாரையும் கடிக்க வருவதில்லை என்பதைச் சிறுவர்கள் கண்டு கொண்டனர். கல்லெறிந்தாலும் அது ஒன்றும் செய்யவில்லை, மண் புழுவைப் போல் கிடந்தது. ஒரு நாள் சிறுவன் ஒருவன் அதன் வாலைப் பிடித்து தூக்கிச் சுழற்றி தரையில் அடித்தான். அதன் வாயிலிருந்து ரத்தம் பீறிட்டது. சுரணையற்று வீழ்ந்தது. அதனிடம் அசைவோ நெளிவோ இல்லை. எனவே அது இறந்து விட்டது என்று எண்ணி சிறுவர்கள் போய்விட்டனர். இரவு வெகுநேரம் சென்ற பிறகு பாம்பிற்கு உணர்வு வந்தது. மிகுந்த சிரமத்துடன் மெல்லமெல்ல நகர்ந்து அது தன் வளைக்குள் சென்றது. அதன் உடம்பெல்லாம் சின்னாபின்னமாகிவிட்டது. அசையக்கூட அதனிடம் தெம்பில்லை. நாட்கள் கடந்தன. அது எலும்பும் தோலுமாக ஆகிவிட்டது. பயம் காரணமாக இரை தேடிக்கூட பகல்வேளையில் வெளியே வருவதில்லை.

எப்போதாவது இரவு வேளையில் மட்டும் வெளியே வந்தது. மந்திர உபதேசம் பெற்றதிலிருந்து யாரையும் துன்புறுத்துவதில்லை. மண், இலை, உதிர்ந்த பழங்கள் இவற்றைத் தின்று உயிர் வாழ்ந்தது. இப்படி ஏறக்குறைய ஓர் ஆண்டு கழிந்தது. பிரம்மச்சாரி அந்த வழியாக மறுபடியும் வந்தார். வந்ததும் பாம்பைப் பற்றி விசாரித்தார். அந்தப் பாம்பு இறந்து விட்டதாகச் சிறுவர்கள் சொன்னார்கள். பிரம்மச்சாரி அதை நம்பவில்லை. தான் உபதேசித்த மந்திரத்தின் பலனை அடையாமல் பாம்பு இறந்திருக்க முடியாது என்பது அவருக்கு தெரியும். எனவே இங்கும் அங்கும் தேடியபடி தான் கொடுத்த பெயரை சொல்லி அழைத்தார். குருவின் குரலைக் கேட்ட பாம்பு வளையிலிருந்து வெளியே வந்து அவரை மிகுந்த பக்தியோடு வணங்கியது. என்னப்பா, எப்படி இருக்கிறாய்? என்று பிரம்மச்சாரி விசாரித்தார். சுவாமி, சவுக்கியமாக இருக்கிறேன் என்றது பாம்பு. ஆனால் ஏன் இவ்வளவு மெலிந்திருக்கிறாய்? என்று கேட்டார். பிரம்மச்சாரி, குருவே, யாருக்கும் தீங்கு செய்யாதே என்று தாங்கள் எனக்குக் கட்டளையிட்டிருந்தீர்கள். அதன்படி இலைகளையும் பழங்களையும் தின்று வாழ்ந்து வருவதால் மெலிந்துவிட்டேன் போலும் என்று பாம்பு கூறியது.

அந்தப் பாம்பிற்கு சத்வ குணம் அதிகரித்திருந்ததால் அதற்கு யாரிடமும் கோபம் இல்லை. சிறுவர்கள் தன்னைக் கொல்ல முயன்றதைக் கூட அது மறந்து விட்டது. சரியாக சாப்பிடாததால் மட்டுமே உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்க முடியாது. கண்டிப்பாக வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். சற்று யோசித்துப்பார் என்று பிரம்மச்சாரி கூறினார். சிறுவர்கள் தன்னைத் தரையில் அடித்தது அப்போதுதான் பாம்பின் நினைவிற்கு வந்தது. குருநாதா, இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் இந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள் என்னைத் தரையில் சுழற்றி அடித்தார்கள். அவர்கள் அறியா சிறுவர்கள். என் மனநிலை அவர்களுக்குத் தெரியாது. நான் யாரையும் கடிப்பதில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? என்று பாம்பு சொல்லிற்று. இதைக் கேட்டதும் அந்த பிரம்மச்சாரி, சீச்சீ, நீ இவ்வளவு முட்டாளா? உன்னைக் காப்பாற்றிக் கொள்ள உனக்குத் தெரியாமல் போய்விட்டதே! மற்றவர்களைக் கடிக்காதே என்று சொன்னேனே தவிர, சீறாதே என்று சொல்லவில்லையே, சீறி அவர்களை ஏன் பயமுறுத்தவில்லை? என்றார். தீயவர்களிடம் சீற வேண்டும். அவர்கள் நமக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதற்காக அவர்களைப் பயமுறுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மீது ஒரு நாளும் விஷத்தைச் செலுத்திவிடக் கூடாது. தீமை செய்யக்கூடாது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar